Monday, January 3, 2011

மக்களின் மனங்கவர்ந்த போலி டாக்டர்கள்

தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் நீங்கள் அவர்களை பார்க்கலாம்.யாரோ உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு சைக்கிளில் அல்லது நவீன இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டுக்கே வந்து ஊசி போட்டு மாத்திரையும் தருவார்.அழைத்தவுடன் வீட்டுக்கு வந்து நிற்பார்.கேட்கும் பணத்தில் கொஞ்சம் முன்னே பின்னே கொடுத்தாலும் பரவாயில்லை.அப்புறம் தருகிறேன் என்று கூட -கடன்-சொல்லிக்கொள்ளலாம்.கிராமத்தில் இருப்பவருக்கு அவர் டாக்டர்.

மக்களின் மனங்கவர்ந்த இந்த டாக்டர்கள் பத்தாம் வகுப்போ அல்லது பனிரெண்டாம் வகுப்போ படித்திருப்பார்கள்.சுகாதாரத்துறையில் இருந்து ஒய்வு பெற்றவர்கள்,பணியாற்றுபவர்கள்,மருத்துவம் தொடர்பான பார்மசி,லேப் டெக்னிஷியன் படித்தவர்கள் ஆகியோர் இப்பணியை தொழிலாக கொண்டுள்ளவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.மேற்கண்டவர்களிடம் உதவியாளராக பணியாற்றிவிட்டு தனியாக தொழில் தொடங்கி புகழ் பெற்றவர்களும் உண்டு.

கிராமத்தில் -ஏன் சில சிறு நகரங்களில்-நுழைந்து விசாரித்தால் இவர்கள் மக்களின் ஆதரவை பெற்றுவிட்டார்கள் என்பது தெரியவரும்.மேலே தெரிவித்துள்ள காரணங்கள் தான்.கடன் சொல்லலாம்.கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவார்.எந்த நேரத்துக்கும்,எந்த இடத்துக்கும்.செலவும் குறைவு.என்னென்னவோ பரிசோதனை எல்லாம் செய்யத்தேவையில்லை.

படித்த மருத்துவரிடம் செல்ல வேண்டுமானால் நகரத்துக்கு செல்ல வேண்டும்.பணமும் நிறைய தேவை.மருந்துக்கும் மற்ற பரிசோதனைக்கும் நிறைய செலவு.தவிர கிராம மக்களுக்கு புரிகிற மாதிரி சொல்வதுமில்லை.பாதி நாள் வீணாகிவிடுகிறது.வீட்டைப்பார்த்துக்கொள்ள ஆளில்லை.

உழைக்கும் கிராம மக்களில் பெரும்பாலோருக்கு அப்படியென்ன வரக்கூடாத வியாதி வந்து விடப்போகிறது.சாதாரண காய்ச்சல்,சளி,பேதி,போன்றவைகளுக்கு இந்த டாக்டர்கள் போதும் என்றுதான் நினைக்கிறார்கள்.கொஞ்ச நாள்! பார்த்துவிட்டு மீறிப்போனால் அரசு மருத்துவமனைக்கு செல்லலாம் என்று சொல்கிறார்கள்.இவர்களெல்லாம் முறையாக மருத்துவம் படிக்காதவர்கள் என்பது அவர்களுக்கு தெரியும்.

சில நேரங்களில் கொலையாளிகளாகவும் மாறிப்போவதை நான் பார்த்திருக்கிறேன்.நள்ளிரவு படுக்கையிலேயே ஒன்பது வயது சிறுமியை பாம்பு கடித்துவிட்டது.அந்த போலி டாக்டருக்கு போன்செய்தார்கள்.வந்து என்ன பாம்பு என்று கேட்டார்? "தெரியவில்லை.போய் விட்டது"என்றார்கள்.ஏதோ ஊசியை போட்டு விட்டு பணம் வாங்கிக்கொண்டு சென்றுவிட்டார்.காலையில் அந்த சிறுமி உயிருடன் இல்லை. -

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

போலி மருத்துவர்களின் தொழில் ரகசியங்கள் அறிய இந்த தள்த்திற்கு போய் பாருங்கள்

shanmugavel said...

எனக்கு அறிமுகமான தளம்தான், சுரேஷ்.மக்களுக்கு எவ்வாறு விழிப்புணர்வு உண்டாக்குவீர்கள்?