Showing posts with label srimathbagavatham. Show all posts
Showing posts with label srimathbagavatham. Show all posts

Tuesday, October 12, 2010

பாகவதமும் பைபிளும்

ஸ்ரீமத் பாகவதத்தையும் பைபிளையும் சுமார் இரு வார காலத்திற்குள் படித்தேன்.ஒரு குழந்தையை போல பாகவதம் என் மனதை கவர்ந்தது.பைபிளின் மலைப்பிரசங்கம் திரும்ப திரும்ப என்னை படிக்கத்தூண்டியது.பின்னர் சத்திய சோதனை படிக்கநேரிட்டபோது மகாத்மாவுக்கும் மலைபிரசங்கம் ஈர்த்துவிட்டதை அறிந்து எனக்குள் உற்சாகம்.கிருஷ்ணனும்,இயேசுவும் ஒரு சூப்பர் பவராக அவர்களது இறுதிநிலை என்னை உருக்கியது.இயேசுவின் வியாகூலததுடனே என்ற இடத்தில் எனக்கு தொண்டையை அடைத்தது.கடைசியில் கடவுளுக்கும் ,தூதருக்கும் மரணம் விதிவிலக்கில்லை என்பது ஜீரணிக்க சிரமமாக இருந்தது.ஒரே மாதிரி மனநிலையில் சில நாட்கள் இருந்தேன்.
சிறுவர்களுக்கு தற்போது நல்ல விஷயங்கள்,கதைகள் சொல்ல ஆட்கள் இல்லை என்பது பெரும் சீர்கேடாக நான் பார்க்கிறேன்.குழந்தைகளின் கற்பனையை வளர்க்க கதை சொல்லி பாட்டிகள் தற்போது இல்லை.நகர அவசர வாழ்க்கையும்,கூட்டுக்குடும்ப சிதைவும் நன்னெறி கதைகளை விடுத்து கம்ப்யூட்டர் விளையாட்டுகளிலும்,கார்ட்டூன்களிலும் கொண்டு சேர்த்திருக்கிறது.இன்றைய குழந்தைகளின் கற்பனை வறட்சி அவர்களது வளர்ச்சியை சிக்கலாக்கவே செய்யும்.இதிகாசங்களையும்,பாகவதம்,பைபிளையும் என் அத்தை மூலமாக வாய்மொழி கதைகளாகவே கேட்டிருக்கிறேன்.கிருஷ்ணரையும்,பைபிளையும் படித்த பாதிப்பில் இருந்தபோது பௌர்ணமி நிலவு அன்று என் அண்ணன் மகன் கதை கேட்டான்.நான் அவனுக்கு சொல்ல ஆரம்பித்தேன்.அந்த கதை கீழே...
சிங்கராஜா கதை .............................................................................
ஒரு ராஜாவுக்கு வெகு நாட்களாக குழந்தையே இல்லை.அவர்கள் இருவரும் சுற்றாத கோயில் இல்லை.பின்னர் அவர்கள் பார்வதி,பரமசிவனை நோக்கி குழந்தை வரம் கேட்டு தவம் இருந்தார்கள்.தவத்தின் பலனாக மகாராணி கர்ப்பமானார்.அரண்மனை வைத்தியர்கள் கண்ணும் கருத்துமாக கவனித்து கொண்டார்கள்.பத்து மாதம் கழித்து ராணிக்கு வயிற்று வலி உண்டானது.மருத்துவச்சியை கூப்பிட்டு மருத்துவம் பார்த்தார்கள்.மருத்துவச்சி குழந்தை பிறந்தபின் ராஜாவை மட்டும் அழைத்து காதில் கிசுகிசுவென்று ஏதோ சொன்னார்.ராஜா மந்திரியை கூப்பிட்டு "குழந்தை சிங்கமுகம் கொண்டிருக்கிறது.இந்த குழந்தை அரண்மனைக்கு வேண்டாம்.எங்காவது தூக்கிப்போய் போட்டுவிடுங்கள்"என்று கூறிவிட்டார்.மந்திரியும் பக்கத்து நாட்டில் விட்டு விட்டு வந்துவிட்டார்.ராணியிடம் குழந்தை செத்துவிட்டது என்று பொய் சொல்லி விட்டார்கள்.பக்கத்து நாட்டில்ஒரு பாட்டி குழந்தையை கண்டெடுத்து கடவுள் கொடுத்த குழந்தை என்று கூறி வளர்த்து வந்தார். சிங்க ராஜா சிறப்பாக வளர்ந்தார்.அந்த ஊரில் மாதம் மும்மாரி பொழிந்தது.நிலமெல்லாம் நெறைய விளைச்சலாக இருந்தது.யாருக்கும் நோய்நொடி ஏற்படவில்லை.யாரும் சாகவில்லை.சிங்கராஜாவின் சக்திதான் காரணம் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.இதைக்கேள்விப்பட்ட சிங்கராஜாவின் தந்தைக்கு தப்பு செய்துவிட்டோம் என்று உரைத்தது.நாட்டில் வறுமை,பஞ்சம்,பட்டினி,சாவு வேறு துன்புருத்திக்கொண்டிருன்தது.மகனிடம் உண்மையை சொல்லி அழைத்து வருமாறு தளபதியை அனுப்பினான்.சிங்கராஜா ஒப்புக்கொள்ளவில்லை.என்னை பாலூட்டி வளத்த தேசத்திற்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக கூறி மறுத்துவிட்டார்.கட்டாயமாக அடித்து இழுத்துவர ஆட்களை அனுப்பினான்.ஆனால் சிங்கராஜாவை மறைந்திருந்து அடித்தால் அடித்தவர்களுக்குதான் வலித்தது.தோற்றுப்போய் திரும்பி விட்டார்கள்.சிங்கராஜாவின் தந்தை பக்கத்து நாட்டின் மீது படையெடுத்து மகனை அழைத்து வருவேன் என்று படைகளுடன் புறப்பட்டார்.இதைக்கேள்விப்பட்ட சிங்கராஜா கண்கலங்கினார்.பார்த்தவர்கள் ஆச்சரியமாக பார்த்தார்கள்.இரண்டு நாட்டுக்கும் போர் மூண்டது.போரை தடுக்கப்போவதாக பாட்டியிடம் கூறிவிட்டு காலில் விழுந்து வணங்கினார்.பாட்டி அழுதார்.சிங்கராஜாவின் முகம் இப்படி வாடிப்போய் இருந்து இதற்கு முன் பார்த்ததேயில்லை. போரைத்தடுக்க செல்லும்போது சிங்கராஜாவின் தந்தை எய்த அம்பு மார்பில் பாய்ந்தது.துடித்து கீழே விழுந்தார்.மக்கள் சொன்னார்கள் "சிங்கராஜா வந்தபின் இந்த நாட்டில் யாரும் இறந்ததில்லை!அவருக்கு ஒன்றும் ஆகாது."சிங்கராஜா சொன்னார் "இல்லை ,என்னை உருவாக்கியவனாலேயே என் உயிர் பறிக்கப்பட்டதால் என் காலம் முடிந்துவிட்டது". -