Saturday, April 30, 2011

கள்ளக்காதலுக்கு காரணங்கள்-ஓர் அலசல்(வாத்ஸ்யாயனர் உதவியுடன்)


இது போன்ற பிரச்னைகளுக்கு காரணகர்த்தா யாருன்னு
சொல்லுங்க சார்.
                                                       மேற்கண்ட கருத்துரை “சிரிப்பாய் சிரிக்கும் கள்ளக்காதல்கள் பதிவிற்கு இடப்பட்ட்து.

கள்ளக்காதல் உள்ளூர் தினசரிகளின் அன்றாட செய்திகள். படிக்கும்போது பெரும்பாலானவர்களுக்கு தோன்றும் எண்ணம் ஏன் இப்படி?ஆனால் தெளிவாக சொல்ல யாருமில்லை.ஒரு சமூகப்பிரச்சினையாக அணுகுவதை விட்டுவிட்டு பரபரப்பு செய்தியாக மட்டுமே பார்த்துவிட்டு மறந்து விடுகிறோம்.
உறவுகளிலும்,குடும்பங்களிலும் விஷக்கிருமியைப்போல ஊடுருவி கொலை,தற்கொலை,குடும்பசிதைவு,என கோரமுகம் காட்டும் ஒன்றை நாம் கவனிக்காதது போல் இருக்கும் மாயம் என்ன?இது ஒரு சமூகப்பிரச்சினையாக ஏன்ஆய்வு செய்யப்படவில்லை?படிக்கப்படவில்லை?

 பத்திரிக்கை செய்திகளை தாண்டி கள்ளக்காதல்கள் பற்றி அதிகம் காணக்கிடைக்கவில்லை. சமூகப்பிரச்சினை என்பதற்கு உள்ள வரையறைகள் கள்ளக்காதலுக்கு பொருந்தும்.மரபு சார்ந்து நாம் காதல்,பாலியல் தொடர்பான விஷயங்களை திரும்பிப்பார்க்காமல் ஓரக்கண்ணால் படபடப்புடன் பார்த்து வந்திருக்கிறோம்.


                                        குற்றங்களை ஆய்வு செய்கிறோம்.மதுப்பழக்கம்,புகைபிடித்தல்,வறுமை,என்று சமூகப்பிரச்சினைகள் ஆய்வு செய்யப்படுகின்றன.படிக்கப்படுகின்றன.கள்ளக்காதல் போன்றவற்றை அவ்வப்போது சில பத்திரிக்கைகள்ஆய்வுக்கு உட்படுத்துகின்றனவே தவிர வேறு யாரும் கவனிப்பதில்லை.

                           கள்ளக்காதல் சமூகத்தில் நோய்க்கூறாக சிந்திக்கப்ப்படும்போது,அனுமானங்களும்,அதையொட்டி ஆய்வுகளும் உருவாக வாய்ப்புள்ளது.ஆய்வுகள் மூலம் கண்டடையப்படும் உண்மைகள் பிரச்சினைகளை தீர்க்க உதவும்.பல குழந்தைகள் அனாதையாவது,கொலை,தற்கொலைஎன்று நீளும் குற்றச்செயல்களை ஓரளவாவது நம்மால் குறைக்கமுடியும்.முயற்சி இருந்தால் முடியாதது இருக்கிறதா என்ன?

                             இனி விஷயத்துக்கு வருவோம்.வாத்ஸ்யாயனார் காம சூத்திரத்தில் கள்ளக்காதலை குறித்துள்ளார்.அவரது காலத்தை கவனியுங்கள்.வேலி தாண்டுவது காலந்தோறும் தொடர்ந்து வருவதை நாம் உணர முடியும்.தம்பதியர் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பும்,குழந்தைகள் மீது மிகுந்த பாசமுடையவர்கள் தவிர மற்றவர்கள் கள்ளக்காதலில் விழுபவர்கள்தான் என்கிறார்.

                        மதிக்கப்படாத நிலை,சூழல் போன்றவற்றை முக்கிய காரணமாக கூறுகிறார்.ஏதோ ஒருவகையில் மணவாழ்வில் திருப்தியில்லாத நிலை இதைத்தூண்டும் என்பது அவரது கூற்று.அது மனதளவிலும் இருக்கலாம். ஏராளமான காரணங்களை கூறுகிறார்.

                                   சட்டப்பூர்வ திருமண உறவை தாண்டி ஆணோ,பெண்ணோ வேறொரு நபருடன் காதலில் ஈடுபடுவதை கள்ளக்காதல் என்கிறோம்.காமமே இதன் அடிப்படையாக கருதப்படுகிறது "கணவனுக்கு அல்லது மனைவிக்கு போதுமான பாலியல் திறன்கள் இல்லை என்று கருதுவோர் இருக்கிறார்கள்.நாட்டுப்புற நம்பிக்கைகளில் ஒன்றாக இவை இருந்து கொண்டிருக்கிறது.

