Showing posts with label water borne diseases. Show all posts
Showing posts with label water borne diseases. Show all posts

Sunday, July 24, 2011

அதிக தண்ணீர் குடிப்பது சரியா?


உயிரின்ங்கள் உயிர்வாழ அத்தியாவசியமான ஒன்று நீர்.உடலியக்கம் சீராக நடைபெற போதுமான அளவு நீர் குடிப்பது அவசியம்.கொழுப்பு நீங்கலாக உடலில் எழுபது சதவீதம் தண்ணீர்தான்.வைட்டமின்களில் பி,சி ஆகியவை தண்ணீரில் கறையும்.இம்மாத்திரைகளை எடுத்துக்கொண்ட பிறகு மஞ்சளாக சிறுநீர் வெளியேறுவதை பார்க்கலாம்.எத்தனை கிராம் வைட்டமின் எடுத்துக்கொண்டாலும் உடல் தேவையானதை எடுத்துக்கொண்டு மற்றவற்றை சிறுநீர் மூலம் வெளியேற்றி விடுகிறது.

                                   எட்டு தம்ளர் தண்ணீர் குடிக்கலாம் என்று பொதுவாக சொல்வார்கள்.ஆனால் அவரவர் வாழ்க்கை முறைக்கு தக்கவாறு அளவு நிர்ணயிக்கப்படவேண்டும்.வெயிலில் கடுமையாக உழைப்பவருக்கும்,குளிர் சாதன அறையில் அமர்ந்திருப்பவருக்கும் ஒரே அளவு பொருந்தாது.மாத்திரைகள் உட்கொண்ட நேரம் தவிர சிறுநீர் மஞ்சளாக வெளியேறினால் நீர் குறைவாக குடித்திருக்கிறீர்கள் என்று பொருள்.

                                  சர்வதேச அளவிலும் இரண்டு லிட்டர் தண்ணீர் நாளொன்றுக்கு போதுமானது என்று நிர்ணயித்திருக்கிறார்கள்.அதிகமாக தண்ணீர் குடித்தால் நல்லது என்று இஷ்ட்த்திற்கு குடித்துக்கொண்டிருந்தாலும் இதயம்,சிறுநீரகம் போன்றவை அதிக சுமைக்கு உள்ளாகும்.அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சுஎன்பது நீருக்கும் பொருந்தும்.

                                   தினமும் காலையில் ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால் பல நோய்கள் ஏற்படாது என்று எப்போதோ படித்த நினைவு.நிபுணர்களும் இது நன்மையைத்தரக்கூடும் என்றுதான் சொல்கிறார்கள்.குறைந்த பட்சம் மலச்சிக்கலை போக்கும்.மலச்சிக்கல் இல்லாவிட்டாலே பல நோய்கள் அண்டாது.ஒன்றரை லிட்டர் இல்லாவிட்டாலும் காலையில் தண்ணீர் குடிப்பது நல்லதுதான்.

                                   இன்று குடிநீர் மிகப்பெரிய வியாபார வாய்ப்புகளை ஏற்படுத்திவிட்ட்து.பத்தாண்டுகளுக்கு முன்புகூட இதை எதிர்பார்க்கவில்லை.சிறு நகரங்களில் கூட பல வீடுகளில் இன்று கேன் வாங்குகிறார்கள்.பாக்கெட்களில் அடைக்கப்பட்ட குடி நீர் பரபரப்பாக விற்பனையாகிறது.இவற்றில் பெருமளவு தரமற்றவை என்றும் கண்டறிந்து அழித்துக்கொண்டிருக்கிறார்கள்.

                                   சுமார் எண்பது சதவீத நோய்கள் குடிநீரால் பரவுகின்றன.முக்கியமானவை வயிற்றுப்போக்கு,டைபாய்டு,ஒருவகை மஞ்சள் காமலை போன்றவை.உலகில் அதிக குழந்தைகள் வயிற்றுப்போக்கால் உயிரிழக்கின்றன.எப்போதும் கொதிக்க வைத்த நீரைத்தான் பயன்படுத்துகிறோம்.ஆனால் என் மகனுக்கு டைபாய்டு வந்துவிட்ட்து என்று ஒருவர் சொன்னார்.இதற்கெல்லாம் வெளியில் சாப்பிடும் பழரசங்கள்,ஜஸ்கிரீம்,நீர் கலக்கப்பட்ட சட்னி போன்ற உணவு வகைகள் காரணமாக இருக்கலாம்.

                                  தர்மபுரி போன்ற சில மாவட்டங்கள் ஃப்ளூரைடு கலந்த நீரால் பாதிக்கப்பட்டிருக்கிறது.பற்கள் மஞ்சளாக இருக்கும்.எலும்பையும் பல்லையும் பாதிக்கும் இப்பிரச்சினைக்கு ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்ட்த்தை நம்பி இருக்கிறார்கள்.எப்போதோ வந்திருக்க வேண்டியது,பொக்ரான் அணுகுண்டு வெடிப்பால் தாமதமாகிவிட்ட்து.நிதியுதவி அளிப்பதை ஜப்பான் அப்போது ரத்து செய்து விட்ட்து.

                                  தேநீர்க்கடைகளில் தூசு விழுந்த நீரையும் சாதாரணமாக குடிப்பவர்களை நீங்கள் பார்க்கலாம்.அவர்கள் அதிக உடல் உழைப்பு கொண்டவர்கள்.நோய் எதிர்ப்பு ஆற்றலும் அதிகம் இருக்கும்.ஆனாலும் இது அபாயமான பழக்கம்தான்.விழிப்புணர்வு இல்லாத நிலையே காரணம்.
-

Thursday, April 28, 2011

சட்னி,சாம்பார் சாப்பிடுவீங்களா? இதப்படிங்க!


