Wednesday, November 30, 2011

எய்ட்ஸ்-பாலியல் தொழிலாளி முதல் குடும்பத்துப் பெண் வரை.


கண்ணிவெடியைப்போலத்தான் ஆகிவிட்ட்து.தும்பை விட்டுவிட்டு வாலை பிடிப்பது என்று சொல்வார்கள்.கலாச்சாரத்தில் பெருமை கொள்ளும் இந்தியாவின் நிலை பல விஷயத்திற்கு பொருந்தும்.அதில் எய்ட்ஸ் முக்கியமானது.1986 ல் சென்னையில் ஆறு பாலியல் தொழிலாலார்களிடம் முதன்முதலாக எய்ட்ஸ் கண்டறியப்பட்ட்து.
                             நாம் யோசிக்க ஆரம்பித்த்து அதற்குப்பிறகுதான்.ஆனால் உலகம் 1981 ஆம் ஆண்டிலிருந்தே விழித்துக்கொண்ட்து.நம்முடைய கலாச்சாரத்திற்கு எய்ட்ஸ் அச்சுறுத்தலாக இருக்காது என்று பலரும் நினைத்தார்கள்.அப்புறம் உலகம் இந்தியாவை தெரிந்துகொள்ள அதிக காலம் தேவைப்படவில்லை.
                              இப்போது எச்.அய்.வி தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை லட்சங்களில் நிற்கிறது.ஆண்,பெண்,குழந்தைகள் என்று எல்லாமும் இதில் அடக்கம்.துவக்கத்தில் நகர்ப்புறத்திலும்,பாலியல் தொழிலாளர்களிடமும் அதிக பரவல் காணப்பட்ட்து.ஆனால் ஆண்டுகள் செல்ல செல்ல கிராமப்புறத்திலும்,குடும்ப பெண்களிடமும் தொற்றுக்கள் அதிகம் இருப்பது கண்டறியப்பட்ட்து.
                              எச்.அய்.வி. என்பது இந்த மாதிரி ஆட்களிடம்தான் இருக்கும் என்று சுட்டிக்காட்டுவது இன்று சாத்தியமல்ல! துவக்கத்தில் பாலியல் தொழிலாளர்,ஓரினச்சேர்க்கையாளர்கள்,போதை ஊசி பயன்படுத்துவோருக்குதான் இருக்கும் என்று கருதப்பட்ட்து.பிறகு வாகன ஓட்டுனர்கள்,இடப்பெயர்வு போன்றவை கவனத்துக்குள்ளாயின.
                               இவர்களுக்குத்தான் இருக்கும் என்ற அடையாளம் மாறிப்போய்விட்ட்து.2000 த்துக்குப் பிறகு குடும்ப பெண்களும்,அவர்களுடைய குழந்தைகளும் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பது புள்ளிவிபரம் சொல்லியது.இவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களது கணவர்களால் தொற்றை சுமக்கும் அப்பாவிகள்.சிலர் கள்ளக்காதல் பேர்வழிகள்.விதவைகள்,பெற்றோர் இல்லாத அநாதைக்குழந்தைகள் அதிகரித்தார்கள்.நகரங்களைவிட கிராமங்களில் அதிகம் பரவியிருந்த்து.
                              இன்று கண்ணிவெடி போல எல்லா இட்த்திலும் நீக்கமற நிறைந்திருக்கிறது.தமிழ்நாடு அதிக தொற்றுள்ள மாநிலங்களில் ஒன்று.ஒவ்வொரு கிராமத்திலும் ஓரிருவராவது எச்.அய்.வி தொற்றுள்ளவர்களாக இருக்க வாய்ப்புண்டு.ஆனால் அவர்கள் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பவில்லை.தொடுவதாலோ,பழகுவதாலோ ஒட்டிக்கொள்ளாது என்ற போதிலும் ஒதுக்குவதும் கறைப்படுத்துதலும் தொடர்கின்றன.
                               ஆரம்பத்தில் இருந்தே எய்ட்ஸ் உயிர்க்கொல்லி என்ற எண்ணம் ஆழமாக வேரூன்றிவிட்ட்து.ஊடகங்களில் எலும்பும் தோலுமாக நோயாளிகள் அச்சுறுத்தினார்கள்.இன்று எச்.அய்.வி கொல்லும் நோயல்ல!(not a killer disease) சர்க்கரை,ரத்த கொதிப்பு போல தொடர் நலக்குறைவுதான்.வாழ்நாள் முழுக்க மாத்திரைகள் எடுத்துக்கொள்ள வேண்டும்.மற்ற மனிதர்கள் போல இயல்பாக வாழமுடியும்.
                                மக்களின் மனோபாவம் மாறவில்லை.எனக்கு நீரிழிவு நோய் என்று சொல்வதைப்போல எய்ட்ஸ் என்று சொல்லமுடியாது.மோசமான நடவடிக்கை கொண்டவர்களாகவே பார்க்கிறார்கள்.உயிர்க்கொல்லி என்று அஞ்சுகிறார்கள்.ஒதுக்குவது மனித்த் தன்மையற்ற செயல் என்பதோடு நோயைக் கட்டுப்படுத்துவதிலும் பின்னடைவு ஏற்படும்.
                                 இன்று இந்தியா பல்வேறு நிதியுதவிகளுடன் பரிசோதனை,சிகிச்சை,விழிப்புணர்வு போன்றவற்றை செய்து வருகிறது.எத்தனை காலத்துக்கு நிதியுதவி இருக்கும் என்று சொல்லமுடியாது.அவை நிறுத்தப்பட்டால் ஆயிரக்கணக்கான கோடிகளை இப்பணிகளுக்காக ஒதுக்கவேண்டியிருக்கும்.அந்த சுமை ஒவ்வொரு இந்தியனின் தலை மீதும் ஏறும்.எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு,கட்டுப்பாடு போன்றவற்றில் நம் ஒவ்வொருவருடைய பங்கேற்பும் அவசியம்.
தொடர்புள்ள எனது பதிவு:   
             எய்ட்ஸ் -தெரிந்ததும் தெரியாததும்      
டிசம்பர்-1 உலக எய்ட்ஸ்தினத்திற்கான பதிவு.
-