                              பரிணாமக்கொள்கையும் ,பிராய்டிசமும் உலகை மாற்றின.தற்போது கள்ளக்காதலுக்கு மரபணுக்களை காரணமாக கருதுவோர் இருக்கிறார்கள்.மனிதன் குரங்கிலிருந்து பரிணாமம் அடைந்தவன்.ஒருவனுக்கு ஒருத்தி என்பது நமது முன்னோர்களுக்கு ஏது?விலங்குகளுக்கு குடும்பம்,அவமானம்,கௌரவம் என்று ஏதேனும் உண்டா?

                             மனிதன் கால்களால் நிமிர்ந்து நடந்து சிந்திக்க ஆரம்பித்து என்னென்னவோ கொண்டு வந்தான். ஒருவருக்கு மேற்பட்ட காதல் உணர்ச்சிகள் மரபணுக்கள் மூலம் பெறப்பட்டாலும் மனிதர்கள் அனைவருக்கும் பொருந்தாது.ஒவ்வொருவருக்கும் மாறுபடும்.தவிர தம்பதியர் நீண்ட நாட்கள் பிரிந்திருத்தல்,தனிமை,சூழல்கள் போன்றவையும் காரணமாக இருக்கலாம்.இவையெல்லாம் அனுமான்ங்கள்தான் ஆய்வுமுடிவுகள் அல்ல!

-

Thursday, April 28, 2011

சட்னி,சாம்பார் சாப்பிடுவீங்களா? இதப்படிங்க!


                               நண்பர் ஒருவர் சுகாதாரம் பேணுவதில் வல்லவர்.எப்போதும் கொதித்து ஆறிய நீர் மட்டுமே பருகுவார்.அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லது என்று பல சஞ்சிகைகளில் படித்த்தன் விளைவு அதை கடைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.அநேகமாக மருத்துவம் தொடர்பான எல்லா புத்தகங்களும் அவரிடம் இருக்கும்.

                               அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டி வந்து விட்ட்தால் அவர் வீட்டிலிருந்து எடுத்துவரும் நீர் போதவில்லை.அலுவலகத்தில் குடிநீர் தயாரிக்கும் எந்திரம் ஒன்றை நிறுவ முடிவு செய்தார்.பணியாளர்கள் அனைவரிடமும் பணம் வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டார்.சிலர் முனக ஆரம்பித்தார்கள்.

                               சுத்தமான குடிநீர் பற்றிய அவரது பேச்சை கேட்டு யாரும் மறுக்கவில்லை.விடமாட்டான் என்று நினைத்தார்களோ என்னவோ! அலுவலகத்தில் சுத்தமான குடிநீர் தயார்.சுடுநீரும்,குளிர் நீரும் எல்லாம் தயார்.கொஞ்ச நாள் கழித்து திடீரென்று நான்கு நாள் விடுப்பு என்று சொன்னார்கள்.உடல்நலம் சரியில்லையாம்.அவருக்கு சர்க்கரை,ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் எல்லாம் இல்லை.

                               சில தின்ங்கள் கழித்து அவரை சந்தித்தேன்.உடல் வற்றிப்போய் விட்ட்து போல் தெரிந்த்து.ரொம்ப சோர்வாக இருந்தார்.சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.இட்லி,சட்னி,சாம்பார்.டைபாய்டு வந்து விட்ட்து.கஷ்டப்பட்டுவிட்டேன்.எவ்வளவு சுத்தமாக இருந்தேன்.விதியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது!என்றார்.

                               டிபன் எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டேன்? வரும் வழியில் ஒரு மெஸ்ஸில்தான்.அங்கே அதிகம் காரம் போடமாட்டார்கள்.நன்றாகவும் இருக்கும்!காலையில் வீட்டில் சாப்பிட நேரம் இருப்பதில்லை.எப்போதாவது சாப்பிட்டுப்பாருங்கள்.ஏன் கேட்கிறீர்கள்?என்றார்.நீங்கள் சாப்பிடும் சட்னியில் தண்ணீர் கலந்திருக்கிறார்களே அது கொதிக்கவைக்கப்பட்ட நீரா?அவருக்கு விஷயம் புரிந்துபோய்விட்ட்து.

                                                                               நண்பர்களைப் போன்றே பலரைப் பார்த்திருக்கிறேன்.சாதாரண ஹோட்டல்களில் சாப்பிடும்போது கூட வீட்டிலிருந்து எடுத்துவந்த நீரை பக்கத்தில் வைத்திருப்பார்கள்.அல்லது பாட்டில் ஒன்றை வாங்குவார்கள்.அதுவும் தரமான பிராண்ட்.ஆனால் சட்னியை பிசைந்து உள்ளே தள்ளிக்கொண்டிருப்பார்கள்.

                               சட்னி மட்டுமல்ல பழரசம் போன்றவையும் இப்படித்தான்.ஆப்பிள்,ஆரஞ்சு,மாதுளை ஜூஸ் எல்லாம் உடலுக்கு நல்லதுதான்.ஆனால் அவற்றில் கலக்கும் தண்ணீர் உடலுக்கு நன்மை பயக்கும் என்று சொல்ல முடியாது.இருபது லிட்டர் கேன்கள் தான் இப்போது எங்கும் பரவலாக உள்ளன.அவற்றில் பெரும்பாலானவை தரமற்றவை என்று செய்திகள் வருகின்றன.

