Friday, July 26, 2013

எய்ட்ஸ் இப்படியும் பரவுமா?



இந்தியாவில் 1986  ஆம் ஆண்டு சென்னையில்தான் எச்.ஐ.வி கண்டறியப்பட்ட்து.சில ஆண்டுகள் கழித்து எங்கள் பக்கத்து கிராமத்தில் நடந்த விஷயம் இது.தொலைதூர வாகன ஓட்டுநர் அவர்.எய்ட்ஸ் நோய் முற்றிய நிலையில் இருந்தார்.அப்போது எச்.ஐ.வி கட்டுப்படுத்தும் மருந்துகள் இல்லை.(எச்.ஐ.வி என்பது வைரஸ்,எய்ட்ஸ் என்பது பல்வேறு நோய்களின் கூட்டு.எச்.ஐ.வி யால் நோய் எதிர்ப்பு சக்தி பெருமளவு குறைந்த பின்னர் இந்நிலை ஏற்படும்).மேலும் தகவல்களுக்கு பிரபல இடுகைகள் பகுதியில் உள்ள எய்ட்ஸ் பற்றிய இடுகையை படிக்கவும்.


எய்ட்ஸ் நிலையில் இருந்த வாகன ஓட்டுநர் விஷயத்திற்கு வருவோம்.மருத்துவமனையில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லிவிட்டார்கள்.அவரை வீட்டுக்கு கொண்டுவராமல் நேரடியாக சுடுகாட்டில் கொண்டுபோய் போட்டுவிட்டார்கள்.சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.சுமார் இருபது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது உத்திரப்பிரதேச கிராமத்தின் செய்தியை படித்தேன்.எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்குப்பிறந்த குழந்தைகள் சுடுகாட்டில் வாழ்க்கை நட்த்துகிறார்கள்.அவர்களுக்கும் எச்.ஐ.வி இருக்கலாம் என்ற கலக்கத்தில் உறவினர்களால் ஒதுக்கப்பட்டார்கள்.

எச்.ஐ.வி. எப்படி பரவும்,பரவாது என்பது தெரியாத நிலைதான் ஒதுக்குதலுக்கான முக்கியமான காரணம்.இருபது ஆண்டுகளுக்குப்பிறகும் அறியாமை அகலாமல் இருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.பல பட்டம் பெற்றவர்களிடம் கூட இந்த அறியாமை இருக்கிறது.நாட்டின் சமூக,பொருளாதார காரணிகளைப் பாதிக்கும் ஒரு நோயைப்பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே இருக்கவேண்டும்.நாம் சினிமா செய்திகளில் காட்டும் ஆர்வம் இது போன்ற விஷயங்களில் இருப்பதில்லை.


மீன் தண்ணீரில் வாழ்வது போல மனித உடலுக்கு வெளியே எச்.ஐ.வி உயிர் வாழாது.பாதிக்கப்பட்டவரின் இரத்தம், உடல் திரவங்களில் இந்த வைரஸ் உயிருடன் இருக்கும்.தொடுவதனாலோ,நமது வீட்டில் இருப்பதனால்,கழிப்பறையை பயன்படுத்துவதால்,ஒன்றாக சாப்பிடுவதால் வைரஸ் பரவாது.பெரும்பான்மையாக உடலுறவு மூலம் பரவுகிறது.பரிசோதிக்காமல் பாதிக்கப்பட்டவரின் இரத்தம் ஏற்றுவதன் மூலமும்,தாயிடமிருந்து குழந்தைக்கும்,ஊசி மூலமாகவும்(போதை ஊசி பகிர்ந்து கொள்பவ்ர்களிடையே) பரவ வாய்ப்பிருக்கிறது.தாயிடமிருந்து குழந்தக்குப்பரவுவதை இப்போது பெருமளவு தடுக்க முடிந்திருக்கிறது.

எச்.ஐ.வி. உள்ளவர்களை ஒதுக்குவது அறியாமையின் உச்சம்.இது எச்.ஐ.வி பரவலைக்கட்டுப்படுத்துவதில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தும்.எய்ட்ஸ் தனிமனித பிரச்சினை மட்டுமல்ல, சமூக பொருளாதார பிரச்சினையும் கூட! ஒவ்வொரு குடிமகனுக்கும் இதனால் பாதிப்பு உண்டு.இத்தனை வருடங்களில் ஊடகங்களில் இது பற்றிய தகவல்கள் வராமல் இல்லை.


நமக்கு இவற்றில் ஆர்வம் இல்லை என்பதே நிஜம்.உத்திரப்பிரதேச கிராமத்தில்படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் யாரேனும் இருக்கலாம்.அருகில் உள்ள ஒரு மருத்துவர் அல்லது மருத்துவமனையை அணுகி எச்.ஐ.வி பற்றி கேட்டிருக்கமுடியும்.இதன் மூலம் கிராமத்தில் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க முடியும்.
-

2 comments:

viyasan said...

எல்லோரும் அறிய வேண்டிய கருத்த்துக்கள். AIDS நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் பழகுவதாலோ அல்லது உதவுவதாலோ நோய் பரவுவதில்லை.அவர்களை நாங்கள் ஒதுக்கத் தேவையில்லை என்ற உண்மை அனைவருக்கும் போய்ச்சேர வேண்டும். உங்களின் முயற்சிக்கு எனது பாராட்டுக்கள்.

Anonymous said...

எய்ட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வை அவ்வவ்போது நினைவூட்டிய படியே இருக்க வேண்டும், குறிப்பாக பின் தங்கிய பகுதிகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஊடாக பரப்புரைகள் செய்தே ஆக வேண்டும். அது மட்டுமில்லாமல் பாதிக்கப்பட்டோர் சமூகத்தால் ஒதுக்கப்படும் பட்சத்தில் குறிப்பாக குழந்தைகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், அரசாங்கமும் பொறுப்பேற்று உதவ முன் வர வேண்டும்.. நாமும் நம்மாலான அளவில் எய்ட்ஸ் குறித்து உற்றார், உறவினர், நண்பர், சுற்றத்தாரோடு எடுத்துரைக்க வேண்டும்..