Tuesday, December 23, 2014

நாலு பேர் நாலுவிதமா பேசுவாங்க - இரண்டு

நடுத்தர வர்க்கம் நாலு பேருக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பது போலத் தோன்றுகிறது.பொருளாதாரம்தான் இதன் அடிப்படை.உதவி செய்ய யாராவது வேண்டும்.சமயத்தில் கைமாத்தாக பணம் கொடுக்க ஆள் வேண்டும்.பெண் கொடுப்போர் எடுப்போர் எல்லாம் நாலு பேரை விசாரிக்காமல் முடிவு செய்ய மாட்டார்கள்.யாரும் எனக்குத் தேவையில்லை என்று தூக்கி எறிந்து  விட முடியாது.


பணக்காரர்களுக்கு பணத்தை வீசி எறிந்தால் எல்லாம் வரும்.தனிமைப்படுத்தப்படுவோம் என்ற பயம் நடுத்தர வர்க்கத்துக்கு அதிகம்.அலுவலகத்தில் சம நிலையில் உள்ளவர்கள்,கீழ்நிலையில் உள்ளவர்களைத்தான் தனிமைப்படுத்த முடியும்.அதிகாரியை தனிமைப்படுத்த  முடியாது.பணமும் அதிகாரமும் எல்லாவற்றையும் கொண்டுவந்து விடுகிறது. 

நடுத்தர வர்க்கத்துக்கு உறவுகள் வேண்டும்.அவர்களுடைய பலமும் அதுதான்.என் நண்பன் ஒருவனுக்கு இருபது வயதில் திருமணம் நடந்தது.அவனுக்கு வேறு  கனவுகள் இருந்தன.சொந்தக்காரப் பெண்ணை கல்யாணம் முடிக்கவேண்டும் என்று சிறு வயதிலேயே இரண்டு வீட்டிலும் முடிவு செய்து விட்டிருந்தார்கள்.அவன் தீர்மானமாக மறுத்துப் பார்த்தான்.


ஒரு நாள் அவனுடைய உறவினர்கள் அத்தனைபேரும் கூடி விட்டார்கள்." நாங்களெல்லாம் உனக்கு வேண்டாம் என்றால் உன் விருப்பம் போல செய்!'' என்றார்கள்.சொத்து பத்து கிடைக்காது என்றார்கள்.அடுத்து என்ன வேலை செய்ய வேண்டுமென்று அவர்களே முடிவு செய்தார்கள்.அவனது திறமைகளையும் கனவுகளையும் அந்த சமூகம் தின்று விட்டது.

மனிதன் சமூக விலங்கு என்று அரிஸ்டாட்டில் சொன்னார்.மனிதன் இயல்பு தவறும்போது இடித்துரைப்பது சமூகம்தான்.சமூகக் கட்டுப்பாடுகளுக்குப்  பொருந்திப் போக வேண்டும். திட்டுவது,கேவலமாகப் பேசுவது,தனிமைப்படுத்துவது என்று தண்டனைகள் கிடைக்கும்.சட்டம் தன் கடமையைச் செய்யக்கூடும். 


எப்போதோ படித்த கதை ஒன்று .விட்டில் பூச்சிகள் விளக்கைத் தேடிச்சென்று சிக்கி மடிந்து போகும்.ஒரு விட்டில் பூச்சி மட்டும் வானத்தில் உள்ள நிலாவை நோக்கி பறக்க ஆரம்பித்தது.உடனிருக்கும் அத்தனை பூச்சிகளும் தடுத்தன.அந்த நாலுபேரை(?) மதிக்காமல் பறக்க ஆரம்பித்தது.மேலேமேலே உற்சாகத்துடன் பறந்து சென்றது.நிலவை அடைய முடியாவிட்டாலும் அதிக சந்தோஷத்துடன் நீண்ட நாட்கள் வாழ்ந்தது.

