Thursday, November 22, 2012

பெண்ணுக்கு உண்மையில் சாதி உண்டா?

கலப்பு மணங்களில் சரியான புள்ளி விபரம் தெரியவில்லை.எந்த வகுப்பைச் சார்ந்த பெண்கள் அதிகம் கலப்பு மணம் புரிந்திருக்கிறார்கள் என்பது கவனத்தில் கொள்ளவேண்டியது.நான் பார்த்த பெரும்பாலான திருமணங்களில் பெண்கள் முன்னேறிய வகுப்பைச் சார்ந்தவர்களாக இருந்தார்கள்.அவர்கள் தைரியமாகவே முடிவெடுத்தார்கள்.ஆனால் உணர்ச்சிவசப்பட்டு எடுக்கப்படும் முடிவுதான்.

பெண்  சாதியை ஒரு விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை.சாதி  தந்தையை சார்ந்து வருகிறது.ஆணுடன் தொடர்பு கொண்ட அமைப்பாக இருக்கிறது.அவனுக்கு பெருமையைத்தருகிறது.கௌரவத்திற்காக பெயருக்கு பின்னால் சேர்த்துக்கொண்டார்கள்.பெண்ணுக்கு சாதி அமைப்பு வாழ்க்கை முறையில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.பெண் ஒடுக்கப்பட்ட சாதியிலும் மிக கீழான நிலையில் இருக்கிறாள்.இங்கே எல்லாவற்றிலும் தாழ்ந்த சாதி பெண் ஜாதிதான் .

குழந்தையிலிருந்தே துவங்கி விடுகிறது.எந்த வீட்டிலும் ஆண் குழந்தைக்கு கிடைக்கும் மரியாதை ஒரு பெண்ணுக்கு கிடைப்பதே இல்லை.பெரும்பாலான வீடுகளில் பெற்றோருக்கு மனக்குறையையும் சுமையையும் தரும் பொருளாகவே பெண் பார்க்கப்படுகிறாள்.கருவில் சிதைக்க சட்டத்திற்கு அப்பாற்பட்டு முயற்சி  செய்யப்படுகிறது.தப்பிப் பிறந்தால் பிறந்தவுடன் வெறுக்கப்படுகிறாள்.

வரதட்சணை சேர்க்கவேண்டும்.அதற்காக கூடுதலாக உழைக்கவேண்டும்.பெற்றோருக்குமனதில் வெறுப்பு ஏற்பட்டு சொல்லிலும் செயலிலும் வெளியே வருகிறது.கல்யாணம் செய்து கொடுத்தாலும் கஷ்டம்தான்.கணவன் அமையாவிட்டால் அடிக்கடி பிறந்த வீட்டுக்கு ஓடிவரவேண்டியிருக்கிறது.பெற்றோர் பெண்குழந்தையை சுமையாக நினைக்கும்போது அவர்களது செயல்களிலும் எதிரொலிக்கிறது.பெற்றோர் என்று சொல்லிவிட்டேன்.உண்மையில் தந்தையை மட்டுமே சொல்லவேண்டும்.

பேருந்து நிலையத்தில் உள்ள செருப்பு கடை ஒன்றில் அமர்ந்திருந்தேன்.புதிதாக திருமணம் ஆன மகளையும் மருமகனையும் அழைத்துக்கொண்டு ஒரு தாய் வந்தார்."எவ்வளவு ஆனாலும் பரவாயில்லை.உனக்கு பிடித்ததை எடுத்துக் கொள்ளுங்கள்" என்று மருமகனிடம் சொல்கிறார்.சிறிய பையிலிருந்து பணத்தை எடுக்கிறார்.பெரும்பாலானவை எட்டாக மடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள்.கடைக்காரர் கேட்டார்," எத்தனை வருஷமா வருஷமா சேர்த்து வச்சிருந்தீங்க?"" என்ன பண்றது பொண்ண பார்க்கணுமே?" என்று  பதில் வருகிறது.இதெல்லாம் ஆணுக்கு தொடர்பில்லாத விஷயங்கள்.

பெண்கள் என் அழுகாச்சி தொலைக் காட்சித் தொடர்களை அப்படி உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்? நகைச்சுவை காட்சிகளை பார்த்து சந்தோஷமாக சிரிக்கலாமே? நாம் மனக்கஷ்டத்தில் இருக்கும்போது சோகப்பாடல்களை விரும்புகிறோம் இல்லையா?.உள்ளே துக்கம்தான் பொங்கிக் கொண்டிருக்கிறது.ஆண்களைவிட பெண்கள் அதிகம் கோயிலுக்குப் போவதையும் கவனிக்கவேண்டும்.கஷ்டத்தைக் கேட்க யாரும் இல்லாமல் இருப்பதும் ஒரு காரணம்.

உலகில் ஏராளமான உயிர்கள் இருக்கின்றன.கொசு,ஈ ,நாய்,பூனை எல்லாமும் சந்தோஷமாகத்தான்  இருக்கின்றன.ஆனால் பல இடங்களில்  பெண்ணுக்கு மட்டும் அப்படி இல்லை.தனது பயன்பாட்டுக்காக மட்டுமே ஒரு பெண் கவனிக்கப்படுகிறாள்.இருப்பதிலே
யே மிகவும் ஒடுக்கப்பட்ட சாதி பெண்சாதி.நீங்கள் சொல்லிக்கொண்டிருக்கும்  சாதிஎல்லாம் பெண்ணுக்கு  இல்லை.
-

Wednesday, October 24, 2012

தம்பதிகள் நேசிக்கப்படவேண்டுமா? மதிக்கப்படவேண்டுமா?


