Friday, August 20, 2010

ஒரு சிறிய புத்தகம்

ஒரு சிறிய புத்தகம்.பனிரெண்டாம் வகுப்பு படிக்கும்போது வாங்கினேன். அப்போது படிக்கவில்லை.படிப்பதற்கான நேரம் தானாக வந்தது.கனமழை.அழுக்குகள் கரைந்து வெளியேறியது . பல்லாண்டுகளாக தூங்கிக்கிடந்த விதைகள் முளைக்கத்துவங்கின . விதை முளைக்கும் சத்தத்தில் விழித்துக்கொண்டேன் .
தனி மனிதனை மட்டுமல்ல உலகின் சரித்திரத்தை யும் ,சமூக ,கலாசார மாற்றங்களையும் கலை இலக்கியங்கள் தான் மாற்றியமைத்திருக்கின்றன .கதை படித்து திருந்தியவர்கள் இருக்கிறார்கள் .ஒரு சிறிய புத்தகம் என்னுள் ஏற்படுத்திய மாற்றங்களை எப்படி விவரிப்பேன் என்று தெரியவில்லை.
இயற்கையின் வசம் ஆட்படாதவர்கள் யாருமில்லை .கடும் மழையிலும் ,நடுங்கும் குளிரிலும் தாங்கொணாத கோடையிலும் தாங்கும் வலிமையை தந்தவை அந்த எழுத்துக்கள்.வஞ்சகர்களின் கீழ்த்தரமான தந்திரங்களையும், மனிதப்பண்பற்ற விலங்குகளையும் ,அன்பற்ற மனக்கோளாறுகள் கொண்டோரையும் அமைதியாக எதிர்கொள்ள கற்றுக்கொண்டேன்.பின்னர் நெருப்பாற்றை கடந்தேன்,சுனாமியை எதிர்கொண்டேன்.அரவங்களின் நடுவே ,புயலின் உக்கிரத்தில் வாழ்ந்தபோதும் உருக்குலையாமல் நின்றேன். அந்த சிறியபுத்தகத்தின் பெயர் பாரதியார் கவிதைகள்.
கலை இலக்கியங்களின் வலிமை எல்லோருக்கும் தெரிந்ததுதான். இன்றைய வலைப்பக்கங்கள் சமூகத்தை முன்னெடுத்துச்செல்லும் வகையில் நல் உணர்வுகளை வளர்க்கும் பணியை மேற்கொள்ள அனைவரையும் அழைக்கிறேன். -