Sunday, September 22, 2013

முருங்கை ஸ்பெஷல்



சாம்பாரில் முருங்கைக்காயைப் போட்டாலே தனிச்சுவையும் மணமும் வந்துவிடுகிறது.அந்த உணவகத்தில் முருங்கை ஸ்பெஷல் என்று போட்டிருந்தார்கள்.சாப்பாட்டுடன் முருங்கைக்கீரை,காய்,சாம்பார் என்று இருக்கும்.காயை மென்று சாப்பிட்டுவிட்டால் உணவின் சுவை மாறும்.அவரைப்பருப்புடன் முருங்கைக்காய் போட்ட குழம்பு நல்ல தேர்வு.இரண்டுக்கும் அப்படி ஒரு இணை.ஆனால் சீக்கிரம் கெட்டுப்போகும்.

பேரைக்கேட்டாலே பாக்யராஜ் நினைவு வருவதை தவிர்க்க முடிவதில்லை.ஆனால் அறிவியல்பூர்வமான ஆதாரம் இருக்கிறதா என்பது தெரியவில்லை.முருங்கைக்காயை பிரபலப்படுத்தியதில் அவருக்கு பெரும்பங்கு இருக்கிறது.ஆண்மையைத் தொடர்புபடுத்தி பல தகவல்கள்.மூலிகை வயாகரா என்று சொல்கிறார்கள்.இது கொஞ்சம் அதிகம்தான்.நம்முடைய சமையலில் எப்போதும் முக்கியத்துவம் பெற்று வந்திருக்கிறது.

முருங்கைமரம் மிகவும் உறுதியற்றது.முருங்கை மரத்தைப் பிடித்து தொங்கியது போல என்று சொல்வார்கள்.தொங்கினால் கீழேவிழுந்து தொலைக்கவேண்டியதுதான்.மரத்தில் பிசின் போன்ற திரவம் சுரந்திருக்கும்.சிறுவயதுகளில் இதை கிழிந்துபோன பக்கங்களை ஒட்டுவதற்கு பயன்படுத்தியதுண்டு.சில நேரங்களில் மரம் முழுக்க புழுக்கள் சேர்ந்துவிடும்.வீட்டு பக்கத்தில் இருந்தால் வெட்டி எறிந்துவிடுவார்கள்.சோப்பு நீரை தெளித்து புழுக்களை போக்குவதும் உண்டு.


முருங்கை இலை மழை பெய்த பின்பும் மழை இல்லாத நேரத்திலும் சுவை மாறும்.சில நேரங்களில் கசப்பாக இருக்கும்.சமைக்கும் முன்பு நன்றாக கழுவவேண்டும்.சிறுபூச்சிகள் அடைந்திருக்கும்.எப்போது யார் அப்படி சொன்னார்கள் என்று தெரியவில்லை.முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் என்று நம்பிக்கொண்டிருந்தேன்.உணவியல் நிபுணர் ஒருவர் அப்படி ஒன்றும் அதிகமில்லையே என்று  சொன்னார்.

முருங்கைக்கீரை ஒத்துக்கொள்வதில்லை என்று சிலர் சொல்லக்கேட்டிருக்கிறேன்.வயிற்றுப்போக்கு ஏற்படுவதாக சொன்னார்கள்.நன்றாக வேகவிட வேண்டும்.எள்ளுத்தூள் அல்லது நிலக்கடலை வறுத்து பொடியாக்கி சேர்ப்பது சிலருடைய வழக்கம்.ஒருவேளை கசப்பு இருந்தால் அதைப்போக்கி சுவை கூடிவிடும்.குழம்பு என்றால் கடலைப்பருப்பு பயன்படுத்துவது நல்ல தேர்வாக இருக்கும்.கொஞ்சம் சுவை கூடுதல் அவ்வளவே!


முருங்கைக்கீரையில் அதிக அளவு பொட்டாசியம் இருக்கிறது.ரத்த அழுத்த்த்தை ஒழுங்குபடுத்துவதில் இது முக்கியப்பங்கு வகிக்கிறது.கால்சியம் எலும்பு,பற்கள் வலுப்பட உதவும்.கிட்டத்தட்ட அனைத்து உயிர்ச்சத்துக்களும் உள்ளன.தினசரி உடலுக்குத்தேவையான வைட்டமின் சி இருக்கிறது.நல்ல உடல்நலத்தை உறுதிசெய்யும் சத்துக்கள் இருக்கின்றன.கர்ப்பிணிகள்,பாலூட்டும் தாய்மார்களுக்கு பரிந்துரை செய்கிறார்கள்.

முருங்கையை தொடர்புபடுத்தி ஆண்மை,தாம்பத்யம் தொடர்பான குறிப்புகள் படித்திருக்கிறேன்.நண்பன் ஒருவன் அப்படியெல்லாம் கிடையாது என்கிறான்.பட்டை உள்பட இந்திய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.முருங்கையில் உள்ள சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.பீட்டாகரோட்டின்,சி வைட்டமின் பற்றி பதிவுகளில் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.உடலும்,மனமும் ஆரோக்கியமாக இருந்தால் தாம்பத்யத்திற்கு எந்தக்கேடும் இல்லை.
-

3 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

நீங்கள் சைவம் சாப்பிடுபவர் என நினைக்கிறேன்.
அசைவம் உண்போர் முருங்கைக்காய்க்கு
கருவாடு சேர்த்துக் குழம்பு வைத்தால் மறக்கமாட்டார்கள்.

RK said...

கசக்கும் முருங்கையை சாப்பிடலாமா?

shanmugavel said...

சாப்பிடலாம்.