குறிப்பிட்ட வார்த்தைகளை திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன்.நம்மை மதிக்கவேண்டுமே?’’ என்ற சொற்களை யாராவது சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.தம்பதிகளில் யாராவது ஒருவர்தான் கவலையுடன் சொன்னார்கள்.தெரிந்த நண்பர் ஒருவரை வழியில் சந்தித்தேன்.தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.என்னுடைய மனைவிக்கு அரசு வேலை கிடைத்துவிடும்,எனக்குத்தான் பிரச்சினை! என்னை மதிக்கவேண்டுமே?என்றார்.இன்னொருவர் பெண்.திட்டப்பணி ஒன்றில் அவருக்கு பணி.வேலை நீடித்திருக்குமா என்ற கவலையில் இருந்தார்.என் கணவர் என்னை மதிக்கவேண்டுமே?என்றார்.

                                கணவனும் மனைவியும் இத்தகைய எண்ணம் கொண்டிருப்பதுதான் நம்முடைய குடும்பங்களின் பிரச்சினையா? “பிறந்த வீட்டின் பெருமையை கூடப்பிறந்தவனிடம் சொன்ன கதையாகஎனக்குத்தோன்றுகிறது.வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது திருத்தமாக உடை அணிகிறோம்.அழகு படுத்திக்கொள்கிறோம்.வீட்டுக்கு வந்து விட்டால் நமக்கு லுங்கி பனியன் போதும்.வெளியில் நாலுபேர் நம்மை மதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.வீட்டிலும் அதே எண்ணம் இருப்பது சிக்கலை கொண்டுவருகிறது.வீட்டிலுள்ளவர்களுக்கு நம்முடைய பலம்,பலவீனம் தெரியுமே? ஆனாலும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது.
                                 மரியாதை வேண்டும் என்றவுடன் மனம் அதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கும்.பொய் சொல்வதில் துவங்கி தன்னை உயர்த்திக்கொள்ள ஆயிரம் வழிகளைத் தேடுகிறது.யார் பெரியவர் என்பதற்கான சண்டைகள் ஆரம்பித்து விடுகிறது.யாராவது ஒருவர் சறுக்கும்போது,வேலை இழப்பு அல்லது வேலை கிடைத்தல் போன்ற நிகழ்வுகள் இன்னொருவர் மனதில் பாதிப்பை உருவாக்குகிறது.நமக்கு மரியாதை போய்விடுமே என்ற கலக்கம் தோன்றி இயல்பு நிலை கெடுகிறது.முடிவு என்னவாக இருக்கும் என்பது நமக்கு தெரிந்த கதை.
                                  மனதளவில் கணவனும் மனைவியும் நெருக்கமாக இல்லை என்பது தெளிவு.சங்கடமான நேரங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவு என்பது முக்கியமான விஷயம்.ஆனால் பல குடும்பங்களில் சாத்தியமில்லாமல் இருக்கிறது. நம்மை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தை சிதறடிக்கிறது.கணவனோ,மனைவியோ கொண்டுவரும் பணம் மட்டும் முக்கியமாகி கிடைக்காது என்றால் மரியாதை போய்விடுகிறது.மனைவி உளரீதியான ஆதரவுக்காக பிறந்த வீட்டை நம்பி இருக்கவேண்டிய நிலை.ஆணுக்கு இருக்கவே இருக்கிறது டாஸ்மாக்.
                                                                                       எப்போதும் இருவரும் கலக்கமாகவே இருக்கிறார்கள்.தன்னுடைய மதிப்பு சரிந்துவிடகூடாது என்பதில் அதிக கவனம் இருக்கிறது.மனைவி அதிகம் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டால் மனசு கெட்டுப்போகிறது.சிலர் வெளியே காட்டிக்கொள்ளாமல் உரிய மரியாதை கொடுத்து கடந்து விடுகிறார்கள்.ஆனால் உள்ளே புழுங்கிக் கொண்டிருக்கும்.கிராமத்தில் ஒரு பெரியவர் சொன்னது இது, திருமணம் செய்யும்போது கணவன் மனைவி இருவரில் ஒருவர் தகுதி நிலையில் தாழ்ந்து இருக்க வேண்டும்.
                                                                                           கூட்டுக்குடும்பங்கள் சிதைந்துவிட்ட இன்றைய சூழலில் அன்புக்கும் ஆதரவுக்கும் இடமே இல்லை.குடும்பம் பட்ட மரத்தின் கீழ் இருக்கிறது.மரியாதையை எதிர்பார்க்கும் இடம் பாதுகாப்பான இடமல்ல! கிடைக்காமல் போனால் வலி அதிகமாக இருக்கும்.மரியாதை கிடைப்பதற்காக தந்திரங்களை கைக்கொள்ள வேண்டி வரும்.புறச்சூழலில் ஏற்படும் மன காயங்களுக்கு மருந்திடும் இடமாக வீடு இருக்க வேண்டும்.ஆனால் பலர் மரியாதையை எதிர்பார்த்து தன்னை தயார்படுத்திக் கொள்வதிலேயே காலத்தை கட்த்தி விடுகிறார்கள்.இங்கே நேசிப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

-

Sunday, September 30, 2012

சோளம் –உணவும் ஊட்டச்சத்தும்


ஆனந்த விகடனில் ஆறாம்திணை படித்துக்கொண்டிருந்தேன்.சோளம் பற்றி படித்தவுடன் திடீரென்று நான் சிறுவனாகி விட்டேன்.சோளக்காட்டுக்கு பொம்மையை செய்து கொண்டிருக்கிறோம்.காய்ந்த புற்களை மனித உருவம் போல செய்து சட்டையையும்,முழுக்கால் சட்டையையும் அணிவிக்கிறோம்.காக்கை,குருவியெல்லாம் மனிதன் நிற்பதாக கருதி சோளம் தின்ன உள்ளே வராது.பறவைகளிலும் சில புத்திசாலிகள் இருக்கத்தானே செய்யும்? பொம்மை என்று தெரிந்து கொண்டு உள்ளே நுழைந்து விடும்.மண்,கல் போன்றவற்றை வாரி இறைத்து துரத்தவேண்டும்.இந்த வேலையைச்செய்தால் சோளம் காய்ச்சி தருவதாக அம்மாவோ அப்பாவோ சொல்வார்கள்.

