Pages

Sunday, August 25, 2013

ஈரல் சாப்பிடலாமா? கூடாதா?

ஈரல் சுவைக்கு பலர் அடிமையாகிவிட்டார்கள் என்றே சொல்லவேண்டும்.ரொம்ப மென்மையாக அப்படி ஒரு ருசிஎன்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.வீட்டில் கோழி அறுத்தால் ஒரு துண்டு ஈரல் கிடைக்கும்.சிலர் சுட்டு தின்பார்கள்.குழம்பில் போட்டால் தனியாக மிதக்கும். கறி  வெந்த பிறகு கொஞ்ச நேரம் கழித்து போட .வேண்டும்.


ஆட்டு ஈரல் கடைகளில் சாதாரணமாக கிடைக்கும்.இப்போது சிக்கன் கடைகள் முளைத்தபின்பு கோழி ஈரலும் எங்கும் கிடைக்கிறது.நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்,'' கோழி ஈரல் சாப்பிடக்கூடாது பாஸ் " ஆட்டு ஈரல் சாப்பிடலாம் என்றார்.ஆனால் அவரால்  காரணத்தைச்  சொல்லி விளக்க  முடியவில்லை. 

வீதிதோறும் அசைவக் கடைகள் பரவிவிட்ட நிலையில் இப்போது ஈரல் கிடைப்பது  சுலபம்.ஆனால் நண்பர் சொன்னது போல பலருக்கு குழப்பம் இருப்பதை கவனித்திருக்கிறேன்.உயிர்ச்சத்துக்களை சேமித்து வைத்து தேவையானபோது வழங்குவது ஈரலின் முக்கிய பணி.முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது ஈரல்.

அனைத்து உயிர்ச்சத்துக்களும் இதில் உண்டு..குறைந்த அளவில் முழுமையான சத்துக்களை கொடுக்கும் வேறு உணவைக் குறிப்பிட   முடியாது.இரும்பு,செலினியம்,துத்தநாகம் என்று பயனுள்ளவை அதிகம் இருக்கிறது.ரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல உணவு.போலிக் அமிலமும்,பி 12 உயிர்ச்சத்தும்  இதன் சிறப்பு.

அதிக ஏ வைட்டமின் காரணமாக கர்ப்பிணிகள் தவிர்க்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.ஆனால் ஊட்டச் சத்து பற்றாக்குறை உள்ள நம் நாட்டில் மிகு விட்டமின் காரணமாக பாதிப்பு ஏற்படும் என்று சொல்ல முடியாது. ஈரல் சாப்பிடும் அன்று ஏதேனும் காரணங்களுக்காக விட்டமின் மாத்திரை எடுப்பவர்கள் அன்று தவிர்த்துவிடலாம்.

எதிரான விஷயம் என்று பார்த்தால் கொலஸ்ட்ராலை குறிப்பிடலாம்.ஆட்டு  ஈரலில் கொஞ்சம் அதிகம். கொலஸ்ட்ரால்  பிரச்சினை உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும்.மற்றவர்களும் ஒரு முழு பூண்டை தட்டி உடன் சேர்த்துக்கொள்ளலாம்.பூண்டு  கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

பொதுவாக கலர் பவுடர் தூவப்பட்ட சிக்கன் கடைகளில் சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல! சாலையோரக் கடைகளில் அனுமதிக்கப்பட்ட வண்ணங்கள் இருக்கும் என்று சொல்ல முடியாது.உணவகங்களில் பதப்படுத்தப்பட்ட ஈரல் இருக்க வாய்ப்புண்டு.ஈரல் மட்டுமல்ல,அசைவ உணவுகளை வீட்டில் தயாரிப்பதே மிகச் சரி.

Thursday, August 22, 2013

பல்லி சொன்னால் பலிக்குமா?

