Tuesday, November 30, 2010

நந்தலாலா -அலுப்பூட்டும் கவிதை

மிஷ்கின் பாத்திரத்தைப்போல நான் நேரில் பார்த்திருக்கிறேன்.சில நேரங்களில் தெளிவாக இருப்பதும் சில நேரங்களில் மூர்க்கமாக ,அமைதியாக,கோபமாக என்று விதம்விதமான மன நோயாளிகளின் குணங்கள்.யாரையாவது பார்த்தால் மிகவும் அடங்கி அன்பு பொங்க பார்க்கும் மனக்குறைபாடு உள்ளவர்களை நேரில் சந்தித்து வியப்பில் ஆழ்ந்ததுண்டு."அன்பு மட்டும் அனாதையாக இல்லை".அன்பு கொண்டவரை மன நலம் பாதித்தவர்கள் மட்டுமல்ல ,பிறந்த குழந்தைக்கும் அடையாளம் தெரியும்.யாரையாவது கூர்ந்து கவனியுங்கள் .புரியும்.படத்தில் காட்டப்படும் மன நல விடுதியைப்போலத்தான் இப்போது அத்தகைய விடுதிகள் இருக்கின்றனவா என்று தெரியவில்லை.அமைதியாக்கும் நல்ல மருந்துகள் இருக்கின்றன.

பயணம் செய்யும் கதை என்றால் உலகத்தில் இருக்கும் எல்லா வண்டியையும் காட்டித்தான் ஆகவேண்டுமா?நடைபயணம்,சைக்கிள்,டிராக்டர்,லாரி,கார்,பஸ்,டூ வீலர் என எல்லாவற்றிலும் பயணிக்க வேண்டுமா?ஒவ்வொரு வண்டியையும் காட்டுவதற்கும்,அதில் பயணம் செய்வதற்கும் யாரையாவது-அவர்கள் சாதாரண மனிதர்கள்-படைத்தது போல அமைந்து விட்டது.கார் பயணத்தில் தொல்லை தருபவர்கள் மீண்டும் தொடர்பில்லாமல் எதிரே நிற்பதும்,பலாத்காரம் செய்ய வந்ததாக சத்தமிட்டு ஓட வைப்பதும் ,அவர்கள் மோதி நிற்பதும் வழக்கமான தமிழ் சினிமா.

இரண்டு தினங்களுக்கு முன்பு நான் படம் பார்த்தபோது அதிக கூட்டமில்லை."படம் சுலோவா போகுது"என்று யாரோ இடைவேளையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்கள்.அலுப்பான பயணம்தான் என்று எனக்கு பட்டது.பயணங்களின் போது நாம் சந்தித்த காட்சிகள் தான்.மீண்டும் பார்த்தபோது நாமே பயணம் செய்வதுபோல இருந்தது.விதம் விதமாக அழகை அள்ளித்தரும் காமிரா.இருந்தும் விரைவில் அன்னை வயலை அடைந்து விட்டால் நல்லது என்று நினைக்க தோன்றுவது படத்தின் பலவீனம்.

இளையராஜா இசையில் படம் பார்த்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. வேறு யாரும் பொருந்தியிருப்பர்களா என்பது சந்தேகம்.படம் உருவாக்கும் உணர்வுகளை ராஜா முழுமையடைய வைக்கிறார். நந்தலாலா மறக்க முடியாத அனுபவமாவதற்கு ஒளியும் ஒலியும் அற்புதமாக அமைந்துவிட்டது.இசைஞானியின் மௌனத்தை வெகுவாக ரசித்தேன்.