                                வளரும் நாடுகளில் எண்பது சதவீத மரணங்கள் சுகாதாரமற்ற குடிநீரால் ஏற்படுகின்றன என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை.குழந்தைகள் உயிரிழப்பிற்கு வயிற்றுப்போக்கே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.டைபாய்டு,வயிற்றுப்போக்கு,குறிப்பிட்ட வகை மஞ்சள் காமாலை,வாந்திபேதி,அமீபா தொற்று போன்றவை முக்கியமான நீர்வழி பரவும் நோய்கள்.

                                குடிநீரில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் இன்னொரு பிரச்சினை.நைட்ரேட்கள்,ஆர்சனிக் போன்ற பல்வேறு வேதிப்பொருட்களும் புற்றுநோயை தூண்டும் தன்மை கொண்டவை.சுத்தமான நீர் என்பது கனவாகிவிட்ட சூழலில் வீட்டில் தயாரிக்கப்படுவதே சிறந்த்து.தவிர்க்கமுடியாமல் வெளியில் சாப்பிட நேரும்போது கொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

-

Tuesday, April 26, 2011

உடல் நலம் :உயிரைக் குடிக்கும் பழக்கங்கள்


                                                           படித்தவர்களுக்கு கிராம மக்கள் பரவாயில்லை என்று சில நேரங்களில் தோன்றும். கிராம மக்களிடம் உடல் நலன் குறித்த மூட பழக்கவழக்கங்கள் ஏராளம் இருந்ததுண்டு.சில இடங்களில் இன்னும்கூட இருக்கிறது.உடல்நலம் சரியில்லாவிட்டால் கடவுளிடம் போவது,சடங்குகள் செய்வது என்று ஆரம்பித்து விடுவார்கள்.இல்லாவிட்டால் பாட்டி வைத்தியம்.

                                                                             கல்வி அறிவற்று மரபு சார்ந்து செய்து வந்த விஷயம்.இவர்களை விட படித்தவர்களின் பழக்கங்கள் கொடூரமாக இருக்கிறது.தெரிந்த விஷயம்தான் .இன்னமும் பலர் கைவிடாத ஒன்று.ஒரு புத்திசாலி தனது குழந்தைக்கு உடல்நலம் இல்லை என்று கடையில் சில மாத்திரைகள் வாங்கிக்கொண்டு வந்து கொடுத்தார்.

                              காலையில் தூங்கி எழுந்த போது மனைவி அந்த தகவலை சொன்னார்.பையனுக்கு அம்மை போட்டிருக்கிறது.வீட்டில் விரதம் கடைப்பிடிக்க ஆரம்பித்தார்கள்.அம்மன் கோயிலுக்கு சென்றார்கள் .பக்தி அதிகமாகிவிட்டது.வீடெங்கும் பக்தி மணம்.அன்று மாலையே குழந்தை பேச்சுமூச்சில்லாமல் ஆகி விட்டது.மருத்துவமனைக்கு எடுத்துக் கொண்டு ஓடினார்கள் .

                                பரிசோதித்த மருத்துவர் வரும் வழியிலேயே சிறுவன் இறந்து விட்டதை அறிவித்தார்.மருத்துவர் அறிகுறிகளை பார்த்துவிட்டு விசாரித்ததில் தெரிய வந்த விஷயம்.- சிறுவனுக்கு உடலில் ஏற்பட்டது அம்மை அல்ல! கடையில் வாங்கி வந்த மாத்திரைகளால் ஏற்பட்ட ஒவ்வாமை (அலர்ஜி ).மாத்திரைகள் சிறுவன் உடலுக்கு ஒத்துக்கொள்ளவில்லை.

                                 சிலருக்கு சில மாத்திரை ,மருந்துகள் உணவுப் பொருட்கள் ஒத்துக் கொள்ளாது.காலாவதியான மருந்துகளாலும் இத்தகைய இழப்புகள் நேரலாம்.உடனே மருந்தை நிறுத்தியிருந்தாலாவது உயிர் காப்பாற்றப் பட்டிருக்கலாம்.மாத்திரை கொடுப்பதைய்ம் நிறுத்தவில்லை.இன்னமும் பெட்டிக்கடைகளில் மாத்திரைகள் விற்கும் பழக்கமும் ,அதை வாங்கி செல்வோரும் குறையவே இல்லை.

                             தான் பணம் சம்பாதிப்பதற்காக உயிர்களுடன் விளையாடிக் கொண்டிருப்பவர்கள் அதிகம்.அதிலும் படித்தவர்கள் ஏதோ ஒரு மாத்திரை பெயரை தெரிந்துகொண்டு மற்றவர்களுக்கும் அறிவுரை சொல்லிக்கொண்டிருப்பார்கள்.இன்னொரு பழக்கம் இருக்கிறது.சென்றமுறை உடல்வலி ,காய்ச்சலுக்காக மாத்திரை வாங்கி வந்த சீட்டு இருக்கிறது.இப்போது மனைவிக்கு உடல்வலி ,காய்ச்சல் என்றால் அந்த சீட்டை காட்டியே மாத்திரை வாங்கி வந்துவிடுவார்கள்.இதுவும் தவறுதான். 