கிராமங்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த நம்பிக்கை இருப்பதை கவனித்திருக்க முடியும்.அதுவும் பல்லி என்று சொல்லமாட்டார்கள்.'பெயர் இல்லாதது' என்று சொல்வார்கள்.உடல்மீது விழுந்துவிட்டால் இடத்தைப்பொறுத்து பலன் இருக்கிறது.உடனே பஞ்சாங்கம் கேட்கப்போவார்கள்.பல்லி சொல்வது என்பது திசையைக் குறித்து பலன் போட்டிருக்கும்.சில இடங்களில் இந்த இடத்தில் சொன்னால் நல்லது,இது கெட்ட இடம் என்று அடையாளம் வைத்திருப்பார்கள்.சிலர் குலதெய்வக் கோயிலில் பல்லி சொல்வதைக் கேட்கப் போவார்கள்.

இந்தப் பதிவு எழுத நேர்ந்த விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன்.அவருக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும்.கணவனை இழந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன.தனது ஒரே மகள் குறித்து பெரும் கவலையில் இருந்தார்.தூக்கமில்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.வயிற்றில் எரிச்சலும்,உடலில் வலிகளுமாக இனம் புரியாத கவலை.பசியின்மையால் சில வாரங்களாகவே சரியாக சாப்பிடுவதில்லை.நண்பர் ஒருவர் அவரைப் பற்றி சொன்னதால் வரச்சொல்லியிருந்தேன்.

என்னைச்சந்திக்க வந்தவர் நண்பர் சொன்னது போல இல்லை.மிகத்தெளிவாக இருந்தார்.பல வாரங்களாக மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததைஅவர்  சொல்லி  அறிய முடிந்தது.இப்போது தெம்பாக இருக்கிறார்.நம்பிக்கையுடன் பேசுகிறார்.கவலை போய்விட்டது.நிம்மதியாக தூங்க முடிகிறது.அவரது பிரச்னை சரியாகிவிட்டது.நல்லதுதான் நடக்கும் என்று உறுதியாகச்சொன்னார் அந்த நம்பிக்கை வந்ததற்குக் காரணம் பல்லி.அதுவும் அவரது உறவினர் வீட்டில் உட்கார்ந்து மகள் பற்றிய சிந்தனையின்போது பல்லி சத்தம்.அவரது உறவினர் சொன்னார்,"அந்த இடத்தில் சொன்னால் நல்லது".

உண்மையில் அவருக்கு மனதைப் பாதிக்கும் நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை.எதிர்மறையாக நினைத்ததால் மனநலம் பாதிக்கப்பட்டது.பல்லிசொல் காரணமாக சிந்தனை சரியான திசையை நோக்க பிரச்சினை சரியாகிவிட்டது.தொடர் ஆலோசனையும் மருத்துவ உதவியும் கூட அவருக்கு தேவைப்பட்டிருக்கலாம்.இப்போது அதெல்லாம் தேவையில்லை என்றாகிவிட்டது.மோசமான சம்பவங்கள் நடந்து விட்டால் கூட நாம் எளிதில் சமாளித்துவிடுகிறோம்.அப்படி நடக்குமோ? இப்படி நடக்குமோ என்று எதிர்மறையாக சிந்தித்து துயரத்தில் வீழ்ந்துவிடுகிறோம்.

கலங்கி நிற்கும்போது சரியான ஒருவரால் எண்ணங்களை மாற்றினாலே நமக்கு பல பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடும்.நம்மைச்சுற்றி இருப்பவர்களும் கூட இவற்றை தூண்டிவிடவே செய்வார்கள்.உண்மையில் மறைமுக எதிரிகள் என்பவர்கள் இவர்கள்தான்.பிரச்சினையை பற்றி பேச ஆரம்பிக்கும்போதே சொல்வார்கள்." அங்கே அப்படி நடந்தது,இன்னாருக்கு இப்படி நடந்தது என்பார்கள்".உஷாரா இருந்துக்கோ! என்று அன்பை வெளிப்படுத்துவார்கள்.அவர்களிடம் இருந்து எட்ட நிற்பதே நல்லது.நம்பிக்கையை,நேர்மறை எண்ணங்களை விதைக்கும் உறவுகள்தான் தேவை.கூட்டுக்குடும்பங்கள் இதைச்  சிறப்பாக செய்துவந்தன.

புதிதாக தொழில் ஆரம்பிக்கவேண்டுமென்று ஒருவர் பல்லி கேட்கப்போகிறார்.பல்லி சொல்லிவிட்டது.மனம் நல்லதாக சிந்திக்கத்துவங்கும்.வெற்றி மீது நம்பிக்கை இருப்பதால் தடைகளையும் எளிதாக சமாளித்துவிடுவார்.அப்புறம் முன்னேற்றம் எளிதாகிவிடுகிறது.இன்னமும் பேயை முனியப்பன் கோயிலில் ஒட்டிக்கொண்டிருப்பதும்  அதில் சில நேரங்களில் வெற்றி கிட்டுவதும் இப்படித்தான் நடக்கிறது.

Monday, August 19, 2013

ஆதலால்....... காதல் செய்யலாமா?

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே! என்றுதான் பாரதி சொன்னார்.ஆனால் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்று அதெல்லாம் பெரும் பிரச்சினை என்று சொல்கிறது.காதலர் தினத்தை கவனித்தாலே சில விஷயங்கள் தெளிவாகப்புரியும்.செல்போன் நிறுவனம் ஒவ்வொன்றும் அமைதியிழந்துவிடுகின்றன.பரிசுப்பொருள் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.திரையரங்கம்,கடற்கரை என்று எங்கெங்கும் காதலர்கள் கூட்டம்.காதலிக்காத கதாநாயகர்கள் யாருமில்லை.காதலித்து கல்யாணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.நகைகளை பறித்துக்கொண்டு துரத்திவிட்டவர்களையும் பார்த்திருக்கிறேன்.

இப்போதெல்லாம் முன்னிருக்கையில் காலைபோட்டுக்கொண்டு வசதியாக படம் பார்ப்பது என் வழக்கம்.பக்கத்து இருக்கையில் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொள்வேன்.இதே தியேட்டரில்  இரண்டரை மணிநேரம் நின்றுகொண்டு சினிமா பார்த்த அனுபவமும் உண்டு. மீசைமுளைக்க ஆரம்பித்த காலம் அது.இனி எப்போதும் இல்லை என்பது வேறுவிஷயம்.நாற்பது ரூபாய் செலவில் ஆதலால் காதல் செய்வீர் பார்த்தேன்.ஆனால் முன்சீட்டில் கால் போட முடியவில்லைஇரண்டு காதல் ஜோடிகள் அமர்ந்துவிட்டார்கள்.பால்கனி நிரம்பிவிட்ட தோற்றம் தந்தாலும் பக்கத்து இருக்கையில் தண்ணீர் பாட்டிலை வைத்திருந்தேன்.

அவர்கள் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.படம் துவங்கியதிலிருந்தே அமைதியாக இருந்துகொண்டிருந்து.முடியும்போது கனத்த அமைதி.முழுக்கதையும் தலைப்புக்கு எதிராக இருக்கிறது.கதையை ஏராளமான பதிவுகளில் நீங்கள் படித்திருக்கமுடியும்.கர்ப்பமான காதலி காதலனை வேண்டாமென்று சொல்லிவிட்டு...... இன்றைய காதல் மிக அழகாக திரைப்படமாக்கப்பட்டு உள்ளது.இளைஞர்கள் வெளிப்படையாக சில விஷயங்களை உணர்ந்துகொள்ளக்கூடும்.கர்ப்பமாகாமல் காத்துக்கொள்ளவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு தோன்றலாம்.

திரையரங்கின் கனத்த அமைதிக்குக் காரணம் இருக்கிறது.முன்கூட்டியே கணிக்கமுடியாத நிகழ்வுகளால் திரைப்படம் நகர்ந்துசெல்கிறது.ஒவ்வொரு சம்பவத்தையும் தீர்மானிப்பது காதலர்கள் என்பதுதான் காரணம்.அவர்களது அத்தனை முடிவுகளையும் தீர்மானிப்பது உணர்ச்சிகள்.அவை திடீர்திடீரென்று மாறிக்கொண்டிருக்கின்றன.பெற்றோர்களும்கூட அந்த முடிவுகளின் வழியே பயணிக்கவேண்டிய கட்டாயம்.

இன்றைய காதலில் தோழமையின் பங்கு மிகப்பெரியது.தனக்கு காதலன்,காதலி இருந்தால்தான் கௌரவம் என்று நினைப்பது அதிகமாகிவருகிறது.இந்தப் படத்தில் நாயகியின் தோழி எச்சரிக்கை செய்கிறார்.அது புத்திமதியாக வலுவான காரணமின்றி இருக்கிறது.காதல் தோன்றும் சூழலை கவனித்தால் புரியும்.நமக்காக சாகத்துணிந்தானே என்று முடிவெடுப்பது,நமக்காக உருகுகிறானே என்று வீழ்வதுமாக இருக்கிறது.இனி என்னுடைய முந்தைய பதிவொன்றிலிருந்து சில வரிகள்.

ஒரு இளைஞன் அல்லது இளம்பெண் உணர்ச்சி சார்ந்த பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது? அவர்களுக்கு ஏதாவது செய்திருக்கிறோமா? எனக்கு ஆத்திரமாக இருக்கிறது,துக்கமாக இருக்கிறது என்று அவர்கள் யாரிடம் சொல்வார்கள்.காதல்,காமம் உள்ளிட்ட பிரச்சினைகளை பெற்றோரிடம் கூறி ஆலோசனை பெறமுடியுமா? நண்பர்களிடம் சொன்னால் உரிய வழிகாட்டும் திறன் படைத்தவர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறதா? இதற்காக ஒரு வழி காண முடியாதா? உலகத்தை கவனித்தால் வழி இல்லாமல் இல்லை.

சீனாவில் கல்லூரிகளில் காதலும் காமமும் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை சொல்லி ஆலோசனை பெற முடியும்.துக்கம்,ஆத்திரம்,கோபம் போன்ற உணர்ச்சிகளை நம்பிக்கையுள்ள ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து வெளியேவர முடியும்.அத்தகைய உளவியல் ஆலோசனை கல்லூரிகளில் தேவை. இன்று போதுமான அளவு நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் கிடைப்பது சிரமம்.இருப்பினும் கல்லூரிகளிலேயே சரியான ஒருவரை கண்டறிந்து பயிற்சி தந்து உருவாக்கமுடியும். 


Tuesday, August 13, 2013

பொறாமை கொண்டவர்களை சமாளிப்பது எப்படி?



நண்பர் ஒருவர் தனது கனவைப்பற்றிச் சொன்னார்.முகத்தில் அமிலத்தைக்கொட்டியதுபோல வெள்ளையாக இருக்கிறது.தொட்டுப்பார்த்தால் சீழ்பிடித்திருப்பது போல இருக்கிறது.அதிர்ச்சியாக உணர்கிறார்.அலுவலகத்துக்கு மருத்துவ விடுப்பு எடுக்கலாம் என்ற எண்ணம் தோன்ற விழித்துக்கொண்டுவிட்டார்.இதைவிட மோசமான கனவு ஒருவருக்கு இருக்கமுடியாது.அழகுக்காக அத்தனை பேரும் தீயாய் வேலை செய்து கொண்டிருக்கும்போது தனது முகம் சீழ்பிடித்த நிலையைக் காண்பது கொடூரமானது.

அலுவலகத்தில் மறைமுக எதிரிகளால் அவருக்குப் பிரச்சினைகள் இருந்தன.அவரைப்பற்றி தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருந்தார்கள்.அவருடைய உண்மையான முகம் சிதைக்கப்பட்டு பணிச்சூழல் இறுக்கத்தை ஏற்படுத்தியிருந்த்து.மேலே சொல்லப்பட்ட கனவுக்கு அலுவலகப்பிரச்சினை காரணமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.மற்றவர்களைவிட கூடுதலாக தகுதிகள்,திறமைகள் இருக்கும்போது அவர்களிடம் பொறாமையை ஏற்படுத்தவே செய்யும்.யாரையும்விட முதன்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது.

திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் இப்படிச்சொன்னார், வித்தியாசமாக சிந்திப்பவர்களை சராசரியாக்கும் வரை விடமாட்டார்கள். பணியிடங்களில் சிறப்பாக செயல்படுபவர் விமர்சனத்துக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.உணர்ச்சிப்போக்கில் போகாமல் சிந்தித்து செயல்படுபவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.மறைமுக எதிரிகளை சிரிப்புடன் எதிர்கொள்ளும் நபர்களை நான் பார்த்திருக்கிறேன்.அவர் உங்களைப்பற்றி தவறான விமர்சனத்தை முன் வைத்தார் என்பதற்கு ஒருவர் வெடிச்சிரிப்புடன் சொன்னது, அந்தப்பெண் மீது அவனுக்கு ஒரு கண், என்னிடம் சிரித்துப்பேசுவது அவனுக்குப்பிடிக்கவில்லை.பெண் மீது மோகம் கொண்டவர்கள் மற்ற ஆண்களை மட்டம் தட்டவே விரும்புவார்கள்.

என்ன காரணத்திற்காக ஒருவர் நம்மைப்பற்றி அவதூறு செய்கிறார் என்று புரிந்துகொண்டால் மனம் பாதிக்கப்படாது.காய்க்கிற மரம் கல்லடிபடும் என்று சொன்னார்கள்.நம்மைத்தவிர நம்மை யாரும் தாழ்த்திவிட முடியாது என்பதும் நிஜம்தான்.ஆப்பிளை சாத்துக்கொடி என்று சொன்னால் சொல்பவருடைய தவறு.நம்மைப்பற்றியே நம்முடைய கணிப்பு சரியாக இல்லாதபோதுதான் மனம் பாதிக்கப்பட்டுவிடுகிறது.நாமும் விமர்சனம் செய்ய ஆரம்பிக்கிறோம்.நேர்மையாக இருந்து அடுத்தவர்களின் விமர்சனத்துக்கு ஆளாகும்போது நமக்கு பொறுமை தேவை.

அவர்களைவிடவும் உங்களிடம் கூடுதலாக ஏதோவொன்று இருக்கிறது.அவர்களிடம் இல்லாமல் இருக்கிறது.அவர்களை நாம் புரிந்துகொள்ள முடியும்.இரக்கம் காட்டவும் முடியும்.மற்றவர்களைவிட உயர்ந்து நிற்கும்போது பணிவு தேவைப்படுகிறது. ஆமாம்  உயரும்போது பணிவு கொண்டால்....என்ற கவிஞரின் வரிகள் வைரவரிகள்.மறைமுக எதிரிகளை சமாளிக்க நல்ல வழி இருக்கிறது.அவர்களை பாராட்டுங்கள்,அவர்களை எதிரியாக நினைக்கவேண்டாம்.உங்களுக்கு எதிரியாக இருக்கும் தகுதி அவர்களுக்கு இல்லை.தகுதியில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை அனுதாபத்துடன் எதிர்கொள்ளவேண்டும்.அவர்களை பாராட்டிவிட்டால் போதும்,குழப்பத்தில் அடிவாங்கி நகர்ந்துபோய்விடுவார்கள்.

சில நேரங்களில் அவர்களுடைய விமர்சனத்தில் உண்மையும் இருக்க வாய்ப்புண்டு.அப்போது திறந்த மனத்துடன் உங்களை மாற்றிக்கொள்வதே சரியானது.வேண்டுமென்றே கூறப்படும் விமர்சனத்தை ஒதுக்கிவிடலாம்.மற்றவர்களிடம் அவர்களது குணத்தைப்பற்றி சொல்லிவைத்துவிட வேண்டும்.பெரும்பாலானவர்கள் உங்களைப்பற்றிய அவதூறுகளை சந்தேகத்துடன் கவனிப்பார்கள்.,அவற்றை பொருட்படுத்தமாட்டார்கள்.