Friday, September 30, 2011

காதலியை,உறவுகளை புரிந்துகொள்ள கஷ்டமா இருக்கா?

காதலர்கள்,தம்பதிகள்,நண்பர்கள்,உறவினர்கள் என்று அனைவரிடமும் பிளவுகள் இல்லாத உறவுகளையே எதிர்பார்க்கிறோம்.பல நேரங்களில் ஏராளமான சிக்கல்களை எதிர்கொள்கிறோம்.நேசமான குழப்பம் இல்லாத உறவுகளுக்கு மற்றவரை புரிந்து கொள்வதுதான் தீர்வு.ஒருவரை ஓரளவேனும் அறிந்துகொள்வதன் மூலம் அவருக்கு மிக நெருக்கமாக உணரமுடியும்.அவரது நம்பிக்கையை பெறுவதன் மூலம் உங்கள் வளர்ச்சிக்கு உற்றதுணையாக இருப்பார்.

                காதலர்கள்,தம்பதிகள் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டால் குடும்பச்சிதைவை தடுக்க முடியும்.உங்கள் பணியாளரை புரிந்துகொண்டுஉதவும்போது ஆத்மார்த்தமாக பணி செய்வார்.மற்றவர்களை புரிந்துகொள்வதற்கு நீங்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.மனிதன் தன்னைப்பற்றி மற்றவருக்கு உணர்த்த வார்த்தைகளையும்,அங்க அசைவுகளையும் வெளிப்படுத்துகிறான்.எனவே,அவரைஉற்றுநோக்கவேண்டும்,சொல்வதை கவனமாக கேட்கவேண்டும்,அவரது உணர்வுகளை கவனிக்கவேண்டும்.இது எளிதானதுதான்.ஒவ்வொன்றாக பார்க்கலாம்.

உண்மையை உணர்த்தும் உடல்மொழி !

படிப்பெதுவும் தேவையில்லை.கண்களை உற்று கவனியுங்கள்.உங்களுக்கு எல்லாவற்றையும் சொல்லிவிடும்.அவரது கைகள்,கால்கள்,முகபாவம் என்னசொல்கிறது என்பதை பொறுமையாக கவனியுங்கள்.ஒருவரை பார்த்தவுடன் சோகமாகஇருப்பதை,கோபமாக இருப்பதை நம்மால் சொல்லமுடியும்தானே!அசட்டுச்சிரிப்பா?சந்தோஷ சிரிப்பா?சோக சிரிப்பா?என்பதை உணர உங்களால் முடியும்.சில நேரங்களில்யாரையோ ஏன் டென்ஷனாக இருக்கிறீர்கள்?என்று கேட்டிருக்கிறீர்கள்.அது எப்படி உங்களுக்கு தெரிந்தது?இன்னும் இன்னும் கவனம் செலுத்துங்கள்.ஒருவரது உணர்வுகளை உங்களால் புரிந்து கொள்ள முடியும்.சரியான எதிர்வினையும் உங்களிடம் உருவாகும்.

கவனமாக கேளுங்கள் :

உடல் மொழிகளுக்கு அடுத்து ஒருவரது வார்த்தைகள்தான் அவரை நமக்கு உணர்த்துகிறது. வார்த்தைகளில் உள்ள உணர்ச்சியை அடையாளம் காணுங்கள்.அதற்கு ஏற்றவாறு சரியான வார்த்தைகளை நீங்கள் வெளிப்படுத்துங்கள்.ஒருவர் துக்ககரமான வார்த்தைகளை பேசும்போது நீங்கள் சிரிக்கமாட்டீர்கள் இல்லையா?

ஒருவர் எப்படி உணர்கிறார்?

ஒரே சம்பவம் உங்களிடத்திலும்,உங்கள் நண்பரிடத்திலும் ஒரே உணச்சியைத்தான் தோற்றுவிக்கும் என்பது நிச்சயமல்ல!இருவருக்கும் வேறுவேறு நம்பிக்கைகள்,கொள்கைகள் உள்ளன.எனவே,அவரது உணர்வுகளை கவனியுங்கள்,அதை ஏற்றுக்கொள்ளுங்கள்.உங்களுக்கு சாதாரணமாக தோன்றும் ஒரு விஷயம் அவரிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தலாம்.நீங்கள் புரிந்து கொண்ட அந்த உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்துங்கள்.ஆங்கிலத்தில் Empathy என்றொரு சொல் இருக்கிறது.நீங்கள் உணர்வதையே நானும் உணர்வது.கொஞ்சம் அக்கறையும்,மனிதநேயமும் இருந்தால் சாத்தியம்தான்.இருவரும் ஒரே மாதிரி உணர்ந்தால் குழப்பத்துக்கும்,பிளவுக்கும் அங்கே என்ன வேலை?

மேலும் சில துளிகள் ..............
  • ஆம்.கண்களை கவனிக்கவும்.
  • கவனமாக கேட்கவும்
  • அவரும் உங்களைப்போல மனிதர்தான்.
  • ஒவ்வொருவருக்கும் மதிப்பீடுகள் வேறுபடுகின்றன.
  • உணர்வுகளை கண்டறியுங்கள்
  • ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்களால் புரிந்து கொள்ள முடியும்.முயற்சி செய்யுங்கள்.மதிப்பு மிக்க உறவுகள் உங்களுக்கு கிடைக்கும்.அமைதியும்,சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நிலை பெறும்.(தலைப்பு மாற்றப்பட்ட மீள்பதிவு)
-

Thursday, September 29, 2011

ஓட்டு ,கமெண்டு யாருப்பா இதெல்லாம் கண்டு புடிச்சது?

  நாம் ஒன்று நினைத்தால் அது (ஒரு புளோவில் வந்து விட்டது.யாரும் புகார் அனுப்பாதீங்கப்பா!) ஒன்று நடந்து விடுகிறது. கூகுள் பிளாக்கர்களுக்கு பிரபலமாவதற்கு சில வழிகளை சொல்லித் தந்திருக்கிறது.நிறைய பேருக்கு கமென்ட் போடுங்கள் என்பதும் அதில் ஒன்று.இதை கடைப் பிடித்தவர்கள் வெற்றிகரமாக உலா வருவது நமக்கு தெரியும்.என்னுடைய கதை பதிவரிந்தது,அதாம்பா பதிவுலகம்.பிளாக்கர் சொல்லாமல் விட்ட ஒன்று ஓட்டு போடுவது!

ஒருவர் மெயில் மூலம் என்னுடைய போன் நம்பர் கேட்டார்.அனுப்பி வைத்தேன்."வணக்கம் சார் என் பெயர் ராஜன்.நான் பிளாக் ஆரம்பிக்கலாமென்று இருக்கிறேன்." ஒரு பக்கம் சந்தோசமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கஷ்டமாக இருந்தது.எதற்கு இந்த வேண்டாத வேலை உங்களுக்கு என்று கேட்கலாம்.ஆனால் அப்போ நீ மட்டும் எதற்காக ? என்று நினைத்து விடுவாரோ என்று பயம்.பிரௌசிங் செண்டர் பணியாளிடம் போனிலேயே சொல்ல அவரும் வலைப்பதிவு ஆரம்பித்து விட்டார்.


சில புத்தகங்களை எழுதியிருப்பதாக சொன்னார்.பழனிபாபா,குந்தவை பற்றிய இரண்டு புத்தகம் கொடுத்திருக்கிறார்.இன்னும் படிக்கவில்லை.அவருக்கு முக்கியமாக ஒரு விஷயத்தை சொல்லியாக வேண்டும் என்று தோன்றியது.அதேதான்.மற்ற பதிவுகளை படித்து ஓட்டும் கமெண்டும் போடுவது! சிலர் அருமையாக கமென்ட் மட்டும் போடுவார்கள்.ஓட்டு போடமாட்டர்கள் .ஓட்டு போடாமல் வருவதை  பதிவர்கள் அவ்வளவாக விரும்புவதில்லை என்று தோன்றுகிறது.


