Friday, February 17, 2012

ஆசிரியை கொலை- வளரிளம் பருவத்து பயங்கரம்.



கொலை செய்ய முடியாதவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக எங்கேயோ படித்த நினைவு.தொடர்ந்து அதிர்ச்சி  செய்திகள் நாளிதழ்களை நிரப்பிக்கொண்டிருக்கின்றன.ஆசிரியை கொலையின் அதிர்ச்சி இன்னமும் இருக்கிறது.ஆனால் கொலை அளவுக்கு  தற்கொலைகள் அதிகம் கவனம் பெறவில்லை. இன்றும் ஒரு மாணவி பெற்றோர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார்.இவர்களெல்லாம் வளரிளம் பருவத்தினர் (ADOLESCENTS) .
                               வளரிளம் பருவத்திற்கென்று தனிப்பட்ட இயல்புகள் உண்டு.நாம் டீனேஜ் என்று பதிமூன்று வயதை கணக்கிட்டாலும் உலக சுகாதார நிறுவனம் பத்து வயது முதல் துவங்குவதாக சொல்கிறது.பருவம் அடையும் வயது குறைந்து கொண்டிருக்கிறது.மிக குறைந்த வயதிலேயே மனக்குழப்பத்தையும் சந்திக்க வேண்டிய நிலை.வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் வயது.உடல் வேகமாக மாற்றத்தை சந்திக்கிறது.பால் உறுப்புகள் வளர்ச்சியடைகின்றன.பெற்றோரிடம் உள்ள உறவில் விரிசல் விழுந்து புதிய உறவுகளை தேட தொடங்குகிறார்கள்.அடிக்கடி மாறும் மனநிலை,தன்னை முக்கியமானவனாக தனித்து காட்டும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது.எதிர் பாலினரை கவரவும்,தன்னை கவனிக்கச் செய்யவும் திட்டமிடுகிறார்கள்.பகல் கனவும்,குழப்பமும் சகஜம்.

                                சரி.இதெல்லாம் இன்றைய பெற்றோர்கள் கடந்துதானே வந்திருப்பார்கள்? அவர்களுக்குத்தெரியாதா? துரதிருஷ்டவசமாக அவர்கள் மறந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.தங்கள் குழந்தை ஆசையை நிறைவேற்றி வைக்கும் எந்திரம் அன்றி வேறில்லை.நண்பர் சொன்னார்,என் பையன் இந்த முறையும் ஃபர்ஸ்ட் ரேங்க்தான்,ஆனால் நான்கு மார்க் குறைந்து விட்ட்து”.அவருடைய பையன் படிப்பது யூ.கே.ஜி.இதுதான் பிரச்சினை.நம்முடைய சமூகத்தில் குழந்தைகள் அந்த தகுதியை இழந்துவிட்ட நிலை புரியும்.குழந்தைகள் என்றில்லை,கணவன்,மனைவி,நண்பன்,அண்ணன்,தம்பி,பெற்றோர் என்று எல்லா உறவுகளும் தனது ஆசைக்கு உதவும் பொருட்களாக மாறி வருகின்றது.
                                குறிப்பிட்ட வயதுகளில் அதிகரித்து வரும் தற்கொலை,வன்முறை போக்கு போன்றவை தனிப்பட்ட பிரச்சினை அல்ல! சமூக பிரச்சினை எப்போதும் மற்ற பிரச்சினைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது.பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பிள்ளையை தந்தை அடிக்க ஓடுகிறார்.பையனின் தாத்தா சத்தமிட்டு தடுக்கிறார்.அவன் குழந்தடா! படிப்பு வரலேன்னா ஏதாவது கடை வச்சி பொழைக்கிறான்துரதிருஷ்டவசமாக இத்தகைய தாத்தாக்கள் முதியோர் இல்லங்களில் இருக்கிறார்கள்.இல்லையெனில் கிராமத்தில் பல மாதங்கள் கழித்து ஏதாவது பண்டிகை வந்தால் பேரக்குழந்தைகளை பார்க்க முடியும்.