                      பால் ஏறிய பின்பு பச்சை சோளத்தை காயவைத்து உதிர்ப்பார்கள்.வெல்லமும் ஏலக்காயும் சேர்த்து காய்ச்சுவார்கள்.எப்போது வெந்துமுடியும் என்று மனம் தவிக்கும்.இருப்பதிலே கம்பீரமாக உயரமாக நிற்பது சோளப்பயிர்தான்.ஐப்பசி மாத அடைமழைக்குப் பிறகு அதிகமான வளர்ச்சி இருக்கும்.அதிக எரு போட்ட வயலாக இருந்தால் பத்தடி உயரத்தைத் தொடும்.ஆட்கள் தனியாக உள்ளே போக அஞ்சுவார்கள்.சரியாக வளராத சோளப்பயிர் கால்நடைகளுக்கு நல்ல தீவனம்.சோளத்தை அறுத்து மாட்டை பூட்டி மிதிக்கவிடுவார்கள்.களத்தில் வேலை செய்பவர்களுக்கு உடலெங்கும் அரிப்பெடுத்துவிடும்.இரவு குளிக்காமல் தூங்கப்போக முடியாது.
                       கிராமத்தில் மளிகை கடை வைத்திருந்தோம்.உடனே அளந்து போடுகிறமாதிரி கைக்கெட்டும் தூரத்தில் கேழ்வரகும் சோளமும் இருக்கும்.அதிகம் விற்பனையாவதும் இதுதான்.இவையிரண்டும் ஏழைகளின் முக்கிய உணவான கூழில் இருக்கும்.பெரும்பாலும் கேழ்வரகுக் கூழ் என்பது சோளமும் சேர்ந்த உணவுதான்.மாலையில் சோளத்தை உரலில் இடித்து சட்டியில் நொதிக்க வைப்பார்கள்.காலையில் கேழ்வரகு மாவுடன் சேர்த்துக்காய்ச்சினால் கூழ் தயாராகி விடும்.இன்றைய டீ,காபிக்கு பதிலாக இதைத்தான் குடித்து வந்தார்கள்.தண்ணீர் ஊற்றி கரைத்து குடிப்பார்கள்.மோரில் கலக்கியும் குடிப்பதுண்டு.கெட்டியான கூழுடன் குழம்பு சேர்த்து உண்பார்கள்.கீரை,சுண்டைக்காய் குழம்புகள் என்றால் கொஞ்சம் அதிகமாக உள்ளே போகும்.

                                 உடனடியாக உணவு தயார் செய்யவேண்டிய நிலை வருவதுண்டு.சோள மாவோ கேழ்வரகு மாவோ இருக்கும்.வெங்காயத்தையும்,மிளகாயையும் அரிந்து கொட்டி நீர் ஊற்றி பிசைந்து தோசைக்கல்லில் போட்டால் சுவையான உணவு தயார்.இட்லி தோசைக்கு அரிசி,உளுத்தம்பருப்புடன் சோளத்தையும் உடன் சேர்த்துக்கொள்வார்கள்.கேழ்வரகு மாவு இல்லாதபோது சோளமாவு மட்டுமே கொண்டு களி தயாரிப்பார்கள்.கீரைக்குழம்பு சேர்த்தால் சரிவிகித உணவு கிடைத்து விடாதா?
                                   சோளத்தில் கார்போஹைட்ரேட்,புரதம்,கொழுப்புடன்,நார்ச்சத்து போன்றவற்றுடன் கால்சியம்,இரும்பு,உயிர்ச்சத்து பி (தயமின்,ரிஃபோபிளேவின்,நயாசின்) போன்றவை அடங்கியிருக்கிறது.இந்த ஆய்வெல்லாம் அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து சொன்னதை நாம் குறிப்பிட்டுக்கொண்டிருக்கிறோம்.நொதிக்க வைத்த சோளத்திலும் இதே சத்துக்கள்தான் இருக்குமா? லேசாக புளிக்கும் கூழில் வேறென்ன சத்துக்கள் தோன்றியிருக்கும்.இப்படித்தயாரித்த கூழை மட்டுமே தினமும் குடித்து வளர்ந்தவர்களும் ஆரோக்கியமாகவே இருந்தார்கள்.

                                    நம்முடைய பாரம்பர்ய உணவுகளில் அதன் தயாரிப்பு முறைகளுக்குப் பிறகு என்னென்ன சத்துக்கள் இருக்கின்றன? யாராவது ஆய்வு செய்து சொன்னால் அதன் முக்கியத்துவம் கூடலாம்.மலிவான விலையில் ஆரோக்கியத்தை தரும் உணவுகளை இழந்து விட்டு அதிக விலை கொடுத்து குப்பையை விழுங்கிக் கொண்டிருக்கிறோம்.ஒரு எலுமிச்சை பழரசம் தரும் குளிர்ச்சியும்,உடல்நலமும் கோக்,பெப்ஸியால் தரமுடியுமா? அப்புறம் ஏன் இந்த நிலை?
                                   விலை மலிவானதெல்லாம் தரமற்றது என்று ஒரு மனப்போக்கு இருந்து வருகிறது.விவசாய கூலிக்கு ஆள் கிடைப்பது கஷ்டமாக இருக்கிறது.எல்லோரும் படித்துவிட்டால் யார் விவசாயம் செய்வது? என்று ஒருவர் கேட்டார்.படித்துவிட்டால் விவசாயம் செய்யக்கூடாது என்று நாமே உருவாக்கிக் கொண்டோம்.தானியங்கள் விளைவித்து வீடு கொண்டுவர போதுமான கூலி ஆட்கள் தேவை.அதனால் விளைவிப்பதும் குறைந்து வருகிறது.நாம் வேர்களை இழந்து கொண்டிருக்கிறோம்.அதன் விளைவுதான் மருந்துக்கடைகளில் அதிகரிக்கும் மக்கள் கூட்டம்.
-

Saturday, July 14, 2012

லஞ்சமா? மேல் வருமானமா?

