Friday, June 14, 2013

உணர்ச்சிகளை வெளியே கொட்டுங்கள் .

கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க முடியும்."படபடவென்று பேசுபவனை நம்பலாம்,உம்மென்று இருப்பவனை நம்பமுடியாது."ஆமாம்.படபடவென்று பேசுபவர் வெளியே கொட்டிவிடுகிறார்.அங்கே எதுவுமில்லை.அவர் தனது கருத்தை ஒளித்துவைக்கவில்லை.அவர் யார் என்று நமக்கு புரிந்துவிடுகிறது.நமக்கு அவர்மீது சந்தேகமோ கலக்கமோ இல்லை.அவரை நம்புவதில் சிரமம் இல்லை.அங்கே உள்ளே எதுவும் இல்லை!?என்பது நமக்குத்  தெரிந்துவிடுகிறது.பேசாமல் இருப்பவர் என்ன நினைக்கிறார் என்று நமக்குத் தெரிவதில்லை.நம்மைப் பற்றி என்ன கருத்துக்கொண்டிருக்கிறார் என்பது நிச்சயமில்லை.அவர் ஒரு புதிராக தெரிகிறார்.ஒருவேளை காத்திருந்து தாக்கவும் செய்யலாம்.நாம் சஞ்சலப்படுகிறோம்.புறக்கணிக்கத் தயாராகிறோம்.

குட்டீஸ் சுட்டீஸ் என்று ஒரு நிகழ்ச்சி சன் டி.வி.யில் வந்து கொண்டிருக்கிறது.இமான் அண்ணாச்சி தொகுத்து வசங்குகிறார்.பையன் கொஞ்சம் அதிகமாக பேசுகிறான்.மட்டுமரியாதை இல்லாமல் பேசுவது என்று சொல்வோமில்லையா? அப்படி பேசுகிறான்.பக்கத்தில் இருக்கும் பாப்பா பெரியவர்களை அப்படி பேசக்கூடாது என்று சொல்கிறாள்.அதிகப்பிரசங்கித்தனத்தை கண்டித்து தனது உணர்ச்சியை வெளிப்படுத்தி விட்டாள்.மற்ற இரண்டு சிறுமிகள் எதையும் பேசவில்லை.அடுத்து இமான் அண்ணாச்சி கேட்கிறார்.அந்தப் பையனுக்கு கிப்ட் தரலாமா? வேண்டாமா? பேசாமல் இருந்த சிறுமிகள் தரவேண்டாம் என்கிறார்கள்.கண்டித்துப் பேசிய சிறுமி கிப்ட் தரலாம் என்கிறார்.ஏனெனில் அந்தச் சிறுமியின் கோபம் வெளியேறிவிட்டது.உணர்ச்சி உள்ளே தங்கவில்லை.

கோபம்,கவலை உள்ளிட்ட உணர்ச்சிகளை உள்ளேயே தங்க விடுவது நோய்க்கு வழிவகுக்கும்.இம்மாதிரி சூழ்நிலைகளில் யாரிடமாவது பகிர்ந்து கொள்வதே சரியானது.நம்மீது அக்கறை உள்ள நண்பர்கள் இருந்தால் நல்லது.அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.ஆனால் இன்றைய அவசர யுகத்தில் யாருக்கும் நேரமில்லை.அவரவர் குடும்பத்தை கவனிக்கவும்,குழந்தை களிடம்  பேசுவதற்கும் கூட முடியவில்லை.சலித்துக் கொள்ளும் மனிதர்களையே அதிகம் பார்க்கிறேன்.மேலும் இது மன அழுத்த யுகம்.அதனால் நாம் காமெடியை மட்டுமே வரவேற்றுக் கொண்டிருக்கிறோம்.வலிகளை,புலம்பலை காது கொடுத்துக் கேட்க பலரும் விரும்ப மாட்டார்கள்.

நாம் 'ரிசர்வ் டைப்' என்று சிலரை சொல்லிக் கொண்டிருப்போம்.அதிகம் பேச மாட்டார்கள்.அவசியம் இல்லை என்பதாலோ அல்லது கூச்சத்தின் காரணமாகவோ பேசாமல் இருக்கலாம்.மேலே சொன்ன உம்மென்று இருப்பவர்கள் வகையைச் சார்ந்தவர்கள்.தவிர எல்லா சூழ்நிலைகளிலும் நம்மால் நமது உணர்ச்சியை வெளிப்படுத்திவிட முடியாது.உதாரணமாக அலுவலகத்தில் மேல் அதிகாரியிடம் வெளிப்படுத்திவிட முடியாது.சில நேரங்களில்?! வீட்டிலும் கூட பேசிவிடமுடியாது.உணர்ச்சிகளை காகிதத்தில் கொட்டுவது நல்ல வழி.எழுதிவிட்டு கிழித்துப் போட்டுவிட்டால் கூட மனம் லேசாவதை உணர முடியும்.நாட்குறிப்பு எழுதலாம்.இப்போது வலைப்பதிவு ஆரம்பித்து எழுதிவிட முடியும்.

-

8 comments:

இரவின் புன்னகை said...

நல்ல பதிவு... கோபம்,கவலை உள்ளிட்ட உணர்ச்சிகளை உள்ளேயே தங்க விடுவது நோய்க்கு வழிவகுக்கும். எதையுமே வெளியில் கொட்டிவிடுவது நல்லது... தொடர்ந்து எழுதுங்கள்... வாழ்த்துகள்...

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல யோசனைகள்... பாராட்டுக்கள்...

ஓவியம் கூட சிறந்த வழி...

மாதேவி said...

நல்ல பகிர்வு.

"கொட்டுவது" மனஇறுக்கம் ஏற்படாமல் தடுக்க உதவும்.

ராஜி said...

நான் இப்படிதான் கொட்டிட்டு கெட்ட பேரு வாங்கி வச்சிருக்கேன் :-(

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமையான பகிர்வு.

நிலாமகள் said...

நல்லதொரு ஆலோசனை தான்.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...

தொடர்ந்து எழுதவும் வாழ்த்துக்கள்...

arul said...

good post