                                  இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட வீட்டுக்கு இத்தனை பொருட்கள் தேவைப்பட்டிருக்காது.மூன்று வேளை சாப்பாட்டுக்கு மேல் கொஞ்சம் சம்பாதித்தால் போதும்.இன்று செல்போனுக்கு மட்டும் குறிப்பிட்ட தொகையை மாதம்தோறும் ஒதுக்க வேண்டும்.புது வசதிகளுடன் மொபைல் வந்தால் வாங்க வேண்டும்.கடனாக இருந்தாலும் பரவாயில்லை.நம்மையும் நாலு பேர் அப்போதுதானே மதிப்பார்கள்.ஏராளமான பணம் தேவைப்படுகிறது.விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது.மகன் நல்ல வேலைக்கு போய் சம்பாதித்தால்தான் சமாளிக்க முடியும்.நாள் முழுக்க பெற்றோர்களை வாட்டும் பிரச்சினை இது.இன்றைய பிரச்சினைகளுக்கு நுகர்வு கலாச்சாரமே முக்கிய காரணமாக சொல்ல முடியும்.
                                                                             இப்போது இருக்கும் கல்வி முறைதான் தொடர்ந்து இருந்து வருகிறது.ஆனால் இப்போதுதான் இத்தகைய பிரச்சினைகள் அதிகமாக இருக்கின்றன.நம்மிடையே பத்தாண்டுகளில் ஏற்பட்டுவிட்ட மாற்றமே காரணம்.எனக்கு தெரிந்து ஒரு தலைமையாசிரியர் பனிரெண்டாம் வகுப்பில் மாணவர்களின் மோசமான நடவடிக்கைக்காக பெற்றோரை அழைத்து கண்டித்தார்.ஆனால் வீட்டில் அவர்களுக்கு செல்வாக்கு போய்விடவில்லை.சரியாக படிக்காத விஷயம் தெரிய வந்த பிறகு பெற்றோரின் நடவடிக்கையில் மாற்றம்.பெற்றோர்,மகன் உறவு மோசமாகி சிறுவன் கிட்ட்த்தட்ட அநாதையாக்கப் படுகிறான்.கொண்டு வந்தால் தந்தை,கொண்டு வராவிட்டாலும் தாய்என்பார்கள்.இப்போது படித்து தங்களது கனவுகளை நிறைவேற்றாவிட்டால் அவன் மகனே அல்ல!

                                  பெற்றோர்களுக்கு சமூகத்தின் அழுத்தம் இருக்கிறது.தங்கள் மகனின் நிலை அவர்களுக்கு அந்தஸ்தை கொடுக்கிறது.கற்றல் திறன் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும் என்றாலும் அதைப் பற்றி பெற்றோருக்கோ கல்வி நிறுவனத்திற்கோ எந்த சிந்தனையும் இல்லை.ஏன் படிப்பு வரவில்லை என்ற காரணத்தை ஆராயவில்லை.அவன் ஒரு எந்திரம் மட்டுமே! இங்கே குழந்தைகளுக்கான கலை இல்லை.அவர்களுக்கான திரைப்படம் இல்லை.பெரியவர்களுக்கான சினிமாவை பார்க்கிறான்.சினிமா,தொலைக்காட்சி,விளம்பரம் போன்றவை அவனை அதிகமாக கதாநாயக தோற்றத்தை மனதில் நிறுத்துகின்றன.அவன் சாதாரணமான ஆள் இல்லை.

                                 இன்றைய வளரிளம் பருவத்தினருக்கு தங்களைப் பற்றிய பிம்பம் மிக உயரத்தில் இருக்கிறது.முன்பே குறிப்பிட்ட்து போல பகல் கனவு தோன்றும் வயது.அவர்களை திட்டும்போது,தண்டனை தரும்போது அந்த யதார்த்தம் மனதில் பெரும் உணர்ச்சிப் போராட்ட்த்தை தருகிறது.தாய் திட்டியதால் மாணவி தற்கொலை என்று செய்தி வருகிறது.ஆனால் தற்கொலை என்பது அந்த நேரத்தில் எடுக்கப்படும் முடிவு அல்ல.மன அழுத்தம் காரணமாக திட்டமிடப்பட்டு செயலுக்கு வருகிறது.அதிக உயரத்தில் இருந்து கீழே விழும்போது வலியும் அதிகமாக இருக்கிறது.அந்த அலறல் சத்தம்தான் நாம் கேட்கும் அதிர்ச்சி செய்திகள்.
-

Monday, February 13, 2012

மெரினாவுக்கு பசங்கள கூட்டிக்கிட்டு போங்க சார்!