Monday, November 28, 2011

டென்ஷனைக்குறைக்கலாம் வாருங்கள்


                                                                  டென்ஷனா இருக்கு சார்! பெரும்பாலும் குறித்த நேரத்தில் எதிர்பார்த்த ஒன்று நடக்காதபோது,பணியை முடிக்க முடியாத நிலையில் புலம்புவார்கள்.எனக்கு ஒருவரை தெரியும்.அலுவலகம் செல்லும் வழியில் யாரைப்பார்த்தாலும் விடமாட்டார்.மனிதருக்கு பேசுவதில் அப்படி ஒரு பைத்தியம்.தெரிந்தவர்கள் தவிர்க்கப் பார்த்தாலும் விடமாட்டார்.எதிரில் வந்தவர் நேரம் ஆகிறதென்று கிளம்பிப் போன பின்னர் மணி பார்த்து வண்டியை முறுக்குவார்.
                                                                                               இதுவரை மனிதர்கள் பாதிக்கபடவில்லை.ஆனால் ஒருமுறை நாய்மீது மோதி விபத்து.எப்போதும் கொஞ்ச நேரம் தாமதமாக பணிக்கு வருவது அவருக்கு வழக்கமாகிவிட்ட்து.மதியம் சாப்பிட உட்கார்ந்தாலும் பேசிக்கொண்டே இருப்பார்.மாலை வீடு திரும்பவும் நேரமாகும்.குழந்தைகளை கவனிக்க முடியவில்லை என்ற மனக்குறை அவருக்கு இருக்கிறது.
                              நேர நிர்வாகம் என்பது உற்பத்தி துறையில் முக்கியமான விஷயம்.நாம் தனிமனிதன் நேரத்தை விழுங்கும் பழக்கங்களை மட்டும் பேசலாம்.மேலே குறிப்பிட்டுள்ள மனிதரைப்போல பலரும் சிக்கிக் கொள்கிறார்கள்.மிக அவசியமில்லாத விஷயங்களில் நேரத்தை செலவழிப்பதே பெரும்பாலான தொல்லைகளுக்கு காரணமாக இருக்கிறது.
                               வழியில் தெரிந்தவர்களை பார்த்தால் குறைவான பேச்சோ அல்லது புன்னகை மட்டுமோ போதுமானதாக இருக்கலாம்.இதனால் வேகமாக செல்வது தவிர்க்கப்பட்டு விபத்துகளை தவிர்க்கலாம்.மேலதிகாரியிடம் திட்டு வாங்கத் தேவையில்லை.டென்ஷன் இல்லை.வேலையையும் சீக்கிரம் தொடங்கி நேரத்துக்கு முடிக்க முடியும்.
                               மனைவி குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடியவில்லை என்று சொல்பவர்கள் உண்டு.அவர்களில் அதிகம் இந்த மாதிரி முக்கியமில்லாதவை நேரத்தை விழுங்கிக் கொண்டிருக்கும்.சிலர் உண்மையில் கடுமையான வேலைச்சுமையில் இருப்பார்கள்.அவர்கள் பல வேலைகளையும் பட்டியல் போட்டு செயல்படலாம்.முக்கியமானவற்றுக்கு முன்னுரிமை தரலாம்.
                                                                     மின் கட்டணம் செலுத்த இறுதி தேதிக்கு நான்கு நாட்கள் இருக்கும்.ஒரு வேலையை இன்று மாலையுடன் முடிக்கவேண்டி இருக்கும்.சிலர் மின் கட்டணம் செலுத்த போய்விட்டு டென்ஷனுடன் இரவுவரை வேலை செய்து கொண்டிருப்பார்கள்.எதை முன்னர் செய்யவேண்டும் என்று வரிசைப்படுத்தி வைத்து செய்யலாம்.
                              குறித்த நேரத்தில் ஒரு வேலையை செய்யமுடியாவிட்டால் எரிச்சல்,கோபம்,சலிப்பு என்று மனநிலையில் மாற்றம் வந்துவிடுகிறது.நாம் சரியாக திட்டமிடாவிட்டால் சரியாக செய்பவர்களை குறை சொல்லிக் கொண்டிருப்பதும் நடக்கும்.மற்றவர்கள் வந்து உதவ வேண்டுமென்று நினைப்போம்.தானும் கெட்டு மற்றவர்களையும் கெடுக்கும் வழி இது.
                               சரியாக நேரத்தை திட்டமிட்டு செயல்பட்டால் வாழ்க்கையும் எளிது.டென்ஷனும் குறைவு.குடும்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்ற குறைபாடும் நீங்கும்.போனால் கிடைக்காது,பொழுது விடிஞ்சால் சிக்காதுஎன்பார்கள்.அவசியமற்ற பேச்சுகளுக்கு நேரத்தை குறைத்து,திட்டமிட்டு செயல்பட்டால் டென்ஷன் போயே போச்சு!பெரும்பாலான டென்ஷன் நம்மால் தடுக்கமுடியும்.நேரத்தை சரியாக மேலாண்மை செய்வதும் ஒரு முக்கிய வழி.
-

Sunday, November 27, 2011

முடி கொட்டுகிறதா?


  எப்போதோ படித்த நகைச்சுவை."எங்கப்பாவுக்கு முடி வெட்ட நூறு ரூபா வாங்கினாங்கடா!"  " ஆமாம் ,ஒவ்வொரு முடியா தேடி வெட்டுறது கஷடமில்லையா? முடி கொட்டுவது அதிகரித்துவிட்டது என்பதை தோல் சிகிச்சை நிபுணர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.முடி வெட்டுபவர் ஒருவர் சொன்னார்,''தலையில முடியே இருக்கமாட்டேங்குது சார்,கையில புடிச்சா நாலுமுடிதான் கிடைக்குது''. ஆனால் இது வழுக்கைத்தலை இல்லை.

வழுக்கை என்பது பெரும்பாலும்  பரம்பரையாக வரும் விஷயம்.முடியின் அடர்த்தி குறைந்து வருவதற்கான காரணங்களில் இன்றைய வாழ்க்கைமுறைக்கு பங்கு அதிகம்.தினமும் குறிப்பிட்ட அளவு முடி கொட்டி வளர்ந்து கொண்டிருப்பது அதன் இயல்பு.ஆனால் விளம்பரங்களில் வருவது போன்று சிலருக்கு சீப்பு முழுக்க ஒட்டிக்கொண்டு வரும்.முதல் காரணமாக மன நலத்தைச் சொல்லலாம்.இன்று அதிகரித்து வரும் மன அழுத்தம் உடல் நலத்தை சிதைத்து வருகிறது.உடல் நலமும் மன நலமும் கெட்டால் தோலை அதிகம் பாதிப்பதால் முடி கொட்டுகிறது.அன்றாடம் நேரும் மனதுக்கு பிடிக்காத சூழ்நிலைகள் மனதிலும்,உடலிலும் பெரும் தாக்குதலை தொடுக்கிறது.ஹார்மோன்களில் பெரும் மாறுபாட்டை கொண்டு வருகிறது.ஏதேதோ நெருக்கடிகளால் சரியாகத் தூங்க முடியாத இரவுகளுக்கு அடுத்த நாள்களில் அதிகம் முடி கொட்டுவதை நீங்கள் பார்க்க முடியும்.


அடுத்ததாக அவரவர் முடிக்கு ஏற்ப ஷாம்புகளை உபயோகிப்பது.மருத்துவர் பரிந்துரையாக இருந்தால் நல்லது.அடிக்கடி ஷாம்புவை மாற்றுவதும்,நாம் பயன்படுத்துவது அப்போதைக்கு இல்லாவிட்டால் ஏதோவொன்றை வாங்கி பயன்படுத்துவதும் முடியின் ஆரோக்கியத்தை கெடுக்கும்.பொடுகுத்தொல்லை அதிகம் இருந்தாலும் முடி உதிரும்.இவற்றைப் போக்க நல்ல மருந்துகள் இருக்கின்றன.சில மருந்துகளும் முடியை பாதிக்கும்.

ஹார்மோன் கோளாறுகள் உள்ளவர்களுக்கு முடி கொட்டுவது இயல்பு.இதெல்லாம் மருத்துவக் காரணங்கள்.நம்முடைய தவறுகளால் முடியை இழப்பது என்பது போதுமான வைட்டமின்கள்,தாதுக்கள்,புரதங்கள் சேர்க்காத நிலையில் ஏற்படும்.உயிர்ச்சத்து அதிகமுடைய பழங்கள்,காய்கறிகளை சேர்ப்பது,போதுமான அளவு நீர் அருந்துவது,எட்டுமணி நேர தூக்கம் போன்றவை முடிக்கு மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த ஆரோக்கியத்தை காக்கும்.


இரும்புச்சத்து பற்றாக்குறை முடி கொட்டுவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறது.போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லாவிட்டால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும்.பேரீச்சம்பழம்,அசைவ உணவுகள்,வெல்லம்,முருங்கைக்கீரை போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது.

இச்சத்து உடலில் சேர உணவு உண்ட ஒருமணி நேரத்திற்காவது காபி,தேநீர் தவிர்க்கலாம்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு போன்ற சி வைட்டமின் கொண்டவை இரும்புச்சத்து உடலில் கிரகிக்க அவசியம்.
-

Friday, November 25, 2011

குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும்


                                நாம் வளமாகவும் நலமாகவும் இருக்க எண்ணுகிறோம்.பணம் சம்பாதிக்க நாள் முழுக்க உழைக்கிறோம்.உடலையும் மனதையும் புதுப்பித்துக்கொள்ள தூங்குகிறோம்.பணம் சம்பாதிப்பது,சாப்பிடுவது,தூங்குவது இதையெல்லாம் தாண்டி பொழுதுபோக்கு என்று இருக்கவே செய்கிறது.
                                ஓய்வும் கிடைக்கத்தான் செய்கிறது.சில நேரங்களில் நேரம் சலிப்படையச் செய்கிறது.போர் அடிக்கிறது என்று சொல்வோம்.அப்போது ஒவ்வொருவரும் சில செயல்களை செய்கிறார்கள்.சிலருக்கு புத்தகம்,சிலருக்கு இசை,தொலைக்காட்சி,சினிமா,நண்பர்கள்,இணையம் என்று பலவாறாக உண்டு.

