Friday, January 7, 2011

பாலியல் மூடநம்பிக்கைகள் -18+


அறிவியல் சார்ந்து நிரூபிக்க முடியாத நம்பிக்கைகளை மூட நம்பிக்கைகள் என்கிறோம். மதம் சார்ந்த சில சடங்குகள்,நம்பிக்கைகள் மூட நம்பிக்கைகளாக அறியப்பட்டுள்ளன.அவற்றை ஒழிப்பதற்கு இயக்கங்கள் தோன்றின.தொடர்ந்து விவாதங்களும் இருந்து வருகின்றன.பாலியல் சார்ந்த நம்பிக்கைகள் மட்டும் இன்னமும் ரகசியமாகவே சமூகத்தில் பரவிக்கொண்டிருக்கிறது.ஒரு புத்தகமாக எழுதும் அளவுக்கு இருக்கலாம்.

பாலியல் தொடர்பான சந்தேகங்கள் யாருக்கும் இல்லையா?அந்த சந்தேகங்களை எப்படி தீர்த்துக்கொள்கிறான்?.இன்டர்நெட்டில் அதிகமாக தேடப்படும் பொருள் செக்ஸ் என்று அறிகிறோம்.எதை தேடிக்கொண்டிருக்கிறான்?"சொல்லித்தெரிவதில்லை மன்மதக்கலை"-என்றால் என்ன தெரிந்துகொள்ள இத்தனை ஆவல்?இது தொடர்பாக நண்பர்களும்,சுற்றியிருப்பவர்களும் தரும் நம்பிக்கைகள்தான் ஒருவனது கல்வியாக இருக்கிறது.

ஒரு சிறு நகரத்தின் ஒரே தெருவில் பத்தாம் வகுப்பு வரை படித்த இரண்டு ஆண்கள்.இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுடையவர்கள்.திருமணமானவர்கள்.பால்வினை நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால், பாதுகாப்பான உடலுறவு பற்றி அவர்களிடம் தொண்டு நிறுவன ஊழியர் ஒருவர் பேசினார்.ஒருவர் உடலுறவையே மறுத்தார்.அவரது நம்பிக்கை கர்ப்ப காலத்தில் உடலுறவு கொண்டால் குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும்.இன்னொருவர் நீர் விட்டுக்கொண்டிருந்தால்தான் குழந்தை நன்றாக வளரும் என்றார்.

ஒரே தெருவில் இருவேறு நம்பிக்கைகளை யார் உருவாக்கியது.அவரவர் நண்பர்கள் வட்டமே.இரண்டாமவர் நம்பிக்கை தனது நோயை மனைவிக்கும் தொடர்ந்து குழந்தைக்கும் பரப்பும் ஆபத்தை கொண்டிருக்கிறது.கன்னிப்பெண்ணுடன் உடலுறவு கொண்டால் ஆணுறுப்பில் உள்ள நோய்கள் குணமாகும் என்பது ஒரு நம்பிக்கை.இந்த நம்பிக்கை குழந்தைகள்,சிறுமிகளையும் வன்முறைகளுக்கு உள்ளாக்குகின்றன.

பாலியல் சார்ந்த மூட நம்பிக்கைகளை பற்றி நாம் ஏன் சிந்திக்க வேண்டும்?அவை தனிமனிதனை உளவியல் ரீதியாக பாதிக்கச்செய்து அவனது இயல்பு நிலையை முடக்குகிறது.உதாரணம்.சுய இன்பம் பற்றிய தவறான நம்பிக்கைகள்.சமூக சீர்கேட்டை உருவாக்குகின்றன..(sexual abuse- போன்றவை ),சில நம்பிக்கைகள் குடும்பத்தில் குழப்பத்தையும்,கள்ளக்காதல் போன்ற உறவுகளையும் உருவாக்கலாம்.எடுத்துக்காட்டாக பிறப்புறுப்பு அளவுகள் பற்றிய மூட நம்பிக்கைகளை சொல்லலாம்.எச்.ஐ.வி./எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்களும் பரவிக்கொண்டிருக்கின்றன.

தற்போது நல்ல புத்தகங்கள் கிடைக்கின்றன.சில ஆயிரம்பேர் அவற்றை படித்திருக்கலாம்.சமூகத்தில் பெருவாரியான மனிதர்களிடம் மூட நம்பிக்கைகளை எப்படி அகற்றுவது? உங்களிடம் சிந்தனையை உருவாக்கவும்,ஆலோசனைகளை பெறவுமே இந்த பதிவு. -

3 comments:

Arun Alwar said...

Much needed one for Indians

shanmugavel said...

thank you

இரா.கதிர்வேல் said...

பாலியல் சம்பந்தமான் ஆரோக்கியமான செய்திகளைத் தெரிந்துக்கொள்ள கிடைக்கும் புத்தகங்களின் பெயர்களை பதிப்பகத்தின் பெயருடன் தெரிவிக்கவும்.உங்கள் பதில் எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.