ஆஹா! அந்த சிறுவன்! பையன் மிக இயல்பாக பொருந்திவிட்டான்.அல்லது மிஷ்கினின் உழைப்பா? வெகு நாட்கள் தாயைக்கான காத்திருந்து முடிவில் தாயைக்காணும் நிமிடங்களில் சிறுவனின் முகத்தில்!? மிஷ்கின் ஒரு தேர்ந்த படைப்பாளி என்பதை நிரூபித்திருக்கிறார்.அழகிய கவிதை!சில நேரங்களில் அலுப்பூட்டுகிறது.இருந்துவிட்டு போகட்டும்.குறையில்லாத எதுவும் இருக்கிறதா என்ன?நிறைய எழுதி விட்டார்கள்.நானும் என் பங்குக்கு சில விஷயங்களை சொல்ல நினைத்தேன். -

Friday, November 26, 2010

ஐயோ! செல்போன் கம்பெனிகள்!

பஸ் ஸ்டாண்டில் காய்கறி விற்கும் பெண் அவர்.ஒரு செல்போன் வைத்திருக்கிறார்.அவருடைய நம்பர் அவருக்கு தெரியாது.யாராவது போன் செய்தால் எடுத்து பேசுவார்.அவர் போன்லிருந்து பேசவேண்டுமானால் யாருடைய உதவியாவது தேவை.ஒரு நாள் ரீசார்ஜ் செய்யும் கடைக்காரரிடம் பெரிய சண்டை.ரீசார்ஜ் செய்தால் பணமே இருப்பதில்லை.கடைக்காரர் ரீசார்ஜ் செய்து பரிசோதித்து பார்த்தபோது உடனடியாக பணம் கழிக்கப்பட்டிருந்தது.

செல்போன் கம்பெனிகளுக்கு டெலிமார்கடிங் என்றொரு அமுதசுரபி இருக்கிறது.அவர்கள் போன் செய்து ஒன்றை அழுத்து,இரண்டை அழுத்து என்பார்கள்.மேற்கண்ட காய்கறி விற்கும் பெண்ணைப்போல எத்தனை பேர் இருக்கிறார்கள்?படிக்காத ஏழை இந்தியர்களுக்கு இந்த எழவெல்லாம் என்னத்தை தெரியும்?யாரோ போன் செய்கிறார்கள் என்று நினைத்து எடுத்து பேச ஒன்றும் புரியாமல் ஏதோஒன்றை அழுத்துவார்கள்.அல்லது எதையும் செய்யாமல் அவர்களாகவே பணம் பிடித்துக்கொள்வார்கள்.

எனது நண்பன் ஒருவன் பிரபல பன்னாட்டு நிறுவனமொன்றின் இணைப்பை வாங்கினான்.பேசிய பின்னால் பணம் கட்டும் திட்டமது.அடிக்கடி ரீசார்ஜ் செய்ய கடைக்கு ஓடாமல் எளிதாக இருப்பதாக கூறிக்கொண்டிருந்தான்.நான்கு மாதங்கள் கழித்து வீட்டுக்கு வந்த பில் தொகையைபார்த்து மிரண்டுபோனான்.நண்பர்களிடமெல்லாம் போன் செய்து புலம்ப ஆரம்பித்தான்.நான் அவ்வளவெல்லாம் பேசவில்லைஎன்று கம்பெனியில் விசாரித்தான்.

கம்பெனியில் நீங்கள் ஒரு மாதத்துக்கு முன் திட்டத்தை மாற்றியிருக்கிறீர்கள் என்றார்கள்.அப்படி எதுவும் நான் மாற்றவில்லை,நீங்கலாக எப்படி மாற்றலாம்?என்று கேட்டபின் டெலி மார்கெட்டிங் ஆட்கள் சொல்லி மாற்றியிருக்கிறார்கள்.உங்களுக்கு போன் செய்து கேட்டிருப்பார்களே?உண்மையில் அப்படி எதுவும் இல்லை.கம்பனிக்காரர்கள் சொன்னார்கள்!"சரி,பணத்தை கட்டிவிடுங்கள்,அடுத்த பில்லில் இருந்து பழைய திட்டத்துக்கு மாற்றிக்கொள்ளலாம்.ஆக,நஷ்டம் நஷ்டம்தான்.அந்த நம்பரே வேண்டாம் என்று தலை முழுகிவிட்டான்.

