Tuesday, August 13, 2013

பொறாமை கொண்டவர்களை சமாளிப்பது எப்படி?



நண்பர் ஒருவர் தனது கனவைப்பற்றிச் சொன்னார்.முகத்தில் அமிலத்தைக்கொட்டியதுபோல வெள்ளையாக இருக்கிறது.தொட்டுப்பார்த்தால் சீழ்பிடித்திருப்பது போல இருக்கிறது.அதிர்ச்சியாக உணர்கிறார்.அலுவலகத்துக்கு மருத்துவ விடுப்பு எடுக்கலாம் என்ற எண்ணம் தோன்ற விழித்துக்கொண்டுவிட்டார்.இதைவிட மோசமான கனவு ஒருவருக்கு இருக்கமுடியாது.அழகுக்காக அத்தனை பேரும் தீயாய் வேலை செய்து கொண்டிருக்கும்போது தனது முகம் சீழ்பிடித்த நிலையைக் காண்பது கொடூரமானது.

அலுவலகத்தில் மறைமுக எதிரிகளால் அவருக்குப் பிரச்சினைகள் இருந்தன.அவரைப்பற்றி தவறான தகவல்களை பரப்பிக்கொண்டிருந்தார்கள்.அவருடைய உண்மையான முகம் சிதைக்கப்பட்டு பணிச்சூழல் இறுக்கத்தை ஏற்படுத்தியிருந்த்து.மேலே சொல்லப்பட்ட கனவுக்கு அலுவலகப்பிரச்சினை காரணமாக இருக்க வாய்ப்பிருக்கிறது.மற்றவர்களைவிட கூடுதலாக தகுதிகள்,திறமைகள் இருக்கும்போது அவர்களிடம் பொறாமையை ஏற்படுத்தவே செய்யும்.யாரையும்விட முதன்மையாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் இருக்கிறது.

திரைப்பட இயக்குநர் ஞானராஜசேகரன் இப்படிச்சொன்னார், வித்தியாசமாக சிந்திப்பவர்களை சராசரியாக்கும் வரை விடமாட்டார்கள். பணியிடங்களில் சிறப்பாக செயல்படுபவர் விமர்சனத்துக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம்.உணர்ச்சிப்போக்கில் போகாமல் சிந்தித்து செயல்படுபவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதில்லை.மறைமுக எதிரிகளை சிரிப்புடன் எதிர்கொள்ளும் நபர்களை நான் பார்த்திருக்கிறேன்.அவர் உங்களைப்பற்றி தவறான விமர்சனத்தை முன் வைத்தார் என்பதற்கு ஒருவர் வெடிச்சிரிப்புடன் சொன்னது, அந்தப்பெண் மீது அவனுக்கு ஒரு கண், என்னிடம் சிரித்துப்பேசுவது அவனுக்குப்பிடிக்கவில்லை.பெண் மீது மோகம் கொண்டவர்கள் மற்ற ஆண்களை மட்டம் தட்டவே விரும்புவார்கள்.

என்ன காரணத்திற்காக ஒருவர் நம்மைப்பற்றி அவதூறு செய்கிறார் என்று புரிந்துகொண்டால் மனம் பாதிக்கப்படாது.காய்க்கிற மரம் கல்லடிபடும் என்று சொன்னார்கள்.நம்மைத்தவிர நம்மை யாரும் தாழ்த்திவிட முடியாது என்பதும் நிஜம்தான்.ஆப்பிளை சாத்துக்கொடி என்று சொன்னால் சொல்பவருடைய தவறு.நம்மைப்பற்றியே நம்முடைய கணிப்பு சரியாக இல்லாதபோதுதான் மனம் பாதிக்கப்பட்டுவிடுகிறது.நாமும் விமர்சனம் செய்ய ஆரம்பிக்கிறோம்.நேர்மையாக இருந்து அடுத்தவர்களின் விமர்சனத்துக்கு ஆளாகும்போது நமக்கு பொறுமை தேவை.

அவர்களைவிடவும் உங்களிடம் கூடுதலாக ஏதோவொன்று இருக்கிறது.அவர்களிடம் இல்லாமல் இருக்கிறது.அவர்களை நாம் புரிந்துகொள்ள முடியும்.இரக்கம் காட்டவும் முடியும்.மற்றவர்களைவிட உயர்ந்து நிற்கும்போது பணிவு தேவைப்படுகிறது. ஆமாம்  உயரும்போது பணிவு கொண்டால்....என்ற கவிஞரின் வரிகள் வைரவரிகள்.மறைமுக எதிரிகளை சமாளிக்க நல்ல வழி இருக்கிறது.அவர்களை பாராட்டுங்கள்,அவர்களை எதிரியாக நினைக்கவேண்டாம்.உங்களுக்கு எதிரியாக இருக்கும் தகுதி அவர்களுக்கு இல்லை.தகுதியில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களை அனுதாபத்துடன் எதிர்கொள்ளவேண்டும்.அவர்களை பாராட்டிவிட்டால் போதும்,குழப்பத்தில் அடிவாங்கி நகர்ந்துபோய்விடுவார்கள்.

சில நேரங்களில் அவர்களுடைய விமர்சனத்தில் உண்மையும் இருக்க வாய்ப்புண்டு.அப்போது திறந்த மனத்துடன் உங்களை மாற்றிக்கொள்வதே சரியானது.வேண்டுமென்றே கூறப்படும் விமர்சனத்தை ஒதுக்கிவிடலாம்.மற்றவர்களிடம் அவர்களது குணத்தைப்பற்றி சொல்லிவைத்துவிட வேண்டும்.பெரும்பாலானவர்கள் உங்களைப்பற்றிய அவதூறுகளை சந்தேகத்துடன் கவனிப்பார்கள்.,அவற்றை பொருட்படுத்தமாட்டார்கள்.
-

4 comments:

Anonymous said...

வணக்கம்
உயரும்போது பணிவு கொண்டால்....என்ற கவிஞரின் வரிகள் வைரவரிகள்.மறைமுக எதிரிகளை சமாளிக்க நல்ல வழி
நல்ல கருத்தை சொன்னமைக்கு மிக நன்றி


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Anonymous said...

வணக்கம்
உயரும்போது பணிவு கொண்டால்....என்ற கவிஞரின் வரிகள் வைரவரிகள்.மறைமுக எதிரிகளை சமாளிக்க நல்ல வழி
நல்ல கருத்தை சொன்னமைக்கு மிக நன்றி


-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெற்றிவேல் said...

நல்ல பதிவு...

நிலாமகள் said...

பொறாமையால் அவதூறு பேசுபவரகளின் ஏதேனுமோர் நல்ல குணத்தை பாராட்டிப் பேசினால் 'இன்னா செய்தாரை ஒறுத்தல்' என்பதாக அவர்கள் திருந்த ஒரு வாய்ப்பு இருக்கிறது.

உங்க ஆலோசனைகள் அனைத்துமே மிகப் பயனுள்ளவை.