லஞ்சம் குற்றச்செயலாகவோ,தண்டனை தரத்தக்கதாகவோ  சமூகம் கருதுவதாக  தெரியவில்லை.உறவினரோ ,நண்பர்களோ அரசு வேலையில் இருந்தால் " மேல் வருமானம் ஏதாவது கிடைக்கிறதா?'' என்றுதான் கேட்கிறார்கள்.ஆனால் மனசுக்குள் என்னநினைப்பார்களோ?.ஒருவரது வருமானத்தை மதிப்பிடுவதில் சுற்றி உள்ள அத்தனை பேருக்கும் அக்கறை.சம்பளத்தை கேட்ட பிறகு மேல்வருமானமும் கேட்பார்கள்.பணம் மதிப்பைக் கொண்டு வருகிறது.எப்படி சம்பாதித்தால்  என்ன ?


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் -2  நேர்முகத்தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி."ஏன் எல்லோரும் சார் பதிவாளர் பணிக்கே முன்னுரிமை தருகிறார்கள்? ". ரொம்பவும் சிந்திக்கவும் சங்கடப்படவும் வைத்த கேள்வி அது.குரூப் -2  தேர்வில் நிறைய பதவிகள் உண்டு.அவற்றில் சார் பதிவாளர் பதவியும் இருக்கிறது.நகராட்சி ஆணையாளர் பணிக்கு சார் பதிவாளரை விட சம்பளம் அதிகம்.ஆனால் பெரும்பான்மையாக (அப்படி வைத்துக்கொள்வோம்) சார் பதிவாளர் பணிக்கு முன்னுரிமை தந்து விண்ணப்பிப்பார்கள்.இப்போது உங்களுக்கு காரணம் தெளிவாகவே  புரிந்திருக்கும்.எனக்கு ஆச்சர்யமாக இல்லை.


தேர்வாணைய தேர்வுகளுக்கு தயாரிப்பவர்களை எனக்குத்தெரியும்.கடையில் விற்கும் ஏதோவொரு புத்தகத்தை வாங்கி படித்துவிட்டு தேர்வுக்குப்போவது ஒரு வகை.நூலகம் அல்லது பயிற்சிக்கு சென்று தயாரிப்பவர்கள் இன்னொரு வகை.இவர்களில் பலரை எனக்கு தெரியும்.கிராமத்திலிருந்து பத்து மணிக்கெல்லாம் வந்து விடுவார்கள்.வீடு திரும்ப இரவாகும்.தேடித்தேடி படிப்பார்கள்.எந்த நேரமும் படிப்பைத் தவிர வேறு சிந்தனை இல்லை.

அரசாங்க உத்தியோகம் என்றால் பிரச்சினை இல்லை.வாழ்க்கையை நிலைப்படுத்திக் கொள்ளலாம்.வேலை செய்யாவிட்டாலும்,தூங்கி விட்டு போனால்கூட சம்பளம் கொடுப்பார்கள்.யாரும் அசைக்க முடியாது.கேள்வி கேட்க முடியாது.அவர்களுக்கு அரசு வேலை முக்கியமான கனவு.ஆனால் பெரும்பாலானவர்களிடம்  வேறொரு கனவும் இருக்கிறது என்பதை நான் அறிவேன்.அந்தக் கனவுதான் சார் பதிவாளர் பதவிக்கு முன்னுரிமை தரச்சொல்கிறது.சமூக அக்கறை உள்ளவர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கும்.

ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யப் போகிற அதிகாரிகள் இவர்கள்தான்.சில ஆண்டுகளில் உயர் அதிகாரிகளாகவும் நியமனம் பெறுவார்கள்.மனித நேயமற்ற சுயநல நடவடிக்கைகளால் இந்தியாவின் வளர்ச்சியை முடக்கும் செயல்களில் ஈடுபடுவார்கள்.பொருந்தாத உத்தரவுகளால் நீதிமன்றங்களின் பொன்னான நேரத்தை வீணடிப்பார்கள்.தேச விரோதம் தவிர வேறில்லை.இவர்களும் இந்தியக் குடிமக்கள்தான்.சிலர் ஏழைகளும் கூட! 

லஞ்சத்தை தூண்டுவது யார்? இந்திய ஆட்சிப்பணி முதல் இளநிலை உதவியாளர் வரை போட்டித்தேர்வு இருக்கிறது.கடுமையாக படிப்பார்கள்.நாட்டு நடப்பு அத்தனையும் தேடித்தேடி படிப்பார்கள்.பணிக்கு வந்த பிறகு சுத்தமாக படிப்பை மறந்து விடுவார்கள்.நாளிதழ் படிக்கக் கூட நேரமில்லை என்பார்கள்.இந்தியாவில் படிப்பு வேலைக்காக மட்டும்தானே இருக்கிறது? துவக்கத்தில் பேசிய விஷயத்துக்கு வருவோம்.சமூகம் பணத்தை வைத்தே ஒருவனை மதிப்பிடுகிறது.அவன் லஞ்சம் வாங்கி அதிக பணம் வைத்திருந்தால் மரியாதை கிடைக்கும்.


அலுவலக சூழலில் லஞ்சம் வாங்காதவன் தனிமைப்படுத்தப்படுகிறான்.அவன் சமூகத்திற்கு எதிராக இருக்கிறான்.ஏளனம்,அவ மரியாதை அனைத்தையும் அனுபவிக்க வேண்டும்.அரசியல்வாதிகளின் பொல்லாப்புக்கு ஆளாகவேண்டும்.எப்போதும் மாற்றத்தை எதிர்நோக்க வேண்டும்.லஞ்சம் வாங்குவதை நியாயப்படுத்தி இவை பேசப்படவில்லை.பிரச்சினையின் வேரை புரிந்து கொண்டால் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்க முடியும்.கல்விமுறை,மக்களிடம் விழிப்புணர்வு ,மதிப்பீடுகளில் மாற்றம் போன்றவை கவனத்தில் கொள்ள வேண்டியவை.


