Wednesday, April 24, 2013

அழகில் மயங்கி வலையில் விழுந்து........



ஆறு வாரங்களில் அல்ல! ஒரே நாளில் முகம் வெள்ளையாக மாற வழி உண்டாவென்று ஒருவர் தேடியிருக்கிறார்.டாஷ்போர்டை பார்க்கும்போதெல்லாம் தினமும் யாராவது முகம் வெள்ளையாக அல்லது சிவப்பாக என்று தேடியிருப்பதை பார்க்கிறேன்.கூகுள் தேடலில் இந்த வார்த்தைகள் என்னுடைய பதிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.ஆறே வாரங்களில் முகத்தை சிகப்பாக்கிய அழகு க்ரீம் என்ற பதிவு அது.ஆறு வாரம் கூட பொறுக்கமுடியாதுஒரே நாளில் நடந்தாகவேண்டும் என்ற விருப்பம்  ரொம்பவே அதிகம்.நடைமுறைக்கு ஒத்துவராத சிந்தனை என்பது மனிதர்களை அதிகம் துன்பத்தில் ஆழ்த்தும் விஷயம்.பெரும்பாலானதனி மனித துயரங்களுக்கு காரணமும் இதுதான். 

                                                                           அழகு பற்றிய தாழ்வு மனப்பான்மை நம்மிடம் மிக அதிகம் என்பது தெளிவு.உடன் இருக்கும் நட்பும், க்ரீம் தயாரிக்கும் நிறுவன்ங்களும் இதை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.கிராமங்களில் கூட பெட்டிக்கடைதோறும் அழகு க்ரீம்கள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.அழகாவது பற்றியும்,எதிர்பாலினரை கவர்வது பற்றியும் எப்போதும் சிந்தனை கொண்டிருப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி? உலகம் முழுதும் மக்கள் உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் எத்தனை பேர் அழகானவர்கள்? வாழ்க்கையில் சாதிப்பதற்கும் அழகுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது

                                                                           முகத்தை கலராக மாற்ற கூகுளில் தேடுபவர்கள் ஓரளவேனும் படித்தவர்களாகத்தான் இருக்கவேண்டும்.அநேகமாக கல்லூரி படிப்பவர்கள் அல்லது படித்து முடித்தவர்கள்.இவர்களுடைய நோக்கம் நமக்கு தெளிவாகவே தெரியும். எதிர்பாலினரை கவர்ந்தாக வேண்டும்.அதுவும் காண்போர் அத்தனை பேரையும் கவரும் முகம் வேண்டும்.அழகு வேண்டும்.ஆனால் அது பெரும் துரதிருஷ்டமாக முடியும் என்று அவர்களுக்கு தெரியாது.அப்படிப்பட்ட அழகு வெறும் பாலியல் கருவியாக ஒருவரை மாற்றுமே அன்றி மனிதனாக கருதுவதையே  சாத்தியமில்லாமல் செய்யும்.காணும் அத்தனை பேரும் குறிப்பிட்ட எண்ணத்தோடு மட்டுமே பார்ப்பார்கள்.
                               வரமாக நினைப்பது பல நேரங்களில் சாபமாக முடிந்து விடுகிறது.அழகுக்கும் அது பொருந்தும். செக்ஸ் அப்பீல் உள்ளவர்களுக்கு நல்ல நண்பர்கள் கிடைப்பது கூட சாத்தியமில்லை.பொறாமை காரணமாக தவறான பிம்பத்தை மற்றவர்களிடம் கொண்டு செல்லும் வாய்ப்பு அதிகம்.உதவிகள் கிடைக்காமல் போகலாம்.மிக அழகானவர்கள் தனித்தீவில் வாழும் மனநிலையில் வாழ்வதை நான் கண்டிருக்கிறேன்.எதிர்பாலினர் அத்தனை பேரையும் கவரும் அழகைத்தான் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.இது வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு  தடையாக இருக்குமே அன்றி உதவியாக இருக்காது.

                                பெண்ணுக்கு அழகு எளிதில் மணமகனை தேடித்தரும் ஒரு விஷயமாக கருதினார்கள்.ஆனால் இன்று அழகு மட்டும் போதாது.நல்ல படிப்பும் வேலையும் கூட வேண்டும்.அழகைப்பற்றிய தாழ்வு மனப்பான்மையில் வீழ்ந்து கிடந்தால் படிப்பும் முன்னேற்றமும் பாதிக்கப்படலாம்.மனித சுபாவம் அழகானதை பார்க்கவே விரும்புகிறது.கோரமாக தோன்றவேண்டுமென்பதில்லை.இன்று தோற்றப்பொலிவுடன் காட்சியளிப்பது அவ்வளவு கஷ்டமான ஒன்றல்ல! நிறத்துக்கு பொருத்தமான உடை,சிகை அலங்காரம் போன்றவை முக்கியம்.நல்ல ஊட்டச்சத்து உணவும்,நல்ல எண்ணங்களும்,அமைதியான மனமும் தோற்றத்தில் பொலிவைக்கூட்டும்.
                               வளரிளம் பருவத்தில் அழகு பற்றிய தாழ்வு மனப்பான்மை கொண்டிருப்பவர்கள் மீது நாம் கவனம் செலுத்தவேண்டும்.பள்ளி கல்லூரிகளில் போதுமான ஆலோசனை வழங்குவதற்கான ஏற்பாடுகள் தேவை.தாழ்வு மனப்பானமை உள்ளவர்களை கண்டறிந்து உணர்வுபூர்வமாக உதவ வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது.
-