 ஒரு நண்பருக்கு இதை சொல்லலாம் என்று நினைத்தேன்.இவனுக்கு ஓட்டு போட சொல்லி கேட்கிறான் என்று நினைத்து விட்டால் என்ன செய்வது என்று சொல்லாமல் விட்டு விட்டேன்.ஆனால் ராஜனுக்கு மிக பொறுப்பாக நான் இதை சொல்லிவிட்டேன்.அவரும் அப்படித்தான் நினைத்து விட்டார் போலிருக்கிறது.எனக்கு மட்டும் சரியாக ஓட்டு,கமென்ட் போட்டு விடுகிறார்.அடக் கடவுளே! 


என்னைப் பொறுத்தவரை அது நண்பர்களின் விருப்பம்தான்.கமென்ட் மட்டும் போட்டாலும் சரி.ஓட்டு சேர்த்து போட்டாலும் சரி.நான்கு நாட்களுக்கு முன்பு ராஜன் போன் செய்து உங்களுக்கு ஓட்டு போட்டுவிட்டேன் ,நான் கொஞ்சம் பிஸி என்றார்.பரவாயில்லை விடுங்க சார் என்றேன்.சகோதரர் ஒருவர் அலுத்துக்கொண்டார்.பெரிய பேஜார் சார்.இன்னும் ஓட்டு கமென்ட் போட்டு முடியவில்லை. வேறு வழி இல்லை.நம்முடைய பதிவுக்கு வந்து நாம் எழுதியதை எல்லாம் படித்து கமென்ட் போட்டிருக்கிறார்களே! அவர்களுக்கும் நாம் மரியாதை செய்வதுதானே சரி!

அதிலும் நிறைய பிரச்சினை இருக்கிறது.எனக்கு ஏ.ஆர் ,ரஹ்மான் பற்றி ஒரு கமென்ட் .நான் அப்படி எதுவும் எழுதவில்லையே? என்று யோசிக்கவில்லை.பதிவுலகில் இதெல்லாம் சகஜம்.எனக்கும் அந்த மாதிரி அமானுஷ்ய அனுபவங்கள் ஏற்பட்டதுண்டு.இரண்டு பதிவுகளை ஒரே நேரத்தில் திறந்து கொண்டு எனக்கு போட வேண்டிய கமெண்டை வேறு ஒருவருக்கு போட வேண்டியது. மெயில் மூலமும்,டேஷ்போர்டு மூலமும் இரண்டு பதிவுகளை ஒரே நேரத்தில் ஓட்டு கமென்ட் போட வேண்டியது.


ஒரு நண்பருக்கு ஓட்டும் கமெண்டும் போட்டுவிட்டு அரைமணி கழித்துப்பார்த்தால் நான் போட்ட கமெண்டை காணோம்!ஒரு வேளை நீக்கி விட்டாரோ! இன்னொரு பதிவையும் பார்த்தபோது விஷயம் தெரிந்தது.ஆமாம் வேறு ஒருவருக்கு போட்டு விட்டேன்.அப்புறம் சுருக்கமாக கமென்ட் போட்டால் பதிவை படிக்கவில்லை என்று நினைத்துக் கொள்கிறார்கள்.நான் அவசரமாகவாவது படிக்காமல் கமென்ட் போடுவது வழக்கமில்லை.ஓட்டு போடுவதிலும் கூட ஒவ்வொருவரும் வேறுபடுகிறார்கள்.நான் எந்த தளத்திற்கு போனாலும் இன்டலி,தமிழ்மணம்,தமிழ் 10 அனைத்திலும் வாக்களிப்பது வழக்கம்.