                                பொங்கலுக்குப் பிறகு திரைப்படம் பார்க்கும் சூழ்நிலை.விருப்பமில்லாமல் அதுவும் இரவுக்காட்சி.பனிரெண்டு மணிக்கு முடியும்.படம் பார்த்து திரும்பும்போது சந்தோஷமாக உணர்ந்தேன்.காரணம் மெரினாவின் நகைச்சுவை மட்டுமல்ல! சென்னையில் மாணவன் கொலை செய்த விவகாரத்தில் பலரும் சினிமாவை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.அதில் உண்மை இருக்கிறது என்பது வேறு விஷயம்.தனிப்பதிவாக எழுத வேண்டிய விஷயமும் கூட! கொலை செய்வதை பெருமையாக காட்டும் சினிமா,குடித்துக்கொண்டே நாட்டுக்கு நல்லது சொல்லும் நாயகர்கள் இன்னும் இன்னும்.....

                                 மெரினாவில் சுண்டல் விற்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்யாண குணங்களை சொல்கிறது மெரினா.கண்டெடுத்த நகையை உரியவர்களிடம் அடையாளம் கேட்டு ஒப்படைக்கும் சிறுவன்.இவனைத்தானே இன்றைய குழந்தைகள் பின்பற்ற வேண்டும்.அடுத்தவன் பணத்தை எப்போது சுருட்டலாம் என்று குழந்தைகளின் முன்னால் திட்டமிடும் சூழலில் இதெல்லாம் கற்பிக்கப்படவேண்டிய விஷயம்.மருத்துவ உதவிக்கு பணம் பெற்று வழங்குவது,தாத்தாவின் உடலை வாங்க போராடுவது,நண்பனுக்காக ஏங்குவது என்று தமிழ் சினிமா சிறுவர்களுக்கு கற்பிக்கும் நல்ல விஷயங்கள் அதிகம்.பிச்சை எடுக்க வேண்டாம் நான் காப்பாற்றுகிறேன் என்று பாண்டி சொல்கிறான்.

                                   முதியவர்களை தெருவில் விடும் பிள்ளைகள் அதிகரிக்கும் சூழலில் தாத்தா,பாட்டி மீது பேரக்குழந்தைகளுக்காவது பாசம் தோன்றும்.படம் முழுக்க அன்பும்,உதவும் குணமும் நெகிழ்ச்சியுமாக நகர்கிறது.நகைச்சுவையாகவும்தான்.பரிசு வழங்க தன்னை அழைக்க வேண்டுமென விரும்பும் தாத்தா.அந்த சூழலின் இயல்பான உளவியல்.சிறுவர்களுடன் தனக்குள்ள உறவில் நிச்சயம் அப்படியான எதிர்பார்ப்பு தோன்றவே செய்யும்.உயிருக்குயிரான தமிழ் சினிமா காதலை தாண்டி நிஜமான காதலை!? காட்டுகிறது படம்.நகைச்சுவைக்காக என்றாலும் பல காதல்கள் இப்படியும் ஆகிவிடுவதுண்டு.

                                 பாடல்கள் அவ்வளவாக எடுபடாமல் போனது பலத்தை குறைத்து மதிப்பிடச் செய்கிறது.ஆனால் ஆக்காட்டி ஆறுமுகம் பாடும் பழைய பாடல்கள் இந்தக்குறையை போக்குவதாக இருக்கிறது.பாண்டியை துவக்கத்தில் உதைக்கும் காட்சியும்,கல்லால் அடிக்கப்பட்டு ரத்தம் சிந்தும் காட்சியும் நெருடலை ஏற்படுத்துகிறது.தமிழ்சினிமா என்றால் ஏதாவது சண்டைக்காட்சி இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்கள் போல!ஆனால் விளைவுகள் வருந்தும் காட்சியை தோற்றுவிக்கிறது.வழக்கமான தமிழ்சினிமா போல இல்லாமல் நல்ல முயற்சி.இன்றைய சமூகத்திற்கு எத்தகைய குணங்கள் தேவை என்பதில் இயக்குநர் தெளிவாக இருக்கிறார்.இதற்காகவே பாண்டிராஜை தாராளமாக பாராட்டலாம்.
-

Thursday, February 9, 2012

கொலஸ்ட்ரால் உணவுகள் உஷார்!


நண்பர் ஒருவர் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்.’’நெஞ்சில் ஏதோ அழுத்துவது போலிருக்கிறது, நல்ல மருத்துவராக சொல்லுங்கள்.’’ நான் எனக்கு தெரிந்த மருத்துவர் பெயரைச் சொன்னேன்.ரத்தப் பரிசோதனை முடிவு கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதை காட்டியது.இன்று இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன.இளம் வயதில் ஹார்ட் அட்டாக்,ஸ்ட்ரோக் என்பது சகஜம்.ஆனாலும் விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.வெளியே அலைந்து திரியும் பணி காரணமாக அதிகமும் ஹோட்டல் சாப்பாடுகளை சார்ந்திருப்பவர் அவர்.அதிக கெட்ட கொலஸ்ட்ராலுக்கு காரணம் இந்த பழக்கம்தான் என்பதை மருத்துவர் விளக்கினார்.

                                                                            இரத்தப் பரிசோதனையில் கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருப்பது இதயக்குழாய் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.அப்புறம் மாரடைப்பு,ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் .சைவ உணவகம் ஒன்றில் பணியாற்றுபவரை கேட்டேன்.டால்டா எந்தெந்த உணவு வகைகளுக்கு பயன்படுத்துகிறீர்கள்? வெஜிடபிள் பிரியாணியிலும்,குருமாவிலும் கொஞ்சம் சேர்ப்போம் என்றார் அசைவ உணவுகள்,இனிப்புகள் போன்றவற்றிலும் பயன்படுத்தவே செய்கிறார்கள்.வனஸ்பதி சேர்க்கப்பட்ட உணவுகள் மீண்டும் மீண்டும் சாப்பிட்த்தூண்டும்.இன்று குழந்தைகள் பெரியவர்கள் என்று பலரும் இவ்வகை உணவுகளுக்கு  அடிமையாகி இருக்கிறார்கள்.சிறு வயதிலேயே இதய நோயை ஏற்படுத்துவதில் முக்கியபங்கு வனஸ்பதிக்கு உண்டு.

                                 வனஸ்பதி நல்ல கொலஸ்ட்ராலை குறைத்து கெட்ட கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும்.இதில் உள்ள அதிக அளவான Trans fat முக்கிய காரணமாக இருக்கிறது.இவ்வகை கொழுப்புகள் அசைவ உணவுகள்,பால் பொருட்களிலும் சிறிதளவு உண்டு.கொலஸ்டரால் என்ற பிரச்சினை மட்டும் இல்லாமல் உடல் பருமன்,நீரிழிவு,புற்றுநோய் போன்றவற்றிற்கும் காரணமாக அமையலாம்.இவையன்றி நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களும் இதய நோயை வரவழைக்கின்றன.நெய்,வெண்ணெய்,அசைவ உணவுகள்,தேங்காய் எண்ணெய் போன்றவை இத்தகைய கொழுப்புகளுக்கு உதாரணங்கள்.இவற்றை குறைப்பது முக்கியமானது.

                                                                         வனஸ்பதி விலக்கப்படவேண்டியது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.ஆனால் அசைவம்,பால் பொருட்களில் நல்ல கொழுப்பும் சேர்ந்தே இருக்கும்.கொலஸ்ட்ரால் இயல்பான மதிப்பைவிட அதிகம் உள்ளவர்கள் குறைக்கவேண்டும்.பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் வாங்கும்போது தகவல்களை குறித்திருப்பார்கள்.Trans fat  0 என்று இருக்கும். ஆனாலும் மிக குறைந்த அளவு இருக்கும்.Saturated fat அதிகம் இருக்கும் பொருட்கள்,ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்டவை சேர்க்கப்பட்டிருப்பது போன்றவற்றை தவிர்க்கலாம்.மற்ற அசைவ உணவுகளோடு ஒப்பிடும்போது மீன் நல்ல கொழுப்பு அமிலங்களை கொண்டிருக்கிறது.கோழி இறைச்சி குறைந்த கொலஸ்ட்ராலை கொண்ட்து.

                                    மருத்துவத் துறையில் பணியாற்றும் ஒருவரை எனக்கு தெரியும்.கொலஸ்ட்ராலை குறைக்க எளிய வைத்தியம் ஒன்றை சொன்னார்.தனது அனுபவத்தில் குறைத்துக்காட்டியதாக அவருடைய நண்பர்களும் கூறினார்கள்.வெள்ளைப்பூண்டுதான் கொலஸ்ட்ராலை குறைக்கும் பக்க விளைவில்லாத மருந்து என்றார்.வெள்ளைப்பூண்டு தரமானதாக வாங்கி ஒரு முழுப்பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மிக விரைவிலேயே கொலஸ்ட்ரால் குறைந்து விடும் என்றார்.ஆபத்து எதுவும் இல்லை.விருப்பமுள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
-