Monday, September 2, 2013

உறவுகளை சிதைக்கும் பெட்ரோல்குண்டு .

சிறு வயது முதலே அவர்கள் நண்பர்கள்.இப்போது  வேறுவேறு ஊர்களில் இருக்கிறார்கள்.நேரில் சந்திப்பது தொடர்பாக ஒருவர் தொலைபேசியில்  தொடர்பு கொண்டார்.அழைப்பை எடுக்கவேயில்லை.தொடர்ந்து முயற்சி செய்ய எரிச்சலாக இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு வைத்து விட்டார்.நண்பர்கள் என்றில்லை,தம்பதிகள்,உறவினர்கள் என்று பலருக்கும் இத்தகைய அனுபவம் நிகழமுடியும்.அலுவலகப் பிரச்சினைகள் வீட்டில்,நண்பர்களிடம் எதிரொலிப்பது,வீட்டுப்பிரச்சினைகள் வெளியிடங்களில் கொட்டப்படுவது சாதாரணமாக நிகழ்கிறது.

மன அழுத்தம் அன்றாட வாழ்வில் தவிர்க்க முடியாத விஷயம்.பல்வேறு சூழலில் மனதுக்கு விரும்பாத செயல்களை செய்ய நேரிடுகிறது.எதிர்பார்ப்புக்கு மாறான சம்பவங்கள்,வாழ்வில் ஏற்படும் மாற்றம்,திட்டமிடாத வாழ்க்கைமுறை,புரிதலற்ற  டென்சன் உள்ள மனிதர்கள் என்று நிறைய காரணங்கள் இருக்கின்றன்.காரணங்கள்  ஒவ்வொருவருக்கும் மாறுபடுவதைப் போலவே அவற்றை சமாளிக்கும் விதத்திலும் வேற்றுமை இருக்கும்.சமாளிக்கும் திறனற்ற நிலையில் பாதிப்புகள் அதிகரிக்கின்றன.

உடலில்,மனதில்,நடத்தையில் விரும்பத்தகாத மாற்றத்தை ஏற்படுத்துகின்றன.உடலில் வலிகள்,இதயம் பாதிக்கபபடுதல்,சர்க்கரை அளவில் மாற்றம்,வயிற்றுப்பிரச்சினைகள்(உணவு செரித்தலில் பிரச்சினை,இரைப்பைப் புண்,பசியின்மை போன்றவை),பாலியல் வாழ்க்கையில் ஆர்வமில்லாத நிலை போன்றவை இருக்கும்.ஒட்டுமொத்தமாக வளர்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்தி நோய் எதிர்ப்பாற்றலும் பலவீனமடைகிறது.

எதிலும் கவனம் செலுத்த முடியாத நிலை,கவலை ஒத்துழைக்க மறுப்பது,எரிச்சலான மனநிலை,தூக்கமின்மை,அதிக அளவு மது,புகை பிடித்தல் என்று நடத்தையிலும் விரும்பத்தகாத விளைவை ஏற்படுத்துகின்றன.தம்பதிகளிடையே பிரச்சினைகளுக்கு மன அழுத்தமும் முக்கிய காரணமாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.உறவுகளை சிதைக்கும் பெட்ரோல் குண்டாக மன இறுக்கம் அமைந்துவிடுகிறது.

மனதளவில் நாம் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று உணர்வதுதான் முதல்படி.பலர் இதை உணராமல் நடந்து கொள்வதே பிரச்சினையைக் கூட்டிவிடுகிறது.மற்றவர்கள் நம்மிடம் எரிச்சலாக நடந்து கொள்ளும்போதும் இப்படி நாம் புரிந்து கொள்ள முடியும்.மனம் அமைதியிழக்கும் நேரங்களில் யோகா,தியானம்,பிரணாயாமம் போன்றவை பெருமளவு உதவும்.ஆனால் முறையாகக்  கற்றுக்கொள்ளாமல் முயற்சி செய்யக்கூடாது.

இவற்றைத்தவிர எளிய மூச்சுப்பயிற்சியும் பெருமளவு பலனளிக்கிறது.பிரச்சினையான நேரங்களில்  நரம்பு மண்டல செயல்பாடு காரணமாக சரியான சுவாசம் இருக்காது.வேகமாக,உடல் முழுக்க ஆக்சிஜனை பெற முடியாத நிலை இருக்கும்.இந்நிலையை மாற்ற மூச்சுப்பயிற்சி உதவும்.எந்த இடத்திலும் இளைப்பாறிக் கொள்ள முடியும்.இடது மூக்கை மூடிக்கொண்டு வலது மூக்கில் பத்து எண்ணிக்கை வரை மூச்சை உள்ளிழுக்கவேண்டும்.இடது மூக்கு வழியாக பத்து எண்ணிக்கை வரை எண்ணி வெளியே விட வேண்டும்.இதே போல மாறிமாறி பதினைந்து நிமிடம் செய்யலாம்.

அமர்ந்துகொண்டோ படுத்துக்கொண்டோ வசதியான நிலையில் மேற்கொள்ளலாம்.நல்ல விஷயங்களை மனதில் எண்ணிக்கொள்ள வேண்டும்.ஆட்டோ சஜஷன்  என்று சொல்வார்களே அந்த மாதிரிதான்.சீரான சுவாசம் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.சமாளிக்கும் திறனை அதிகப்படுத்தும்.உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி தரும்.
-

1 comment:

சென்னை பித்தன் said...

உண்மைதான் சண்முகவேல்!இன்றைய குருஜிக்கள் எல்லோரும் மூச்சுப்பயிற்சியைத்தான் வெவ்வேறு பெயர்களில் போதித்து வருகிறார்கள்!
த.ம.2