இது போன்ற பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள நுகர்வோர் நீதிமன்றத்தை நாடமுடியும்.ஆனால்,அவன் செய்யவில்லை.படிப்பறிவில்லா ஏழைகள் இந்த மாதிரி சட்டம் எத்தனை பேருக்கு தெரியும் ?தெரிந்தாலும் ஏழைகளுக்கும் நீதிக்கும் என்ன தொடர்பு?உழைத்து,உழைத்து வறுமையில் வாடும் இந்தியனை எத்தனை பேர்தான் சுரண்டுவது? -

Sunday, November 21, 2010

இனிய உறவுகளே வாழ்க்கையின் வெற்றி!

வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் எல்லோரும் இனிய,இதமான உறவுகளை அமைத்துக்கொண்டவர்களே! கணவன்,மனைவி,நண்பர்கள்,பணியாளர்கள்,அண்டைவீட்டார்,பெற்றோர்,உடன்பிறந்தவர்கள் என சிக்கலில்லாத உறவுகளை கைவரப்பெற்றவர்கள் உண்மையில் இவ்வுலகில் வாழ்ந்தார்கள் என்று போற்றப்படும் நிலையை பெற்றவர்கள்.சாதனைகள்,தொழில் வெற்றி,புகழ் மாலை போன்றவற்றை உறவுகள்தான் தீர்மானித்திருக்கின்றன.

வெற்றி பெற்ற தனிமனிதன் அவனது திறமைகளால் தானே உயர்ந்திருப்பான்?ஆம். அவனது திறமை நல்ல உறவுகளை உருவாக்கியதில் இருக்கிறது.உறவுகளை தனது வெற்றிக்கு ,சாதனைக்கு பயன்படுத்திக்கொண்டதில் இருக்கிறது.தூக்கிவிட ஆளில்லாமல் யாரும் மேலேபோக முடியாது.தாங்கிப்பிடிக்காமல்நிலைத்து நிற்கவும் முடியாது.பலர் பலத்தில்தான் ஒருவர் உயரே நிற்கமுடியும்.

நல்ல உறவுகளுக்கு ஒருவர் அதிக சுயநலம் உள்ளவராக இருக்ககூடாது.சுயநலம் இருப்பவன் தனியாகத்தான் இயங்கமுடியும்.உங்கள் உடனிருப்பவர்கள் சந்தோஷமாக இல்லாதபோது நீங்கள் எப்படி சந்தோசமாக இருக்கமுடியும்?அப்படி இருந்தால்,அது ஒரு மன நோய்.உணர்வுபூர்வமாக மற்றவர்களின் தேவையை உணர்ந்தவன் அதை நிறைவேற்றுகிறான்.உடைக்கமுடியாத பிணைப்புகள் உருவாகின்றன.

நல்ல வார்த்தைகள் கைவரப்பெற்றவர்கள் நல்ல வாழ்க்கையை பெற்றவர்கள்.வார்த்தைகள்தான் உறவின் வலிமையை தீர்மானிக்கின்றன.சூழ்நிலை காரணமாக உணர்ச்சி வயப்பட்டு எரியும் வார்த்தைகள் சில நேரங்களில் சிக்கல்களை ஏற்படுத்திவிடுகிறது.பின்னர்,தவறை உணர்ந்து இனிய வார்த்தைகளால் உறவுகளை இருக்கிக்கொள்ளவேண்டும்.நல்ல உள்ளங்களிலிருந்து நல்ல வார்த்தைகளே வரும்.கோபம் போன்ற உணர்வுகளை கையாளத்தெரிந்தால் நலம் பயக்கும் உறவுகள் உண்டாகும்.

உறவுகளுக்காக தேவைப்பட்டால் உங்கள் மதிப்பீடுகளை மாற்றிக்கொள்ளலாம்.அந்த மதிப்பீடுகள் சமூகத்துக்கோ,தனி மனிதனுக்கோ தீங்கு விளைவிப்பதாக இருக்கக்கூடாது.ஒத்துப்போதல்,மற்றவர்களை புரிந்து கொள்வது,உணர்வுப்பூர்வமான ஆதரவு அளிப்பது,சேர்ந்து உண்பது,இணைந்து கொண்டாடுவது,எளிமையாக இருப்பது,பணத்தை பார்க்காமல் மனத்தை பார்த்து பழகுவது போன்றவை இனிய உறவுகளின் அடிப்படை.முயற்சி செய்தால் நீங்களும் சாதனை மனிதர்தான்! -

Friday, November 19, 2010

கள்ளக்காதல் வெளியே வருவது எப்படி?