                              அடுத்ததாக கர்ப்பிணிப்பெண்கள் .எந்த சூழலிலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுய மருத்துவம் பேராபத்தில் முடியும்.பலருக்கு கருக்கலைந்து போவதற்கு காரணமே தெரிவதில்லை.கிராமப்புற பெண்கள் பலருக்கு இறந்து பிறத்தல்,முடமாக பிறத்தல் போன்றவற்றிற்கு இப்படிப்பட்ட சுய மருத்துவமும் காரணமாக இருக்கலாம் என்ற அனுமானம் இருக்கிறது.

                               யாருக்குமே இந்த பழக்கம் நல்லதல்ல !சோம்பேறித்தனமும்,சிக்கனம் என்ற பெயரில் கஞ்சத்தனமும் ,அதி புத்திசாலித்தனமும் தான் இதற்கெல்லாம் காரணம்.உடல் நலனைத்தவிர முக்கியமானது எதுவும் இல்லை.அதை நாம் உணர்வதும்,மற்றவர்களுக்கு எடுத்துக் கூறுவதும் நல்லது.

                                                          
-

Sunday, April 24, 2011

நமக்கு ஏற்ற மாதிரி கலோரிகளை கணக்கிட்டு சாப்பிடுவது எப்படி?


                              நாம் உண்ணும்  உணவுகள் கலோரியால் மதிப்பிடப்படுகிறது.பிஸ்கட் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் மீது எவ்வளவு கலோரி அடங்கியிருக்கிறது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.கடும் உடல் உழைப்பு உள்ளவர்களுக்கு அதிக கலோரிகளும்,வளரிளம் பருவத்தினர் குழந்தைகள் என்று கலோரிகளின் தேவை வேறுபடும்.கீழே அளவுகள் தரப்பட்டுள்ளன.

குழந்தைகள் (2-6 வயது)------------------1200-1800 கலோரி
            (7-12 வயது)------------------1800-2000

இளம்பருவத்தினர் –ஆண்கள்---------------2500
                   பெண்கள்---------------2200

வயது வந்தோர்- ஆண்கள்-(உடல் உழைப்பு –2400
                          இல்லாதவர்கள்)

         உடல் உழைப்பு உள்ளவர்கள்-------2800

                               -பெண்கள்---2400

                               இப்போது உங்களுக்கு எவ்வளவு கலோரி தேவைப்படும் என்று தெரிந்து விட்ட்து.எந்தெந்த பொருளில் எத்தனை கலோரி இருக்கிறது என்று தெரியவேண்டும்.கடையில் வாங்கும் உணவுப் பொருட்கள் மீது அதிலேயே குறித்திருப்பார்கள்.அதிகம் பயன்படுத்தும் முக்கியமான சில பொருட்களுக்கு மட்டும் மதிப்பு தருகிறேன்.

              இட்லி 1         -85 கலோரி
          அரிசிசாதம்-100கிராம்- 120 கலோரி
            சப்பாத்தி 1         - 85 கலோரி
                பால் 1 கப்      -65  கலோரி
               முட்டை 1       -85  கலோரி
           பருப்பு வகை அரைகப்-85 கலோரி
             சிக்கன் 100 கிராம்  -150 கலோரி
            மட்டன்  100 கிராம் -340 கலோரி
            வாழைப்பழம் 100 கி -80 கலோரி
             ஆப்பிள் 100 கிராம் -45 கலோரி
 காய்கறிகள்(தோராயமாக,100கி  - 10-20 கலோரி
    உருளைக்கிழங்கு 100 கிராம் – 80 கலோரி

                             உதாரணமாக அதிக உடல் உழைப்பில்லாதவராக இருந்தால் 2400 கலோரி தேவைப்படுகிறது.நீங்கள் சாப்பிட்ட உணவை கணக்கிட்டு பார்த்து போதுமான அளவை தெரிந்து கொள்ளலாம்.குறைவாக சாப்பிட்டாலும் அதிகமாக சாப்பிட்டாலும் ஆரோக்கியத்தில் கேடு உண்டாகும்.

                              செரிமானம் ஆகி விட்ட்தை அறிந்து சாப்பிடச் சொல்கிறார் வள்ளுவர்.இதுவரை யாரும் அதை மறுக்கவில்லை.காய்கறி,பழங்களில் கலோரிகள் குறைவாக இருந்தாலும் அதில் உள்ள தாதுக்கள் உயிர்ச்சத்துகளுக்காக அதிகம் உண்ண வேண்டும்.சிகிச்சையில் இருப்பவர்கள் மருத்துவர் ஆலோசனைப்படி உண்ணவேண்டும்.

-

வாக்குமூலம் -பெண் பாலியல் தொழிலாளி

   என் கணவர் வேலை செய்யுமிடத்தில் பழக்கமாகி வேறொரு பெண்ணுடன் போய் விட்டார்.அம்மா வீட்டிலும் ஒன்றுமில்லை.ஒரே ஒரு சகோதரி மட்டும்தான் .குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போய்க்கொண்டிருந்தது.அங்கே இங்கே கடன் வாங்கி விட்டேன் .கடனை அழைக்க வழி தெரியவில்லை.

அப்போது ஒரு அக்கா வந்து என்னுடன் பேசிக்கொண்டிருந்தார்.அவரிடம் என் கஷ்டங்களை சொல்லிக் கொண்டிருந்தேன்."நான் ஒன்று சொல்கிறேன் கேட்கிறாயா?" தன்னுடன் பாலியல் தொழிலுக்கு வருமாறு என்னை அழைத்தார்.அவ்வளவு பணம் வரும் ,இவ்வளவு பணம் வரும் என்று சொல்லிக்கொண்டிருந்தார்.அவரை பற்றி எனக்கு தெரியாது டவுனுக்கு வேலைக்கு போவதாக நினைத்துக்கொண்டிருந்தேன்.நான் மறுத்துவிட்டேன்.

சில மாதங்களுக்கு பிறகு கஷ்டம் அதிகமாகிவிட்டது.வட்டி கட்டக்கூட முடியவில்லை.நானே அந்த அக்காவை தேடித் போனேன்.ஆரம்பத்தில் தவறு செய்கிறோமே என்று கஷ்டமாக இருந்தது.என் குழந்தைகளை நினைத்துப்பார்த்தேன் .பின்னர் நான் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை.

இரண்டு மாதம் போயிருக்கும் எங்கள் பக்கத்து தெருவில் இருக்கும் குடிகாரன் நேராக தேடி வந்துவிட்டான்." எனக்கு உன்னை பற்றி தெரியும் ,மாதம் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்துவிடு !இல்லாவிட்டால் போலீசில் சொல்லி உள்ளே தள்ளி விடுவேன் என்று மிரட்டினான்.நான் அக்காவிடம் பேசினேன் .நான் பேசிக்கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார்.இருந்தாலும் எனக்கு மனசு சரியில்லை.பேசாமல் ஏதாவது வேலைக்குப் போகலாம் என்று முடிவு செய்தேன்.

பக்கத்து ஊரில் உள்ள பஞ்சாலை கம்பெனிக்கு எங்கள் ஊரிலிருந்து போனவர்களை கேட்டேன்.வேலைக்கு போக ஆரம்பித்தேன்.நான் எதிர்பார்க்கவே இல்லை .வேலைக்கு போகும்போதும் வரும்போதும் எனக்கு பழக்கமானவர்கள் (வாடிக்கையாளர்கள்) வழியில் பார்த்து பேச ஆரம்பித்துவிட்டார்கள்.பக்கத்தில் இருப்பவர்கள் எல்லாம் ஒரு மாதிரியாக பார்க்க ஆரம்பித்தார்கள்.திடீரென்று ஆட்டோ வந்து என் பக்கத்தில் நிற்கும் "எங்கே ஆளை பார்க்க முடியவில்லை "?என்பார்கள்.சமாளிக்கவே முடியில்லை.எல்லாம் குடிகாரர்கள் .எவனும் நல்லவன் கிடையாது.தொல்லை அதிகமாக இருந்தது.

கொஞ்ச வேலைக்கும் போகாமல் வீட்டில் இருந்து யோசித்துப் பார்த்தேன் .நான் தனியாளாக இருந்தால் கூட செத்துப்போவேன் .எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறது.ஒரு பெண் வேறு.அவர்களை நன்றாக படிக்க வைத்தால் போதும்.ஒருவழியாக அக்கா பேசி பக்கத்து தெரு சோம்பேறிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுத்துவிடுவது என்று முடிவாகி விட்டது.

நான் பழையபடி தொழிலுக்கே வந்துவிட்டேன்.ஏதாவது கடை வைத்துக் கொள்ளலாம் என்று யோசித்தேன்.அக்காதான் வேண்டாம் அதெல்லாம் சரிப்படாது என்கிறார்.குடிகாரர்கள்.ரௌடிகள் ,மொள்ளமாறிகள் தான் எங்களுக்கு பழக்கம்.அவர்களெல்லாம் கடை பக்கத்தில் வந்து நின்றால் யார் கடைக்கு வருவார்கள்.எப்படியாவது என் குழந்தைகள் முன்னுக்கு வந்துவிட்டால் போதும் .என்னைப்பற்றி என்ன கிடக்கிறது.
-

Saturday, April 23, 2011

இணையத்தால் கற்பழிப்புகள் அதிகரிக்கிறதா?


பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது ஒரு சாபக்கேடு.ஆண்டுதோறும் தொடர்ந்து இவை அதிகரித்து வருகின்றன.1990-ஆம் ஆண்டு 9518 ஆக இருந்த கற்பழிப்புகளின் எண்ணிக்கை 2009-ல்   21397 ஆக அதிகரித்துள்ளது.தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளிவிபரம் இது.

                            பெருநகரங்களில்தான் கற்பழிப்புகளும்,பெண்களுக்கெதிரான குற்றங்களும் மலிந்துள்ளன.பல வல்லுநர்களும் நகரமயமாதலை முக்கிய காரணமாக சொல்கிறார்கள்.பணி காரணமாக பெண்கள் தனியாக வாழ்வது நகரங்களில் அதிகம்.குறிப்பிட்ட வயதில் உள்ள ஆண்களும்  அதிகம்.

                            வீட்டைவிட்டு வெளியில் தங்கி பணிபுரியும் ஆண்களிடம் சகவாசம் காரணமாக போதைப்பழக்கங்கள் உள்பட பல்வேறு சீரழிவுகள்.இந்தியாவில் குற்றங்களின் தலைநகரமாக டெல்லியே முதலிட்த்தில் இருக்கிறது.ஒருவருக்கொருவர் ஆரோக்கியமான சமூக தொடர்பில்லாத நிலையில் இன்னொரு மனிதனை மிருகமாகவே கருதுகிறார்கள்.

                             அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டுள்ள தாதாக்களும் அவர்களது அடியாட்களும் இம்மாதிரியான குற்ற நிகழ்வுகளில் பெரிதும் தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.ஈவ் டீசிங்,கட்த்தல்,பாலியல் தொல்லைகளும் இவர்களால் நாள்தோறும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

                             பத்தாண்டுகளில் அதிகரித்துள்ள இன்னொரு விஷயம் இணையம்.தியேட்டர்களில் பிட்டுப்படங்களுக்கு தயங்கி தயங்கி போய்க் கொண்டிருந்தவர்களுக்கு இன்று இருபது ரூபாயில் ஒருமணி நேரம் ஆபாசபடம் பார்க்கலாம்.நகரங்களில் பெரும்பாலான பிரௌசிங் செண்டர்களில் முக்கியமான முகவரி போன்று ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள்.ஆபாசமும்,போதையும் சேரும்போது விளைவுகள் மோசமாகின்றன.

                               புள்ளிவிவரங்களை தாண்டி பல கற்பழிப்புகள் மூடி மறைக்கப்பட்டு விடுவதுதான் அதிகம்.வெளியில் தெரிந்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வாழ்க்கை போய்விடும் என்ற பயத்தால் தடுக்கப்பட்டன.ஓரளவு கல்வியறிவு காரணமாக இப்போது வழக்கு பதிவாவது அதிகரித்திருக்கிறது.எண்ணிக்கை அதிகம் காணப்படுவதற்கு இதுவும் காரணம்.

                               இன்னொரு வகை கற்பழிப்புகள் சுத்தமாக மூடி மறைக்கப்பட்டு விடுகின்றன.அவை நெருங்கிய உறவினர்களால் நடக்கும் கொடூரங்கள்.தனது அக்காள் கணவரால் கற்பழிக்கப்பட்ட பெண்ணைப்பற்றி வேறொரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.எப்போதும் இதெல்லாம் வெளியில் வராது.இந்த வகை கற்பழிப்புகள் அதிகம்.

                               குழந்தைகளுக்கு நேரும் பாலியல் வன்கொடுமைகளும் நெருங்கிய உறவினர்களாலும்,தெரிந்தவர்களாலும்தான் நடக்கின்றன்.52 சதவீத குழந்தைகள் பாதிக்க்ப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.தொழில்நுட்பம் மேம்பட்ட அளவுக்கு இன்னும் மனம் மேம்படவில்லை என்பது கவலை தரும் ஒன்று.
-

Friday, April 22, 2011

மனித மேம்பாட்டுக்கு இறைவன் கொடுத்த வரம்.


                            தனி மனிதன் ஒருவன் தன்னை மேம்படுத்திக்கொள்ள இறைவன் கொடுத்த வரம் புத்தகங்கள்.இறை நம்பிக்கை இல்லாதவர்களுக்கு இயற்கை அல்லது எழுத்தாளர்கள்.எப்படி எடுத்துக்கொண்டாலும் புத்தகத்தின் ஆற்றலை மட்டும் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது.

                           வரலாற்றை நமக்கு தருபவை புத்தகங்கள்.சரித்திரத்தை மாற்றிக்காட்டியவையும் எழுத்துக்களே! தனி மனிதனை மட்டுமன்றி நாட்டை உயர்த்தவும் இவை பயன்பட்டன.புரட்சியை தூண்டின.கிளர்ச்சியை உருவாக்கின! புத்தகங்களே மாற்றத்தின் திறவுகோல்.

                           பள்ளிப்பாட்த்தை தாண்டி கல்வி புத்தகங்களில்தான் இருக்கிறது.வாசிப்பை நேசிக்காத மனிதன் இருந்தும் இல்லாதவனாகிறான்.உலகில் அவன் பெற்ற பேறு எதுவும் இல்லை.உலகைப்பற்றிய புரிதலையும்,மென்மையையும் புத்தகங்கள் மட்டுமே தரும்.வாழ்க்கையை சொல்லித்தருவதும் அவைதான்.

                            பள்ளிப்புத்தகங்கள் தவிர்த்து நூல் வடிவில் நான் படித்த புத்தகம் பாரதியார் கவிதைகள்.நான் உண்மையில் அதிர்ஷ்டசாலி.மிக சிறு வயதிலேயே நான் படித்தேன். பிறகு அடிக்கடி படித்தேன்.மிக இளம்வயதிலேயே பாரதி இறந்துவிட்டாலும் அழியாப்புகழ் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதை பாருங்கள்.