                                பொழுதுபோக்கு என்று இவற்றை சொல்கிறோம்.ஆனால் உற்று கவனித்தால் மொத்த வாழ்க்கையும் பொழுதை போக்குவதுதான் என்று தோன்றுகிறது.போகட்டும்.இந்த பொழுது போக்குகள் ஒவ்வொருவருவருக்கும் ஒவ்வொரு  மாதிரி எப்படி உருவாகின்றன? அவரவர் வாழ்ந்து வந்த சூழல் இதை பெருமளவு தீர்மானிக்கிறது.
                                 வாழ்வில் பொழுதுபோக்குகள் செலுத்தும் ஆதிக்கம் மிக அதிகம்.ஒருவரை சிறப்பாக செயல்பட்த் தூண்டுவதிலும்,நல்ல உறவுகளை வளர்ப்பதிலும் இவை பெருமளவு பங்கு வகிக்கின்றன.நல்ல இசை கேட்பதை பொழுதுபோக்காக கொண்டவர் அமைதியான மனநிலையை பெறுகிறார்.நல்ல மனநிலை உற்சாகமாகவும்,சிறப்பாகவும் செயல்புரியத் தூண்டுகிறது.
                                 புத்தகங்கள் பற்றி உங்களுக்கு தெரியாத விஷயம் இருக்கிறதா என்ன? வாசிப்புப் பழக்கம் என்பது வரம்.மனிதனை சீர்படுத்துவதிலும்,ஆளுமையை உருவாக்குவதிலும்,நல்ல உணர்வுகளை மேம்படுத்துவதிலும் புத்தகத்திற்கு நிகர் வேறெதுவுமில்லை.இன்றைய வாசிப்பு புத்தகம்,தாண்டி இணையத்தில் விரிந்து நிற்கிறது.
                                   சினிமா,தொலைக்காட்சி போன்றவையே இன்றைய அதிகமான மக்களின் பொழுதுபோக்கு.சீரியல்கள் நல்ல உணர்வுகளை வளர்ப்பதாக நான் நம்பவில்லை.நல்ல சினிமாவும்,மோசமான சினிமாவும் இருக்கின்றன.தொலைக்காட்சியில் நகைச்சுவை,செய்திகள் என்று பலவாறாக கிடைக்கிறது.
                                  இன்னும் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்ல்லாம். ஒவ்வொரு பொழுதுபோக்கும் ஏதோவொரு வித்த்தில் நம் அன்றாட செயல்களின் மீது ஆதிக்கம் செலுத்துகின்றன.நல்ல பொழுதுபோக்குகளை வளர்த்துக் கொள்வதில் நமது வெற்றியும் மகிழ்ச்சியும் அடங்கியிருக்கிறது.எப்போதாவது கிடைக்கும் ஓய்வு நேரம் அன்றாட செயல்களில் ஆதிக்கம் செலுத்துகிறது.
                                  நல்ல பொழுதுபோக்கு கொண்ட குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும்.சந்தேகம் எதுவும் வேண்டாம்.குழந்தைகளுக்கு பாடப் புத்த்கங்களைத் தாண்டி வாசிப்பு பழக்கத்தை உருவாக்கலாம்.நாம் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு அவர்களிடம் அந்த பழக்கத்தை வளர்க்க முடியாது.
                                

-

Thursday, November 24, 2011

குடிப்பவர்களை அடித்துத் திருத்த முடியுமா??


அன்னா ஹசாரே சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் பாவம்.குடிப்பவர்களை மூன்றுமுறை எச்சரிக்க வேண்டுமாம்.அப்புறம் கடவுள் முன்னால் சத்தியம் வாங்க வேண்டுமாம்.திருந்தாவிட்டால் கம்பத்தில் கட்டிவைத்து பிரம்பால் அடிக்கவேண்டும் என்கிறார்.ஏராளமான கண்டன்ங்கள்.தலீபான் தீவிரவாதிகள் ஸ்டைல் தண்டனை என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி சொன்னார்.
                               ஹசாரே சொல்கிற மாதிரி திருத்த முடிந்துவிட்டால் சமூகத்தில் பல பிரச்சினைகளை சரி செய்து விடலாம்.இப்படி அவர் வயதில் இருக்கும் விஷயம் தெரியாதவர்கள் நினைக்க வாய்ப்பிருக்கிறது.மதுவில்,போதை மருந்துகளில் எப்போதாவது பயன்படுத்துபவர் முதல் அடிமையானவர்கள் வரை வித்தியாசங்கள் உண்டு.

                               என்னுடைய அனுபவத்தில் பல குடும்பங்களில் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்துவிட்டார்கள்.மனைவி பிறந்த வீட்டுக்கு போய் குடும்பம் நட்த்த வரமாட்டேன் என்பது முதல் சத்தியம் வாங்குவது வரை ஏராளமான முயற்சிகள்.ஆனால் பெரிய வெற்றியை அடைந்தவர்கள் யாருமில்லை.
                                நண்பன் ஒருவனின் தந்தை மதுவுக்கு அடிமையாகிவிட்டார் என்று தோன்றியது.வீட்டில் ஒரு பொருளைக் கூட வைக்க முடியாது.கண்ணில் பட்டால் எடுத்துப்போய் விற்று குடித்துவிட்டு வந்து விடுவார்.அவருக்கு ஒரே பையன்.மிகுந்த பாசம்.பையன் வீட்டை விட்டு ஓடிப்போவேன் என்று மிரட்டிய பிறகு குடிப்பதை நிறுத்திவிட்டார்.பலருக்கு மிகப்பெரிய ஆச்சர்யம்.

                                 இன்னொருவர் கல்லூரிப் படிப்பு வரை படித்திருந்தார்.குடித்துவிட்டால் ஊரில் பல பிரச்சினைகள்.கெட்ட வார்த்தைகள்,சண்டை என்று போய்க்கொண்டிருந்த்து.பல முறை நிறுத்தி விடுவதாக சத்தியம் செய்தும் நிறுத்த முடியவில்லை.உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு போனால் மருத்துவர் நிறுத்தியாக வேண்டும் என்று சொல்லிவிட்டார்.ஆனாலும் முடியவில்லை.
                                  மருத்துவரிடம் “ நான் நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் முடியவில்லை,என்று சொன்னார்.அவருக்கு நிஜமாகவே எண்ணம் இருக்கிறது.ஆனால் விட முடியவில்லை.சென்னையில் உள்ள TTK  மையத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டார்.ஒரு மாதம் தங்கி ஆலோசனையும்,சிகிச்சையும் பெற வேண்டும்.
                                  மது அடிமைகளுக்கு கவுன்சலிங் முதல் சிகிச்சை வரை ஆளுக்குத்தகுந்த மாதிரி மீட்கும் வழிமுறைகள் உண்டு.சிலர் நல்ல ஆலோசனையிலேயே நிறுத்திவிடுவதும் உண்டு.குறிப்பிட்ட காலவரையறை வைத்துக்கொண்டு படிப்படியாக நிறுத்தவேண்டும்.இப்படி விட்டுவிட்டவர்களும் இருக்கிறார்கள்.சிலருக்கு மருந்துகளும்,ஆதரவுக்குழு ஆலோசனைகளும் தேவைப்படும்.

