Showing posts with label எதிர் உயிரிகள். Show all posts
Showing posts with label எதிர் உயிரிகள். Show all posts

Tuesday, July 26, 2011

மாத்திரைகள் சாப்பிடுவதுண்டா? உஷார்!


பல்வேறு பாக்டீரியா தொற்றால் ஏற்படும் நோய்களுக்கு தரப்படுவது ஆண்டிபயாடிக் மாத்திரைகள்.சாதாரண சளிக்கும் கூட அடுத்த கட்ட தொற்றை தவிர்க்க இம்மாத்திரைகள் பயன்படுத்தப்படுகின்றன.நம்மில் ஒவ்வொருவரும் இந்த மாத்திரைகளை ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் விழுங்காமல் இருந்த்தில்லை.தலைப்பில் உஷார் என்று இருப்பது நாம் உஷாராக இருக்கவேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளது.அரசாங்கமும் செயலில் இறங்கிவிட்ட்து.

                                    போதுமான அளவு நமக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளை சாப்பிடாமல் போவது பற்றி ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லியிருக்கிறேன்.ஆண்டிபயாடிக் மாத்திரைகள் கிட்ட்த்தட்ட கத்தி மாதிரி.சரியாக பயன்படுத்தாவிட்டால் நம்மையும் பதம் பார்த்துவிடும்.ஒரு குறிப்பிட்ட நோய்க்கு இத்தனை நாட்கள்,அளவு என்று கணக்கிருக்கிறது.முழுமையான அளவு எடுக்காமல் போனால் குறிப்பிட்ட மாத்திரைகளுக்கு கிருமிகள் பழகிவிடுகின்றன.

                                    உதாரணமாக பாக்டீரியாவால் ஏற்படும் அல்சருக்கு பதினைந்து நாட்கள் அமாக்ஸிலின் மாத்திரைகள் சாப்பிடவேண்டும் என்று வைத்துக்கொள்வோம்.நான்கு நாட்கள் சாப்பிட்டுவிட்டு நிறுத்திக்கொண்டால் அமாக்ஸிலினை எதிர்த்து கிருமிகள் வாழப்பழகிவிடும்.இதை drug resistance என்பார்கள்.இதுதான் இன்று இந்தியாவில் பெரும்பிரச்சினையாக மாறியிருக்கிறது.

                                    குறிப்பிட்ட ஆண்டிபயாடிக் வேலை செய்யாமல் போனால் அதைவிட வீரியமான வேறொன்றுக்கு மாறவேண்டும்.தவறாக பயன்படுத்தினால் வீரிய மருந்துக்கும் இதேகதிதான்.இப்படியே போனால் பெரும் சிக்கல்.பழகிவிட்ட கிருமிகள் இன்னொருவருக்கு பரவினாலும் அவருக்கும் குறிப்பிட்ட மருந்து வேலை செய்யாது.

                                    காச நோய் பாக்டீரியாவால் பரவும் நோய்.ஆறுமாதம் மருந்து சாப்பிட வேண்டும்..கொஞ்சம் அறிகுறி குறைந்தவுடன் பலர் இடையில் நிறுத்தி விடுவதால் நோய் குணமாகாமல் மீண்டும் இருமல் ஆரம்பித்துவிடும்.முன்பு கொடுத்த மருந்தை திரும்ப ஆரம்பித்தால் மருந்து வேலை செய்யாமல் நோய் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்கு இரண்டு வருடம் மாத்திரைகள் சாப்பிடவேண்டும்.

                                      ஒரு காசநோயாளி பதினைந்து பேருக்கு பரப்பிவிடுகிறார்.வீரியமடைந்த கிருமிகளை பரப்பும்போது இனி காசநோய்க்கு ஆறுமாத ம்ருந்து என்பது இரண்டு வருடமாகிவிடும்.இதே போல பல நோய்களுக்கும் ஏற்பட்டால் மனித குலத்துக்கே பெரும் அச்சுறுத்தலாகி விடும்.நமக்கு இந்த விஷயத்தில் போதுமான விழிப்புணர்வு இல்லை.விபரீதம் புரியாமல் மருந்துக்கடைகளும் நேரடியாக மாத்திரைகளை இஷ்ட்த்திற்கு விற்பனை செய்கின்றன.

                                     மத்திய அரசு இப்போது சட்ட்த்திருத்தம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளது.அதனபடி சில குறிப்ப்ட்ட மருந்துகள் நேரடியாக மருத்துவமனைகளுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.மருத்துவர்கள் இரண்டு வகை பரிந்துரை சீட்டுகளை கொடுப்பார்கள்.ஒன்றை மருந்துக் கடைகள் ஓராண்டுவரை பாதுகாக்க வேண்டும்.

                                    வழக்கம்போல மருந்துக்கடைகள் விற்பனை படுத்துவிடும் என்று அலறுகிறார்கள். விளைவுகளை விடவும் அவ்ர்கள் பணம் சம்பாதிப்பதே முக்கியம்.காலாவதியான மருந்தால் ஆபத்து என்றாலும் அவர்களுக்கு வருவாய் முக்கியம்.நமக்குத்தான் இவ்விஷயத்தில் விழிப்புணர்வு அவசியம்.
-