Tuesday, November 16, 2010

குழந்தையை பலி கேட்கும் சமூகம்

சேவை மனப்பான்மை மிக்க மாவட்ட ஆட்சியர் அவர்.பள்ளிக்கு செல்லும் வயதில் பணிக்கு சென்று கொண்டிருக்கும் குழந்தைகளை மீண்டும் கல்வி நிலையத்திற்கு கொண்டு வருவதில் உறுதியாக இருந்தார்.குடியரசு தினம் என்று நினைவு.கிராம சபா கூட்டங்களின் முக்கிய நோக்கமாக பள்ளியில் இருந்து இடை நின்ற குழந்தைகள் பற்றியதாக இருந்தது.அந்த மாவட்டத்தில் அதிகம் படிப்பை விட்டுவிட்டு போன குழந்தைகள் உள்ள கிராமம் தேர்வு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் கூடியிருந்தார்கள்.அனைவரிடமும் பள்ளியிலிருந்து நின்றுபோன குழந்தைகளின் பட்டியல் இருந்தது.மக்களை திரட்டுவதில் துறைவாரியாக உழைத்தார்கள்.குழந்தைகளின் பெற்றோர்களை வீடுவீடாக சென்று அழைத்துக்கொண்டிருந்தார்கள்.பெயர் பட்டியல் வாசிக்கப்பட்டது.முதல் ஏழு பேர் வரை ஒருவரும் வரவில்லை.அடுத்த பெயர் படிக்கப்பட்டவுடன் சுற்றியிருந்தவர்கள் கை காட்டினார்கள்.ஒரு பெண்,சுமார் முப்பத்தைந்து வயது இருக்கும்,ஆட்சியர் முன்னால் தரையில் அமர்ந்தார்.

அவரது குழந்தையை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவது குறித்து அவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டார்.மற்ற அதிகாரிகள் அதன் நன்மைகளை சொல்லிக்கொண்டிருந்தார்கள்."என் பொண்ணு படிக்கிறா!.பையன் சென்னையில வேலை செய்யறான்,அவன்தான் குடும்பத்தை காப்பாத்தறான்!அவங்கப்பன் வேற பொண்ண சேத்துக்குனு வாழ்றான்."தொடர்ந்து சட்டமும்,கல்வியின் நன்மைகளும் எடுத்துக்கூறப்பட்டது.உறுதியாக அந்தத்தாய் கூறினார்."எனக்கு மட்டும் எம்பையன் நல்லா இருக்கணும்னு ஆசை இருக்காதா?திருப்பியும் படிக்க அனுப்பரதெல்லாம் ஆகிற கதையில்ல!அப்பெண் கேலியாக சிரித்ததை பார்த்து ஆட்சியரின் முகம் வாடிப்போனது.
அடுத்து பெரும்பான்மையோர் வரவில்லை.கிராமசபையின் நோக்கம் தோல்வியில் முடிந்தது

அந்த பையன் என்னவேலை செய்கிறான் என்று தெரியவில்லை.அதை சொல்லவில்லை.மளிகை கடையில் பொட்டலம் கட்டலாம்,கட்டிடம் கட்டும் பணியில் இருக்கலாம்,ஹோட்டலில் வேலை செய்யலாம்,விடுதியில் வேலை செய்யலாம் எதுவாகவோ இருக்கட்டும்.அடியும் திட்டும் கூட வாங்கிக்க்கொண்டிருக்கலாம்.சம்பாதித்து வீட்டுக்கு கொண்டு வந்து தர வேண்டும்.அவனது தங்கையை படிக்க வைக்கவேண்டும்.படித்துககொண்டிருந்தால் மாதம் ஆயிரம் ரூபாய் யார் தருவார்கள்?சம வயதுடைய குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கும் போது மற்றவரின் ஏவலுக்கு பணிந்து சம்பாதிக்க வேண்டும்.அவனை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது.
பள்ளிக்கு சென்றால்........................................
பள்ளிக்கு சென்றால் மட்டும் என்ன வாழ்கிறது? விடியற்காலையில் எழுந்து,அவசரமாக குளித்து,வேண்டாவெறுப்பாக தின்றுவிட்டு,பொதி சுமந்து,குனிந்து நடந்து -புததகங்களையும் நோட்டுகளையும் பள்ளியிலேயே அவரவர் மேசை மீதே வைத்து விட்டு ஓரிரு புத்தகங்களை மட்டும் வீட்டுக்கு எடுத்துசென்றால் என்ன?-எதையாவது மனப்பாடம் செய்து திரும்ப வேண்டும்.குழந்தைகள் விருப்பங்கள் எப்போதும் முக்கியமாக இல்லை.பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றப்போகும் கடவுள்கள்!

அனைத்து சமூகபிரச்சினைகளும் குழந்தையையும் பெண்ணையுமே பலியாக கேட்கின்றன!மது,வறுமை,வேலையின்மை,சாதி,மத மோதல்கள்,மனக்கோளாறுகள் என்று எல்லாமும் பெண்ணையும்,குழந்தைகளையும் குறி வைத்து சிதைக்கின்றன.தேசத்தின் சமபாதி குழந்தைகள் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பேசுவதை பொறுமையாக கேட்பதற்கோ,அடையாளம் காணவோ பெற்றோருக்கு நேரமில்லை.நல்ல மதிப்பீடுகளை நம்மால் கற்றுத்தர முடியவில்லை.அவர்களுக்கு குழந்தைமையையும்,மகிழ்ச்சியையும் வழங்க நாம் உறுதி ஏற்போம்.
குழந்தைகள் தினத்தன்று எழுத நினைத்தது! -

No comments: