மிஷ்கின் பாத்திரத்தைப்போல நான் நேரில் பார்த்திருக்கிறேன்.சில நேரங்களில் தெளிவாக இருப்பதும் சில நேரங்களில் மூர்க்கமாக ,அமைதியாக,கோபமாக என்று விதம்விதமான மன நோயாளிகளின் குணங்கள்.யாரையாவது பார்த்தால் மிகவும் அடங்கி அன்பு பொங்க பார்க்கும் மனக்குறைபாடு உள்ளவர்களை நேரில் சந்தித்து வியப்பில் ஆழ்ந்ததுண்டு."அன்பு மட்டும் அனாதையாக இல்லை".அன்பு கொண்டவரை மன நலம் பாதித்தவர்கள் மட்டுமல்ல ,பிறந்த குழந்தைக்கும் அடையாளம் தெரியும்.யாரையாவது கூர்ந்து கவனியுங்கள் .புரியும்.படத்தில் காட்டப்படும் மன நல விடுதியைப்போலத்தான் இப்போது அத்தகைய விடுதிகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.அமைதியாக்கும் நல்ல மருந்துகள் இருக்கின்றன.
பயணம் செய்யும் கதை என்றால் உலகத்தில் இருக்கும் எல்லா வண்டியையும் காட்டித்தான் ஆகவேண்டுமா?நடைபயணம்,சைக்கிள்,
டிராக்டர்,லாரி,கார்,பஸ்,டூ வீலர் என எல்லாவற்றிலும் பயணிக்க வேண்டுமா?ஒவ்வொரு வண்டியையும் காட்டுவதற்கும்,அதில் பயணம் செய்வதற்கும் யாரையாவது-அவர்கள் சாதாரண மனிதர்கள்-படைத்தது போல அமைந்து விட்டது.கார் பயணத்தில் தொல்லை தருபவர்கள் மீண்டும் தொடர்பில்லாமல் எதிரே நிற்பதும்,பலாத்காரம் செய்ய வந்ததாக சத்தமிட்டு ஓட வைப்பதும் ,அவர்கள் மோதி நிற்பதும் வழக்கமான தமிழ் சினிமா.
இரண்டு தினங்களுக்கு முன்பு நான் படம் பார்த்தபோது அதிக கூட்டமில்லை."படம் சுலோவா போகுது"என்று யாரோ இடைவேளையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்கள்.அலுப்பான பயணம்தான் என்று எனக்கு பட்டது.பயணங்களின் போது நாம் சந்தித்த காட்சிகள் தான்.மீண்டும் பார்த்தபோது நாமே பயணம் செய்வதுபோல இருந்தது.விதம் விதமாக அழகை அள்ளித்தரும் காமிரா.இருந்தும் விரைவில் அன்னை வயலை அடைந்து விட்டால் நல்லது என்று நினைக்க தோன்றுவது படத்தின் பலவீனம்.
இளையராஜா இசையில் படம் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. வேறு யாரும் பொருந்தியிருப்பர்களா என்பது சந்தேகம்.படம் உருவாக்கும் உணர்வுகளை ராஜா முழுமையடைய வைக்கிறார். நந்தலாலா மறக்க முடியாத அனுபவமாவதற்கு ஒளியும் ஒலியும் அற்புதமாக அமைந்துவிட்டது.இசைஞானியின் மௌனத்தை வெகுவாக ரசித்தேன்.
ஆஹா! அந்த சிறுவன்! பையன் மிக இயல்பாக பொருந்திவிட்டான்.அல்லது மிஷ்கினின் உழைப்பா? வெகு நாட்கள் தாயைக்கான காத்திருந்து முடிவில் தாயைக்காணும் நிமிடங்களில் சிறுவனின் முகத்தில்!? மிஷ்கின் ஒரு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறார்.அழகிய கவிதை!சில நேரங்களில் அலுப்பூட்டுகிறது.இருந்துவிட்டு போகட்டும்.குறையில்லாத எதுவும் இருக்கிறதா என்ன?நிறைய எழுதி விட்டார்கள்.நானும் என் பங்குக்கு சில விஷயங்களை சொல்ல நினைத்தேன்.
-
No comments:
Post a Comment