கள்ளக்காதல் உள்ளூர் தினசரிகளின் அன்றாட செய்திகள்.ஒரு சமூகப்பிரச்சினையாக அணுகுவதை விட்டுவிட்டு பரபரப்பு செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டு மறந்து விடுகிறோம்.உறவுகளிலும்,குடும்பங்களிலும் விஷக்கிருமியைப்போல ஊடுருவி கொலை,தற்கொலை,குடும்பசிதைவு,என கோரமுகம் காட்டும் ஒன்றை நாம் கவனிக்காதது போல் இருக்கும் மாயம் என்ன?இது ஒரு சமூகப்பிரச்சினையாக ஏன்ஆய்வு செய்யப்படவில்லை?படிக்கப்படவில்லை?

சமூகப்பிரச்சினை என்பதற்கு உள்ள வரையறைகள் கள்ளக்காதலுக்கு பொருந்தும்.மரபு சார்ந்து நாம் காதல்,பாலியல் தொடர்பான விஷயங்களை திரும்பிப்பார்க்காமல் ஓரக்கண்ணால் படபடப்புடன் பார்த்து வந்திருக்கிறோம்.குற்றங்களை ஆய்வு செய்கிறோம்.மதுப்பழக்கம்,புகைபிடித்தல்,வறுமை,என்று சமூகப்பிரச்சினைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.படிக்கப்படுகின்றன.கள்ளக்காதல் போன்றவற்றை அவ்வப்போது சில பத்திரிக்கைகள்ஆய்வுக்கு உட்படுத்துகின்றனவே தவிர வேறு யாரும் கவனிப்பதில்லை.

கள்ளக்காதல் சமூகத்தில் நோய்க்கூறாக சிந்திக்கப்ப்படும்போது,அனுமானங்களும்,அதையொட்டி ஆய்வுகளும் உருவாக வாய்ப்புள்ளது.ஆய்வுகள் மூலம் கண்டடையப்படும் உண்மைகள் பிரச்சினைகளை தீர்க்க உதவும்.பல குழந்தைகள் அனாதையாவது,கொலை,தற்கொலைஎன்று நீளும் குற்றச்செயல்களை ஓரளவாவது நம்மால் குறைக்கமுடியும்.முயற்சி இருந்தால் முடியாதது இருக்கிறதா என்ன?

நாம் இனி தலைப்புக்கு வருவோம்.நாளிதழ்களில்வந்தால் எல்லோருக்கும் தெரியும்.வேறு எப்படி?கள்ளக்காதல் ஒரு குற்றம்.ரகசியமானது,யாருக்கும் தெரியாமல் நடக்கவேண்டும்.ஆனால்,எல்லா குற்றச்செயல்களைப்போலவே தடயமும் இருக்கும்.நான் அறிந்தவரை உடனிருப்பவர்கள் யாருக்கும் தெரியாமல் இத்தகைய உறவுகள் மலர்வதில்லை.காதலை போலவே இது தொற்றிக்கொள்ளும் தன்மை கொண்டது.தோழிகளுக்கு தெரியாத கள்ளக்காதல் விதிவிலக்கு!

பலருடன் விவாதித்த வரையிலும்,பார்த்து,கேட்டு அறிந்தவகையிலும் கள்ளக்காதல்கள்,முடிவு செய்வதற்கு முன்னர் பெண்ணால் தனது தோழிகளிடம் பேசப்பட்டுவிடுகிறது.அவர்களது கருத்துக்களை அறிவதும்,அவரைப்பற்றி அறிவதும் இதன் நோக்கமாகும்.வெற்றிக்கு பிறகு ஆண் தனது நண்பர்களிடம் அறிவிப்பான்.ஆண் தனது வெற்றியாக கொண்டாடுவான்.பின்னர்,அப்பெண் தனது மரியாதையை இழக்க துவங்கி எதிர்கொள்ளும் சிக்கல்களை பெண்ணிய நோக்கில் பார்க்கவேண்டும். -

Tuesday, November 16, 2010

குழந்தையை பலி கேட்கும் சமூகம்

சேவை மனப்பான்மை மிக்க மாவட்ட ஆட்சியர் அவர்.பள்ளிக்கு செல்லும் வயதில் பணிக்கு சென்று கொண்டிருக்கும் குழந்தைகளை மீண்டும் கல்வி நிலையத்திற்கு கொண்டு வருவதில் உறுதியாக இருந்தார்.குடியரசு தினம் என்று நினைவு.கிராம சபா கூட்டங்களின் முக்கிய நோக்கமாக பள்ளியில் இருந்து இடை நின்ற குழந்தைகள் பற்றியதாக இருந்தது.அந்த மாவட்டத்தில் அதிகம் படிப்பை விட்டுவிட்டு போன குழந்தைகள் உள்ள கிராமம் தேர்வு செய்யப்பட்டது.

மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளும் கூடியிருந்தார்கள்.அனைவரிடமும் பள்ளியிலிருந்து நின்றுபோன குழந்தைகளின் பட்டியல் இருந்தது.மக்களை திரட்டுவதில் துறைவாரியாக உழைத்தார்கள்.குழந்தைகளின் பெற்றோர்களை வீடுவீடாக சென்று அழைத்துக்கொண்டிருந்தார்கள்.பெயர் பட்டியல் வாசிக்கப்பட்டது.முதல் ஏழு பேர் வரை ஒருவரும் வரவில்லை.அடுத்த பெயர் படிக்கப்பட்டவுடன் சுற்றியிருந்தவர்கள் கை காட்டினார்கள்.ஒரு பெண்,சுமார் முப்பத்தைந்து வயது இருக்கும்,ஆட்சியர் முன்னால் தரையில் அமர்ந்தார்.

அவரது குழந்தையை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவது குறித்து அவரிடம் மாவட்ட ஆட்சியர் கேட்டார்.மற்ற அதிகாரிகள் அதன் நன்மைகளை சொல்லிக்கொண்டிருந்தார்கள்."என் பொண்ணு படிக்கிறா!.பையன் சென்னையில வேலை செய்யறான்,அவன்தான் குடும்பத்தை காப்பாத்தறான்!அவங்கப்பன் வேற பொண்ண சேத்துக்குனு வாழ்றான்."தொடர்ந்து சட்டமும்,கல்வியின் நன்மைகளும் எடுத்துக்கூறப்பட்டது.உறுதியாக அந்தத்தாய் கூறினார்."எனக்கு மட்டும் எம்பையன் நல்லா இருக்கணும்னு ஆசை இருக்காதா?திருப்பியும் படிக்க அனுப்பரதெல்லாம் ஆகிற கதையில்ல!அப்பெண் கேலியாக சிரித்ததை பார்த்து ஆட்சியரின் முகம் வாடிப்போனது.
அடுத்து பெரும்பான்மையோர் வரவில்லை.கிராமசபையின் நோக்கம் தோல்வியில் முடிந்தது