ஓட்டு கூட எங்கோ போகட்டும்.கமெண்ட்டை கண்டுபிடித்தவர்கள் புண்ணியவான்கள்.பல நேரங்களில் நாம் ஏதாவது விட்டுவிட்டாலும்,தவறான தகவல் தந்திருந்தாலும் உடனே சொல்லி விடுகிறார்கள்.பல காலமாக கமென்ட் மாடரேஷன் வைத்திருந்தேன்.பல கமெண்டுகளை நான் வெளியிடவில்லை.சில தனி மனித தாக்குதல்,நீதிமன்ற அவமதிப்பு போன்றவை.ஆனால் இரவுகளில் மட்டுமே பதிவை பார்க்க முடிவதால் மாடரேஷன் சரியாக வரவில்லை.மற்றபடி மாடரேஷன் வைப்பது சரி என்றே படுகிறது.
-

Wednesday, September 28, 2011

ஃபிகர் என்றவரை செருப்பால் அடித்த இளம்பெண்.


அரசு மருத்துவமனை ஒன்றில் நடந்த நிகழ்ச்சி இது.ஒரு பெண் சுமார் இருபதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள் இருக்கலாம்.ஒருவரை ஆக்ரோஷமாக செருப்பால் விளாசியதை கண்டு கூட்டம்கூடி விட்ட்து.பெண்ணின் உறவினர்கள் கூடி விட்டார்கள்.பேருந்தில் இடிப்பதிலிருந்து ஆண்களால் ஏற்பட்ட அத்தனை சங்கடங்களையும் சொல்லிக்காட்டி அழுது கொண்டிருந்தார்.
                                பக்கத்தில் இருந்த போலீஸ் வந்து விசாரித்த போது “ ஃபிகர் நல்லா இருக்குன்னு சொன்னேன் சார்அவ்வளவுதான் என்றான் அவன்.அவனுடைய நண்பனும் ஆமாம் சார் அது மட்டும்தான் சொன்னான் என்றான்.’’போய்  உன்னுடைய அம்மா,தங்கை என்று மீண்டும் சத்தம் போட ஆரம்பித்து விட்டார் அப்பெண்.இருவரையும் ஒருவரை ஒருவர் இதற்கு முன்பு தெரியாது.
                                 வழக்கமாக இம்மாதிரி வார்த்தைகளை பெண்கள் பெரிதாக எடுத்துக் கொள்கிறார்கள் என்று சொல்ல முடியாது.மிகச்சிலர் தனக்கான அங்கீகாரமாக கூட கருதுவதுண்டு.இதற்குபோயா இப்படி என்று பலர் ஆச்சர்யப் பட்டார்கள்.மீண்டும் மீண்டும் ஆவேசமாக கத்திக் கொண்டிருந்தார்.காவல்துறையை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரினார்.அவருடைய உறவினர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றார்கள்.
                                 இன்னொரு சம்பவம்.இரண்டு நண்பர்கள்.ஒருவர் கிட்ட்த்தட்ட அடிக்கடி குடிக்கும் பழக்கம் உள்ளவர்.அவரை குடிகாரா! என்று அழைப்பதில் இன்னொருவருக்கு சந்தோஷம்.குடிப்பவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சேர்ந்து கொண்டு சிரிப்பார்.பதிலுக்கு அவரை ஏதாவது விஷயத்தில் வாரி விடுவார்.ஒரு நாள் வழக்கமான பெட்டிக்கடையில் சந்திக்கும்போது குடிகாரன் வந்துட்டான் என்றார்.குடிக்கும் பழக்கம் உடையவர் அடிக்கப் பாய்ந்தார்.வார்த்தை தடித்து சண்டையாகி இருவரும் பேசிக்கொள்ளாத நிலை உருவாகிவிட்ட்து.
                                இளம்பெண் விஷயத்துக்கு வருவோம்.எத்தனையோ இடங்களில் ஆண்களின் வார்த்தைகளை ஒதுக்கிவிட்டு கண்டும் காணாமல் சென்ற பெண் திடீரென்று செருப்பைக்கழட்டியது ஏன்? பல நாட்களில் கோபத்தையும் ஆத்திரத்தையும் தூண்டாத குடிகாரன் என்ற வார்த்தை அன்று மட்டும் பிரச்சினை ஆனது எப்படி?
                                  செருப்பால் அடித்த பெண்ணின் அக்கா கணவர் விபத்தில் இறந்து பிரேத பரிசோதனை நடந்து கொண்டிருந்த்து.வீடும் உறவும் துக்கத்தில் கிடந்தபோது அக்காளின் குழந்தைக்கு ஒரு ஓரமாக உணவு கொடுத்துக்கொண்டிருந்தார்.ஏற்கனவே இருந்த மோசமான மனநிலை ஆத்திரத்தை தூண்டி விட்ட்து.எப்போதும் ஆண்கள் பெண்களிடம் நடந்து கொள்ளும் அத்தனை விஷயங்களையும் சொல்லிக் கத்துகிறார்.
                                  கணவன்,மனைவியோ உறவினர்களோ திடீரென்று சண்டை பிடிக்கும்போது கவனித்துப்பாருங்கள்.ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு தன்னிடம் நடந்து கொண்ட்தையும் சொல்லிக் கத்துவார்கள்.உறவுகளில் ஏற்படும் சிறு சிறு நெருடலும் உள்ளே தங்கியிருக்கிறது.மறைந்தோ,மறந்தோ போய்விடாது எத்தனை வருடங்களானாலும்!சமயம் வரும்போது வெளியே வந்து விடும்.
                                  சரி குடிகாரனுக்கு என்னதான் ஆனது? அதற்கு முந்தின நாள் இரவு முழுக்க மனைவியுடன் சண்டை.இவர் குடித்துவிட்டு வாந்தியெடுத்து வீட்டில் பிரச்சினை.அக்கம்பக்கத்து வீடுகளுக்கும் இவருடைய பழக்கம் தெரிந்து போனது.வீட்டு உரிமையாளர் வீட்டைக் காலி செய்தால் பரவாயில்லை என்று சொல்லி விட்டார்.பல நாட்கள் கிண்டலடித்திருந்தாலும் இப்போது அந்த வார்த்தை இரண்டு நண்பர்களை பிரித்து விட்ட்து.