                                  சென்னையில் ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்றவர் குடியிலிருந்து மீண்டுவிட்டார்.அதற்குப் பின் குடிப்பவர்கள் பக்கத்தில் இருந்தாலும் அவருக்கு அந்த எண்ணம் ஏற்படுவதில்லை என்று சொன்னார்.TTK  மையம் பலருக்கு இப்படி மறுவாழ்வு அளித்து வாழ வைத்திருக்கிறது.ஹசாரே முறை கடைப் பிடித்தால் மறுவாழ்வு மையங்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.
                                   நாம் பழகிவிட்ட எந்த பழக்கத்தையும் அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது.விதிவிலக்காக சிலர் நினைத்தவுடன் நிறுத்திவிடுவதும் சாத்தியம்தான்.இங்கே உள்ளம்தான் முக்கிய பங்கு வகிக்கிறது.அடித்து,சத்தியம் வாங்கியெல்லாம் திருத்தி விட முடியாது.தினமும் இரவில் அல்லது விழாக்களில் மட்டும் மது அருந்தி பிரச்சினை இல்லாமல் இருப்பவர்கள் உண்டு.பணத்தைக் கரைத்து,பிரச்சினை ஆகி,வாழ்க்கையை பாதிக்கும் நிலைக்கு போவது சிக்கல்.இதை ஹசாரே சொல்கிற மாதிரி சாத்தியமில்லை.
-

Wednesday, November 23, 2011

வாயுத்தொல்லை,அலர்ஜிக்கு பெருங்காயம்.


பெருங்காயம் வாசனைப்பொருளாக சேர்க்கப்படுவதாக பலர் கருதுகிறார்கள்.ஆயுர்வேத மருத்துவத்தில் வாத நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்துவதுண்டு.நமது பாரம்பர்ய உணவில் சேர்க்கப்படும் பொருட்களுக்கு குறிப்பிட்ட காரணத்தை சொல்வது கடினம்.பெரும்பாலானவை மருத்துவ குணம் கொண்டவை.தவிர்க்க கூடாதவை.
                             அன்று மதியம் இரண்டு மணியை தாண்டிவிட்ட்து.நல்ல பசி.நானும்,பால்யகால நண்பனும் கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தோம்.நெடுஞ்சாலையில் ஒரு தாபா ஓட்டலை பார்த்தவுடன் சாப்பிட்டுவிட்டு போகலாமென முடிவு செய்து உள்ளே நுழைந்துவிட்டோம்.உள்ளே போய் உட்கார்ந்தவுடன் நான் பீர் குடிக்கப் போகிறேன் என்றான் நண்பன்.அவன் முடிவு செய்தால் செய்த்துதான்.
                             கூலிங் பீர் இல்லை என்று சொல்லிவிட்டார்கள்.அன்று முழுக்க மின் தடையால் பிரச்சினை.நண்பனின் முகம் மாறினாலும் ஆசை மட்டும் போகவில்லை.எரிச்சலுடன் சரி கொடுங்கள் என்று சொல்லிவிட்டான்.குடிக்க ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில் முகத்தை தடவிக் கொண்டிருந்தான்.எழுந்து போய் கண்ணாடியில் பார்த்துவிட்டு வந்தான்.
                             அப்போதுதான் கவனித்தேன்.முகத்தில் அங்கங்கே லேசாக கொப்புளங்கள் போல வீங்க ஆரம்பித்திருந்த்து.எனக்கு கூலிங் இல்லாமல் பீர் குடித்தால் ஒத்துக்கொள்ளாது என்றான்.எனக்கு பயம் ஏற்பட்டுவிட்ட்து.அவனோ அதிகம் அலட்டிக்கொள்ள வில்லை.ஏற்கனவே அவனுக்கு அனுபவம் இருந்திருக்கிறது.சப்ளையரை அழைத்து பெருங்காயம் இருக்கிறதா?என்று கேட்டான்.
                              சப்ளை செய்பவர் பெருங்காயத்தை தூள் செய்து எடுத்துவந்து கொடுத்தார்.குழம்பில் லேசாக தூவி சாப்பிட ஆரம்பித்தான்.நான் சாப்பிடுவதை விட்டுவிட்டு அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.முகத்தில் இருந்த கொப்புளங்கள் கொஞ்சம்கொஞ்சமாக மறையத்தொடங்கிவிட்ட்து.சாப்பிட்டு முடிப்பதற்குள் முகம் இயல்பான நிலைக்கு வந்துவிட்ட்து.
                                                                    வாயுத்தொல்லை,வயிற்றுப்பொருமல் போன்ற தொல்லைகளுக்கு பெருங்காயத்தை பயன்படுத்துவதை பார்த்திருக்கிறேன்.கிராமங்களில் வாழைப்பழத்தில் சிறிது பெருங்காயத்தை வைத்து உண்பார்கள்.தோல் அலர்ஜிக்கு பயன்படுத்தப்படுவதை அன்றுதான் நேரில் பார்த்தேன்.
                              பெருங்காயம் மிளகுத்தூள் போன்றவற்றில் சேர்ப்பார்கள்.அப்புறம் ஊறுகாய்களில் முக்கிய பொருளாக இருக்கிறது.சீக்கிரம் கெட்டுப்போகாது என்று சொல்வார்கள்.நுண்ணுயிரிகளுக்கு எதிராக செயல் புரியும் தன்மை இருப்பதால்தான் இது சாத்தியமாகிறது.
                                மரபு சார்ந்து நம்முடைய உணவுப் பொருளில் சேர்க்கப்படுபவற்றை இந்த காரணத்திற்காக என்று வரையறுப்பது கஷ்டம்.பெரும்பாலானவை மருத்துவ குணம் கொண்டிருக்கின்றன.முன்னோர்கள் தங்களது ஆரோக்கியத்தை உணவுப்பொருட்களில் கொண்டிருந்தார்கள்.
                                 இந்திய மருத்துவ முறைகளுக்கு அப்பாற்பட்டும் கூட பாட்டி வைத்தியம் பரவலாக பலன் தருவதாக இருப்பதை அறிய முடிகிறது.வரும் காலங்களில் ஒவ்வொன்றுக்குமான அறிவியல் காரணங்களை மேலை நாடுகளில் ஆராய்ச்சி செய்து நமக்கு வழங்குவார்கள்.அவர்களே காப்புரிமை பெற்றுவிடவும் வாய்ப்பிருக்கிறது.

