Sunday, October 31, 2010

தீபாவளிக்கு மது விற்பனை அதிகரிப்பது ஏன்?

தீபாவளி மட்டுமல்ல,பொங்கல் ,திருவிழாக்கள்,திருமணம்,சடங்குகள் என்று விழா நாட்களில் மது விற்பனை எதிர்பாராத அளவிற்கு அதிகரிக்கிறது.பண்டிகைகளுக்கும் மதுவிற்கும் பாரம்பரிய தொடர்பு எதுவும் இல்லை.பின் ஏனிந்த மோகம்?
பெண் வீட்டார் ஒருவர் உறவினர் ஒருவரை கேட்டார்கள் "அந்த பையன் எப்படி?கெட்ட பழக்கம் ஏதாவதுஉண்டா?".பதில்:"இந்தக்காலத்தில் குடிக்காதவர்கள் யார் இருக்கிறார்கள்?இந்த பதிலில் மாப்பிள்ளை பற்றிய பொய்யும்,சமூகத்தை பற்றியஓரளவு உண்மையும் இருக்கிறது.
நண்பேண்டா -சொல்ல ஆளில்லை!
எல்லா பண்டிகை காலங்களிலும் வழக்கமாகவே நான் தனிமையை அனுபவித்திருக்கிறேன்.எனக்கு குடிக்கும் பழக்கம் இல்லை என்பதால்தான் என்பதை வெகு காலம் கழித்து உணர்ந்தேன்.அதேபோல நண்பர்களின் திருமணத்திற்கு காலையில் முகூர்த்தத்துக்கு செல்வதை வழக்கமாக்கிக்கொண்டேன்.முந்தைய இரவில் சென்றால் தனியாக அலைய வேண்டும்.குடிக்காத சில நண்பர்கள் இருந்தாலும் எல்லா நேரங்களிலும் உடன் இருப்பதில்லை. எனக்கு நண்பர்கள் குறைவாக இருப்பதற்கு மதுப்பழக்கம் இல்லாமல் இருப்பது ஒரு காரணமா என்று தெரியவில்லை.விழாக்காலங்களில் மது மீது அதிக ஆர்வம் உள்ள சிலர் தங்களது குற்ற உணர்வை -சமூகம் தவறென்று சொல்லித்தந்திருக்கிறது-குறைத்துக்கொள்ள குழுவை சேர்த்துவிடுகிறார்கள்.
விழாக்கால மனப்பாங்கு!
விழா நாட்களில் கூட்டம் கூடுவது இயல்பு.அறிமுகமாகாதவர்கள்,உறவினர்கள்,ஊர்க்காரர்கள் என்று பொது இடங்களில் சந்திக்க வேண்டியிருக்கிறது.எல்லோரும் நம்மை முக்கியமாக கவனிக்கவேண்டும் என்ற எண்ணமும்,கவனிப்பார்களா?என்ற கலக்கமும்,அதன் தொடர்ச்சியாக பதட்டமும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.நாலு பேருக்கு முன்னால் பேசவோ இயங்கவோ நமக்கு எப்போதும் கொஞ்சம் தயக்கம்தான்.பெரும்பாலான குற்றச்செயல்களும் மதுவுடன் தொடர்பு கொண்டுள்ளன.மது பதட்டத்தை குறைத்து செயல்பட தூண்டுகிறது.எனக்கு ஒரு நண்பனை தெரியும்.தண்ணி அடித்த பிறகுதான் போனை எடுத்து பெண்களிடம் பல மடங்கு பேசுவான்.அவனே நேரில் அதிகம் பேசாமல் இருப்பதை பார்த்திருக்கிறேன்.மிதமான போதை இருந்தால் விழா நேரங்களில் பெண்ணிடம் மட்டுமல்லாமல் அனைவரிடமும் எளிதாக பதட்டமின்றி,என்ன நினைப்பார்களோ?என்ற எண்ணமின்றி இயங்கலாம்.
வேறு என்னதான் செய்வது?
பண்டிகை என்று சொல்கிறார்கள்,விழா என்று சொல்கிறார்கள்.இனிப்பும்,விருந்தும் சாப்பிட்டு விட்டால் போதுமா?மன எழுச்சி குறையவேயில்லை.நண்பர்கள் இலவசமாக வாங்கித்தருவதாக அழைக்கிறார்கள்.வேறு என்னதான் செய்வது?
மாறிவரும் மதிப்பீடுகள்:
அலுவல் தொடர்பான கூட்டங்களில் ,விருந்துகளில் மது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.மிதமான போதையில் பேசிக்கொண்டிருப்பதுதான்பலருக்கு மகிழ்ச்சியாக ,உணர்வுகளை தயக்கமின்றி வெளிப்படுத்த உதவுவதாக இருக்கிறது.மதுவால் ஏற்படும் சமூகக்கேடுகள்,சீரழிவுகள்,தனிமனிதனுக்கு உடலநல பாதிப்புகள் எல்லாமும் பின்தள்ளப்பட்டு இன்றைய நாகரீகமாக மாறுவதற்கு நுகர்பொருள் கலாச்சாரமும்,அதன் விளைவாக ஏற்பட்ட அடையாள சிக்கல்களும் ஒரு காரணம்.தவிர,இளைஞர்களுக்கு நல்ல முன்மாதிரியும் இல்லை.
-

No comments: