Wednesday, June 11, 2014

கோழியின் தொடைக்கறி(சிக்கன் லெக்பீஸ்) மோகம் சரியானதா?நண்பர்களுடன் பிரியாணி சாப்பிடவேண்டும் என்று முடிவு செய்தாகிவிட்டது.உடன் வந்தவர்கள் லெக்பீஸ் கேட்க நான் மட்டும் வேண்டாம் என்று சொன்னேன்.கோழிபிரியாணியில் நம்மவர்களிடையே மிக விருப்பமானது தொடைக்கறி.இப்போது சாலையோர கடைகளில் விளம்பரத்திற்காக தொங்கிக் கொண்டிருக்கின்றன.கண்ணைப்பறிக்கும் கலரில் சாப்பிடத்தூண்டுகின்றன.

செயற்கை வண்ணங்கள் பற்றி முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன்.கடையில் சில்லி சிக்கன் சாப்பிட்டு விட்டு வந்த ஒருவரை நாக்கை நீட்டுமாறு நண்பர் சொன்னார்.நாக்கு முழுக்க வண்ணம் பூசப்பட்டிருந்தது.உணவுக்குழாய் முழுக்க சிவப்பு வண்ணம் படிந்திருக்கும் நிலையை கற்பனை செய்யுங்கள்.

தொடைக்கறி சாப்பிட்டால் கறி சாப்பிட்ட திருப்தியைத்தரும் என்று தோன்றுகிறது.ஆனால் மேலை நாடுகளில் தொடைக்கறியை விரும்பாமல் ஏற்றுமதி செய்துவிடுவதாக ஒரு தகவலைப்படித்தேன்.நமக்கு அதிக விருப்பம் தரக்கூடியது சில இடங்களில் ஒதுக்கப்படுகின்றன.சுவையா? ஊட்டச்சத்தா? என்பதில் நாம் சுவைக்கு முக்கியத்துவம் தருகிறோம்.

கோழியின் தொடைக்கறியை ஒப்பிடும்போது நெஞ்சுப்பகுதியில் ஊட்டச்சத்துக்கள் அதிகம்.விழிப்புணர்வு உள்ளவர்கள் நெஞ்சுப்பகுதியை விரும்புகிறார்கள்.குறிப்பாக உயிர்ச்சத்து பி6 (vitamin B6) அதிகம் உடலுக்குச்சேரும்.உயிர்ச்சத்து சி,இ போன்று பி6 ஆரோக்கியத்தை உறுதி செய்யும்.உடலின் வளர்சிதை மாற்றத்தில் மிக முக்கியப் பங்கு இந்த வைட்டமினுக்கு உண்டு.

கோழிக்கறியை சிற்றின்பத்தோடு தொடர்புபடுத்தி கிராமத்தில் பேசுவார்கள்.இதற்கு அறிவியல் ஆதாரம் ஏதுமில்லை.ஆனால் நல்லமனநிலைக்கு இந்த வைட்டமின் உதவி செய்கிறது.மனநலத்திற்குக் காரணமான செரோடானின்,டோபமைன் உருவாக்கத்தில் பங்காற்றுகிறது.பி6 குறைபாட்டினால் சிடுசிடுப்பும்,மன அழுத்தமும் கூட ஏற்படலாம்.

ஹீமோகுளோபின் உருவாக்கத்துக்கு அவசியம் என்பதால் பற்றாக்குறை ஒருவகை ரத்தசோகையைத் தோற்றுவிக்கலாம்.கர்ப்பகாலத்தில் தோன்றும் குமட்டல் வாந்தியின் அறிகுறியைக் குறைக்க இந்த வைட்டமின் உதவும்.நினைவிற்கு வந்த நன்மைகளைச் சொல்லியிருக்கிறேன்.மேலும் நோயெதிர்ப்புத்திறன்,நல்ல உடல்நலத்திற்கு அவசியமான உயிர்ச்சத்து இது.

கோழியின் நெஞ்சுப்பகுதியில் மட்டும்தான் இந்த வைட்டமின் இருக்கிறதா?அப்படியில்லை,வாழைப்பழம்,பட்டாணி,சிலவகை மீன்கள்,உருளைக்கிழங்கு,கீரைகள்,சிறு தானியங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு இருக்கிறது.பணம் கொடுத்து சாப்பிடும்போது ஊட்டச்சத்தையும் கவனிக்கலாம்.விழிப்புணர்வு இல்லாத நிலைதான் நமக்கு பிரச்சினைகளைக் கொண்டுவருகிறது.

வறுமையும்,ஊட்டச்சத்துப்பற்றாக்குறையும் நிலவும் தேசத்தில் உணவுப்பொருட்கள்,உடல்நலம் பற்றிய அறிவைப்பெறுவது முக்கியமானது.இவை நமது பாடத்திட்டத்தின் பகுதியாக இருக்கவேண்டும்.உணவை எடுத்துக்கொள்ளும்போது அதில் உள்ள ஊட்டச்சத்துக்களை ஓரளவாவது நமக்கு சொல்லத்தெரியவேண்டும்.

இந்த வலைப்பதிவில் வெளியான நோய்கள் குறித்த பதிவுகள் மின்னூலாக வெளியிடப்பட்டுள்ளது.freetamilebooks.com நிறுவனம் யாவரும் இலவசமாகப் படிக்கவும்,பகிரவும் மின்னூல்களை வெளியிட்டு வருகிறது.எனது இரண்டாவது மின்னூல் உடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்.பதிவிறக்கம் செய்து படிக்க,பகிர கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
-