-

Tuesday, November 22, 2011

கூரியர் சர்வீஸ்-இப்படியும் நடக்கலாம்.                           கூரியர் சர்வீஸ் வந்து பெருவெற்றி பெற்றது எனக்கு ஆச்சர்யமாக இருந்த்து.ஒரு நாட்டின் அரசு நிறுவனத்தையே பின்னுக்கு தள்ளிவிட்ட்து.தபால் துறையை விட மக்கள் அதிகமாக இவற்றை நாடினார்கள்.குறைந்த பணியாட்களை வைத்துக்கொண்டு நாம் எதிர்பார்க்கிற மாதிரி சேவையை வழங்கியது.இப்படி கூரியர் சர்வீஸ் நட்த்தும் சிலரை எனக்குத் தெரியும்.
                           நண்பர் ஒருவர் உறவினருக்கு புதிய சட்டை ஒன்றை அனுப்பினார்.விலை உயர்ந்த பிரபல கம்பெனியின் சட்டை அது.ரகசியமாக இருக்கட்டும் என்று அவருக்கு சொல்லவில்லை.பிறந்தநாள் வாழ்த்து கவிதையும் உள்ளேயே வைத்து விட்டார்.அவரிடமிருந்து எந்த தகவலும் இல்லை.பொறுக்காமல் போன் செய்து விசாரிக்க அப்படி எதுவும் வரவில்லை என்று சொல்லிவிட்டார்.
                           கூரியர் சர்வீஸில் போய் விசாரித்தால் தொடர்புள்ள கிளையை விசாரித்திருக்கிறார்கள்.டெலிவரி செய்யும் பையன் இரண்டு நாள் போய்விட்டேன்.வீடு பூட்டியிருந்த்து.அங்கேயே ஒரு கடையில் வைத்திருக்கிறேன் என்று பதில் வந்திருக்கிறது.ஒரு வழியாக சட்டை போய் சேர்ந்துவிட்ட்து.ஆனால் அழுக்காக! தெரியாத விஷயம்: பையன் நான்கு நாட்கள் போட்டுக்கொண்டு சுற்றிவிட்டு பிறகு பொட்டலம் கட்டி கொண்டு போய் கொடுத்திருக்கிறார்.
                            இன்னொருவர் பத்து பனியன் அனுப்பினார்.போய் சேர்ந்த்து எட்டுதான்.டெலிவரி செய்பவர்கள் உள்ளே என்ன இருக்கிறது என்று சிலவற்றை பிரித்து பார்ப்பது அவர்களுடைய ஆர்வம்.பயனுள்ள சில காணாமல் போக வாய்ப்பிருக்கிறது.என்னுடைய சில கடிதங்கள் முகவரி மாறிப்போய் சரியான நேரத்துக்கு கிடைக்காமல் போயிருக்கிறது.
                            கூரியர் மூலம் தபாலோ,பொருளோ அனுப்பிவிட்டால் ஒருநாள் கழித்து போய் சேர்ந்து விட்ட்தா என்பதை உறுதி செய்வது எனக்கு பழக்கமாகிவிட்ட்து.யார் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்,என்பதையும் சரி பார்ப்பேன்.போன் மூலமும் உறுதி செய்வதுண்டு.அலுவலகம் என்றால் யாரிடமாவது கொடுத்துவிட்டு போய்விடுவார்கள்.மற்றவர்கள் பிரிப்பதும் நடக்கும்.எதுவும் தெரியாத மாதிரி மீண்டும் ஒட்டி கொடுத்துவிடுவார்கள்.
                              ஒரு நாள் வாசலில் ஒரு பெட்டி கிடந்த்து.எடுத்துப் பார்த்தால் உறவினர் அனுப்பிய பார்சல்.எங்களிடம் கையெழுத்து வாங்கவில்லை.உறவினரை அவரை அனுப்பிய கிளையில் விசாரிக்கச் சொன்னால் என் பெயரை கையெழுத்தாக அவர்களே போட்டு பி.ஓ.டி நகலை அனுப்பிவிட்டார்கள்.போன் நம்பர் குறித்திருந்தாலும் போன் செய்யவில்லை.
                               சில கூரியர் சர்வீஸ்களில் போனால் கிளை இல்லாத இடங்களுக்கும் வாங்கிக் கொள்வார்கள்.ஆனால் வேறு நிறுவனம் மூலம் அனுப்புவார்கள்.தபால்கள் இதனாலும் தாமதமாகும்.சரியாக கடிதங்களை சேர்க்க முடியாமல் வழக்கை சந்தித்த நிறுவன்ங்களும் உண்டு.நஷ்ட ஈடு வழங்கிய சம்பவமும் நடந்திருக்கிறது.
                               அரசு அதிகாரிகளுக்கு,நிறுவன்ங்களுக்கு தபால்துறை மூலம் அனுப்பவதே சரியானது.அதிகாரிகளிடம் கூரியர் சர்வீஸை சேர்ந்தவர்கள் நேரடியாக தர உள்ளே விடமாட்டார்கள்.வேலைக்கான விண்ணப்பங்களை பல ஆணையங்கள் கூரியர் சர்வீஸ் ஆட்களிடம் நேரடியாக வாங்குவதில்லை.பெட்டியில் போட்டுவிட்டு போகச் சொல்வார்கள்.
                               பெரும்பாலும் சரியாகவே சேர்ந்துவிடுகிறது என்றாலும் அடுத்தடுத்த நாட்களில் நாம் உறுதி செய்யவேண்டும்.பொருளை உரியவரிடம் சேர்க்கப்பட்டு விட்ட்தா என்பதை கிளையில் அணுகி உறுதி செய்து கொள்ளலாம்.உறவினர்களாக இருந்தால் போன் மூலமும் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
-

Sunday, November 20, 2011

பேருந்து பயணத்தில் வதைபடும் பயணிகள்.


                             பொதுமக்கள் பெரும்பாலானவர்களும் பாதிக்கப்படும் ஒரு விஷயம் பேருந்துகள் தொடர்பானது.சுத்தம் இல்லாத பேருந்துகள்,ஓட்டை உடைசல்,மழை வந்தால் உள்ளே கொட்டும்.தூசு அலர்ஜி உள்ள நோயாளிகளுக்கு உடல் நலம் பாதிக்கப்படுவதை தவிர்க்க முடியாது.அப்புறம் விலை ஏறினாலும் ஏறாவிட்டாலும் எப்போதும் தீராத பிரச்சினை சில்லறை பிரச்சினை.
                             ஒரு ரூபாய்,50 பைசாவெல்லாம் நட்த்துனர்களுக்கு பணமே கிடையாது.யாராவது கேட்டுவிட்டால் அற்பமான புழுவைப்போல பார்ப்பார்கள்.ஆனால் ஒரு ரூபாய் குறைவாக கொடுத்தால் பேருந்தை விட்டு இறக்கி விட்டு விடுவார்கள்.நட்த்துனர்கள் மனப்பாடம் செய்துவிட்ட வார்த்தை’’ மீதி சில்லறை அப்புறம் தருகிறேன்”.சரியான சில்லறை வைத்துக்கொள்ளுங்கள்,என்னிடம் சில்லறை இல்லை!
                             50 பைசா சில்லறை தராத காரணத்தால் நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றவர்கள் உண்டு.அடி வாங்கிய,சண்டையை சந்தித்த நட்த்துனர்களும் உண்டு.ஆனால் எல்லோருக்கும் வழக்கு தொடுக்கவும்,சண்டை பிடிக்கவும் நேரம் இருப்பதில்லை.நாம் இதை சில்லியாக எடுத்துக்கொண்டு நகர்ந்துவிடுகிறோம்.
                              நானும் நண்பரும் வெளியூர் பயணத்திற்காக பேருந்து நிலையத்தில் இருந்தோம்.புத்தகம் வாங்கச்சென்று திரும்பினால் நண்பர் வயதான் ஒருவருக்கு பணம் தருவதை பார்த்தேன்.பாட்டி பணம் வாங்கிக் கொண்டு கும்பிடுவிட்டு சென்றார்.பார்த்தால் பிச்சை எடுப்பவர் போல தெரியவில்லை.விசாரித்த பிறகு தெரியவந்த விஷயம்.
                               பாட்டிக்குநான்கு ரூபாய் சில்லறை தரவேண்டும். கண்டக்டர்,சில்லறை இல்லை பேருந்துநிலையத்தில் தருகிறேன் என்று சொல்லிவிட்டார்.பேருந்து நின்ற பிறகு இறங்கிப் பார்த்தால் கண்டக்டர் ஆளையே காணோம்.நகரப்பேருந்து பிடித்து கிராமத்துக்குப் போக வேண்டும்.இரண்டு ரூபாய் குறைவாக இருக்கிறது.காத்திருந்து பார்த்துவிட்டு யாரையாவது கேட்கலாம் என்று கேட்டு விட்டார்.
                                எனக்கும் இப்படி ஒரு அனுபவம்.திருப்பத்தூர் சென்றுவிட்டு கிராமத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தேன்.நூறு ரூபாய்க்கு மீதி சில்லறை பஸ் ஸ்டாண்டில் தருகிறேன் என்று சொல்லிவிட்டார் கண்டக்டர்.இறங்கிப்பார்த்தால் மனிதர் கிடைக்கவில்லை.இறங்கியவுடன் சாப்பிடப் போய்விட்டு அரைமணி கழித்து வந்தார்.கடைசி பஸ்ஸை தவற விட்டுவிட்டேன்.
                                நாங்கள் மட்டும் சில்லறைக்கு எங்கே போவோம் என்று கேட்கிறார்கள்.பயணம் செய்யும் அத்தனை பயணிகளும் எப்போதும் சரியான சில்லறையுடன் செல்ல வேண்டுமா? சாத்தியமான ஒன்றா? புதியதாக ஒரு ஊருக்குப் போகும்போது எவ்வளவு கட்டணம் என்று கேட்டுவிட்டு சில்லறை மாற்றி ஏற முடியுமா? சில இடங்களுக்கு ஒரு மணி,அரைமணி நேர இடைவெளியில்தான் பஸ் இருக்கும்.அவசரத்தில் கடைக்கு ஓடி சில்லறை வாங்கிக் கொண்டிருப்பது கஷ்டம்.
                                கண்டக்டர் தனி நபர் அல்ல.அரசு நிறுவனத்தில் பணியாற்றுபவர்.அரசு வங்கியில் இருந்து பெற்று இவர்களுக்கு சிலநூறு ரூபாய்களுக்கான சில்லறையை வழங்க முடியும்.பேருந்து நிலையத்தில் உள்ள கிளை அலுவலகம் மூலமாகவே வழங்கலாம்.தவிர அரசுப் பேருந்து என்பது அதிக மக்கள் பயன்படுத்தும் விஷயம்.மாதம்தோறும் நுகர்வோர்,அதிகாரிகள் கூட்டங்களை நட்த்தினால் எளிய மக்களுக்கு உதவியாக இருக்கும்.
-

