எப்போதாவது வயிற்றுப்போக்கு வருவது
சாதாரணமான விஷயம்.அதிகமானவர்களை தாக்கும் நோயும் கூட! வளரும் நாடுகளில் அதிக
மரணங்களுக்கு காரணமாயிருப்பது இதுதான்.உணவுப்பொருள்கள்,சுத்தம் அற்ற நீரினாலும்
தான் பெரும்பாலும் ஏற்படுகிறது.அதிகமாக மது அருந்துபவர்களுக்கு,ஹோட்டலில்
சாப்பிடுபவர்களுக்கும் சகஜம்.சிலருக்கு பயணம் என்றாலே வயிறு பிரச்சினை
செய்யும்.மாத்திரைகளின் பக்க விளைவாகவும் வரலாம்.காலரா என்றாலும்
வயிற்றுப்போக்குதான் அறிகுறி.
குடும்பத்திலோ,நமக்கோ வந்துவிட்டால் எப்படி சமாளிப்பது? அதிக நீர் இழப்பு
ஏற்பட்டு உப்புகளை உடல் இழந்து உயிருக்கே உலை வைக்கலாம். சாதாரணமாக
சரியாகப்போய்விடும் என்று இருப்பவர்கள் உண்டு.வீட்டு வைத்தியம் செய்து கொள்பவர்கள்
இன்னொரு வகை.வயிற்றுப்போக்கின் போது கடைப்பிடிக்கவேண்டிய சில குறிப்புகளை
கவனத்தில் வைத்துக்கொண்டால் நல்லது.
நீர் இழப்பு
அதிகம் இருக்கும் என்பதால் ஒரு நாளைக்கு பருகும் சராசரி அளவை விட அதிக நீர்
அருந்தவேண்டும்.இழந்துவிட்ட உப்புகள்,வைட்டமின்கள்,ஆற்றலைப் பெற திரவ உணவு வகைகளை
அதிகம் எடுப்பது நல்லது.ORS பவுடர் என்று கடையில் விற்பார்கள்.பலர் இன்று முன்னெச்சரிக்கையாக
வீட்டில் வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன்.இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது
சர்க்கரை,உப்பு கரைசல்.தொடர்ந்து தாகம் எடுக்கும்போதெல்லாம் பருகி வர வேண்டும்.
நன்கு வேக
வைக்கப்பட்ட ஜீரணிக்க எளிதான காய்கறிகளை
எடுத்துக்கொள்ளலாம்,அரிசி உணவு,வாழைப்பழம்,உருளைக்கிழங்கு,பார்லி ஆகியவையும்
பரிந்துரைக்கப்படும் உணவுகள்.உடல் இழந்து விட்ட தாதுக்களைப்பெற பழங்கள்
சாப்பிடலாம்.மாம்பழம்,வாழைப்பழம்,போன்றவையும் காய்களில் காரட்,பூசணியும்
சேர்க்கலாம்.அதிக சூடாகவோ,குளிர்ச்சியாகவோ உள்ள உணவுகளை தவிர்க்கவும்.மிக குறைவாக
அடிக்கடி சாப்பிடவும்.
தவிர்க்க வேண்டிய உணவுகள்.
- · கொழுப்பு நிறைந்த உணவுகள்,அதிக எண்ணெய்,வறுத்த,பொரித்த தவிர்க்கவும்.
- · தக்காளி,ஆரஞ்சு,சாத்துக்குடி,பைனாப்பிள் போன்றவை அமிலத்தைத் தூண்டுபவை.இவற்றைத் தள்ளி வைப்பது நல்லது.
- · சிலருக்கு பால் கூட ஒத்துக்கொள்ளாமல் போகலாம்,தேநீர்,காபி போன்றவை வயிற்றுப்போக்கை மோசமாக்கும்,
- · மிளகு,காரம் சேர்க்கப்பட்ட மசாலா நிறைந்த உணவுகள் ஆகாது.
- · பீன்ஸ்,காலிபிளவர்,முட்டைக்கோஸ்,வெங்காயம் போன்றவை வாயுத்தொல்லையைத் தருபவை.ஆகவே சாப்பிடவேண்டாம்.
முடிந்தவ்ரை உடனடியாக
மருத்துவரை சந்திக்கவேண்டும்.சிலருக்கு ஆண்டிபயாடிக் தேவைப்படலாம்.மருத்துவர்கள்
நேரமின்மை காரணமாக இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள்.நினைவில் வைப்பது
உதவும்.