Showing posts with label manmathan. Show all posts
Showing posts with label manmathan. Show all posts

Thursday, October 21, 2010

நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்ட காமம்

காமம் அடிப்படை உணர்வு.உயிர்களின் இனப்பெருக்கத்திற்காக இயற்கையால் வழங்கப்பட்ட காமம் மனிதனின் பரிணாமத்தால் திசை மாறிவிட்டது.நோக்கத்தை தாண்டி தலைமை இன்பமாக (பிளேட்டோ),அங்கீகாரத்தின் முதல்படியாக,உறவுகளை நிர்ணயிப்பதாக,எல்லாமுமாக மாறிப்போனது.உள்ளத்தின் உயிராக உள்ள காமம் இன்று பெருங்குழப்பத்தையும்,கொலைகளையும்,தற்கொலைகளையும்,இன்னபிற சிக்கல்களையும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது.கட்டுப்பாடுகள் ஏற்பட்டகாலம் குறித்து விவாதங்கள் இருக்கின்றன.இன்னமும் ஒரு குறிப்பிட்ட பழங்குடி இனத்தில் காமத்தில் கட்டுப்பாடுகள் இல்லை.வெளியே செருப்பு இருந்தால் கணவன்கூட உள்ளே நுழையக்கூடாது.பாலுறவின் மீது கொண்ட அளவற்ற மரியாதையே காரணம்.இப்போது பால்வினை நோய்கள் குறித்த விழிப்புணர்வின் காரணமாக எல்லாமும் மாறிவிட்டது.காமத்தால் கடவுள்கள் உள்பட விதிவிலக்கின்றி அனைவரும் பாதிக்கப்பட்டார்கள் என்பது நீங்கள் அறிந்ததே.
ஒரு கிராமத்தில் தொடர்ந்து சுமார் ஒருமாத காலத்திற்குள்ளாக ஆறு மரணங்களுக்கு மேல் நிகழ்ந்துவிட்டது.தற்கொலைகளும் உண்டு.அதில் நான்கு பேர் இளம்வயதினர்.காதல்,கள்ளக்காதல் போன்றவை காரணமாக இருந்தன.வயது முதிர்ந்த பெரியவர்கள் சிலர் கூடி பேசிக்கொண்டிருந்தார்கள்.விவாதத்தின் இறுதியில் மன்மதன் தெருக்கூத்து நடத்துவதென முடிவெடுக்கப்பட்டது.எனக்கும் குழப்பமாக இருந்தது.தெருக்கூத்து எப்படி மரணத்தை தடுக்க முடியும்? மன்மதன் கதையை தெரிந்தவர்களிடம் கேட்டபோது,
சாம்பலாக்கப்பட்டு உயிர்த்தெழுந்த மன்மதன்.
மன்மதன் காமத்தின் கடவுள் என்பது தெரியும்.சிவபெருமானின் தவத்தை கலைக்க தொடர்ந்து முயற்சி செய்துகொண்டிருக்கிறான்.சிவனுக்கு கோபம் மேலிடவே தனது நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து சாம்பலாக்குகிறார்.ரதி அழுது தவிக்க,ரதிமீதான பாசத்தில் இறந்துபோன காமன் மீண்டும் உயிர்பெறுகிறான்.ஆனால் முழுமையாக,முன்பிருந்தது போலல்ல! கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.குறிப்பிட்ட காலங்கள் இடைவெளியில்தான் இருவரும் ஒன்று சேரவேண்டும்.உங்களைப்போலவே நான்குவரி கதைகேட்ட பின் எனக்கும் புரிந்தது.கட்டுப்பாடற்ற காமம்தான் மரணங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்றும்,மன்மதன் தெருக்கூத்து கட்டுப்பாடுகளை உருவாக்கும் என்பது நாட்டுப்புற நம்பிக்கையாக இருந்து வந்திருக்கிறது.காமனுக்கு விழா எடுத்தார்கள்.
தெருக்கூத்தையும்,அதையொட்டிய சடங்குகளையும் நான் பார்த்தேன்.நெற்றிக்கு நேராகவைத்து தீ வைத்த அம்பை தேரின்மீது எரிய,தேர் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது.மன்மதன் தேரிலிருந்து குதித்துவிட்டார்.மூன்றாவது நாளில் பால் காரியம் செய்தார்கள்.மன்மதனை எழுப்பும் நாள்,பஞ்சாங்கம் பார்த்து முடிவு செய்யப்பட்டது.அன்றைய தெருக்கூத்தில் சிவனும்,ரதியும்தான்.ரதியின் விதவைக்கோலம் பார்ப்பவர்களை கலங்கவைத்தது.களிமண்ணால் பெரிய அளவில் மன்மதன் உருவாக்கப்பட்டது. காலையில் அனைத்து வீடுகளிலிருந்தும் பூசை பொருட்களுடன் பொதுமக்கள் மன்மதன் சிலையருகே கூடினார்கள்.சிவனால் மன்மதன் உயிர்ப்பிக்கப்பட,ரதிக்கு பூவும்,பொட்டும் வழங்கினார்கள்.பொதுமக்கள் பூசை செய்து வணங்கினார்கள்.
நெற்றிக்கண் பற்றி..............................................................
காமம் வலிமையான உணர்வு.ரிஷிகளையும்,கடவுள்களையும் பதம் பார்த்து குழப்பும் ஆற்றல் மிக்க உணர்வு. அதன் குறியீடாக மன்மதன் இருக்கிறார்.சிவனையும் விட்டுவைக்காததால் நெற்றிக்கண்ணால் எரிக்கிறார்.ஏன் நெற்றிக்கண்? மன்மதன் காமத்தின் குறியீடு என்பதுபோல நெற்றிக்கண் ஞானத்தின் குறியீடு.அறிவாற்றல் கொண்டு உணர்வுகளை கட்டுப்படுத்தவேண்டும் என்பதே இதில் உள்ள செய்தி.சிந்திக்க துவங்கும்போது உணர்வுகள் இரண்டாம்பட்சமாகிவிடுகின்றன.அதே சமயம் உணர்வுகள் கொதிக்கும்போது சிந்திக்கும் ஆற்றல் இருப்பதில்லை.உணர்வுகளை ஒழுங்குபடுத்தி அறிவு சார்ந்து வாழ்வது நன்மையைத்தரும்.
-