அந்த பையன் என்னவேலை செய்கிறான் என்று தெரியவில்லை.அதை சொல்லவில்லை.மளிகை கடையில் பொட்டலம் கட்டலாம்,கட்டிடம் கட்டும் பணியில் இருக்கலாம்,ஹோட்டலில் வேலை செய்யலாம்,விடுதியில் வேலை செய்யலாம் எதுவாகவோ இருக்கட்டும்.அடியும் திட்டும் கூட வாங்கிக்க்கொண்டிருக்கலாம்.சம்பாதித்து வீட்டுக்கு கொண்டு வந்து தர வேண்டும்.அவனது தங்கையை படிக்க வைக்கவேண்டும்.படித்துககொண்டிருந்தால் மாதம் ஆயிரம் ரூபாய் யார் தருவார்கள்?சம வயதுடைய குழந்தைகள் படித்துக்கொண்டிருக்கும் போது மற்றவரின் ஏவலுக்கு பணிந்து சம்பாதிக்க வேண்டும்.அவனை நம்பி ஒரு குடும்பம் இருக்கிறது.
பள்ளிக்கு சென்றால்........................................
பள்ளிக்கு சென்றால் மட்டும் என்ன வாழ்கிறது? விடியற்காலையில் எழுந்து,அவசரமாக குளித்து,வேண்டாவெறுப்பாக தின்றுவிட்டு,பொதி சுமந்து,குனிந்து நடந்து -புததகங்களையும் நோட்டுகளையும் பள்ளியிலேயே அவரவர் மேசை மீதே வைத்து விட்டு ஓரிரு புத்தகங்களை மட்டும் வீட்டுக்கு எடுத்துசென்றால் என்ன?-எதையாவது மனப்பாடம் செய்து திரும்ப வேண்டும்.குழந்தைகள் விருப்பங்கள் எப்போதும் முக்கியமாக இல்லை.பெற்றோரின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றப்போகும் கடவுள்கள்!

அனைத்து சமூகபிரச்சினைகளும் குழந்தையையும் பெண்ணையுமே பலியாக கேட்கின்றன!மது,வறுமை,வேலையின்மை,சாதி,மத மோதல்கள்,மனக்கோளாறுகள் என்று எல்லாமும் பெண்ணையும்,குழந்தைகளையும் குறி வைத்து சிதைக்கின்றன.தேசத்தின் சமபாதி குழந்தைகள் வன்முறைக்கு ஆளாகிறார்கள்.பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பேசுவதை பொறுமையாக கேட்பதற்கோ,அடையாளம் காணவோ பெற்றோருக்கு நேரமில்லை.நல்ல மதிப்பீடுகளை நம்மால் கற்றுத்தர முடியவில்லை.அவர்களுக்கு குழந்தைமையையும்,மகிழ்ச்சியையும் வழங்க நாம் உறுதி ஏற்போம்.
குழந்தைகள் தினத்தன்று எழுத நினைத்தது! -