Friday, November 18, 2011

வேலை செய்யும் இடமும் மன நலமும்

வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிக்கும் இடம் நாம் வேலை பார்க்கும் இடம்தான்.சுவரை வைத்தே சித்திரம் என்பது போல வேலையை வைத்தே எல்லா நலமும். தொழில் செய்பவர்களை விடுத்து  அரசாங்கத்திலோ தனியார் நிறுவனத்திலோ பணியாற்றுகிறோம்.வேலைச் சூழல் வீட்டில் எதிரொலிக்கிறது.

அதிகாரியிடம் காட்ட முடியாத கோபத்தை வீட்டில் காட்டுவதும் உண்டு.மன நலத்தை நிர்வகிக்கும் காரணிகளில் வேலை செய்யும் இடம் முக்கிய பங்கு வகிக்கிறது.அதிலும் அலுவலகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் அதி முக்கியமானவர்.நல்லவராக இருந்து விட்டால் எந்த பிரச்சினையும் இல்லை.அவருடன் ஏற்படும் உரசல்களே பலருடைய மன நலத்தை குறி வைக்கிறது.


பெரும்பாலான அலுவலகங்களில் பொதுவான ஒரு விஷயம் அரசியல்.அரசியல் இருந்தால் கூடவே இருக்கும் குழுக்கள்.நான்கு பேர் வேலை செய்கிறவர்களாகவும்,நான்கு பேர் ஏமாற்றுப் பேர்வழிகளாகவும் இருப்பார்கள்."வேலை செய்கிறவனுக்கு வேலை கொடு! வேலை செய்யாதவனுக்கு சம்பளத்தைக் கொடு! என்று சொல்லப்பட்டது சுத்தமாக பொருந்தும்.

எமாற்றுகிறவனின் வேலையை அப்பாவி தலையில் கட்டுவார்கள்.சில நல்ல அதிகாரிகளும் இம்மாதிரி வேலையை செய்வதுண்டு.ஏமாற்ற நினைப்பவன் தலை வலிக்கிறது என்று உட்கார்ந்து கொள்வான்,இல்லாவிட்டால் வயிற்றை புரட்டுகிறது என்பான்.அப்புறம் வேலை நடக்காது! என்று காரணம் சொல்வார்கள்.


ஒழுங்காக இருப்பவர்களை குறை சொல்வதன் மூலம் தனது தவறை மறைக்கப் பார்ப்பார்கள்.இன்னொன்று ஏமாற்றுப் பேர்வழிகள் ,"டிபன் சாப்பிடுறீங்களா சார்?,காபி சாப்பிடுறீங்களா சார்? என்று அக்கறையாக இருப்பார்கள்.வீட்டில் மின் கட்டணம் கட்டுவது,குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவது போன்ற முக்கிய வேலைகளை தயங்காமல் செய்வார்கள்.அலுவலக வேலைதான் கஷ்டம்.போகட்டும்.

அலுவலக அரசியலில் சிக்காமல் புன்னகையுடன் வலம் வருபவர்களை பார்த்திருக்கிறேன்.பத்து மணி வேலைக்கு பத்து மணிக்கு சரியாக வந்து நிற்பார்கள்.அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட வேலையை செய்வார்கள்.ஒய்வு கிடைத்தால் புத்தகம் படிப்பார்கள்.இல்லாவிட்டால் வீட்டுக்கு ,நண்பர்களுக்கு போன் செய்து பேசிக் கொண்டிருப்பார்கள்.

இவர்கள் தினமும் புத்துணர்வுடன் வேலைக்கு வருகிறார்கள்.பிரச்சினையான ஆட்களைப் பார்த்தால் பையன் நன்றாக படிக்கிறானா? மனைவிக்கு உடல்நலம் எப்படி இருக்கிறது? என்று கேட்டு நகர்ந்து விடுவார்கள்.ஒழுங்கமைந்த ஆளுமை(personality) இது .இப்படிப்பட்டவர்கள் மன நலத்தை யாராலும் கெடுத்துவிட முடியாது.


-

Thursday, November 17, 2011

பெண்களின் தந்திரங்களும் குழந்தையும்

பெண்களின் இப்படிப்பட்ட தந்திரங்களை கவனித்திருக்கிறீர்களா?  அலுவலகத்தில் சண்டையாகி விட்டது.பெண் ஊழியர் ஒருவர் கொஞ்சம் சூடாக சண்டை போட்டு விட்டார்.வார்த்தை தடித்து சரமாரியாக கத்தி விட்டார்.நெருக்கமாக இருந்த தோழிகள் கூட கோபம் கொண்டு விட்டார்கள்.சங்கடமான சூழ்நிலை.மதிய உணவு நேரத்தில் சாப்பிடுவதை விட்டுவிட்டு எங்கோ கிளம்பி போய்விட்டார்.வந்தவர் தனது ஒரு வயது குழந்தையுடன் வந்தார்.அப்புறம் என்ன நடந்திருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.

குழந்தை என்றால் உலகில் பிறந்த அத்தனை பேருக்கும் கொள்ளை ஆசை.மழலைச் சொல்லிவிட மனிதனை மயக்குவது ஏதுமில்லை.ஒவ்வொருவராக குழந்தையை கொஞ்ச அறைக்குள் நுழைந்தார்கள்.சங்கடங்கள் கரைய ஆரம்பிக்க இணக்கமான சூழ்நிலை மறுபடியும் வந்து விட்டது.தான் சொன்னால் கணவரோ,மாமியாரோ,மற்றவர்களோ கேட்க மாட்டார்கள் என்று அப்பெண் நினைக்கிறார்.குழந்தையிடம் சொல்லி குழந்தையின் விருப்பமாக சொல்ல வைக்கிறார்.எளிதாக வெற்றி கிட்டி விடுகிறது.


காதல் திருமணத்தால் முறைத்துக் கொண்டிருக்கும் பெற்றோர்களும் உறவுகளும் குழந்தை பிறந்தது தெரிந்தவுடன் பரவசமாகி ஓடுகிறார்கள்.சில  குடும்பங்கள் குழந்தைகளுக்காக பிரியாமல் இருக்கின்றன.குழந்தை நல்ல சூழ்நிலையை ஏற்படுத்துகிறது.பிரிந்தவர்களை ஒன்று சேர்க்கிறது.ஏனெனில் குழந்தைகள் உலகம் மகத்தானது.நண்பர் ஒருவரின் பையன் ஏதோ பேச்சுக்கு கோபமாக பேச ஆரம்பித்தான்.பேசிய அனைத்து வார்த்தைகளும் தொலைக்காட்சி தொடரில் ஒருவர் பேசியது.

தொலைக்காட்சி பார்க்கும் குழந்தைகள் அதே போல பேசுவதையும் ,நடிப்பதையும் கவனித்துப் பாருங்கள்.இவை நல்லவற்றை கற்றுத்தரும் என்று நான் நம்பவில்லை.தொடர்களில் வரும் பாத்திரங்கள் அமைதியற்ற குணங்களை கொண்டிருக்கின்றன.குழந்தைகளிடம் இத்தகைய குணங்கள் அதிகரித்து வருவதாக செய்திகள் சொல்கின்றன.இருவரும் சம்பாதிக்க ஓட வேண்டிய நெருக்கடியான சூழலில் குழந்தைகள் நலமே பலியாகிறது.பாட்டியிடம் அல்லது வேலைக்காரர்களிடம் விட்டுவிட்டு போகிறார்கள்.குழந்தைக்கும் தாய்க்கும் இடையிலான நெருக்கம் குறைகிறது.


அன்பு என்பது தாயிடம் மட்டுமே குழந்தைகள் அதிகளவு உணர்கின்றன.ஒரு தாய் குழந்தையின் முதுகில் அடித்துவிட்டு நகர்ந்தால் தாயை பின்தொடர்கிறது.அழுதுகொண்டு அம்மாவிடமே ஓடும்.அப்பா அடித்தாலும் அம்மாவிடம் ஓடுகிறது.வயது அதிகரித்தால் அப்பாவிடமும் மற்றவர்களிடமும் போய் நிற்கும்.காலையில் அவசரமாக எழுந்து பரபரப்பாக தயாராகி ,அரைகுறையாக விழுங்கி விட்டு புத்தகப் பையுடன் நடக்கும் குழந்தையின் முகத்தில் குழந்தையை பார்க்க முடியவில்லை.

என்னுடைய பாகவதமும் பைபிளும் இடுகையில் இருந்து சில வரிகள்.சிறுவர்களுக்கு தற்போது நல்ல விஷயங்கள்,கதைகள் சொல்ல ஆட்கள் இல்லை என்பது பெரும் சீர்கேடாக நான் பார்க்கிறேன்.குழந்தைகளின் கற்பனையை வளர்க்க கதை சொல்லி பாட்டிகள் தற்போது இல்லை.நகர அவசர வாழ்க்கையும்,கூட்டுக்குடும்ப சிதைவும் நன்னெறி கதைகளை விடுத்து கம்ப்யூட்டர் விளையாட்டுகளிலும்,கார்ட்டூன்களிலும் கொண்டு சேர்த்திருக்கிறது.இன்றைய குழந்தைகளின் கற்பனை வறட்சி அவர்களது வளர்ச்சியை சிக்கலாக்கவே செய்யும்.


சக பெண் ஊழியர் ஒருவர் தொலைபேசியில் பேசும்போது சொன்னது," பெரியவனை எங்காவது விடுதியில் சேர்த்துவிடலாம் என்றிருக்கிறேன்.குறும்பை தாங்க முடியவில்லை.சின்னப் பையன் அப்படியில்லை,அமைதி!" அவருக்கு நான் சொன்னது,"சின்னப் பையனை விடுதியில் சேர்த்து விடுங்கள்,பெரியவன் வேண்டாம்.குழந்தை அமைதியாக இருந்தால் அது பொம்மை.குறும்பு செய்தால் அது குழந்தை.
-

Wednesday, November 16, 2011

மனசுக்குப் பிடிக்காத சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது?

   எப்போதும் அமைதியாகவும் சந்தோஷமாகவும் இருக்கவே விரும்புகிறோம்.ஆனால் ஏதேனும் தொல்லைகள் வந்து சேரத்தான் செய்கிறது.எப்படியாவது இந்த சூழ்நிலையில் இருந்து விடுபட்டால் போதும் என்று மனம் தவிக்கும்.மனதிலும் உடலிலும் விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டு குழப்பம் தோன்றிவிடும்.இப்படிப்பட்ட சங்கடங்களை சமாளிக்கும் விதம் ஒவ்வொருவருக்கும் வேறுபடும்.அவரவர்களுடைய ஆளுமையை பொருத்து திறனும் இருக்கும்.சிலருக்கு மிக எளிதாக இருக்கிறது.இது என்ன பெரிய விஷயம் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்டிக் கொள்ளவே மாட்டார்கள்.இவர்களுக்கு சில தகுதிகள் அமைந்திருக்கின்றன.அல்லது அவற்றை வளர்த்துக் கொண்டார்கள்.அவை 


எதிலும் நம்பிக்கை கொண்டிருப்பது.(confidence)நம்மால் இதை சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.என்னால் முடியக்கூடிய ஒன்றுதான் என்ற நம்பிக்கையை எப்போதும் மனதில் தாங்கி இருக்கிறார்கள்.தனக்கு திறன் இருக்கிறது என்று நம்புகிறார்கள்.
தன்னைப் பற்றி நல்லவிதமாக உணர்கிறார்கள்.

சுய மதிப்பு .(self esteem)


நம்மை நாமே மதிக்காவிட்டால் யார்தான் நம்மை மதிப்பார்கள்? தான் சரியானவன் என்ற எண்ணமும் ,யாருக்கும் சளைத்தவன் இல்லை என்ற எண்ணமும் இருக்கிறது.


கடுமையாக உணர்வதில்லை.(sense of control)


பெரிய தீர்க்க முடியாத பிரச்சினையாக எதையும் நினைப்பதில்லை.கடிவாளத்தை கையில் வைத்திருக்கிறார்.உணர்ச்சிகளில் சிக்கி அலைக்கழிக்கப் படுவதில்லை.


நல்லதே நடக்கும் (optimism)


தனது முயற்சிக்கு நல்ல விளைவுகளை எதிர்நோக்குகிறார்.இந்த நம்பிக்கை தடுமாற்றமில்லாமல் செயல்பட வைக்கிறது.நேர்மறை எண்ணங்கள்.(positive thinking)


அவர் நேர்மறையாக சிந்திக்கிறார்.எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் இருக்கிறார்.


                                                                                                                மேலே சொல்லப்பட்டவை நம்மை நாமே பரிசோதித்துக் கொள்ள சொல்லப்பட்டவைதான்.இந்த தகுதிகள் நமக்கு இருக்கிறதா என்று பார்க்கவும்,இல்லாவிட்டால் வளர்த்துக்கொள்ளவும் முடியும்.