                               நண்பர் ஒருவர் சுகாதாரம் பேணுவதில் வல்லவர்.எப்போதும் கொதித்து ஆறிய நீர் மட்டுமே பருகுவார்.அதிகம் தண்ணீர் குடிப்பது நல்லது என்று பல சஞ்சிகைகளில் படித்த்தன் விளைவு அதை கடைப் பிடிக்க ஆரம்பித்துவிட்டார்.அநேகமாக மருத்துவம் தொடர்பான எல்லா புத்தகங்களும் அவரிடம் இருக்கும்.

                               அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டி வந்து விட்ட்தால் அவர் வீட்டிலிருந்து எடுத்துவரும் நீர் போதவில்லை.அலுவலகத்தில் குடிநீர் தயாரிக்கும் எந்திரம் ஒன்றை நிறுவ முடிவு செய்தார்.பணியாளர்கள் அனைவரிடமும் பணம் வசூல் செய்ய ஆரம்பித்துவிட்டார்.சிலர் முனக ஆரம்பித்தார்கள்.

                               சுத்தமான குடிநீர் பற்றிய அவரது பேச்சை கேட்டு யாரும் மறுக்கவில்லை.விடமாட்டான் என்று நினைத்தார்களோ என்னவோ! அலுவலகத்தில் சுத்தமான குடிநீர் தயார்.சுடுநீரும்,குளிர் நீரும் எல்லாம் தயார்.கொஞ்ச நாள் கழித்து திடீரென்று நான்கு நாள் விடுப்பு என்று சொன்னார்கள்.உடல்நலம் சரியில்லையாம்.அவருக்கு சர்க்கரை,ரத்தக்கொதிப்பு போன்ற நோய்கள் எல்லாம் இல்லை.

                               சில தின்ங்கள் கழித்து அவரை சந்தித்தேன்.உடல் வற்றிப்போய் விட்ட்து போல் தெரிந்த்து.ரொம்ப சோர்வாக இருந்தார்.சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.இட்லி,சட்னி,சாம்பார்.டைபாய்டு வந்து விட்ட்து.கஷ்டப்பட்டுவிட்டேன்.எவ்வளவு சுத்தமாக இருந்தேன்.விதியை யாரும் ஒன்றும் செய்ய முடியாது!என்றார்.

                               டிபன் எங்கே வாங்கினீர்கள் என்று கேட்டேன்? வரும் வழியில் ஒரு மெஸ்ஸில்தான்.அங்கே அதிகம் காரம் போடமாட்டார்கள்.நன்றாகவும் இருக்கும்!காலையில் வீட்டில் சாப்பிட நேரம் இருப்பதில்லை.எப்போதாவது சாப்பிட்டுப்பாருங்கள்.ஏன் கேட்கிறீர்கள்?என்றார்.நீங்கள் சாப்பிடும் சட்னியில் தண்ணீர் கலந்திருக்கிறார்களே அது கொதிக்கவைக்கப்பட்ட நீரா?அவருக்கு விஷயம் புரிந்துபோய்விட்ட்து.

                                                                               நண்பர்களைப் போன்றே பலரைப் பார்த்திருக்கிறேன்.சாதாரண ஹோட்டல்களில் சாப்பிடும்போது கூட வீட்டிலிருந்து எடுத்துவந்த நீரை பக்கத்தில் வைத்திருப்பார்கள்.அல்லது பாட்டில் ஒன்றை வாங்குவார்கள்.அதுவும் தரமான பிராண்ட்.ஆனால் சட்னியை பிசைந்து உள்ளே தள்ளிக்கொண்டிருப்பார்கள்.

                               சட்னி மட்டுமல்ல பழரசம் போன்றவையும் இப்படித்தான்.ஆப்பிள்,ஆரஞ்சு,மாதுளை ஜூஸ் எல்லாம் உடலுக்கு நல்லதுதான்.ஆனால் அவற்றில் கலக்கும் தண்ணீர் உடலுக்கு நன்மை பயக்கும் என்று சொல்ல முடியாது.இருபது லிட்டர் கேன்கள் தான் இப்போது எங்கும் பரவலாக உள்ளன.அவற்றில் பெரும்பாலானவை தரமற்றவை என்று செய்திகள் வருகின்றன.

                                வளரும் நாடுகளில் எண்பது சதவீத மரணங்கள் சுகாதாரமற்ற குடிநீரால் ஏற்படுகின்றன என்கிறது உலக சுகாதார நிறுவன அறிக்கை.குழந்தைகள் உயிரிழப்பிற்கு வயிற்றுப்போக்கே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.டைபாய்டு,வயிற்றுப்போக்கு,குறிப்பிட்ட வகை மஞ்சள் காமாலை,வாந்திபேதி,அமீபா தொற்று போன்றவை முக்கியமான நீர்வழி பரவும் நோய்கள்.

                                குடிநீரில் கலந்திருக்கும் வேதிப்பொருட்கள் இன்னொரு பிரச்சினை.நைட்ரேட்கள்,ஆர்சனிக் போன்ற பல்வேறு வேதிப்பொருட்களும் புற்றுநோயை தூண்டும் தன்மை கொண்டவை.சுத்தமான நீர் என்பது கனவாகிவிட்ட சூழலில் வீட்டில் தயாரிக்கப்படுவதே சிறந்த்து.தவிர்க்கமுடியாமல் வெளியில் சாப்பிட நேரும்போது கொதிக்க வைக்கப்பட்ட உணவுகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

-