பூச்சிக்கு சரி மனிதனுக்கு சாத்தியமா?நாலு பேரை ஒதுக்கிவிட்டு முன்னேறிச்செல்வது அத்தனை எளிதா?
-

Monday, December 22, 2014

நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க

நண்பனைப்பார்க்கப் பாவமாக இருந்தது.கிட்டத்தட்ட முழு உடல்நலப் பரிசோதனை செய்துவிட்டிருந்தான்.அவனுக்கு எந்த நோயும் இருப்பதாகக் கண்டறியப்படவில்லை.ஆனால் இன்னமும் அவன் அமைதியடையவில்லை." இன்னொரு மருத்துவரிடம் பரிசோதனை செய்யலாமா? என்று கேட்டான்."என்ன ஆள் ரொம்ப டல்லா இருக்கீங்க" என்று சிலர் கேட்ட பின்பு ஏற்பட்ட பிரச்சினை இது.

பார்க்கிற நாலு பேர் ஏதாவது சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.வீடு கட்டும் அலைச்சலில் சரியாக சவரம் கூட செய்யாமல் சுற்றிக் கொண்டிருந்தான்.அந்த நான்கு பேருக்கு டல்லாக இருப்பதாகத் தோன்றுவது சாத்தியம்தான்.நம்மைச் சுற்றி உள்ள நான்கு பேர் தான் பலரது வாழ்க்கையையே தீர்மானிக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

நடுத்தரக் குடும்பங்கள் எப்போதும் அந்த நான்கு பேரை நெஞ்சில் இருத்தியே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.''பார்க்கிறவங்க என்ன சொல்லுவாங்க?'' நாலு பேர் என்ன நினைப்பாங்க?'' என்பது பிரபலமான வார்த்தைகள்.ஒருவர்  அணியும் உடையை அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.சாப்பிடும் சாப்பாடு,நடத்தை எல்லாவற்றிலும் சமூகத்தின் பங்கு இருக்கிறது.

ஒருவரது மகனோ,மகளோ என்ன படிக்கவேண்டும் என்பதை அண்டை வீட்டினரோ உறவினர்களோ தீர்மானிக்கிறார்கள்.சுயமாக சிந்திப்பவனை சமூகம் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்வதில்லை.ஒரு செயலைத்தொடங்கும் முன்பு இதற்காகவே பலரிடம் கருத்துக்கேட்பவர்களைப் பார்க்கலாம்.யாராவது ஒருவர் எதிராக பேசிவிட்டாலே நம்பிக்கை இழந்து விடுவார்கள்.

இன்னும் சிலர் வசதியாக மற்றவர்கள் செயது கொண்டிருப்பதை நகல் எடுப்பார்கள்.ஈயடிச்சான் காப்பி என்பது போல! நண்பர் ஒருவர் விலை உயர்ந்த துணி எடுத்து வந்தார்.இதுவரை அவ்வளவு விலையில் உடை எடுத்து அவருக்குப் பழக்கமில்லை.அலுவலகத்தில் ஒருவர் '' உங்களுக்கு இது நல்லா இல்ல சார்!'' என்று சொல்லிவிட்டார்.ஆசையாக எடுத்த உடையை அவரது தம்பிக்குக் கொடுத்து விட்டார்.

அவர் பொறாமையால் சொல்லியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.நான்கு பேரை நினைத்து நினைத்து நல்ல வாழ்க்கையை இழந்தவர்கள் இருக்கிறார்கள்.உடன் இருக்கும் நண்பர்களின் பொறாமையால் நல்ல காதலியை இழந்த ஆண்கள் இருக்கிறார்கள்.காதலனை விட்டுவிட்டுப் புலம்புபவர்கள் இருக்கிறார்கள்.

நம்மை மற்றவர்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்ற விழிப்புணர்வு இல்லாமலே சிக்கிக் கொண்டிருக்கிறோம்.நாம் நான்கு பேர் சொல்வதை புறக்கணிக்க வேண்டுமா? மற்றவர்களை ஒதுக்கிவிட்டு தனியாக வாழ முடியுமா? இறுதியில் சுமந்து செல்லக்கூட நாலுபேர் வேண்டுமே? -தொடர்ச்சி அடுத்த பதிவில்.
-