அன்னா
ஹசாரே சொல்லி வாங்கிக் கட்டிக்கொண்டிருக்கிறார் பாவம்.குடிப்பவர்களை மூன்றுமுறை
எச்சரிக்க வேண்டுமாம்.அப்புறம் கடவுள் முன்னால் சத்தியம் வாங்க
வேண்டுமாம்.திருந்தாவிட்டால் கம்பத்தில் கட்டிவைத்து பிரம்பால் அடிக்கவேண்டும்
என்கிறார்.ஏராளமான கண்டன்ங்கள்.தலீபான் தீவிரவாதிகள் ஸ்டைல் தண்டனை என்று
காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் மணீஷ் திவாரி சொன்னார்.
ஹசாரே சொல்கிற
மாதிரி திருத்த முடிந்துவிட்டால் சமூகத்தில் பல பிரச்சினைகளை சரி செய்து
விடலாம்.இப்படி அவர் வயதில் இருக்கும் விஷயம் தெரியாதவர்கள் நினைக்க
வாய்ப்பிருக்கிறது.மதுவில்,போதை மருந்துகளில் எப்போதாவது பயன்படுத்துபவர் முதல்
அடிமையானவர்கள் வரை வித்தியாசங்கள் உண்டு.
என்னுடைய
அனுபவத்தில் பல குடும்பங்களில் என்னென்னவோ முயற்சி செய்து பார்த்துவிட்டார்கள்.மனைவி
பிறந்த வீட்டுக்கு போய் குடும்பம் நட்த்த வரமாட்டேன் என்பது முதல் சத்தியம்
வாங்குவது வரை ஏராளமான முயற்சிகள்.ஆனால் பெரிய வெற்றியை அடைந்தவர்கள் யாருமில்லை.
நண்பன் ஒருவனின்
தந்தை மதுவுக்கு அடிமையாகிவிட்டார் என்று தோன்றியது.வீட்டில் ஒரு பொருளைக் கூட வைக்க
முடியாது.கண்ணில் பட்டால் எடுத்துப்போய் விற்று குடித்துவிட்டு வந்து
விடுவார்.அவருக்கு ஒரே பையன்.மிகுந்த பாசம்.பையன் வீட்டை விட்டு ஓடிப்போவேன் என்று
மிரட்டிய பிறகு குடிப்பதை நிறுத்திவிட்டார்.பலருக்கு மிகப்பெரிய ஆச்சர்யம்.
இன்னொருவர் கல்லூரிப் படிப்பு வரை
படித்திருந்தார்.குடித்துவிட்டால் ஊரில் பல பிரச்சினைகள்.கெட்ட வார்த்தைகள்,சண்டை
என்று போய்க்கொண்டிருந்த்து.பல முறை நிறுத்தி விடுவதாக சத்தியம் செய்தும் நிறுத்த
முடியவில்லை.உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு போனால் மருத்துவர் நிறுத்தியாக
வேண்டும் என்று சொல்லிவிட்டார்.ஆனாலும் முடியவில்லை.
மருத்துவரிடம்
“ நான் நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறேன் முடியவில்லை,என்று சொன்னார்.அவருக்கு
நிஜமாகவே எண்ணம் இருக்கிறது.ஆனால் விட முடியவில்லை.சென்னையில் உள்ள TTK மையத்திற்கு
பரிந்துரை செய்யப்பட்டார்.ஒரு மாதம் தங்கி ஆலோசனையும்,சிகிச்சையும் பெற வேண்டும்.
மது
அடிமைகளுக்கு கவுன்சலிங் முதல் சிகிச்சை வரை ஆளுக்குத்தகுந்த மாதிரி மீட்கும்
வழிமுறைகள் உண்டு.சிலர் நல்ல ஆலோசனையிலேயே நிறுத்திவிடுவதும் உண்டு.குறிப்பிட்ட
காலவரையறை வைத்துக்கொண்டு படிப்படியாக நிறுத்தவேண்டும்.இப்படி விட்டுவிட்டவர்களும்
இருக்கிறார்கள்.சிலருக்கு மருந்துகளும்,ஆதரவுக்குழு ஆலோசனைகளும் தேவைப்படும்.
சென்னையில்
ஒரு மாதம் தங்கி சிகிச்சை பெற்றவர் குடியிலிருந்து மீண்டுவிட்டார்.அதற்குப் பின்
குடிப்பவர்கள் பக்கத்தில் இருந்தாலும் அவருக்கு அந்த எண்ணம் ஏற்படுவதில்லை என்று
சொன்னார்.TTK மையம் பலருக்கு இப்படி
மறுவாழ்வு அளித்து வாழ வைத்திருக்கிறது.ஹசாரே முறை கடைப் பிடித்தால் மறுவாழ்வு
மையங்களுக்கு வேலையே இல்லாமல் போய்விடும்.
நாம்
பழகிவிட்ட எந்த பழக்கத்தையும் அவ்வளவு எளிதாக விட்டுவிட முடியாது.விதிவிலக்காக
சிலர் நினைத்தவுடன் நிறுத்திவிடுவதும் சாத்தியம்தான்.இங்கே உள்ளம்தான் முக்கிய
பங்கு வகிக்கிறது.அடித்து,சத்தியம் வாங்கியெல்லாம் திருத்தி விட முடியாது.தினமும்
இரவில் அல்லது விழாக்களில் மட்டும் மது அருந்தி பிரச்சினை இல்லாமல் இருப்பவர்கள்
உண்டு.பணத்தைக் கரைத்து,பிரச்சினை ஆகி,வாழ்க்கையை பாதிக்கும் நிலைக்கு போவது
சிக்கல்.இதை ஹசாரே சொல்கிற மாதிரி சாத்தியமில்லை.








