
நாம் கொடுக்கும் பணத்திற்கு தரமான பொருள்,சேவை கிடைக்கவேண்டும் என்று கருதுகிறோம்.ஆனால்,எடைகுறைவு,
கலப்படம்,சேவைக்குறைபாடு,முறையற்ற வர்த்தகம்,ஏமாற்றி பொருளை தலையில் கட்டுவது போன்றவை நமது இன்றைய அவலங்கள்.தற்போதைய நுகர்வோர் கலாச்சாரத்தில் பெருமளவிலான தொல்லைகள் சந்திக்க நேரிடுகிறது.நுகர்வோர் என்ற சொல் பணம் கொடுத்து பொருளை,சேவையை பெறுபவரை குறிக்கிறது.சாதாரண குடிமகன் முதல் ஜனாதிபதி வரை இதில் அடக்கம்.
வங்கியில்,பேருந்தில்,ரயிலில்,வர்த்தக நிறுவனங்களில் நமக்கு ஏற்படும் பிரச்சினைகளை களைய முடியும்.நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் அதற்கு உதவுகிறது.ஒரு பொருளை வாங்கினீர்கள்.அதில் குறையிருப்பதாக கண்டறிந்தால் குறைகளை நீக்கித்தருமாறு அல்லது மாற்றித்தருமாறு கேட்க உங்களுக்கு உரிமை இருக்கிறது.அவர்கள் மறுத்துவிட்டால் நுகர்வோர் நீதி மன்றம் செல்ல முடியும்.மன உளைச்சலுக்கும் இழப்பீடு கோர முடியும்.
இந்தியாவில் நுகர்வோருக்கு எதிரான நடப்புகளுக்கும்,நுகர்வோர் நீதிமன்றம் செல்வதற்கும் பெரும் இடைவெளி இருக்கிறது.இந்தியன் தனது உரிமையை நிலைநாட்ட போரிடுவது மிகக்குறைவு.வேறு வேலை இருக்கிறது.அல்லது சினிமா பார்க்கவோ சீரியல் பார்க்கவோ செல்லவேண்டும்.திரையரங்கில் உள்ள சேவை குறைபாட்டுக்கு வழக்கு தொடுத்திருந்தால் பல அரங்குகள் தன்னை மாற்றிக் கொண்டிருக்கும்.இன்றைய அவசர யுகத்தில் இதையெல்லாம் யார் பெரிதுபடுத்துவது என்று நினைக்கலாம்.
நுகர்வோர் நலனுக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மிகக்குறைவு.இதிலெல்லாம் அதிக பணம் கிடைக்காது.மாவட்டத்திற்கு மூன்றோ,நான்கோ இருக்கின்றன.மத்திய,மாநில அரசுகள் அளிக்கும் நிதியுதவிகள் மாவட்ட நிர்வாகம் மூலம் கிடைக்கிறது.இவை ஆண்டுக்கு சில ஆயிரங்கள்.பள்ளி,கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்கள் ஏற்படுத்தப்பட்டு விழிப்புணர்வு கூட்டங்களை நடத்துகிறார்கள்.
நம்மில் எத்தனை பேர் மருந்துக் கடையில் பில் கேட்டு வாங்குகிறோம்?பில் இல்லாமல் இருநூறு ரூபாய் குறைவு என்றால் அங்கே ஒடுபவர்கள்தான் அதிகம்.அதில் ஏதேனும் குறையிருந்தால் கேட்க சட்டப்படி உரிமை இல்லை.யார் திருத்துவது?பணம் மிச்சமாவதும் இலவசமும்தான் நமக்கு முக்கியமாக தெரிகிறது.நாளைய சங்கடங்கள் அல்ல.தள்ளுபடி என்பது இன்னொரு இன்னொரு ஏமாற்று வேலை.ஆனால்,இந்தியக் குடிமகனுக்கு பிடித்தமானது.
நமது உரிமைகளை நாம் பயன்படுத்தாத வரை தரமான பொருளுக்கான நமது கனவு கனவாகவே இருக்கும்.ஆபத்தான ஒன்றை பணம் கொடுத்து கடையில் வாங்கி வரும் அதி புத்திசாலி இந்தியனாகவே நாம் இருப்போம்.உரிய ஆவணங்களுடன் ஒரு பொருளை அல்லது சேவையை பணம் கொடுத்து வாங்குவது என்றுநாம் ஒவ்வொருவரும் உறுதி ஏற்க வேண்டும்.குறைபாட்டை சட்டத்தின் கைக்கு கொண்டு செல்வதன் மூலம் நமது கனவு நிறைவேறலாம்.
-