Sunday, November 21, 2010

இனிய உறவுகளே வாழ்க்கையின் வெற்றி!

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் இனிய,இதமான உறவுகளை அமைத்துக்கொண்டவர்களே! கணவன்,மனைவி,நண்பர்கள்,பணியாளர்கள்,அண்டைவீட்டார்,பெற்றோர்,உடன்பிறந்தவர்கள் என சிக்கலில்லாத உறவுகளை கைவரப்பெற்றவர்கள் உண்மையில் இவ்வுலகில் வாழ்ந்தார்கள் என்று போற்றப்படும் நிலையை பெற்றவர்கள்.சாதனைகள்,தொழில் வெற்றி,புகழ் மாலை போன்றவற்றை உறவுகள்தான் தீர்மானித்திருக்கின்றன.

வெற்றி பெற்ற தனிமனிதன் அவனது திறமைகளால் தானே உயர்ந்திருப்பான்?ஆம். அவனது திறமை நல்ல உறவுகளை உருவாக்கியதில் இருக்கிறது.உறவுகளை தனது வெற்றிக்கு ,சாதனைக்கு பயன்படுத்திக்கொண்டதில் இருக்கிறது.தூக்கிவிட ஆளில்லாமல் யாரும் மேலேபோக முடியாது.தாங்கிப்பிடிக்காமல்நிலைத்து நிற்கவும் முடியாது.பலர் பலத்தில்தான் ஒருவர் உயரே நிற்கமுடியும்.

நல்ல உறவுகளுக்கு ஒருவர் அதிக சுயநலம் உள்ளவராக இருக்ககூடாது.சுயநலம் இருப்பவன் தனியாகத்தான் இயங்கமுடியும்.உங்கள் உடனிருப்பவர்கள் சந்தோஷமாக இல்லாதபோது நீங்கள் எப்படி சந்தோசமாக இருக்கமுடியும்?அப்படி இருந்தால்,அது ஒரு மன நோய்.உணர்வுபூர்வமாக மற்றவர்களின் தேவையை உணர்ந்தவன் அதை நிறைவேற்றுகிறான்.உடைக்கமுடியாத பிணைப்புகள் உருவாகின்றன.

நல்ல வார்த்தைகள் கைவரப்பெற்றவர்கள் நல்ல வாழ்க்கையை பெற்றவர்கள்.வார்த்தைகள்தான் உறவின் வலிமையை தீர்மானிக்கின்றன.சூழ்நிலை காரணமாக உணர்ச்சி வயப்பட்டு எரியும் வார்த்தைகள் சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது.பின்னர்,தவறை உணர்ந்து இனிய வார்த்தைகளால் உறவுகளை இருக்கிக்கொள்ளவேண்டும்.நல்ல உள்ளங்களிலிருந்து நல்ல வார்த்தைகளே வரும்.கோபம் போன்ற உணர்வுகளை கையாளத்தெரிந்தால் நலம் பயக்கும் உறவுகள் உண்டாகும்.

உறவுகளுக்காக தேவைப்பட்டால் உங்கள் மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ளலாம்.அந்த மதிப்பீடுகள் சமூகத்துக்கோ,தனி மனிதனுக்கோ தீங்கு விளைவிப்பதாக இருக்கக்கூடாது.ஒத்துப்போதல்,மற்றவர்களை புரிந்து கொள்வது,உணர்வுப்பூர்வமான ஆதரவு அளிப்பது,சேர்ந்து உண்பது,இணைந்து கொண்டாடுவது,எளிமையாக இருப்பது,பணத்தை பார்க்காமல் மனத்தை பார்த்து பழகுவது போன்றவை இனிய உறவுகளின் அடிப்படை.முயற்சி செய்தால் நீங்களும் சாதனை மனிதர்தான்! -

1 comment:

மதுரை சரவணன் said...

/

உறவுகளுக்காக தேவைப்பட்டால் உங்கள் மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ளலாம்./

உண்மை. நல்ல இடுகை. வாழ்த்துக்கள்