Monday, August 19, 2013

ஆதலால்....... காதல் செய்யலாமா?

ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே! என்றுதான் பாரதி சொன்னார்.ஆனால் சமீபத்தில் வெளியான திரைப்படம் ஒன்று அதெல்லாம் பெரும் பிரச்சினை என்று சொல்கிறது.காதலர் தினத்தை கவனித்தாலே சில விஷயங்கள் தெளிவாகப்புரியும்.செல்போன் நிறுவனம் ஒவ்வொன்றும் அமைதியிழந்துவிடுகின்றன.பரிசுப்பொருள் விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது.திரையரங்கம்,கடற்கரை என்று எங்கெங்கும் காதலர்கள் கூட்டம்.காதலிக்காத கதாநாயகர்கள் யாருமில்லை.காதலித்து கல்யாணம் செய்துகொண்டு சந்தோஷமாக வாழ்பவர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.நகைகளை பறித்துக்கொண்டு துரத்திவிட்டவர்களையும் பார்த்திருக்கிறேன்.

இப்போதெல்லாம் முன்னிருக்கையில் காலைபோட்டுக்கொண்டு வசதியாக படம் பார்ப்பது என் வழக்கம்.பக்கத்து இருக்கையில் தண்ணீர் பாட்டிலை வைத்துக்கொள்வேன்.இதே தியேட்டரில்  இரண்டரை மணிநேரம் நின்றுகொண்டு சினிமா பார்த்த அனுபவமும் உண்டு. மீசைமுளைக்க ஆரம்பித்த காலம் அது.இனி எப்போதும் இல்லை என்பது வேறுவிஷயம்.நாற்பது ரூபாய் செலவில் ஆதலால் காதல் செய்வீர் பார்த்தேன்.ஆனால் முன்சீட்டில் கால் போட முடியவில்லைஇரண்டு காதல் ஜோடிகள் அமர்ந்துவிட்டார்கள்.பால்கனி நிரம்பிவிட்ட தோற்றம் தந்தாலும் பக்கத்து இருக்கையில் தண்ணீர் பாட்டிலை வைத்திருந்தேன்.

அவர்கள் பெரும்பாலானவர்கள் இளைஞர்கள்.படம் துவங்கியதிலிருந்தே அமைதியாக இருந்துகொண்டிருந்து.முடியும்போது கனத்த அமைதி.முழுக்கதையும் தலைப்புக்கு எதிராக இருக்கிறது.கதையை ஏராளமான பதிவுகளில் நீங்கள் படித்திருக்கமுடியும்.கர்ப்பமான காதலி காதலனை வேண்டாமென்று சொல்லிவிட்டு...... இன்றைய காதல் மிக அழகாக திரைப்படமாக்கப்பட்டு உள்ளது.இளைஞர்கள் வெளிப்படையாக சில விஷயங்களை உணர்ந்துகொள்ளக்கூடும்.கர்ப்பமாகாமல் காத்துக்கொள்ளவேண்டும் என்ற எச்சரிக்கை உணர்வு தோன்றலாம்.

திரையரங்கின் கனத்த அமைதிக்குக் காரணம் இருக்கிறது.முன்கூட்டியே கணிக்கமுடியாத நிகழ்வுகளால் திரைப்படம் நகர்ந்துசெல்கிறது.ஒவ்வொரு சம்பவத்தையும் தீர்மானிப்பது காதலர்கள் என்பதுதான் காரணம்.அவர்களது அத்தனை முடிவுகளையும் தீர்மானிப்பது உணர்ச்சிகள்.அவை திடீர்திடீரென்று மாறிக்கொண்டிருக்கின்றன.பெற்றோர்களும்கூட அந்த முடிவுகளின் வழியே பயணிக்கவேண்டிய கட்டாயம்.

இன்றைய காதலில் தோழமையின் பங்கு மிகப்பெரியது.தனக்கு காதலன்,காதலி இருந்தால்தான் கௌரவம் என்று நினைப்பது அதிகமாகிவருகிறது.இந்தப் படத்தில் நாயகியின் தோழி எச்சரிக்கை செய்கிறார்.அது புத்திமதியாக வலுவான காரணமின்றி இருக்கிறது.காதல் தோன்றும் சூழலை கவனித்தால் புரியும்.நமக்காக சாகத்துணிந்தானே என்று முடிவெடுப்பது,நமக்காக உருகுகிறானே என்று வீழ்வதுமாக இருக்கிறது.இனி என்னுடைய முந்தைய பதிவொன்றிலிருந்து சில வரிகள்.

ஒரு இளைஞன் அல்லது இளம்பெண் உணர்ச்சி சார்ந்த பிரச்சினைகளை எப்படி எதிர்கொள்வது? அவர்களுக்கு ஏதாவது செய்திருக்கிறோமா? எனக்கு ஆத்திரமாக இருக்கிறது,துக்கமாக இருக்கிறது என்று அவர்கள் யாரிடம் சொல்வார்கள்.காதல்,காமம் உள்ளிட்ட பிரச்சினைகளை பெற்றோரிடம் கூறி ஆலோசனை பெறமுடியுமா? நண்பர்களிடம் சொன்னால் உரிய வழிகாட்டும் திறன் படைத்தவர்களாக இருக்க வாய்ப்பிருக்கிறதா? இதற்காக ஒரு வழி காண முடியாதா? உலகத்தை கவனித்தால் வழி இல்லாமல் இல்லை.

சீனாவில் கல்லூரிகளில் காதலும் காமமும் பாடமாக வைக்கப்பட்டிருக்கிறது.மாணவர்கள் தங்கள் பிரச்சினைகளை சொல்லி ஆலோசனை பெற முடியும்.துக்கம்,ஆத்திரம்,கோபம் போன்ற உணர்ச்சிகளை நம்பிக்கையுள்ள ஒருவரிடம் பகிர்ந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து வெளியேவர முடியும்.அத்தகைய உளவியல் ஆலோசனை கல்லூரிகளில் தேவை. இன்று போதுமான அளவு நிபுணத்துவம் வாய்ந்தவர்கள் கிடைப்பது சிரமம்.இருப்பினும் கல்லூரிகளிலேயே சரியான ஒருவரை கண்டறிந்து பயிற்சி தந்து உருவாக்கமுடியும். 


-

1 comment:

மகேந்திரன் said...

இனிய வணக்கம் நண்பரே..
நலமா?
நீண்ட நாட்களுக்குப் பின்னர் உங்கள் தளம் பக்கம் வருகை...
உங்கள் பகிர்வுகளின் psychological கருக்களை படிப்பதே
ஒரு சுகம்...
அருமையான பகிர்வு நண்பரே...