சம்பவங்கள் சொல்லும் படிப்பினை என்ன? நான் சொல்வதைவிட மற்றவர்கள் சொன்னால் சரியாக இருக்கும்.
-

Monday, September 26, 2011

ஏலகிரியில் கல்லூரி இளசுகளின் குத்தாட்டம்.

ஏலகிரி வேலூர் மாவட்ட்த்தில் உள்ள சுற்றுலாத்தளம்.ஜோலார்பேட்டை ரயில் சந்திப்பிலிருந்து அருகாமையில் இருக்கிறது.வேலூரிலிருந்து பேருந்துகளும் உண்டு.திருப்பத்தூரிலிருந்தும் செல்ல்லாம்.இரைச்சல் இல்லாத அமைதியும்,இயற்கைக் காற்றும் வரப்பிரசாதம்.முன்னாள் முதல்வரும்,பா.ம.க தலைவரும் இந்த வருட்த்தில் ஓய்வெடுக்க வந்து பிரபலப் படுத்தினார்கள்.
                                  கோடைகாலம்தான் சீஸன்.அப்போது தங்குவதற்கு இடம் கிடைப்பதே கஷ்டம்.சனி ஞாயிறுகளில் கொஞ்சம் கூட்டம் இருக்கும்.பெரிய ஹோட்டல்களை கட்டி வைத்திருக்கிறார்கள்.சில ஹோட்டல் முதலாளிகள் பணம் செய்ய ஏதேதோ செய்ய ஆரம்பித்திருப்பது நேற்று வெட்ட வெளிச்சம் ஆகியிருக்கிறது.