Wednesday, November 10, 2010

கற்பழிப்பு குற்றம் சாட்டப்பட்டவனுடன் ஒரு சந்திப்பு

அணுகுண்டை விட வலிமையான ஆயுதமாக எதிரிகள் கருதுவது கற்பழிப்பு.பெண்ணுக்கும் அவளை சார்ந்தவர்களுக்கும்,தேசத்திற்கும் மிகப்பெரும் அவமானம் என்பதால்!மானம் உயிரினும் மேலானதுஎன்பதால்!பெண்களின் மீது நடத்தப்படும் வன்முறைகளில் உச்சமானது கற்பழிப்பும் அதன் விளைவான கொலையும்.தொடர்ந்து இணங்காமல் போராடும்போது கொலைசெய்யும் வாய்ப்பு அதிகரிக்கிறது.ஒரு பெண் மீதான தீவிர,கீழ்த்தரமான ஆசைக்கு அப்பெண் மசியாதபோது கற்பழிப்புகள் நடக்கும் வாய்ப்பு அதிகரிக்கிறது.இவற்றில் பெரும்பாலானவை திட்டமிட்டு உறவினர்களால் ,நண்பர்களால் நடத்தப்படுபவை.திடீரென்று திட்டமிடாமல் நடக்கும் கற்பழிப்புகள் குறைவு.மன நோயாளிகளால் நடப்பவையும் உண்டு.மனதிற்கும் பால் உணர்வுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.ஏதுமறியாத சிறுமிகளும் இதற்கு விதிவிலக்கல்ல.
கற்பழிப்பு குற்றங்களுக்கு சட்டத்தில் கடுமையான தண்டனைகளுக்கு இடமிருந்தாலும் புகார் செய்யப்படுவது குறைவு என்று சொல்லப்படுகிறது.சமூகத்திற்கு அஞ்சி மறைக்கப்படுவதால் குற்றவாளிகள் பெருகும் வாய்ப்பு அதிகம்.குற்றத்தை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனைகள்,காவல்,சட்ட நடைமுறைகளை தாண்டவேண்டும்.இயல்பு வாழ்க்கையை தொலைக்கவேண்டும்.மகளிர் அமைப்புகள் சில வழக்குகளுக்கு சிறப்பான பணியாற்றியிருக்கின்றன.
குற்றம் சாட்டப்பட்ட அவன்
மருத்துவ பரிசோதனைக்கு அழைத்துச்செல்லப்படும் போது வழியில் அவனை சந்தித்தேன்.காவல்துறையை சேர்ந்த நண்பர் என்னிடம் "ரேப் பண்ணியிருக்கான் ,இவனபார்த்தா எப்படியிருக்கு பார் ?"எனக்கும் ஆச்சரியாமாகத்தான் இருந்தது.ஒரு வீரனைப்போல அவன் முகம் காட்டினான்.குற்றம் சுமத்தப்பட்டவன் என்று அவனிடம் கவலையோ,குற்ற உணர்வோ இல்லை.விளையாட்டு வீரர்கள் தாங்கள் பெற்ற கோப்பையை உயர்த்தி காட்டும் மலர்ச்சியை நான் பார்த்தேன்.யாராலும் செய்யமுடியாத காரியமா?நண்பருக்கு என்னைப்பற்றி தெரியுமாதலால் அவனை அருகில் அழைத்து பேசினேன்.
அவனது வார்த்தைகளில் சில...................................
இதுக்கு மேல யார் சார் கல்யாணம் பண்ணிக்குவான் அவள,நான் எதுவும் பண்ணல!நான் வேணும்னா பலதடவ கல்யாணம் பண்ணிக்கலாம்,லவ் பண்ணலாம்னு சொன்னேன் .அவ எதுவும் பேசல! கோவத்துல சண்ட புடிச்சப்ப அவ சொந்தக்காரன் ஒருத்தன் பார்த்துட்டான்.அதனால வூட்ல போயி சொல்லிட்டா.அவளுக்குத்தான் அசிங்கம்.எவன் வருவான்?அப்படி ஆத்தரமா இருந்தா ரோட்ல,வீதில எத்தனையோ பேர் இருக்காங்க!நான் தண்ணியடிச்சா அந்த மாதிரி பழக்கமுண்டு.ராத்திரில செகண்ட்ஷோ சினிமா போய்ட்டு வந்து அந்தமாதிரி பொம்பளைங்ககிட்ட பழகியிருக்கிரன்.இதுக்கு மேல யார் கல்யாணம் பண்ணிக்குவான்னு பார்க்கிறேன்(திரும்பத்திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான்).அன்னக்கி நான் ஒண்ணும் தண்ணியிலகூட இல்ல!நான் ஒரே பையன்,கெடச்ச கூலிக்கு போவேன்.தப்புபண்ணமாட்டேன்.எங்கப்பன் குடிச்சி குடிச்சி காச கரைக்காம இருந்திருந்தா நான் எப்படியோ இருந்திருப்பேன்.நானும் படிச்சிருப்பேன்.இவள மாதிரி ஆளுங்கல்லாம் கால் தூசு. -

Tuesday, November 2, 2010

குருப்பெயர்ச்சி முக்கியமானதா?