                                   நான் பார்த்த பெரும்பாலான வலைப்பதிவுகளில் பாரதி வரிகள் தான் இருக்கின்றன.என்னுடைய வலைப்பதிவுலும் பாரதியே!தனது எழுத்துக்களால் என்னை வழி நட்த்தியது மகாகவியே! பல்வேறு தருணங்களில் குறிப்பிடிருக்கிறேன்.ஒரு சிறிய புத்தகம் என் வாழ்க்கை குறித்த பார்வையை மாற்றியது.வாழக்கற்றுக்கொடுத்த்து.என்னுடைய முதல் இடுகையும் இதைப் பற்றியதே!

                                  பத்தாம் வகுப்பு இறுதித் தேர்வு விடுப்பில் நண்பன் ஒருவன் வீட்டிற்கு சென்றிருந்தேன்.கல்கியின் பொன்னியின் செல்வன் பைண்டிங் செய்து அடுக்கியிருந்த்து.கல்கியில் தொடராக வந்த்தை அச்சகத்தில் கொடுத்து தயாரித்து இருந்தார்கள்.அப்போதிருந்து எனக்கும் ஏதாவது புத்தகம் வாங்கும் எண்ணம் ஏற்பட்ட்து.

                                   நான் ஆனந்த விகடன் வாங்க ஆரம்பித்தேன்.நண்பன் வீட்டில் பார்த்தமாதிரி நானும் தொடர்கதைகளை சேகரிக்க ஆரம்பித்தேன்.அச்சகத்தில் கொடுக்காமல் நானே பைண்டிங் செய்து புத்த்கம் சுற்றி வெட்டுவதற்கு மட்டும் எடுத்துப்போவேன்.அடுத்து  கோமல் சுவாமிநாதன் ஆசிரியராக இருந்த சுபமங்களா இதழ்கள் இப்படி வைத்திருக்கிறேன்.

                                   என்னுடைய அனுபவத்தில் நான் கற்றுக்கொண்டவை இதுதான்.புத்தகங்கள் தருவதை வேறு எதுவும் உங்களுக்கு தராது.பரிசளிக்கும்போது புத்தகங்களை கொடுங்கள்.ஒரு சிறுகதை கூட மனிதனை மாற்றியமைத்த கதைகள் ஏராளம் உண்டு.நீங்கள் தேடுவது எதுவும் புத்தகங்களில் இருக்கிறது.

 
புத்தக நாளுக்கான பதிவு.
-

மின்னல் வேகத்தில் திருடப்பட்ட என்பதிவு -தமிழ்மணம் பதில்

பெண்மைக்குறைவு-ஆண்மைக்குறைவு-நரம்புத்தளர்ச்சி  என்ற பதிவை  திரட்டிகளில் இணைத்துவிட்டு வெளியில் சென்று விட்டேன்.இரண்டு மணி நேரம் கூட இருக்காது என்று நினைக்கிறேன் .தமிழ்மணத்தை பார்த்தபோது எனது இடுகை வேறொருவர் பதிவாக முதல் பக்கத்தில் இருந்தது.அந்த பதிவை சுட்டிப்போனால் சரவணன் எழுதி வெளியிட்டதாக ஓடிக்கொண்டிருக்கிறது.சுத்தமாக காபி.எனக்கு சிரிப்புதான் வந்தது.இவ்வளவு வேகமாகவா? அதுவும் இருப்பதை அப்படியே!

                                                             நெருக்கமில்லாத தம்பதிகள் அதிரும் மணவாழ்க்கை பதிவில் என்று குயபிட்டிருந்தால் அதுவும் அப்படியே இருக்கிறது.என் பதிவில் பெண்மைக்குறைவு பற்றி எழுதிவிட்டு ,ஆண்மைக்குறைவு ,நரம்புத்தளர்ச்சி பற்றிய செய்திகளுக்கு சுட்டி கொடுத்திருந்தேன்.அவர்கள் வெளியிட்டதில் பெண்மைக்குறைவுக்கான செய்தி மட்டும்தான் இருக்கிறது.

                                                                     மேற்குறிப்பிட்டுள்ள பதிவே மருத்துவர் ஒருவர் இதைப்பற்றி நீங்கள் எழுதலாமே என்று கூறியதால் எழுதப்பட்டதுதான்.சொல்லிவிட்டு போய் விட்டாரே  தவிர தகல்களை கேட்க போகும்போதெல்லாம் அவர் பயங்கர பிஸி.நான்கு முறை அவர் கிளினிக்குக்கு சென்று இரவு பத்து மணிக்கு அவருடன் பேச முடிந்தது.

                                                                              ஆண்மைக்குறைவு ,நரம்புத்தளர்ச்சி இடுகை ஆரம்பத்தில் (சில மாதங்களுக்கு முன்பு)எழுதியது.ஆயிரக்கணக்கான ரூபாயை லாட்ஜ் வைத்தியர்களிடம் தொலைத்துவிட்டு வந்து ஒரு இளைஞன் என்னிடம் புலம்பிய பின் அதை எழுதினேன்.சிரமப்பட்டும் நேரம் ஒதுக்கியும் பதிவுகளை எழுதுகிறோம்.மின்னல் வேகத்தில் காபி பேஸ்ட் செய்துவிட்டு மார் தட்டிக் கொள்கிறார்கள்.

