Friday, February 17, 2012

ஆசிரியை கொலை- வளரிளம் பருவத்து பயங்கரம்.



கொலை செய்ய முடியாதவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக எங்கேயோ படித்த நினைவு.தொடர்ந்து அதிர்ச்சி  செய்திகள் நாளிதழ்களை நிரப்பிக்கொண்டிருக்கின்றன.ஆசிரியை கொலையின் அதிர்ச்சி இன்னமும் இருக்கிறது.ஆனால் கொலை அளவுக்கு  தற்கொலைகள் அதிகம் கவனம் பெறவில்லை. இன்றும் ஒரு மாணவி பெற்றோர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார்.இவர்களெல்லாம் வளரிளம் பருவத்தினர் (ADOLESCENTS) .
                               வளரிளம் பருவத்திற்கென்று தனிப்பட்ட இயல்புகள் உண்டு.நாம் டீனேஜ் என்று பதிமூன்று வயதை கணக்கிட்டாலும் உலக சுகாதார நிறுவனம் பத்து வயது முதல் துவங்குவதாக சொல்கிறது.பருவம் அடையும் வயது குறைந்து கொண்டிருக்கிறது.மிக குறைந்த வயதிலேயே மனக்குழப்பத்தையும் சந்திக்க வேண்டிய நிலை.வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் வயது.உடல் வேகமாக மாற்றத்தை சந்திக்கிறது.பால் உறுப்புகள் வளர்ச்சியடைகின்றன.பெற்றோரிடம் உள்ள உறவில் விரிசல் விழுந்து புதிய உறவுகளை தேட தொடங்குகிறார்கள்.அடிக்கடி மாறும் மனநிலை,தன்னை முக்கியமானவனாக தனித்து காட்டும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது.எதிர் பாலினரை கவரவும்,தன்னை கவனிக்கச் செய்யவும் திட்டமிடுகிறார்கள்.பகல் கனவும்,குழப்பமும் சகஜம்.

                                சரி.இதெல்லாம் இன்றைய பெற்றோர்கள் கடந்துதானே வந்திருப்பார்கள்? அவர்களுக்குத்தெரியாதா? துரதிருஷ்டவசமாக அவர்கள் மறந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.தங்கள் குழந்தை ஆசையை நிறைவேற்றி வைக்கும் எந்திரம் அன்றி வேறில்லை.நண்பர் சொன்னார்,என் பையன் இந்த முறையும் ஃபர்ஸ்ட் ரேங்க்தான்,ஆனால் நான்கு மார்க் குறைந்து விட்ட்து”.அவருடைய பையன் படிப்பது யூ.கே.ஜி.இதுதான் பிரச்சினை.நம்முடைய சமூகத்தில் குழந்தைகள் அந்த தகுதியை இழந்துவிட்ட நிலை புரியும்.குழந்தைகள் என்றில்லை,கணவன்,மனைவி,நண்பன்,அண்ணன்,தம்பி,பெற்றோர் என்று எல்லா உறவுகளும் தனது ஆசைக்கு உதவும் பொருட்களாக மாறி வருகின்றது.
                                குறிப்பிட்ட வயதுகளில் அதிகரித்து வரும் தற்கொலை,வன்முறை போக்கு போன்றவை தனிப்பட்ட பிரச்சினை அல்ல! சமூக பிரச்சினை எப்போதும் மற்ற பிரச்சினைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது.பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பிள்ளையை தந்தை அடிக்க ஓடுகிறார்.பையனின் தாத்தா சத்தமிட்டு தடுக்கிறார்.அவன் குழந்தடா! படிப்பு வரலேன்னா ஏதாவது கடை வச்சி பொழைக்கிறான்துரதிருஷ்டவசமாக இத்தகைய தாத்தாக்கள் முதியோர் இல்லங்களில் இருக்கிறார்கள்.இல்லையெனில் கிராமத்தில் பல மாதங்கள் கழித்து ஏதாவது பண்டிகை வந்தால் பேரக்குழந்தைகளை பார்க்க முடியும்.