ஆண்டுதோறும் குருப்பெயர்ச்சி வந்துகொண்டே இருக்கிறது.விதம்விதமாக பலன் சொல்லும் புத்தகங்கள் வெளியிடப்பட்டு விற்பனையாகிக்கொண்டிருக்கிறது.இப்போதும் குரு பெயர்ச்சியாகிறார்.மீனத்திலிருந்து வக்ரகதியாக கும்பத்துக்கு வந்த குரு பகவான் மீண்டும் மீனத்திற்கு செல்கிறார்.அங்கே மே மாதம் முதல் வாரம் வரை இருப்பார்.கடந்த மே மாதத்திலிருந்தே மீனத்தில்தான் இருந்தார்.இப்போது மீண்டும் முந்தைய இடத்துக்கே செல்லும்போது பலன்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படும் என்பது உண்மையா?
சுபர்களில் வலிமையான குரு
நவகிரகங்களில் வலிமையையும்,சுபபலன்களை தருவதில் பேராற்றலும் பெற்றவர் குரு.புகழுடன் பெருமைப்படத்தக்க வாழ்வு குருவின் பலமின்றி அமையாது.அவர் இருக்கும் ஸ்தானமும் பார்வைகளும் முக்கியத்துவம் வாய்ந்தவை.தனது சொந்த வீட்டில் இருக்கும்போது அவருக்கு வலிமை அதிகமாவதோடு பலன்களும் வலிமையாகவே இருக்கும்.ஆனால் குரு மட்டுமின்றி அனைத்து கிரகங்களும் தங்களது பணியை செய்துகொண்டுதான் இருக்கும்.செவ்வாய்,சுக்கிரன்,சூரியன் ஆகியோர் இருக்குமிடத்தின் பலன்களுக்கு ஏற்றவாறு சுபபலன்கள் கூடவோ குறையவோ செய்யும்.குரு மீனத்தில் இருக்கும் காலம் முழுதும் சனி கன்னியில்தான் இருக்கிறார்.எனவே அடுத்து வரும் நான்கைந்து மாதங்கள் கடந்த மே மாதத்தில் இருந்து நீங்கள் அனுபவித்து வரும் பலன்களில் பேரளவு மாற்றங்கள் இருக்குமா என்பதை உங்கள் ஜனன கால ஜாதகம்தான் முடிவு செய்யவேண்டும்.
கோச்சாரமும் ஜனன ஜாதகமும்
நவகிரகங்கள் ஒவ்வொரு ராசிக்கும் இடம்பெயர்வது கோச்சாரம் எனப்படும்.சூரியன் ஓராண்டுகாலத்திற்கு பன்னிரண்டு ராசிகளை கடக்கிறார்.ஜனன கால ஜாதகத்தில் சூரியன் ஆட்சி ,உச்சம் பெற்றோ,கேந்திர,திரிகோணங்களில் நற்சாரம் பெற்று அமைந்தால் கோச்சாரத்தில் சூரியன் மாறுவது பற்றி அதிகம் கவலைப்படத்தேவையில்லை.திருமணத்திற்கு குருபலன் வேண்டும் என்பார்கள்.எனது நண்பன் ஒருவனுக்கு ஏழரை சனி, குரு பனிரெண்டில் இருக்கும்போது திருமணம் நடந்தது.அனுபவத்தில் கோச்சாரம் சந்திரனை அடிப்படையாக வைத்து கணக்கிடப்படுகிறது.எனவே,கோச்சார கிரக பெயர்ச்சிகளை மனதுக்கும் ,உடலுக்கும் தான் எடுத்துக்கொள்ளவேண்டும்.உதாரணமாக,எனது நண்பனின் திருமணத்தை ஜனனகால ஜாதகம் முடிவு செய்ய,கோச்சாரத்தில் குருவும்,சனியும் பல சங்கடங்களை உருவாக்கினார்கள்.வாழ்வின் முக்கிய நிகழ்வுகள் ஜனன கால ஜாதகப்படி நடக்கும்.
கவலை வேண்டாம்
குரு 2,5,7,9,11, ஆகிய இடங்களில் நற்பலன் தருவார்.நான்கு,பத்தாம் இடங்களில்மத்திம பலன் தருவார்.மற்றவர்களும் குருப்பெயர்ச்சி பற்றிய அதிக கவலை வேண்டாம். நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரங்கள் செய்யலாம். குருவை வழிபடலாம்.குலதெய்வத்தை வணங்கலாம்.குரு உங்களை கைவிடமாட்டார்.கவலையின்றி தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்.
இத இதயங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் ங்கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் -