நண்பர்களுக்கு ,
                                                                சில மாதங்கள் ஆகி விட்டது.சென்ற ஆண்டைப்போல இல்லாவிட்டாலும்  அவ்வப்போது பதிவிட  எண்ணி இருக்கிறேன்.விசாரித்த உறவுகளுக்கு நன்றி.
-

Wednesday, March 7, 2012

பெண்ணை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை?


பெண்ணை புரிந்து கொள்ளவே முடியாதாம்.பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.ஆணைப்போல பெண்ணும் ஒரு உயிர்.பிறகு ஏன் அதிகமான ஆண்களும் புரிந்துகொள்ள முடியாமல் திண்டாடுகிறார்கள்? திறமை குறைவாக இருப்பதாக கருதலாமா? அதே சமயம் பெண் எளிதில் ஆணை புரிந்து கொள்கிறார் என்றும் சொல்கிறார்கள்.அதுவும் உணமைதான்.அதிக வெளிவிவகாரங்களில் ஈடுபடாத அதிகம் படிக்காத பெண்ணும் கூட ஆணை “ உன்னைப்பற்றி எனக்கு தெரியாதா?என்று சாதாரணமாக சொல்லி விடுகிறார்.உலகில் உள்ள அத்தனை ஆண் பெண்ணுக்கும் இது பொருந்துமா? என்று யாரும் விவாதம் செய்ய வரவேண்டாம்.என்னால் பெண்ணை புரிந்துகொள்ள முடியவில்லை என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்தும்.
                                குறிப்பிட்ட ஒன்றை புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் என்ன பொருள்? நாம் சரியாக கவனிக்கவில்லை.அதன் இயல்புகளை புரிந்துகொள்ள வில்லை.நாம் சிந்திக்கவில்லை.சுருக்கமாக சொன்னால் நாம் தவறாக அணுகியிருக்கிறோம்.பெண்ணைப் புரிந்துகொள்ள முடியாத நிலையும் இப்படித்தான்.அவரைப் பற்றி தவறான பார்வை நமக்கு இருக்கிறது.ஆமாம்.பெண்ணை உடலாக மட்டும் பார்க்கிறோம்.நமக்கு சந்தோஷம் அளிக்க படைக்கப்பட்ட பொருளாக,ஒரு இயந்திரமாக நாம் பெண்ணை பார்க்கிறோம்.நம்மைப்போலவே படைக்கப்பட்ட உயிரை சக மனித உயிராக  கருதுவதேயில்லை.ஆனால் உண்மை வேறாக இருக்கிறது.ஆணைப்போலவே பெண்ணும் சம தகுதிநிலையுடன் இருக்கிறார்.கோணல் பார்வைதான் பிரச்சினை.
                                பெண்ணை உடலாக மட்டும் கருதும் கோணல் பார்வை காலந்தோறும் இருந்துவருகிறது.சினிமா,விளம்பரம் எல்லாம்  பெண் என்றால் உடல்தான் என்று உறுதியாக நம்புகிறது.சமூகத்திற்கு பரப்புகிறது.இங்கே உடல் பாகங்களை படம் பிடித்துக்காட்டுவதே ஆகச் சிறந்த கலை.செக்ஸ்பாம்,செக்ஸ்குயின்  என்கிறார்கள்.ஆணுக்கு அப்படி பெயரிடுவதில்லை.உடலை மட்டுமே பார்க்கும் ஆண்களுக்கு ஏற்ப பெண்ணும் நடந்து கொள்ள வேண்டியிருக்கிறது.பெண்ணுக்கு திறமையோ,அறிவோ இருந்தால் அதற்கு பெரிய மரியாதை கிடைப்பதில்லை.எத்தனை படித்த போதிலும் பெண் மட்டும்தான்.சிரித்துப்பேசினாலே கற்பனையை ஆண் வளர்த்துக் கொள்ள ஆரம்பிக்கிறான்.பிறகு திட்ட ஆரம்பிக்கிறான்.
                                 பெண் ஆணை எளிதில் புரிந்து கொள்கிறார்.ஆண் எதற்காக தன்னிடம் வலிய வந்து பேசுகிறான்,உதவி செய்வது போல நடிக்கிறான்,அவனுடைய நோக்கம் என்ன என்பது பெண்ணுக்கு நன்றாக தெரிகிறது.என்ன பெரிய நோக்கம்? அங்கீகாரத்திற்காக ஏங்குபவனையும்,நல்லவனையும் தெரிந்து கொள்ள முடிகிறது.ஆக மொத்தம் இரண்டு வகைதான் இருக்க முடியும். அவருக்கு எந்த சிக்கலும் இல்லை.உள்ளுக்குள் ஒரு ஆணை,அவர் கணவனாக இருந்தாலும் மதிக்கும் பெண்கள் குறைவு.அது யோக்கியதையை பொருத்த விஷயம்.பெண் ஆணை உயிராக பார்க்கிறார்.ஆண் உடலை பார்த்துக்கொண்டிருக்கும்போது பெண் அவனுடைய முகத்தை கவனிக்கிறார்.

                                                   மகளிர் தின நல் வாழ்த்துக்கள்.
-

Friday, February 17, 2012

ஆசிரியை கொலை- வளரிளம் பருவத்து பயங்கரம்.கொலை செய்ய முடியாதவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக எங்கேயோ படித்த நினைவு.தொடர்ந்து அதிர்ச்சி  செய்திகள் நாளிதழ்களை நிரப்பிக்கொண்டிருக்கின்றன.ஆசிரியை கொலையின் அதிர்ச்சி இன்னமும் இருக்கிறது.ஆனால் கொலை அளவுக்கு  தற்கொலைகள் அதிகம் கவனம் பெறவில்லை. இன்றும் ஒரு மாணவி பெற்றோர் திட்டியதால் தற்கொலை செய்து கொண்டார்.இவர்களெல்லாம் வளரிளம் பருவத்தினர் (ADOLESCENTS) .
                               வளரிளம் பருவத்திற்கென்று தனிப்பட்ட இயல்புகள் உண்டு.நாம் டீனேஜ் என்று பதிமூன்று வயதை கணக்கிட்டாலும் உலக சுகாதார நிறுவனம் பத்து வயது முதல் துவங்குவதாக சொல்கிறது.பருவம் அடையும் வயது குறைந்து கொண்டிருக்கிறது.மிக குறைந்த வயதிலேயே மனக்குழப்பத்தையும் சந்திக்க வேண்டிய நிலை.வளர்ச்சி மிக வேகமாக இருக்கும் வயது.உடல் வேகமாக மாற்றத்தை சந்திக்கிறது.பால் உறுப்புகள் வளர்ச்சியடைகின்றன.பெற்றோரிடம் உள்ள உறவில் விரிசல் விழுந்து புதிய உறவுகளை தேட தொடங்குகிறார்கள்.அடிக்கடி மாறும் மனநிலை,தன்னை முக்கியமானவனாக தனித்து காட்டும் ஆர்வம் அதிகமாக இருக்கிறது.எதிர் பாலினரை கவரவும்,தன்னை கவனிக்கச் செய்யவும் திட்டமிடுகிறார்கள்.பகல் கனவும்,குழப்பமும் சகஜம்.

                                சரி.இதெல்லாம் இன்றைய பெற்றோர்கள் கடந்துதானே வந்திருப்பார்கள்? அவர்களுக்குத்தெரியாதா? துரதிருஷ்டவசமாக அவர்கள் மறந்துவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.தங்கள் குழந்தை ஆசையை நிறைவேற்றி வைக்கும் எந்திரம் அன்றி வேறில்லை.நண்பர் சொன்னார்,என் பையன் இந்த முறையும் ஃபர்ஸ்ட் ரேங்க்தான்,ஆனால் நான்கு மார்க் குறைந்து விட்ட்து”.அவருடைய பையன் படிப்பது யூ.கே.ஜி.இதுதான் பிரச்சினை.நம்முடைய சமூகத்தில் குழந்தைகள் அந்த தகுதியை இழந்துவிட்ட நிலை புரியும்.குழந்தைகள் என்றில்லை,கணவன்,மனைவி,நண்பன்,அண்ணன்,தம்பி,பெற்றோர் என்று எல்லா உறவுகளும் தனது ஆசைக்கு உதவும் பொருட்களாக மாறி வருகின்றது.
                                குறிப்பிட்ட வயதுகளில் அதிகரித்து வரும் தற்கொலை,வன்முறை போக்கு போன்றவை தனிப்பட்ட பிரச்சினை அல்ல! சமூக பிரச்சினை எப்போதும் மற்ற பிரச்சினைகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருக்கிறது.பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பிள்ளையை தந்தை அடிக்க ஓடுகிறார்.பையனின் தாத்தா சத்தமிட்டு தடுக்கிறார்.அவன் குழந்தடா! படிப்பு வரலேன்னா ஏதாவது கடை வச்சி பொழைக்கிறான்துரதிருஷ்டவசமாக இத்தகைய தாத்தாக்கள் முதியோர் இல்லங்களில் இருக்கிறார்கள்.இல்லையெனில் கிராமத்தில் பல மாதங்கள் கழித்து ஏதாவது பண்டிகை வந்தால் பேரக்குழந்தைகளை பார்க்க முடியும்.

                                  இருபது ஆண்டுகளுக்கு முன்புகூட வீட்டுக்கு இத்தனை பொருட்கள் தேவைப்பட்டிருக்காது.மூன்று வேளை சாப்பாட்டுக்கு மேல் கொஞ்சம் சம்பாதித்தால் போதும்.இன்று செல்போனுக்கு மட்டும் குறிப்பிட்ட தொகையை மாதம்தோறும் ஒதுக்க வேண்டும்.புது வசதிகளுடன் மொபைல் வந்தால் வாங்க வேண்டும்.கடனாக இருந்தாலும் பரவாயில்லை.நம்மையும் நாலு பேர் அப்போதுதானே மதிப்பார்கள்.ஏராளமான பணம் தேவைப்படுகிறது.விலைவாசி ஏறிக்கொண்டே போகிறது.மகன் நல்ல வேலைக்கு போய் சம்பாதித்தால்தான் சமாளிக்க முடியும்.நாள் முழுக்க பெற்றோர்களை வாட்டும் பிரச்சினை இது.இன்றைய பிரச்சினைகளுக்கு நுகர்வு கலாச்சாரமே முக்கிய காரணமாக சொல்ல முடியும்.
                                                                             இப்போது இருக்கும் கல்வி முறைதான் தொடர்ந்து இருந்து வருகிறது.ஆனால் இப்போதுதான் இத்தகைய பிரச்சினைகள் அதிகமாக இருக்கின்றன.நம்மிடையே பத்தாண்டுகளில் ஏற்பட்டுவிட்ட மாற்றமே காரணம்.எனக்கு தெரிந்து ஒரு தலைமையாசிரியர் பனிரெண்டாம் வகுப்பில் மாணவர்களின் மோசமான நடவடிக்கைக்காக பெற்றோரை அழைத்து கண்டித்தார்.ஆனால் வீட்டில் அவர்களுக்கு செல்வாக்கு போய்விடவில்லை.சரியாக படிக்காத விஷயம் தெரிய வந்த பிறகு பெற்றோரின் நடவடிக்கையில் மாற்றம்.பெற்றோர்,மகன் உறவு மோசமாகி சிறுவன் கிட்ட்த்தட்ட அநாதையாக்கப் படுகிறான்.கொண்டு வந்தால் தந்தை,கொண்டு வராவிட்டாலும் தாய்என்பார்கள்.இப்போது படித்து தங்களது கனவுகளை நிறைவேற்றாவிட்டால் அவன் மகனே அல்ல!

                                  பெற்றோர்களுக்கு சமூகத்தின் அழுத்தம் இருக்கிறது.தங்கள் மகனின் நிலை அவர்களுக்கு அந்தஸ்தை கொடுக்கிறது.கற்றல் திறன் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடும் என்றாலும் அதைப் பற்றி பெற்றோருக்கோ கல்வி நிறுவனத்திற்கோ எந்த சிந்தனையும் இல்லை.ஏன் படிப்பு வரவில்லை என்ற காரணத்தை ஆராயவில்லை.அவன் ஒரு எந்திரம் மட்டுமே! இங்கே குழந்தைகளுக்கான கலை இல்லை.அவர்களுக்கான திரைப்படம் இல்லை.பெரியவர்களுக்கான சினிமாவை பார்க்கிறான்.சினிமா,தொலைக்காட்சி,விளம்பரம் போன்றவை அவனை அதிகமாக கதாநாயக தோற்றத்தை மனதில் நிறுத்துகின்றன.அவன் சாதாரணமான ஆள் இல்லை.

                                 இன்றைய வளரிளம் பருவத்தினருக்கு தங்களைப் பற்றிய பிம்பம் மிக உயரத்தில் இருக்கிறது.முன்பே குறிப்பிட்ட்து போல பகல் கனவு தோன்றும் வயது.அவர்களை திட்டும்போது,தண்டனை தரும்போது அந்த யதார்த்தம் மனதில் பெரும் உணர்ச்சிப் போராட்ட்த்தை தருகிறது.தாய் திட்டியதால் மாணவி தற்கொலை என்று செய்தி வருகிறது.ஆனால் தற்கொலை என்பது அந்த நேரத்தில் எடுக்கப்படும் முடிவு அல்ல.மன அழுத்தம் காரணமாக திட்டமிடப்பட்டு செயலுக்கு வருகிறது.அதிக உயரத்தில் இருந்து கீழே விழும்போது வலியும் அதிகமாக இருக்கிறது.அந்த அலறல் சத்தம்தான் நாம் கேட்கும் அதிர்ச்சி செய்திகள்.
-

Monday, February 13, 2012

மெரினாவுக்கு பசங்கள கூட்டிக்கிட்டு போங்க சார்!                                பொங்கலுக்குப் பிறகு திரைப்படம் பார்க்கும் சூழ்நிலை.விருப்பமில்லாமல் அதுவும் இரவுக்காட்சி.பனிரெண்டு மணிக்கு முடியும்.படம் பார்த்து திரும்பும்போது சந்தோஷமாக உணர்ந்தேன்.காரணம் மெரினாவின் நகைச்சுவை மட்டுமல்ல! சென்னையில் மாணவன் கொலை செய்த விவகாரத்தில் பலரும் சினிமாவை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.அதில் உண்மை இருக்கிறது என்பது வேறு விஷயம்.தனிப்பதிவாக எழுத வேண்டிய விஷயமும் கூட! கொலை செய்வதை பெருமையாக காட்டும் சினிமா,குடித்துக்கொண்டே நாட்டுக்கு நல்லது சொல்லும் நாயகர்கள் இன்னும் இன்னும்.....

                                 மெரினாவில் சுண்டல் விற்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்யாண குணங்களை சொல்கிறது மெரினா.கண்டெடுத்த நகையை உரியவர்களிடம் அடையாளம் கேட்டு ஒப்படைக்கும் சிறுவன்.இவனைத்தானே இன்றைய குழந்தைகள் பின்பற்ற வேண்டும்.அடுத்தவன் பணத்தை எப்போது சுருட்டலாம் என்று குழந்தைகளின் முன்னால் திட்டமிடும் சூழலில் இதெல்லாம் கற்பிக்கப்படவேண்டிய விஷயம்.மருத்துவ உதவிக்கு பணம் பெற்று வழங்குவது,தாத்தாவின் உடலை வாங்க போராடுவது,நண்பனுக்காக ஏங்குவது என்று தமிழ் சினிமா சிறுவர்களுக்கு கற்பிக்கும் நல்ல விஷயங்கள் அதிகம்.பிச்சை எடுக்க வேண்டாம் நான் காப்பாற்றுகிறேன் என்று பாண்டி சொல்கிறான்.

                                   முதியவர்களை தெருவில் விடும் பிள்ளைகள் அதிகரிக்கும் சூழலில் தாத்தா,பாட்டி மீது பேரக்குழந்தைகளுக்காவது பாசம் தோன்றும்.படம் முழுக்க அன்பும்,உதவும் குணமும் நெகிழ்ச்சியுமாக நகர்கிறது.நகைச்சுவையாகவும்தான்.பரிசு வழங்க தன்னை அழைக்க வேண்டுமென விரும்பும் தாத்தா.அந்த சூழலின் இயல்பான உளவியல்.சிறுவர்களுடன் தனக்குள்ள உறவில் நிச்சயம் அப்படியான எதிர்பார்ப்பு தோன்றவே செய்யும்.உயிருக்குயிரான தமிழ் சினிமா காதலை தாண்டி நிஜமான காதலை!? காட்டுகிறது படம்.நகைச்சுவைக்காக என்றாலும் பல காதல்கள் இப்படியும் ஆகிவிடுவதுண்டு.

                                 பாடல்கள் அவ்வளவாக எடுபடாமல் போனது பலத்தை குறைத்து மதிப்பிடச் செய்கிறது.ஆனால் ஆக்காட்டி ஆறுமுகம் பாடும் பழைய பாடல்கள் இந்தக்குறையை போக்குவதாக இருக்கிறது.பாண்டியை துவக்கத்தில் உதைக்கும் காட்சியும்,கல்லால் அடிக்கப்பட்டு ரத்தம் சிந்தும் காட்சியும் நெருடலை ஏற்படுத்துகிறது.தமிழ்சினிமா என்றால் ஏதாவது சண்டைக்காட்சி இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்கள் போல!ஆனால் விளைவுகள் வருந்தும் காட்சியை தோற்றுவிக்கிறது.வழக்கமான தமிழ்சினிமா போல இல்லாமல் நல்ல முயற்சி.இன்றைய சமூகத்திற்கு எத்தகைய குணங்கள் தேவை என்பதில் இயக்குநர் தெளிவாக இருக்கிறார்.இதற்காகவே பாண்டிராஜை தாராளமாக பாராட்டலாம்.
-

Thursday, February 9, 2012

கொலஸ்ட்ரால் உணவுகள் உஷார்!


நண்பர் ஒருவர் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்று சொன்னார்.’’நெஞ்சில் ஏதோ அழுத்துவது போலிருக்கிறது, நல்ல மருத்துவராக சொல்லுங்கள்.’’ நான் எனக்கு தெரிந்த மருத்துவர் பெயரைச் சொன்னேன்.ரத்தப் பரிசோதனை முடிவு கொலஸ்ட்ரால் அதிகம் இருப்பதை காட்டியது.இன்று இதய நோய்கள் அதிகரித்து வருகின்றன.இளம் வயதில் ஹார்ட் அட்டாக்,ஸ்ட்ரோக் என்பது சகஜம்.ஆனாலும் விழிப்புணர்வு குறைவாகவே இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.வெளியே அலைந்து திரியும் பணி காரணமாக அதிகமும் ஹோட்டல் சாப்பாடுகளை சார்ந்திருப்பவர் அவர்.அதிக கெட்ட கொலஸ்ட்ராலுக்கு காரணம் இந்த பழக்கம்தான் என்பதை மருத்துவர் விளக்கினார்.

                                                                            இரத்தப் பரிசோதனையில் கொலஸ்ட்ரால் அளவு அதிகம் இருப்பது இதயக்குழாய் அடைப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம்.அப்புறம் மாரடைப்பு,ஸ்ட்ரோக் போன்ற பாதிப்புகள் .சைவ உணவகம் ஒன்றில் பணியாற்றுபவரை கேட்டேன்.டால்டா எந்தெந்த உணவு வகைகளுக்கு பயன்படுத்துகிறீர்கள்? வெஜிடபிள் பிரியாணியிலும்,குருமாவிலும் கொஞ்சம் சேர்ப்போம் என்றார் அசைவ உணவுகள்,இனிப்புகள் போன்றவற்றிலும் பயன்படுத்தவே செய்கிறார்கள்.வனஸ்பதி சேர்க்கப்பட்ட உணவுகள் மீண்டும் மீண்டும் சாப்பிட்த்தூண்டும்.இன்று குழந்தைகள் பெரியவர்கள் என்று பலரும் இவ்வகை உணவுகளுக்கு  அடிமையாகி இருக்கிறார்கள்.சிறு வயதிலேயே இதய நோயை ஏற்படுத்துவதில் முக்கியபங்கு வனஸ்பதிக்கு உண்டு.

                                 வனஸ்பதி நல்ல கொலஸ்ட்ராலை குறைத்து கெட்ட கொலஸ்ட்ராலை அதிகப்படுத்தும்.இதில் உள்ள அதிக அளவான Trans fat முக்கிய காரணமாக இருக்கிறது.இவ்வகை கொழுப்புகள் அசைவ உணவுகள்,பால் பொருட்களிலும் சிறிதளவு உண்டு.கொலஸ்டரால் என்ற பிரச்சினை மட்டும் இல்லாமல் உடல் பருமன்,நீரிழிவு,புற்றுநோய் போன்றவற்றிற்கும் காரணமாக அமையலாம்.இவையன்றி நிறைவுற்ற கொழுப்பு அமிலங்களும் இதய நோயை வரவழைக்கின்றன.நெய்,வெண்ணெய்,அசைவ உணவுகள்,தேங்காய் எண்ணெய் போன்றவை இத்தகைய கொழுப்புகளுக்கு உதாரணங்கள்.இவற்றை குறைப்பது முக்கியமானது.

                                                                         வனஸ்பதி விலக்கப்படவேண்டியது என்பதில் கருத்து வேறுபாடு இல்லை.ஆனால் அசைவம்,பால் பொருட்களில் நல்ல கொழுப்பும் சேர்ந்தே இருக்கும்.கொலஸ்ட்ரால் இயல்பான மதிப்பைவிட அதிகம் உள்ளவர்கள் குறைக்கவேண்டும்.பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுப்பொருட்கள் வாங்கும்போது தகவல்களை குறித்திருப்பார்கள்.Trans fat  0 என்று இருக்கும். ஆனாலும் மிக குறைந்த அளவு இருக்கும்.Saturated fat அதிகம் இருக்கும் பொருட்கள்,ஹைட்ரஜனேற்றம் செய்யப்பட்டவை சேர்க்கப்பட்டிருப்பது போன்றவற்றை தவிர்க்கலாம்.மற்ற அசைவ உணவுகளோடு ஒப்பிடும்போது மீன் நல்ல கொழுப்பு அமிலங்களை கொண்டிருக்கிறது.கோழி இறைச்சி குறைந்த கொலஸ்ட்ராலை கொண்ட்து.

                                    மருத்துவத் துறையில் பணியாற்றும் ஒருவரை எனக்கு தெரியும்.கொலஸ்ட்ராலை குறைக்க எளிய வைத்தியம் ஒன்றை சொன்னார்.தனது அனுபவத்தில் குறைத்துக்காட்டியதாக அவருடைய நண்பர்களும் கூறினார்கள்.வெள்ளைப்பூண்டுதான் கொலஸ்ட்ராலை குறைக்கும் பக்க விளைவில்லாத மருந்து என்றார்.வெள்ளைப்பூண்டு தரமானதாக வாங்கி ஒரு முழுப்பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ள வேண்டும்.மோரில் கலந்து சாப்பிட்டு வந்தால் மிக விரைவிலேயே கொலஸ்ட்ரால் குறைந்து விடும் என்றார்.ஆபத்து எதுவும் இல்லை.விருப்பமுள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.
-