                                  இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட வீட்டுக்கு இத்தனை பொருட்கள் தேவைப்பட்டிருக்காது.மூன்று வேளை சாப்பாட்டுக்கு மேல் கொஞ்சம் சம்பாதித்தால் போதும்.இன்று செல்போனுக்கு மட்டும் குறிப்பிட்ட தொகையை மாதம்தோறும் ஒதுக்க வேண்டும்.புது வசதிகளுடன் மொபைல் வந்தால் வாங்க வேண்டும்.கடனாக இருந்தாலும் பரவாயில்லை.நம்மையும் நாலு பேர் அப்போதுதானே மதிப்பார்கள்.ஏராளமான பணம் தேவைப்படுகிறது.விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது.மகன் நல்ல வேலைக்கு போய் சம்பாதித்தால்தான் சமாளிக்க முடியும்.நாள் முழுக்க பெற்றோர்களை வாட்டும் பிரச்சினை இது.இன்றைய பிரச்சினைகளுக்கு நுகர்வு கலாச்சாரமே முக்கிய காரணமாக சொல்ல முடியும்.
                                                                             இப்போது இருக்கும் கல்வி முறைதான் தொடர்ந்து இருந்து வருகிறது.ஆனால் இப்போதுதான் இத்தகைய பிரச்சினைகள் அதிகமாக இருக்கின்றன.நம்மிடையே பத்தாண்டுகளில் ஏற்பட்டுவிட்ட மாற்றமே காரணம்.எனக்கு தெரிந்து ஒரு தலைமையாசிரியர் பனிரெண்டாம் வகுப்பில் மாணவர்களின் மோசமான நடவடிக்கைக்காக பெற்றோரை அழைத்து கண்டித்தார்.ஆனால் வீட்டில் அவர்களுக்கு செல்வாக்கு போய்விடவில்லை.சரியாக படிக்காத விஷயம் தெரிய வந்த பிறகு பெற்றோரின் நடவடிக்கையில் மாற்றம்.பெற்றோர்,மகன் உறவு மோசமாகி சிறுவன் கிட்ட்த்தட்ட அநாதையாக்கப் படுகிறான்.கொண்டு வந்தால் தந்தை,கொண்டு வராவிட்டாலும் தாய்என்பார்கள்.இப்போது படித்து தங்களது கனவுகளை நிறைவேற்றாவிட்டால் அவன் மகனே அல்ல!

                                  பெற்றோர்களுக்கு சமூகத்தின் அழுத்தம் இருக்கிறது.தங்கள் மகனின் நிலை அவர்களுக்கு அந்தஸ்தை கொடுக்கிறது.கற்றல் திறன் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும் என்றாலும் அதைப் பற்றி பெற்றோருக்கோ கல்வி நிறுவனத்திற்கோ எந்த சிந்தனையும் இல்லை.ஏன் படிப்பு வரவில்லை என்ற காரணத்தை ஆராயவில்லை.அவன் ஒரு எந்திரம் மட்டுமே! இங்கே குழந்தைகளுக்கான கலை இல்லை.அவர்களுக்கான திரைப்படம் இல்லை.பெரியவர்களுக்கான சினிமாவை பார்க்கிறான்.சினிமா,தொலைக்காட்சி,விளம்பரம் போன்றவை அவனை அதிகமாக கதாநாயக தோற்றத்தை மனதில் நிறுத்துகின்றன.அவன் சாதாரணமான ஆள் இல்லை.

                                 இன்றைய வளரிளம் பருவத்தினருக்கு தங்களைப் பற்றிய பிம்பம் மிக உயரத்தில் இருக்கிறது.முன்பே குறிப்பிட்ட்து போல பகல் கனவு தோன்றும் வயது.அவர்களை திட்டும்போது,தண்டனை தரும்போது அந்த யதார்த்தம் மனதில் பெரும் உணர்ச்சிப் போராட்ட்த்தை தருகிறது.தாய் திட்டியதால் மாணவி தற்கொலை என்று செய்தி வருகிறது.ஆனால் தற்கொலை என்பது அந்த நேரத்தில் எடுக்கப்படும் முடிவு அல்ல.மன அழுத்தம் காரணமாக திட்டமிடப்பட்டு செயலுக்கு வருகிறது.அதிக உயரத்தில் இருந்து கீழே விழும்போது வலியும் அதிகமாக இருக்கிறது.அந்த அலறல் சத்தம்தான் நாம் கேட்கும் அதிர்ச்சி செய்திகள்.
-

16 comments:

சென்னை பித்தன் said...

மாணவர்களுக்குப் பள்ளியில் மனோதத்துவ மனவளத்துணை அவசியமோ?என்ன செய்ய?

RAVICHANDRAN said...

//இப்போது இருக்கும் கல்வி முறைதான் தொடர்ந்து இருந்து வருகிறது.ஆனால் இப்போதுதான் இத்தகைய பிரச்சினைகள் அதிகமாக இருக்கின்றன//

சில ஆண்டுகளாகத்தான் தனியார் பள்ளிகளிடம் போட்டி அதிகமானது.மாணவர்களை பிழிந்தெடுக்கிறார்கள்.

RAVICHANDRAN said...

//குழந்தைகள் என்றில்லை,கணவன்,மனைவி,நண்பன்,அண்ணன்,தம்பி,பெற்றோர் என்று எல்லா உறவுகளும் தனது ஆசைக்கு உதவும் பொருட்களாக மாறி வருகின்றது.//

உண்மை.நல்ல பதிவு.

ஹேமா said...