                                                                                   இதற்கு முன்பு பாண்டிச்சேரி வலைப்பூ ,tamillook  ஆகிய வற்றில் என்னுடைய பதிவுகளை வெளியிட்டிருக்கிறார்கள்.ஆனால் அனுமதி கேட்டபின்பே வெளியிட்டார்கள்.அதுவும் என் பெயரில் இருக்கும்.அடுத்தவன் பதிவை காப்பியடித்து தன் பெயரில் வெளியிட்டு எதை சாதிக்க அலைகிறார்கள்? இவர்களையெல்லாம் என்ன செய்வது? தமிழ்மணம் நிர்வாகத்திற்கு இதைப் பற்றி தெரிவித்தேன்.we will look into it and let you know soon  என்று மின்ன்ஞ்சலில் பதில் அளித்திருக்கிறார்கள்.தமிழ்மணம் நிர்வாகத்திற்கு நன்றி!

காபியடித்த பதிவின் சுட்டி கீழே

http://amanushyam.blogspot.com/2011/04/blog-post_8677.html
-

Wednesday, April 20, 2011

நம் உடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்.


சில நம்பிக்கைகள் எப்படி ஏற்பட்ட்தென்று தெரியவில்லை.இன்னும் நீங்கள் இதை கேட்டிருப்பீர்கள்.வாயின் ஓரங்களில் சிறிதாக கொப்புளம் ஏற்பட்டிருக்கும்.பல்லி ஒண்ணுக்கு போய்விட்ட்து என்பார்கள்.மிகச் சரியாக பல்லி அந்த இட்த்தில்தான் ஒண்ணுக்கு போக வேண்டுமா?

                               அது ஒரு மூட நம்பிக்கைதான்.நிறைய இடங்களில் நான் கேட்ட்துண்டு.நானும் அதையே நம்பிக்கொண்டிருந்தேன்.மேற்சொன்னமாதிரியான கொப்புளங்கள் வந்தால் கொஞ்சம் உஷாராக வேண்டும்.உடலில் நோய் எதிர்ப்புத்திறன் குறைந்து விட்ட்து என்று அர்த்தம்.

                               நம் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும்போது அடங்கியிருக்கும் கிருமிகள் தனது வேலையை ஆரம்பித்து விடுகின்றன்.பல்லி ஒண்ணுக்கு போவதும் அப்படித்தான்.ஒருவகை வைரஸ் கிருமியால் ஏற்படும் நோய் அது.Herpes simplex virus (HSV) எனப்ப்டும் வைரஸினால்தான் தோன்றுகிறது.

                                இந்த வைரஸில் இரண்டு வகை உண்டு.ஒருவகை வாயின் ஓரங்களில் தோன்றும் கொப்புளம்.நீர்க்கொப்புளம் போன்று இருக்கும்.சிலருக்கு வலி இருக்கும்.இன்னொரு வகை பிறப்புறுப்பில் நோயை உண்டாக்கும்.பிறப்புறுப்பில் இம்மாதிரி கொப்புளங்கள் வந்தால் அது பால்வினை நோய்.உடலுறவு மூலம் பரவும் ஒன்று.

                                எந்த வகையாக இருந்தாலும் இவற்றை முழுமையாக குணமாக்க வழி இல்லை.பெரும்பாலும் தானாக மறைந்துவிடும்.சிலருக்கு சிகிச்சை தேவைப்படும்.மீண்டும் மீண்டும் வரும்.நான் மட்டன் சாப்பிட்டேன்,சிக்கன் சாப்பிட்டேன் வந்துவிட்ட்து என்பார்கள்.வாழ்நாள் முழுக்க உடலில் நோய் எதிர்ப்பு திறன் குறையும்போதெல்லாம் இக்கிருமி தன் வேலையைக் காட்டும்.

                                இதுதான் என்றில்லை பல கிருமிகளும் உடலில் நோய் எதிர்ப்பு மண்டலம் விழும்போதுதான் தன் வேலையை காட்டும்.அப்போது ஆரோக்கியத்தை கூட்ட காய்கறிகள்,பழங்கள் உள்ளிட்ட உணவுகள் அதிகம் சேர்க்க வேண்டும்.இல்லாவிட்டால் உடல் தொடர்ந்து பிரச்சினை செய்ய ஆரம்பித்துவிடும்.

                                 உடலில் கிருமித்தாக்கம் ஏற்படும்போதெல்லாம் நாம் கருத வேண்டியது நம் உடல்நோய் எதிர்ப்பு திறனை இழந்து விட்ட்து என்பதைத்தான்.அதற்கு காரணம் தேடவேண்டும்.சிலர் சத்துணவு எடுக்காமல் இருக்கலாம்.அல்லது மன அழுத்தம் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம்.சரியாக தூங்காமல் போனாலும் எதிர்ப்பாற்றல் குறையும்.சரி செய்யும் முயற்சிகளில் ஈடுபட வேண்டும்.மருத்துவரையும் அணுகலாம்.

-