                                  இளமையைப் பற்றித்தான் நமக்கு ஏற்கனவே தெரியுமே? அதுவும் இப்போது போதையுடன் குழுவாக (மாணவர்,மாணவிகள் எல்லாம்தான்) பார்ட்டி நட்த்துவது அதிகரித்திருக்கிறது.கல்லூரி என்று சொன்னேன் இல்லையா? இல்லை,பல்கலைக்கழகம்.சென்னையில் உள்ள ஒரு பல்கலைக்கழக மாணவ மாணவிகளும் வேலூரில் இருந்தும் குழு சேர்ந்திருக்கிறார்கள்.
                                  ஏலகிரியில் உள்ள ஹோட்டலில் போதையில் குத்தாட்டம் போட்டு கலாட்டா செய்தவர்களை கைது செய்திருக்கிறது காவல்துறை.மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு வளைத்து விட்டார்கள்.கஞ்சா,அபின் சப்ளை செய்த்தாக ஹோட்டலை சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.சேலத்தில் போதை மருந்து வைத்திருந்தவரை பிடித்தபோது அவர் சொன்னார்கல்லூரி மாணவர்கள்தான் என்னுடைய கஸ்டமர்கள்.

                                     இளமை திக்குத்தெரியாத காட்டில் திணறிக்கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது.கைதான குழுக்கள் புகழ்பெற்ற பல்கலைக்கழகத்திலிருந்து வந்திருக்கிறார்கள்.எதிர்காலம் பற்றிய பயம் எதுவும் அவர்களுக்கு தேவைப்படவே இல்லை.படிப்பை விட்டு வெளியேறும் முன்பே வேலைக்கான நியமனம் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகம்.ஆனால் மோசமான போதை மருந்துகளுக்கு அடிமையாகி வேலையை தக்க வைத்துக்கொண்டு மகிழ்ச்சியானவாழ்க்கையை வாழ முடியுமா?
                                                                                     இம்மாதிரி விஷயங்களே ஏலகிரியில் அதிகம்.பெங்களூரிலிருந்து நிறைய இளைஞர்கள் குழுவாக சேர்ந்து வந்து விடுவார்கள்.நான் முதல்முறை போனபோது ஒரு ரிசார்ட்டில் தங்கியிருந்தேன்.பக்கத்து அறையில் நான்கு இளைஞர்கள் நள்ளிரவைத் தாண்டியும் வெட்ட வெளியில் உட்கார்ந்து குடித்துக்கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள்.

                                  இளைஞர்கள் மட்டும் வருவது போய் இப்போது இருபாலரும் கொண்டாட வருகிறார்கள். வசதி படைத்தோரின் பிள்ளைகள்தான் பெரும்பாலும்! மகிழ்ச்சி என்பதை என்னவென்றே தெரியாமல் மனம் போன போக்கில் திரிய ஆரம்பித்து விட்டார்கள்.போதை வைத்தே பலரை பிடித்து விடுகிறார்கள்.
                                                                                       காவல்துறை கைது செய்யும் அளவுக்கு மானம் கப்பல் ஏறிய பின்பாவது பல்கலைக்கழகங்கள் யோசிப்பார்களா? எத்தனையோ அறிஞர்கள் அங்கே இருக்க முடியும்.புதிது புதிதாக எதையெதையோ கண்டு பிடிக்கிறார்கள்.வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் போடுகிறார்கள்.பழைய கேள்வியை திரும்பக் கேட்போம்.கல்வி என்பது வெறும் தொழில்நுட்பத்தை கற்றுத் தந்து வெளியே அனுப்பவதா? மாணவ மாணவிகளுக்கு நல்வழியை காட்டும்,மாண்பைக் கற்றுத்தரும் ஒருவழியை கண்டுபிடிக்க முடியாதா? புதிய தலைமுறையினர் சிந்திக்க வேண்டிய விஷயம்.
-