காலத்திற்கு அவசியமான அலசல்.இளம் பெற்றோர்கள் குழந்தைகளோடு எப்படி அணுகி நல்வழிப்படுத்துவது என்பதில் மிகவும் கஸ்டப்படுகிறார்கள்.தாங்கள் தங்கள் பெற்றோரொடு வளர்ந்த சூழ்நிலைக்கும் இன்றைய சூழ்நிலைக்குமான நிலையில் தடுமாறுகிறார்கள் !

பாலா said...

பெற்றோர்கள் குழந்தைகளை பொத்தி பொத்தி பாதுகாப்பது இதற்கு முக்கிய காரணம். அருமையான பதிவு.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு ! நல்ல அலசல் ! வாழ்த்துக்கள் சார் !

மாலதி said...

//இப்போது இருக்கும் கல்வி முறைதான் தொடர்ந்து இருந்து வருகிறது.ஆனால் இப்போதுதான் இத்தகைய பிரச்சினைகள் அதிகமாக இருக்கின்றன//நல்ல பதிவு

கூடல் குணா said...

nalla pathivu,ungalathu tholainokku parvai miga koormayaaga ullathu

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,
காலத்திற்கேற்ற பதிவினை கொடுத்திருக்கிறீங்க.

மன அழுத்தத்தினை களைவதன் ஊடாக பல பிரச்சினைகளிலிருந்து ரிலாக்ஸ் ஆக முடியும். அது போல தற்கொலை எனும் கொடுமையிலிருந்தும் எம்மை விடுத்துக் கொள்ள முடியும் என்பதனை உங்க பதிவு சொல்லி நிற்கிறது!

நன்றி.

சுதா SJ said...

ரெம்ப நல்ல அவசியமான பதிவுதான். பிள்ளைகள் தவறான பாதையில் போவதற்கு அநேக பெற்றோர்கள் சினிமாவை சொல்லுகிறார்கள் என்னை பொறுத்தவரை இதற்க்கு பெற்றோருக்கு பிள்ளைகள் மேல் இல்லா அக்கறைதான் காரணம் :( பிள்ளைகளை பெற்றால் மட்டும் பத்தாது ஒழுங்காய் தங்கள் கவனிப்பில் வளர்க்கவும் வேண்டும் :(

Sankar Gurusamy said...

அற்புதமான அலசல்.. காரணிகளை சிறப்பாக பட்டியலிட்டிருக்கிறீர்கள்.. ப‌ல தீர்வுகள் பெற்றோர் சார்ந்தவை மட்டுமல்ல.. அரசு, பள்ளி சார்ந்தவை.. இதை செய்ய பள்ளிகளோ அரசோ தயாராக இல்லாதபோது பெற்றோரின் பொறுப்பு இன்னும் கூடுதலாகிறது..

கற்றலில் குறைபாடுள்ள குழந்தைகளை ஒதுக்கும் மனநிலையை உடனடியாக மாற்ற வேண்டும். அவர்களும் குழந்தைகள்தான் என்ற எண்ணம் எல்லோருக்கும் வந்தாலே மாற்றங்கள் தானே வர ஆரம்பிக்கும்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

ஸ்ரீராம். said...

இந்த வேகமான உலகத்திற்கு தற்காலம் கொடுக்கும் விலை. நல்ல அலசல்.

அம்பலத்தார் said...

மிகவும் அத்தியாவசியமாக ஆராயப்படவேண்டிய ஒரு கருப்பொருளை தீர்க்கமான கருத்துக்களுடன் பதிவிட்டிருக்கிறீர்கள். தலைமுறை இடைவெளி, பெற்றோர் - பிள்ளைகள், ஆசிரியர் - மாணவர் புரிந்துணர்வின்மை. அவசர உலகின் நேரப்பற்றாக்குறை என பல விடயங்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

bandhu said...

தேவைகள் நமக்கு மிக மிக அதிகமாகிவிட்டன.. சில வருடங்களுக்கு முந்தைய மாத செலவுகளையும் இன்றைய மாத செலவுகளையும் ஒப்பிட்டால் தெரியும் பணம் எங்கு அதிகமாக போகிறதென்று.
1. Cable TV
2. Cell Phone(s)
3. Petrol
4. Internet Connection
இவை போக, அதிக மின் கட்டணம் , அதிக உபயோகத்தினால்.
இன்னும் பல இருந்தாலும் இவை மாதாந்தர செலவுகளில் முக்கியமானவையாகி விட்டது. பிரச்சனையை புரிகிறது. தீர்வு தான் தெரியவில்லை!

சம்பத்குமார் said...

உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் பெருமைப்படுத்தியுள்ளேன்

பல்சுவை பதிவர்கள்

ABUBAKKAR K M said...

thirappadam , tholaikkatchi & paththirikkai thurai pondra vudahangalin saooha akkari illathathae pirachanakalukku mukkiya kaaranam .