Showing posts with label maintaining diet. Show all posts
Showing posts with label maintaining diet. Show all posts

Sunday, October 10, 2010

நல்ல தூக்கம் இல்லையா?

இன்றுஅக்டோபர் 10 உலக மனநல நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது.தூக்கமின்மை குறித்து ஒருவர் ஈமெயில் அனுப்பி கேட்டிருந்தார்.சாண்டில்யனின் சரித்திர நாவல்களில் போரிலோ,சதியாலோ தாக்கப்பட்டபின் மறைவிடத்தில் தாக்கப்பட்டவரை பார்க்கச்செல்வார்கள்.அவர் தூங்கிக்கொண்டிருப்பார்."நன்றாக தூங்குகிறார் அவருக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை".ஆம்.நல்ல தூக்கம் ஒருவருக்கு உடலும் உள்ளமும் ஆரோக்யமாக இருப்பதை குறிக்கிறது.உடலும்,உள்ளமும் தன்னை புதுப்பித்துக்கொள்ள நிம்மதியான உறக்கம் அவசியம்.பொதுவாக எட்டு மணிநேர தூக்கம் பரிந்துரைக்கப்படுகிறது.தொடர்ந்து சிலநாட்கள் சரியாக (எட்டு மணி நேரம் )தூக்கம் இல்லைஎன்றால் எரிச்சல்,சிடுசிடுப்பு,கவனக்குறைவு போன்று ஏற்பட்டு அன்றாட வாழ்வில் உறவுகளிலும்,பணியிலும் சிக்கல்களை ஏற்படுத்தலாம். தூக்கமின்மை மன நோய்களின் முக்கிய அறிகுறியாககொள்ளலாம்.
தூக்கமின்மை ஏன்?
அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்கள் கூட நல்ல உறக்கத்தை தடுக்கலாம்.புதியதொரு சூழ்நிலைக்கு தயாராகும்போது,உறவுகளில் ஏற்படும் தற்காலிக சிக்கல்கள் ,பயம்,கலக்கம்,கோபம் போன்ற எதிர் உணர்ச்சிகளுக்கு ஆட்படும்போது அன்றைய தூக்கம் பாதிக்கப்படலாம்.இவை தற்காலிகமானவை.சிலநாள்களில் தானாகவே சரியாகிவிடும்.ஆனால்,தொடர்ந்த தூக்கமின்மை மனம் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளதை தெரிவிக்கிறது.தீர்க்க முடியாத பிரச்சினைகள் அல்லது மூளையில்ஏற்பட்டுள்ள வேதி மாற்றம் காரணமாக இருக்கலாம்.இவர்களுக்கு மனநல மருத்துவத்தின் உதவி தேவை. தயங்காமல் நல்ல மருத்துவரை சந்திப்பது தீர்வுக்கு வழிவகுக்கும்.
இவை தூக்கத்திற்கு மட்டுமல்ல.....
  • அனைத்து சத்துக்களும் சரிவிகிதமாக கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள்.காய்கறிகளும்,பழங்களும்,கீரைகளும் அதிகமாக இருக்கட்டும்.
  • முட்டைகோஸ்,காலிபிளவர்,வெங்காயம்போன்ற வாயுவை உற்பத்தி செய்யும் உணவுகளையும்,அசைவ உணவுகளையும் தவிர்க்கவும்.
  • நிறைய தண்ணீர் குடியுங்கள்.இரவு உணவை எட்டு மணிக்குள்ளாக சாப்பிடுவது நல்லது.
  • போதுமான எளிய உடற்பயிற்சிகளை தினமும் செய்யுங்கள்.
  • யோகா,மூச்சுப்பயிற்சி போன்றவை நல்லது.
  • வீட்டில் உள்ளவர்களிடையே மனம் விட்டு பேசுங்கள்.
  • வீட்டில் பிரச்சினை என்றால் நண்பர்களிடம் மனம் திறந்து உறவாடுங்கள்.
  • மற்றவர்கள் சொல்வதை கவனமாக கேளுங்கள்.எனது "காது கொடுத்து கேளுங்கள் ,கடவுள் ஆகலாம்"படிக்கவும்.
  • படுக்கையறை சுத்தமாக இருக்கட்டும்.
  • மாலைநேரத்திற்கு பிறகு தேநீர்,காபி,கார்பன்டை ஆக்சைடு கலந்த குளிர்பானங்களை தவிர்க்கவும்.
  • நகைச்சுவை புத்தகம்,டி.வி.சேனல்கள் மனத்தை எளிதாக்கும்.
  • வெதுவெதுப்பான குளியல் நல்லது.
  • இரவில் ஒரு தம்ளர் பால் தூக்கத்திற்கு உதவும்.
  • நேர்மறை சிந்தனைகளை கொண்டிருங்கள்.ஏற்கெனவே நீங்கள் சந்தித்த பலபிரச்சினைகளிலும் நீங்கள் நினைத்த மாதிரியே நடக்கவில்லை.
தொடர்ந்து பிரச்சினை இருந்தால் மனநல ஆலோசகரையோ,மருத்துவரையோ தயக்கமின்றி அணுகவும்.
மனநல நாள் செய்தி!
எனக்கு தெரிந்த ஒரு நண்பர் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்.பொது மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மனநல மருத்துவரை நாடினார்.நண்பர்களிடம் இது பற்றி பேசியபோது நகைச்சுவை என்ற பெயரில் கேலியும்,கிண்டலும் செய்ய ஆரம்பித்தார்கள்.நண்பர்களின் எதிவினைக்கு பின்னர் மாத்திரைகளை தூக்கி எறிந்துவிட்டார்.அடுத்த சில தினங்களில் தற்கொலை செய்து கொண்டார்.உடலுக்கு ஏற்படும் பிரச்சினைகள் போலவே மனதிற்கும் நேரலாம்.மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணர்வுபூர்வமான உதவியும்,ஆறுதலும் தேவை.அவர்கள் உங்களின் கீழ்த்தரமான நகைச்சுவைக்கு உரியவர்களல்ல!வழிகாட்டி உதவுங்கள். -