Friday, December 3, 2010

உலகில் துயரங்கள் அதிகமாக இருப்பது ஏன்?

மைனா திரைப்படத்தில் ஏன் பிரபு சாலமன் நாயகனையும்,நாயகியையும் சாகடித்து துயரமான முடிவைத்தந்தார்?ஏன் சந்தோஷமாக வாழ விடவில்லை? உலகின் மிகச்சிறந்த இலக்கியங்கள் துயரச்சுவை கொண்டவையாக உள்ளன.(ஷெல்லி என்று நினைக்கிறேன்).ஏன்?துயரம் மனிதர்களுக்கு பிடித்துப்போகிறதா?அதில் என்ன ஆனந்தம் இருக்கிறது?துக்கத்தில் மனிதன் தன்னை உணர்கிறானா?அல்லது பிரபஞ்சம் பற்றிய சிந்தனையில் விழுந்து உழல்கிறானா? துயரம்தான் மனிதனை மனிதனாக பார்க்கச்செய்கிறதா?

துக்கத்தில் மனிதன் செய்வதறியாது திகைத்து நிற்கிறான்.கடவுளை நிந்திக்கிறான்.அல்லது அடி மனதிலிருந்து கெஞ்சுகிறான்.கோரிக்கை வைக்கிறான்.சமாதானத்தை தேடுகிறான்.சிலர் குழந்தையை போல ஆகி விடுகிறார்கள்.ஏதேனும் போதையை தேடி ஓடுகிறார்கள்."நடப்பதெல்லாம் நன்மைக்கே" "எல்லாம் கடவுள் செயல்""முன் ஜென்மத்தில் செய்த பாவம்"-ஏதேதோ சமாதானங்கள்.கடவுள் ஏன் கருணையின்றி இருக்கிறார்?

கோமல் சுவாமிநாதன் சுபமங்களா பத்திரிக்கைக்கு ஆசிரியராக இருந்தார்.நான் அதன் வாசகனாக இருந்தேன்.எனக்கு தமிழின் சமகால இலக்கியம் பற்றி ஓரளவு அறிமுகம் கிடைத்தது.சுந்தர ராமசாமியின் நாடகம் ஒன்றை படித்துவிட்டு அவருக்கு கடிதம் எழுதினேன்.அஞ்சல் அட்டையில் எழுதிய கடிதம்.நாடகத்தை பற்றி சிலவரிகள் எழுதிவிட்டு கொஞ்சமும் தொடர்பில்லாமல் இதை எழுதினேன்."துயரமான முடிவைக்கொண்ட கலை இலக்கியங்களே உலகின் சிறந்த இலக்கியமாக திகழ்கிறது "என்று சொல்லப்படுகிறது.உலகம் ஒரு நாடக மேடை என்று சொல்கிறார்கள்.அப்படியானால் கடவுள் படைக்கும் இலக்கியம்தானே உலகம்? அவரது படைப்பு மட்டும் எப்படி துயரம் இல்லாமல் இருக்கும்?

நான் எதிர்பார்க்கவில்லை! சில தினங்களில் சுந்தர ராமசாமி அவர்களிடமிருந்து அஞ்சல் அட்டை வந்திருந்தது.அதில் இருந்த வரிகள் "அந்த வரிகள் என்னைக்கவர்ந்தன.உங்களுக்கு சில பத்திரிக்கைகளையும்,சஞ்சிகைகளையும் அனுப்புகிறேன் ".எனக்கு இரண்டு காலச்சுவடு பிரதிகளை அனுப்பியிருந்தார்.முக்கியமான அறிமுகம்.ஒருநாள் நேரில் சந்திக்க நினைத்திருந்தேன்.முடியாமலேயே போய்விட்டது.

நாம் ஏதேதோ காரணங்களை தேடுகிறோம் அவ்வளவுதான்.ஏனென்று தெரியாமலேயே எல்லாவற்றையும் அனுபவித்து ஆகவேண்டும்.ஜோதிட நண்பன் இன்னொரு காரணம் சொன்னான்.குரு நல்ல கிரகம்.ஐந்து இடங்களில் தான் நல்லது செய்வார்.ஏழு இடங்களில் நல்ல பலன்கள் இல்லை.சனி மூன்று இடங்களில் தான் நல்லது செய்வார்.குரு சுக்கிரன்,புதன் நல்ல கோள்கள்.சந்திரன் வளர்பிறையில் நல்லவர்.சனி,செவ்வாய் சூரியன்,ராகு கேது என்று மற்ற கிரகங்கள் பொதுவாக நல்லதாக இல்லை.எனவே உலகில் நன்மை குறைவுதான்.அவர் வழியில் இது ஒரு காரணம்.

கலை,இலக்கியங்கள் துயரங்களை சொல்வது மூலம் நம்மை மென்மையாக்குகின்றன.மற்றவர்களை புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கிறது.உதவும் மனப்பான்மை உருவாகிறது.மனிதர்களாக அடுத்தவர் உணர்வுக்கு மதிப்பளிக்கிறோம்.நண்பர்களின்,உறவினர்களின் துயரங்களில் நாம் முழுமையாக உதவுவோம்.
-

No comments: