புற்றுநோயைத்தடுக்க
என்னென்ன சாப்பிடவேண்டும் என்று ஒருவர் கேட்டார்.புற்றுநோய்க்கு புகை,பரம்பரை,வேதிப்பொருட்கள்
உள்ளிட்ட பல காரணிகள் இருக்கின்றன.உணவின் மூலமாக முற்றிலுமாக புற்றுநோயின்
ஆபத்திலிருந்து தப்புவது சாத்தியமல்ல! ஆனால் சில உணவுகள் மூலமாக ஆபத்தை
குறைத்துக்கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது.க்ரீன் டீ பற்றிபேசும்போதெல்லாம்
புற்று நோய்,இதய நோய் வராமல் தடுக்கும் என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.க்ரீன்
டீ பிரதேசமான ஜப்பானில் புற்றுநோய் மிகவும் குறைவாக இருக்கிறது.க்ரீன் டீயில் உள்ள
ஆண்டி ஆக்சிடெண்டுகள்தான் காரணம்.
நமது உடலின்
வளர்சிதை மாற்றத்துக்கு ஆக்ஸிஜனின் முக்கியத்துவம் பற்றி தெரியும்.ஆக்ஸிஜனின் வேதி
மாற்றத்தின்போது உருவாகும் மூலக்கூறுகள்(free radicals-இலவச தீவிரவாதிகள்
என்று கூகுள் மொழிபெயர்க்கிறது!) உடலில் உள்ள செல்களை சிதைக்கின்றன.புற்று
நோய்,இதயநோய்,மறதி போன்ற ஏராளமான நோய்களுக்கு இந்த தீவிரவாதிகள் முக்கிய பங்கு
வகிக்கிறார்கள்.புகை,மாசு,கதிர்வீச்சு போன்றவையும் மேற்கண்ட மூலக்கூறுகள் உருவாக
காரணமாக இருக்கின்றன.இவற்றுக்குஎதிராக செயல்பட்டு செல்களை காக்கும் பணியை
செய்பவற்றையே ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் என்கிறோம்.
ஆண்டி
ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ள உணவுகளை உண்பது இத்தகைய நோய்களின் ஆபத்தைக்
குறைத்துக்கொள்ள உதவும்.உயிர்ச்சத்துக்கள் சி,இ,ஏ போன்றவை முக்கியமான ஆண்டி
ஆக்ஸிடெண்டுகள்.இந்த உயிர்ச்சத்துக்களை அதிகம் உணவில் சேர்ப்பது நோய்களின்
ஆபத்திலிருந்து குறைத்துக்கொள்ளும் வழியாக இருக்கும்.இவை தவிர உடலில் உள்ள
என்சைம்களும் இப்பணியை செய்கின்றன.இவற்றுக்கு இரும்பு,செலினியம்,தாமிரம்,துத்தநாகம்
போன்ற தாதுக்கள் தேவை.இத்தாதுக்கள் செரிந்த உணவுகளையும் சேர்க்கவேண்டும்.
பொதுவாக மேலே
சொல்லப்பட்ட உயிர்ச்சத்துக்களுக்கு பச்சை காய்கறிகள்,பழங்கள்தான் ஆதாரம்.நெல்லிக்காய்,கொய்யா,எலுமிச்சை,ஆரஞ்சு
உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் விட்டமின் சி மிகுந்தவை.முளை கட்டிய தானியங்கள்,தாவர
எண்ணெய்,பச்சை காய்கறிகள் போன்றவற்றில் விட்டமின் இ அதிகம் இருக்கிறது.பீட்டா
கரோட்டின் வகையில் கேரட் முக்கியமானது.ப்ப்பாளி,பூசணி,கோஸ்,பூண்டுவெங்காயம்
ஆகியவற்றை அதிகம் சேர்க்கலாம்.
உயிர்ச்சத்துக்களை
பழங்கள்,காய்கறிகளாக உண்பதை தவிர்த்து மாத்திரைகளாக உண்ணும் பழக்கம் அதிகரித்து
வருகிறது.மாத்திரைகளில் அளவு அதிகமானால் பக்க விளைவுகள் உண்டு.ஆனால்
சமையல்,குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாப்பது போன்ற நிலைகளில் உயிர்ச்சத்துக்களை
இழந்துவிடுகிறோம்.மாத்திரைகளாக உண்ணலாம் என்று சொல்பவர்களும் உண்டு.ஆண்டி
ஆக்சிடெண்டுகள் உள்ளவற்றை அதிக அளவு உணவில் சேர்ப்பதே சரியானது.இவை தவிர நல்ல
உறக்கமும்,போதுமான நீரும்,இறுக்கமில்லாத மனமும் சத்துக்கள் சரியாக உடலில் சேர
அவசியமானவை.
2 comments:
free radicals-இலவச தீவிரவாதிகள் என்று கூகுள் மொழிபெயர்க்கிறது!//:))
சமையல்,குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாப்பது போன்ற நிலைகளில் உயிர்ச்சத்துக்களை இழந்துவிடுகிறோம்.மாத்திரைகளாக உண்ணலாம் என்று சொல்பவர்களும் உண்டு.ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளவற்றை அதிக அளவு உணவில் சேர்ப்பதே சரியானது.இவை தவிர நல்ல உறக்கமும்,போதுமான நீரும்,இறுக்கமில்லாத மனமும் சத்துக்கள் சரியாக உடலில் சேர அவசியமானவை.//
அவசியம் அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள். நன்றி ஐயா.
விரிவான விளக்கங்களுக்கு நன்றி ஐயா...
Post a Comment