Monday, December 6, 2010

சாகித்ய அகாதமி மீது ஏனிந்த காட்டம்?

சென்னை தரமணியில் இயங்கி வரும் சாகித்ய அகாடமி அலுவலகத்தை வெளியேற்ற தமிழக அரசின் சில துறைகள் தொடர்ந்து கடிதம் அனுப்பி நெருக்கடி தருவதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.இது முதல்வருக்கு தெரிந்து நடக்கிறதா என்பது தெரியவில்லை.இலக்கியம் தொடர்பான ஒரு மத்திய அரசு நிறுவனம் தமிழகத்துக்கு வேண்டாம் என்று ஏன் நினைக்கவேண்டும்?அதனால் அவர்களுக்கு என்ன லாபம்?

சுதந்திரம் பெற்ற பின் இந்திய மொழிகளின் இலக்கிய வளர்ச்சிக்காக மத்திய அரசால் உருவாக்கப்பட்டது சாகித்ய அகாதமி.ஞான பீட விருதுக்கு அடுத்து தேசம் தரும் உயரிய அங்கீகாரமாக சாகித்ய அகாதமி விருது கருதப்படுகிறது.சில நேரங்களில் சர்ச்சைக்குள்ளானபோதும் தகுதியானவர்களுக்கே கிடைத்து வந்திருக்கிறது.தமிழ் இலக்கியங்கள் மற்ற மொழிகளுக்கு எடுத்துச்செல்லப்பட்டிருக்கிறது.சகோதர மொழிகளின் இலக்கியங்கள் தமிழுக்கு வந்திருக்கின்றன.

எதிரிகள் யாரோ உள்ளே நுழைந்து விட்டதைப்போல காலிசெய்!காலிசெய்!என்று தொடர்ந்து கடிதம் மேல் கடிதம் எழுதுவது நமது மதிப்பீட்டை குறிக்கிறது.தெரியாமல் புத்தகத்தை மிதித்து விட்டதற்காக என் அத்தையிடம் அடி வாங்கியதும்,அவரது அறிவுரை ஏற்று வணங்கியதும் இப்போது நினைவுக்கு வருகிறது.நூலகம் வணக்கத்துக்கு உரியதல்லவா?என்ன விலை கொடுத்தாவது காப்பாற்றவேண்டாமா?

மண்டல அலுவலகம் பெங்களுருவுக்கு இடம் பெயர்ந்ததே நமது தவறு.சென்னையில் இல்லாத இடமா?பல்வேறு முயற்சிகளுக்கு பிறகே இந்த பிரிவு தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது.அண்டை மாநிலங்களை ஒப்பிடும்போதுஇலக்கிய முயற்சிகளில் நாம் பின்தங்கி இருப்பதற்கு நமது மதிப்பீடுகளே காரணம்.புத்தகங்களை வேண்டாம் என்று யார் சொல்வார்கள்?கலையும் இலக்கியமும்தான் நமது அடையாளம்.

உனக்கு வேறு போக்கிடம் இல்லையா என்பதற்கும்,நீ என்னுடன் இருந்துவிடு என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.நாம் கொடுக்கும் மரியாதை அது.நமது விழுமியங்களை காட்டுகிறது.பெருமைக்குரிய இடத்தை வழங்கி நாம் மரியாதை செய்யவேண்டும்.புத்தகங்களும் அவை சார்ந்த நிறுவனங்களும் வணங்கப்படவேண்டும்.
-

2 comments:

SiSulthan said...

எங்கேயோ இடிக்கிறதே?
கூடி கழித்து பார்த்தால்???

shanmugavel said...

மொட்டை .நன்றி SiSulthan அவர்களே!