Friday, April 25, 2014

10,+2 தேர்வு முடிவுகள்-ஆலோசனை தேவை.



+2 தேர்வு முடிவுகள் மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகிறது.மாணவர்கள் உள்ள குடும்பங்களில் இன்னும் பத்து நாள்,பனிரெண்டு நாள் என்று சுவற்றில் எழுதாத குறைதான்.``எவ்வளவு மார்க் வரும்`` என்று நூறுதடவையாவது கேட்டு விட்டிருப்பார்கள்.மன அழுத்தம் கூடி பசிகூட மறந்துபோகும்.தேர்வு எழுதியவர்கள் கலக்கத்தில் சுற்றிக்கொண்டிருப்பார்கள்.
 
பனிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான நாள் இன்னமும் நினைவில் இருக்கிறது.செல்போன்,இணையம் இல்லாத காலம் அது.காலையில் தேர்வு முடிவு வெளியிட்டால் மாலைமுரசு,மாலைமலர் நாளேடுகள் பார்த்துதான் தெரிந்துகொள்ளவேண்டும்.சேலத்திலிருந்து வந்து சேர ஒருமணி ஆகிவிடும்.நண்பர்கள் சேர்ந்து ஒருவனை மட்டும் பேப்பர் வாங்கிவர அனுப்புவது என்று முடிவு செய்தோம்.

நண்பனுக்காக எங்கள் ஊர் பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தோம்.மதியத்திலிருந்து ஒவ்வொரு பேருந்துவரும்போதும் எழுந்துநின்று பார்ப்போம்.அதில் இல்லையென்றவுடன் அடுத்த பேருந்து.கடையில் இருந்த போண்டா,,வடைஎன்று வாங்கித்தின்றுவிட்டு காத்திருந்தோம்.ஆறுமணிக்கு மேலாகிவிட்டது.அடுத்த பேருந்து ஏழு மணிக்கு வரும்.

பேருந்திலிருந்து இறங்கிய நண்பனின் முகம் வாடிப்போயிருந்தது.அவன் கையில் மாலைமுரசோ,மலரோ இல்லை.பேப்பர் கிடைக்கவில்லை என்று ஒரு பேப்பரில் எங்கள் பள்ளியின் எண்களை குறித்துவந்திருந்தான்.என்னுடைய எண்ணைக்காட்டி ``நீ பாஸ்`` என்றான்.சுமார் இருத்தைந்து பேர் உள்ள வகுப்பில் ஐந்து பேர் மட்டும் தேர்ச்சி பெற்றிருந்தோம்.நண்பன் தேர்ச்சி பெறவில்லை.

அவனது தேர்வு முடிவு எனக்கு வருத்தமாகத்தான் இருந்தது.ஒன்றாம் வகுப்பிலிருந்து இருவரும் தோழர்கள்.பள்ளிக்கு இரண்டு கிலோமீட்டர் நடந்து போய்ப்படிக்கவேண்டும்.அவனை அழைத்துக்கொண்டு அவன் வீட்டுக்குத்தான் முதலில் போனோம்.அவர்கள் வீட்டில் ஒன்றும் சொல்லவில்லை.அவனைச் சாப்பிடச் சொன்னார்கள்.

பனிரெண்டாம் வகுப்பிற்குப்பிறகு படித்ததாகத் தெரியவில்லை.சொந்தமாகக் கார்,வீடு என்று வசதியாகவே இருக்கிறான்.ஓசூரில் நல்ல கம்பெனியில் வேலை செய்கிறான்.கணிதப்பாடத்திற்கு மட்டும் பதினைந்து கிலோமீட்டர் பயணம் செய்து தனிவகுப்புக்குப் போனோம்.கௌரவம் காரணமாக கணித ஆசிரியர் பையன் டியூஷன் வரவில்லை.கணித ஆசிரியர் மகன் கணித பாடத்தில் தோல்வியடைந்தான்.இப்போது அவனும் அரசுப் பள்ளியில் கணித ஆசிரியர்.

எங்களுடன் படிக்கும்போது மக்குகள் என்று கடைசிப்பெஞ்சில் இருந்த பலர் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்கள்.இன்று குறைந்த மதிப்பெண் எடுத்துவிட்டாலே வாழ்க்கை போய்விட்டதாகக் கதறுபவர்களைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது.குழந்தைகளைப் படிக்க வைப்பது தொழிலுக்கு முதலீடு செய்வதாக ஆகிவிட்டது.அங்கே,இங்கே என்று புரட்டி வட்டிக்கு வாங்கி தனியார் பள்ளியில் படிக்கவைப்பது முதலீடு செய்வது போலத்தான்.

முதல் வகுப்பில் படிக்கும் தனது பையன் சரியாகப்படிப்பதில்லை என்று கவலை கொள்ளும் பெற்றோர்களைப் பார்த்திருக்கிறேன்.எனக்கு அவர்களைப்பார்க்கப் பரிதாபமாக இருக்கும்.பணம் கட்டி படிக்க வைப்பதுதான் காரணம்.வன்முறையும்,தற்கொலைகளும் இதன் விளைவுகள்தான்.கல்வி வியாபாரம் இருக்கும் வரை இவற்றைத் தவிர்ப்பது சாத்தியமாகத்தோன்றவில்லை.

தேர்வு முடிவுகளுக்கு அடுத்து நிகழும் தற்கொலைகளைத் தடுக்க நாம் முயற்சி செய்ய வேண்டும்.நேரடியாகப் பள்ளியில் உளவியல் ஆலோசனைகளுடன் தேர்வு முடிவுகளை வழங்கலாம்.பெற்றோர்,மாணவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகள் தேவை.உடனடியாகச் சாத்தியம் இல்லாவிட்டாலும் முடியாத விஷயமல்ல! மனித நேயமுள்ள ஆசிரியர்களைத் தேர்ந்தெடுத்து பயிற்சி அளிப்பது எளிதாகவே இருக்கும்.
-

3 comments:

Anonymous said...

வணக்கம்

நல்ல தொலை நோக்கு.
வெள்ளம் வரமுன் தடுப்பு போட வேண்டும் என்பதை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள்..
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

என்பக்கம் கவிதையாக வருங்கள் அன்போடு
எப்போது ஒளிருமட வசந்த காலம்......

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Unknown said...

வணக்கம்,

நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

www.Nikandu.com
நிகண்டு.காம்

Unknown said...

http://www.resultlink.in/ this blog provides all results check it out