-

Tuesday, November 15, 2011

பெண்களும் ரகசியமும்


திருமணமான சில நாட்களில் நண்பன் புலம்பினான்.எதுவுமே சொல்வதற்கில்லை.எப்படித்தான் நம்பி ஒரு விஷயத்தை சொல்வது? உடனே வெளியே போய்விடுகிறது.எனக்கு இப்படி இருந்தால்தான் பிடிக்கும் என்று சொல்ல,அந்த முழு வார்த்தையும் அதே ஏற்ற இறக்கங்களுடன் அக்காவிடம் போய் விட்ட்து.சில நேரங்களில் அம்மாவிடம் போய்விடுகிறது.புது மாப்பிள்ளை பற்றி தெரிந்துகொள்ள சுற்றத்தினர் ஆர்வமாக இருப்பார்கள்.
                                       ரகசியம் என்பதே நம்மிடம் மட்டும் இருப்பதுதான்.இரண்டாவது நபரிடம் அது தங்குமானால் அவர் மிகவும் நல்லவராக இருக்க வேண்டும்.இன்று நாளிதழில் போட்டிருப்பதாக நண்பர் கூறியதுஅரை மணி நேரத்துக்கு மேல் பெண்களிடம் ரகசியம் தங்காதாம்ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள்.இது நம்மிடம் ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைதான்.
                                 வழக்கமாகவே பெண்கள் உணர்வு சார்ந்து இயங்குபவர்கள் ஏன்ற கருத்து உண்டு.இப்போது மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பது வேறு விஷயம்.நீங்கள் ஒரு கருத்தை கூறும்போது அதைப்பற்றி சிந்திக்க முடியாதவர்கள் வெளியே சொல்வார்கள்.மற்றவர்கள் கருத்தை அறிவதும்,அது சரியானதா என்று பார்ப்பதே நோக்கம்.ஆண்களும் இப்படி உண்டு.
                                     புதிய ஒன்றை கேள்விப்படும்போதும் இப்படி நடக்கும்.உதாரணமாக ’’எனக்கு புரோட்டா பிடிக்காது,அது சர்க்கரை நோயைத்தரும் என்று சொல்கிறார்கள் என்று மனைவியிடம் சொல்கிறீர்கள்,உடனே அக்காவுக்கு போன் செய்து இப்படி சொல்கிறார் என்று விஷயம் போய்விடும். இதுவரை அவரது மனைவி இந்த விஷயத்தை கேள்விப்பட்ட்தில்லை.அதனால் அவர் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.
                                   ஒருவரிடம் பகிர்ந்து கொள்ள புதியதான, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் ஒன்று தேவை.நாம் பேசுவது நம் மீது மரியாதையை தூண்டி நம்மை முக்கியமானவராக கருதவேண்டும் என்று நினைக்கிறோம்.இதனாலேயே பல தகவல்கள் வெளியேறுகின்றன.தன்னை நேசிக்கவில்லை என்று கருதும் மனைவி கணவனின் எல்லா நடவடிக்கைகளையும் வெளியே சொல்ல வாய்ப்புண்டு.
                                   இன்னொரு வேடிக்கை உண்டு.யாரிடமும் வெளியே சொல்லாதே! என்றால் உடனே மற்றவர்களிடம் சொல்லிவிடுங்கள் என்று அர்த்தம் என்பார்கள்.உண்மையைச் சொன்னால் நம்மிடம் மட்டும் ஏன் சொல்லவேண்டும்? அவரே ரகசியமாக வைத்திருக்கலாமே? உன்னிடம் மட்டும் எதையும் மறைக்கமாட்டேன்,நீ எனக்கு அவ்வளவு முக்கியமான ஆள் என்ற விஷயம் இதில் ஒளிந்திருக்கிறது.
                                  ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ரகசியத்தை வெளியில் சொல்வது கொடூரமானது.அன்பு கொண்ட மனிதர்கள் அதைச் செய்வதில்லை.நம் மீதான நம்பிக்கையும் சிதறிவிடுகிறது.நம்பிக்கை போய்விட்டால் அப்புறம் உறவுகளில் என்ன வேண்டிக்கிடக்கிறது?
-

Monday, November 14, 2011

பிரபல பதிவர்கள் ஏன் மாறிக்கொண்டே இருக்கிறார்கள்?


பதிவுலகில் ஒரு கருத்து இருக்கிறது.பிரபலமாக இருப்பவர்கள் மாறிக் கொண்டே இருக்கிறார்கள்.அவர்களுக்கு வாசகர்கள் குறைந்து விடுகிறார்களா?சிலர் எழுதாமல் நிறுத்தி விடுகிறார்கள்.மதுரை குணா ஒருமுறை சொன்னார்.திருத்தணி போய் வந்தேன்,வீட்டுக்கு வந்தவுடன் அந்த அனுபவத்தை எழுதாமல் இருக்க முடியவில்லை.ஒரு பேப்பரை எடுத்து எழுத ஆரம்பித்தேன்.அப்புறம் கிழித்துப் போட்டுவிட்டேன்.
                            எளிதாகவே இருக்கிறது.சொல்வதற்கு ஏதாவது இருக்கும்போது எழுதாமல் இருக்க முடியாது.உள்ளே இருப்பதை வெளியில் கொட்டித்தான் ஆக வேண்டும்.ஏதோ ஒரு ஊடகம்.அது வலைப்பதிவாக இருக்கலாம்,பேப்பரில் இருக்கலாம்.பேஸ்புக்கிலும் இருக்கலாம்.மனிதன் வெளியே கொட்டுவதற்கு வசதியாக இருப்பதால்தான் இவற்றுக்கு வரவேற்பு இருக்கிறது.

                            சில காலம் எழுதாமல் போய்விட்டவர்கள் மீண்டும் பதிவிடுவது தவிர்க்க முடியாது.ஆனால் வெளிப்பாட்டுத்திறன் என்பது ஒவ்வொருவருக்கும் வேறுபடுகிறது.சிலர் போனில் நண்பர்களிடம் கதை,கதையாக பேசி விடுவார்கள்.கொஞ்சமும் வாசிப்பு பழக்கம் இல்லாமல் மற்றவர்களை பார்த்து வலைப்பதிவு ஆரம்பிப்பவர்கள் காணாமல் போனால் மீண்டும் வருவது சாத்தியமல்ல!இவை பெரும்பாலும் வெட்டி ஒட்டுதலையும்,செய்தியையும் அடிப்படையாக கொண்டிருக்கின்றன.
                            புதிய பதிவர்களின் வருகையும் பிரபலங்கள் மாறிக்கொண்டேயிருக்க காரணமாக சொல்ல முடியும்.தவிர வலைப்பதிவுகளில் வாசகர்கள் தேர்ந்தெடுக்கும் பொருளும் இன்னொரு காரணம்.அரசியல்,சினிமா,தனி மனிதனுக்கு பயன் தரும் செய்திகள் போன்றவைதான் அதிகம் படிக்கப்படுகின்றன.இவற்றையெல்லாம் குறிப்பிட்ட ஒருவர் என்றில்லாமல் யார் வேண்டுமானாலும் எழுத முடியும்.துறை சார்ந்த ஒருவர் எழுதும்போது கொஞ்சம் அழுத்தம் இருக்கும்.
                     கதை,கவிதை உள்ளிட்ட புனைவுகளுக்கு அதிக வரவேற்பில்லை.கதையில் சில விஷயங்களை அழுத்தமாக மனதில் நிற்குமாறு சொல்ல முடியும்.சிலவற்றை கவிதையில் சொல்ல முடியும்.நிஜமான தனித்திறமை என்பது புனைவுகளில் இருக்கிறது.ஒருவரது சிறுகதை,கவிதை போன்றவற்றை படிக்க நேரும் வாசகர் பிடித்துப்போனால் அவரை எப்போதும் பின் தொடர்கிறார்.
                              இன்னொன்று பதிவுகளைப்பொருத்தவரை ஒரு பதிவை வெற்றியடையச் செய்வது வாசகர்கள் அல்ல! சில பதிவுகளைத்தவிர்த்து பெரும்பான்மையாக பதிவர்களை சார்ந்திருக்கிறது.வாக்கு,கருத்துரைகளில் பங்கேற்பவர்கள் பதிவர்களே! இதில் பொறாமை,அரசியல் எல்லாம் பிரபலங்களை சுற்றியே இருக்கின்றன.மெயில் அனுப்பி,சாட் செய்து அரசியல் செய்வதை ஒரு சிலர்தான் விரும்புவார்கள்.
                                                                         சினிமாவைத்தான் சூதாட்டம் என்பார்கள்.வலைப்பதிவுகளும் அப்படித்தான் இருக்கின்றன.எந்த பதிவு ஹிட்டாகும்,எது ஆகாது என்பது யாருக்கும் தெரியாது.நண்பர் ஒருவர் “பதிவு போட்டிருக்கிறேன் ஹிட்டாகும் என்றார்.ஆனால் இருபது பேர் கூட படிக்கவில்லை.தவிர முப்பது வயதில் ஒருவர் பார்த்த,கேட்ட சுவையான விஷயங்களை எத்தனை பதிவுகள் எழுத முடியும்?தினம் தினம் நமக்கு ஏற்படும் அனுபவங்களை எழுதினாலும் ஒருவருடைய பார்வை ஒன்றுதான்.
                               அரசியல் பதிவென்றால் சீரான கொள்கை வேண்டும்.இப்போது தி.மு.க வை விமர்சித்து எழுதினால் அதிகம் படிக்கப்படும் என்று சொல்ல முடியாது.தேர்தல் நேரத்தில் அரசியல் தொடர்பான இடுகைகளே அதிகம் படிக்கப்பட்ட்து.ஒருவரது பிரபலத்தை காலமும் தீர்மானிக்கலாம்.தவிர இதில் என்ன இருக்கிறது என்ற சலிப்பும் நேரலாம்.விட்டுப்போனதை நண்பர்களும் சொல்ல்லாம்
-