Thursday, August 22, 2013

பல்லி சொன்னால் பலிக்குமா?

கிராமங்களில் பெரும்பாலானவர்களுக்கு இந்த நம்பிக்கை இருப்பதை கவனித்திருக்க முடியும்.அதுவும் பல்லி என்று சொல்லமாட்டார்கள்.'பெயர் இல்லாதது' என்று சொல்வார்கள்.உடல்மீது விழுந்துவிட்டால் இடத்தைப்பொறுத்து பலன் இருக்கிறது.உடனே பஞ்சாங்கம் கேட்கப்போவார்கள்.பல்லி சொல்வது என்பது திசையைக் குறித்து பலன் போட்டிருக்கும்.சில இடங்களில் இந்த இடத்தில் சொன்னால் நல்லது,இது கெட்ட இடம் என்று அடையாளம் வைத்திருப்பார்கள்.சிலர் குலதெய்வக் கோயிலில் பல்லி சொல்வதைக் கேட்கப் போவார்கள்.

இந்தப் பதிவு எழுத நேர்ந்த விஷயத்தைச் சொல்லிவிடுகிறேன்.அவருக்கு சுமார் ஐம்பது வயது இருக்கும்.கணவனை இழந்து பத்தாண்டுகள் ஆகிவிட்டன.தனது ஒரே மகள் குறித்து பெரும் கவலையில் இருந்தார்.தூக்கமில்லாமல் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார்.வயிற்றில் எரிச்சலும்,உடலில் வலிகளுமாக இனம் புரியாத கவலை.பசியின்மையால் சில வாரங்களாகவே சரியாக சாப்பிடுவதில்லை.நண்பர் ஒருவர் அவரைப் பற்றி சொன்னதால் வரச்சொல்லியிருந்தேன்.

என்னைச்சந்திக்க வந்தவர் நண்பர் சொன்னது போல இல்லை.மிகத்தெளிவாக இருந்தார்.பல வாரங்களாக மனதளவில் பாதிக்கப்பட்டு இருந்ததைஅவர்  சொல்லி  அறிய முடிந்தது.இப்போது தெம்பாக இருக்கிறார்.நம்பிக்கையுடன் பேசுகிறார்.கவலை போய்விட்டது.நிம்மதியாக தூங்க முடிகிறது.அவரது பிரச்னை சரியாகிவிட்டது.நல்லதுதான் நடக்கும் என்று உறுதியாகச்சொன்னார் அந்த நம்பிக்கை வந்ததற்குக் காரணம் பல்லி.அதுவும் அவரது உறவினர் வீட்டில் உட்கார்ந்து மகள் பற்றிய சிந்தனையின்போது பல்லி சத்தம்.அவரது உறவினர் சொன்னார்,"அந்த இடத்தில் சொன்னால் நல்லது".

உண்மையில் அவருக்கு மனதைப் பாதிக்கும் நிகழ்ச்சிகள் எதுவும் நடக்கவில்லை.எதிர்மறையாக நினைத்ததால் மனநலம் பாதிக்கப்பட்டது.பல்லிசொல் காரணமாக சிந்தனை சரியான திசையை நோக்க பிரச்சினை சரியாகிவிட்டது.தொடர் ஆலோசனையும் மருத்துவ உதவியும் கூட அவருக்கு தேவைப்பட்டிருக்கலாம்.இப்போது அதெல்லாம் தேவையில்லை என்றாகிவிட்டது.மோசமான சம்பவங்கள் நடந்து விட்டால் கூட நாம் எளிதில் சமாளித்துவிடுகிறோம்.அப்படி நடக்குமோ? இப்படி நடக்குமோ என்று எதிர்மறையாக சிந்தித்து துயரத்தில் வீழ்ந்துவிடுகிறோம்.

கலங்கி நிற்கும்போது சரியான ஒருவரால் எண்ணங்களை மாற்றினாலே நமக்கு பல பிரச்சினைகள் முடிவுக்கு வந்துவிடும்.நம்மைச்சுற்றி இருப்பவர்களும் கூட இவற்றை தூண்டிவிடவே செய்வார்கள்.உண்மையில் மறைமுக எதிரிகள் என்பவர்கள் இவர்கள்தான்.பிரச்சினையை பற்றி பேச ஆரம்பிக்கும்போதே சொல்வார்கள்." அங்கே அப்படி நடந்தது,இன்னாருக்கு இப்படி நடந்தது என்பார்கள்".உஷாரா இருந்துக்கோ! என்று அன்பை வெளிப்படுத்துவார்கள்.அவர்களிடம் இருந்து எட்ட நிற்பதே நல்லது.நம்பிக்கையை,நேர்மறை எண்ணங்களை விதைக்கும் உறவுகள்தான் தேவை.கூட்டுக்குடும்பங்கள் இதைச்  சிறப்பாக செய்துவந்தன.

புதிதாக தொழில் ஆரம்பிக்கவேண்டுமென்று ஒருவர் பல்லி கேட்கப்போகிறார்.பல்லி சொல்லிவிட்டது.மனம் நல்லதாக சிந்திக்கத்துவங்கும்.வெற்றி மீது நம்பிக்கை இருப்பதால் தடைகளையும் எளிதாக சமாளித்துவிடுவார்.அப்புறம் முன்னேற்றம் எளிதாகிவிடுகிறது.இன்னமும் பேயை முனியப்பன் கோயிலில் ஒட்டிக்கொண்டிருப்பதும்  அதில் சில நேரங்களில் வெற்றி கிட்டுவதும் இப்படித்தான் நடக்கிறது.

-

2 comments:

நிலாமகள் said...

சரிதான். நல்லது நடந்தால் சரி.

Anonymous said...

நல்லதா சொல்லிவிட்டால் பரவாயில்லை. பல்லியோ, பல்லி போல சோதிடனோ அபகடமாய் சொல்லித் தொலைந்தால், நாசமாயிடும். அவ்வாறு பயமுறுத்தி நிவர்த்தி பரிகாரம் எனக் கூறி பணம் பறிப்பதையோ தொழிலாய் செய்யுறாங்கள். அப்போ என்ன பண்ணலாம்?!