Saturday, December 18, 2010

மூட்டைப்பூச்சியுடன் ஒரு பயண அனுபவம்


சென்னைக்கு செல்ல வேண்டும்.முந்தைய இரவிலிருந்தே தயாராகிக் கொண்டிருந்தேன்.தூங்குவதற்கு வெகு நேரமாகிவிட்டது.அடுத்த நாள் இரவு பேருந்து ஏறினால் காலையில் சென்னை சென்று சேர்வேன்.ஓரளவு தூங்கிக்கொண்டு போகிற மாதிரி பேருந்தாக இருந்தால் நல்லது.உடன் வரும் நண்பனிடம் கூறினேன்."பணம் போனாலும் பரவாயில்லை.நல்ல பஸ்ஸாக இருந்தால் பரவாயில்லை"."முன் பதிவு தீர்ந்து போய்விட்டது".பெங்களூருவிலிருந்து நிறைய பஸ் வருகிறது.எந்த பிரச்சினையும் இல்லை.

பத்து மணியிலிருந்து நின்று கொண்டிருக்கிறோம்.அவன் சொன்ன மாதிரியே பல பஸ்கள் வந்து நின்றது.எந்த பஸ்சிலும் இடம் இல்லை. இரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டது.வேலூர் போய் அங்கிருந்து சென்னைக்கு செல்லலாம் என்று முடிவு செய்தோம்.அதற்கும் பஸ் கிடைக்கவில்லை.காஞ்சிபுரம் தாண்டி செல்லும் பேருந்து ஒன்று.வேலூர் வரை போய் விடலாம் என்று ஏறிக்கொண்டோம்.நண்பனுக்கும் எனக்கும் வேறுவேறு இடத்தில் இருக்கை.

அரை மணி நேரம் ஆகியிருக்கும்.ஒரு பயணி எழுந்தார். "யோவ் கண்டக்டர்"என்றொரு சத்தம்.இங்க வாய்யா! என்னா பஸ் வச்சினு இருக்கிறீங்க!காசு மட்டும் மத்த பஸ்ஸ விட ரெண்டு மடங்கு வாங்குறீங்க,ஒரே மூட்டைப்பூச்சியா இருக்குது.ஒரு மூட்டைப்ப்பூச்சியை நசுக்கியிருந்தார்.சீட்டில் ரத்தக்கறை.கண்டக்டருக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை."அதுக்கு நான் என்ன பண்றது?"." நீ போய் நிர்வாகத்துகிட்ட சொல்லு".மற்ற பயணிகளும் கண்டக்டரை கேள்வி கேட்க ஆரம்பித்தார்கள்.

வாக்கு வாதத்திற்குப் பிறகு பயணி கண்டக்டர் சீட்டிலும்,கண்டக்டர் பயணி சீட்டிலும் மாறி உட்கார்ந்தார்கள்.சிறிது நேரத்திற்குப் பிறகு இன்னொருவர் ஆத்திரமாக பேச ஆரம்பித்தார்.போதையில் வேறு இருந்தார்.ஆட்சியாளர்களை திட்டிக்கொண்டு இருந்தார்.அப்புறம் குறட்டையுடன் தூங்கிப்போய் விட்டார்.ஆளாளுக்கு முனகிக் கொண்டிருந்தார்கள்.

நான் தூங்கும் எண்ணத்தை விட்டுவிட்டேன்.சீட்டில் சாய்ந்து உட்காருவதற்கு பதிலாக இருக்கையின் நுனியில் இருந்தேன்.துணிப்பையை மடிமீது வைத்துக்கொண்டேன்.கலக்கமாக இருந்தது.பையில் எங்காவது ஏறி அமர்ந்து என் வீடு வரை வந்துவிட்டால்? நினைக்கவே ஒரு மாதிரி இருந்தது.புத்தகங்கள் வேறு நிறைய இருக்கின்றன. மூட்டைப்பூச்சி ஏறிய புத்தகங்களை பார்த்திருக்கிறேன்.பயத்திலேயே புத்தகங்களை இரவல் வாங்குவதை விட்டுவிட்டேன்.இன்னும் ஒரு மணி நேரம்தான்.வேலூர் போய் விட்டால் நிம்மதி.நல்ல பஸ் பார்த்து போகலாம். கொஞ்ச நேரம் தூங்கலாம்.

இருக்கையின் பின்புறமும்,இரண்டு பக்கத்திலும் திரும்பி திரும்பி பார்த்துக் கொண்டிருந்தேன்.எனக்கு எதுவும் கண்ணுக்கு தெரியவில்லை.எங்காவது கருப்பாக தெரிந்தால் கை வைத்து தடவிப் பார்த்தேன்.நான் மூட்டைப்பூச்சியை பார்க்கவேயில்லை.கடிப்பது நான் உணராமல் இருக்கிறேனோ? மூட்டைப்பூச்சி மூலம் தொற்று நோய் பரவுமா? அப்படி எதுவும் படித்ததாக நினைவில் இல்லை.சிறுநீர் கழிக்க வேண்டும் போல் இருந்தது.வேலூர் கொஞ்ச தூரம்தான்.

வேலூரை நெருங்க நெருங்க மனதில் இனம் புரியாத மகிழ்ச்சி.மனம் லேசாகிக் கொண்டிருந்தது.பேருந்து நிலையம் வரும் முன்பே நண்பனிடம் போனேன்."இங்க இல்ல,காஞ்சிபுரத்துக்கு டிக்கட் வாங்கிட்டேன்.கண்டக்டர் சொன்னார்.அங்கிருந்து ஒரு மணி நேரம்தானாம்,கொடுக்கட்டுமா என்று கேட்டார். சரி என்று வாங்கிவிட்டேன்"(புத்திசாலி கண்டக்டர் )."என்கிட்டே ஏன் சொல்லல?"-என்னுடைய முகத்தை பார்த்து"என்னடா ஏதாவது பிரச்சினையா? " ஒண்ணுமில்ல!

இருவர் தொடர்புள்ள ஒரு விஷயத்தில் மற்றவருடன் கலந்து பேசாமல் முடிவெடுப்பது நாகரீகமா? சென்னை சென்ற பிறகு அவனிடம் இது பற்றி பேசவேண்டும்.தவிர நாம் விருப்பப்படுவது எல்லாம் நடந்து விடுவதில்லை.பையை நண்பனிடம் கொடுத்து விட்டு வேகமாக இறங்கி சிறுநீர் கழிக்க சென்றேன்.திரும்பியதும் நண்பன்சிரித்த முகத்துடன் கேட்டான்."இதுக்குத்தானா? பஸ் இங்க பத்து நிமிஷம் நிக்கும்டா" -

No comments: