Sunday, September 26, 2010

காது கொடுத்து கேளுங்கள் ;கடவுள் ஆகலாம்!

ஒருவருடைய பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதனாலேயே பெரும்பாலான தற்கொலைகளை தடுக்கமுடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.உங்களிடம் யாரேனும் தங்கள் துயரங்களை,துக்கங்களை கொட்டும்போது,புலம்பும்போது கவனமாக கேட்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் பெரும்பாலனவர்கள் சொல்வது பொய்!உண்மையாக இருக்குமானால் மதுக்கடையில் கூட்டம் குறைந்திருக்கும்,நிறைய தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கும்,மனக்கோளாறுகள்,மனநோய்கள் அதிகரித்திருக்காது,தங்களது சிக்கல்களுக்காக கோவில்களுக்கு செல்பவர்கள் இருக்கமாட்டார்கள்.குழந்தைகள் சொல்வதை கவனமாக கேட்டால் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் கூட வெளியே வரலாம்.
பிரச்சினைகளை நாம் ஏன் கவனமாக காது கொடுத்து கேட்பதில்லை?
ஏனென்றால், நாம் யாரையாவது சந்திக்கும்போது நம்மை முன்னிலைப்படுதுவதிலேயே நோக்கமாக இருக்கிறோம்.நமது அருமை,பெருமைகளையும்,சாதனைகளையும் கூறி நம்மை முக்கியமானவராக உருவாக்குவதில் தான் கவனம் செலுத்துகிறோம்.எதிரில் இருப்பவர் கேட்கிறாராஎன்பது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்,மேலும், நாம் துயரங்களை விரும்புவதில்லை.நண்பர்களோ,உறவினர்களோ சந்திக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அவ்வளவே. அடிப்படையிலேயே நாம் எதிர் உணர்வுகளை விரும்புவதில்லை.முக்கியமாக நாம் இன்னும் அருகில் உள்ளவர்களையே சகமனிதர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கசக்கும் உண்மை.
பிரச்சினைகளை வெளியே சொல்ல ஏன் முன்வருவதில்லை ?
பலர் தங்களது நெருடல்களை,சிக்கல்களை யாரிடமும் பேச முன்வருவதில்லை.தங்களது பிரச்சினைகளை கடவுளிடம் எடுத்துச்செல்கிறார்கள்.இறைவன் கேலி,கிண்டல் செய்வதில்லை.பேசிக்கொண்டிருக்கும்போது,புலம்பும்போது பேச்சை மாறுவதில்லை, அவசரமான வேலை இருப்பதாக கிளம்பிச்செல்வதில்லை,தங்களது கதைகளை சொல்ல தொடங்குவதில்லை.வேண்டாவெறுப்பாக பதிலுக்கு ஏதேனும் உளறுவதில்லை.
நண்பர்களை கண்டறியுங்கள்
உங்கள் கஷ்டங்களை நண்பர்களிடம் பேச ஆரம்பிக்கலாம்,அவர்கள் உங்களை எதிர்கொள்வதை வைத்து நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டால்,அதற்கு மதிப்பளித்தால்,கவனமாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.
கவனமாக காது கொடுத்து கேளுங்கள்!
ஆம்.தங்களது பிரச்சினைகளை கேட்க யாரும் இல்லாத நிலையிலேயே கடவுளிடம் போகிறார்கள்.அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் கடவுள் நீயே.
கேட்கும்போது
  • கண்ணோடு கண் நோக்கி கவனமாக கேளுங்கள் .
  • அவரது உணர்வுகளை கவனியுங்கள்.
  • அவரை பேசத்தூண்டுங்கள்.
  • அவரது உணர்வுகளை கூறி நீங்கள் புரிந்துகொண்டதை தெரியப்படுத்துங்கள்.
  • புரியாததற்கு விளக்கம் கேளுங்கள்.
  • உங்கள் கதையை ஆரம்பிக்கவேண்டாம்.
  • பேச்சை திசை திருப்பவேண்டாம் .
  • தீர்வு இருந்தால் அவருக்கு சொல்லுங்கள் .
-

1 comment:

john danushan said...

கேட்டாலே இவ்வளவா???