Saturday, October 2, 2010

அன்னையன்றி வேறு யார் ?

மனிதனின் சமூகமயமாக்கல் குடும்பத்திலிருந்தே துவங்குகிறது.ஏழு வயதிற்குள்ளாகவேமனப்பாங்கில் பெரும்பாலானவை உருவாகிவிடுகிறது.ஆளுமை உருவாக்கத்தில் மிக அதிகமாக தன்தாயிடமிருந்து கற்றுக்கொள்கிறான்.முதல் ஆசிரியராக மதிப்பீடுகளை உருவாக்குவது அன்னையன்றி வேறு யாருமில்லை.எனவே தொடர்ந்து பெண்களையும்,சமூக பிரச்னைகளையும் இணைத்தே கவனிக்க வேண்டும்.
அன்னையை போற்றுவோம் என்ற தலைப்பில் நான் சந்தித்த,பாதித்த பெண்களைப்பற்றிய குறிப்புகளை பதிவு செய்ய முடிவு செய்திருக்கிறேன்.அந்த பெண்கள் எளிமையான பெரும்பாலான பெண்களை பிரதிபலிக்கிறார்கள்.
நாம் சிந்திப்போம் தோழர்களே .....
சமூகத்தில் எப்போதும் இரண்டாந்தர இனமாக வாய்ப்புகளற்று,தேவையான கல்வியற்று,அங்கீகாரமும் இல்லாத பெண்கள் மனதளவிலும் உடலளவிலும் சமூகத்திற்கு மனிதனைஉருவாக்கி வழங்கும் முக்கியமான பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.வீட்டில் சிறுநீர் கழிப்பது தெரியாமல் மன அழுத்தத்தில் முடங்கிக்கிடக்கும் பெண் தனது குழந்தைகளுக்கு எதை சொல்லித்தருவாள் ?
அனைத்து சமூகப்பிரச்னைகளுக்கும் பலியாடுகளாக இருப்பது பெண்கள்தான்.வறுமையில்,மதுவின் போதையில்,பாலியல் தொழிலில்,மனக்கோளாறுநிலைகள்தரும் வலியில், வரதட்சிணை பேரத்தில்,என்று அனைத்து சிக்கல்களிலும் , நோய்க்கூறுகளிலும் சிதைக்கப்படுவது பெண்கள்தான்.அவள் எப்படிநல்ல மனிதர்களை சமூகத்திற்கு வழங்கமுடியும்?
பணியிடங்களில் ,வீட்டிற்கு வெளியே, நேரும் ஆத்திரங்களையும்,சேரும் உமிழ் நீரையும் மனைவியிடத்தில் கொட்டுகிறான்.உடல் இச்சை தீர்ந்தபின் மாதவிலக்கு துணியாய் இருட்டில் வீசி எறிகிறான்.குரலின்றி ஊமையாய் தன்னிலை இழந்த பெண் கற்பிக்கும் பணியை செய்கிறாள்.அவள் சமூகத்துக்கு வழங்கப்போவது மன வலிமையுள்ள மனிதனையா?
கருவில் நசுக்கிக்கொன்றோம், பாலியல் தொழிலாளிகளாக தெருவில் அலையவிட்டோம்,வரதட்சிணை கேட்டு கொளுத்தினோம்,உடலை காட்ட வைத்து பணம் சம்பாதித்தோம்,அறிவு பெறாமல் முடக்கினோம்,கேலிப்பொருளாக்கி,போகப்பொருளாக்கி விலை பேசி தூக்கி எறிந்தோமே அவள்........அன்னையன்றி வேறு யார்?
-

No comments: