Saturday, December 31, 2011

எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம்.


                              இன்னும் ஓராண்டு கழிகிறது.நாட்காட்டி மாற்றுகிறோம்.இங்கே எதற்காக பிறந்திருக்கிறோ என்று தெரியாது.மனிதனுக்கு ஆகச் சிறந்த வேலை நாட்களைக் கொல்வது என்று ஆகிவிட்ட்து.ஒவ்வொரு நாளும் முடியும்போது நம்மால் பலன் பெற்றவர்கள் யாராவது இருக்கிறார்களா? என்பதை சிந்திப்பதுண்டா? போகட்டும்.ஒரு வருட்த்தில் அப்படி ஏதாவது செய்திருக்கிறோமா?
                              இன்னொருவனை முந்துவது பற்றி,வீழ்த்துவது பற்றி மனிதன் யோசிக்கிறான்.ஏமாற்றி பணம் ஈட்டுவது பற்றி,பொய்,வஞ்சகம்,கீழ்த்தரமான தந்திரங்கள்,சக மனிதன் மீது வெறுப்பு இன்னும் இன்னும் மனதில் குப்பைகளை சேர்த்துக் கொண்டிருக்கிறான்.குப்பை அழுகி நாற்றமெடுக்க ஆரம்பிக்கிறது.தானும் அமைதி இழந்து அடுத்தவனையும் கெடுக்கிறான்.

                               பிறரை ஏமாற்றுவதன் மூலம் தன்னை புத்திசாலியாக நினைத்துக்கொள்கிறான்.தன்னைத்தானே பாராட்டிக் கொள்கிறான்.பொய்யை வதந்தியை நம்ப வைக்கிறான்.தனக்குள்ளே சிரிப்பு.யாரோ செய்த்தை தான்செய்த செயலாக காட்டி புகழ்பெற முயற்சிக்கிறான்.சாயம் வெளுத்துவிட்டால் ஒரு இளிப்பு.முற்றிலும் பைத்தியம் அன்றி வேறில்லை.
                                ஊதியம் கொடுத்து சேவை செய்யச் சொல்கிறார்கள்.தந்திரமாக திருடுகிறான்.அப்பாவிகளை மிரட்டி பறிக்கிறான்.பத்து மணி வேலைக்கு பதினோரு மணிக்கு வருகிறான்.வேலை சொன்னால் எரிச்சல் வருகிறது.நாள் முழுக்க சிடுசிடுப்பு! பக்கத்தில் இருப்பவர்கள் மீது ஆத்திரம்.இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது தலைவலி,வயிற்றுவலி.

                                 மற்றவர்கள் பெருமையாக நினைக்கவேண்டும்.எந்த முயற்சியும்,உழைப்பும்,நல்ல காரியமும் இல்லாமலேயே மற்றவர்கள் பாராட்டினால் நல்லது.திறமையிருப்பவனை எப்படியாவது வீழ்த்திவிட்டால் நல்லது.நேர்மையாக இருப்பதா? மடையர்கள்! பிழைக்கத் தெரியாதவர்கள் பற்றி நமக்கென்ன பேச்சு! அவன் நேற்று கீழே விழுந்துவிட்டானாம் ஹாஹா! தெருவில் அழுக்குத்துணியுடன் ஆதரவற்று சிரித்துச் செல்பவன் இவர்களைவிட மேலானவன் என்று தோன்றுகிறது.
                                 குறுகிய மனப்பான்மையும் சுயநலமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.மனம் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.நிஜமான மகிழ்ச்சி என்பதை மனிதன் உணர்வது சாத்தியமில்லாமல் போய்க் கொண்டிருக்கிறது.குழந்தை போல இருக்க முடியவில்லை.சுய நினைவின்றி எதையெதையோ செய்து கொண்டிருக்கிறார்கள்.

                                 உயிரை அடுத்தடுத்த காலங்களுக்கு பிரச்சினையில்லாமல் நகர்த்தவேண்டும்.அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.இப்படியான மனிதர்கள் பெருகி வருகிறார்கள்.நான் சந்தோஷமாகவும் அமைதியாகவும் இருக்கிறேன் என்று இன்று எத்தனை பேரால் கை உயர்த்தி சொல்ல முடியும்? ஆனால் மனம் மட்டும் மகிழ்ச்சிக்கே தவிக்கிறது.
                                  நல்ல எண்ணங்களே சந்தோஷத்தின் திறவுகோல்.சக மனிதனை நேசிப்பவனால் மட்டுமே நிறைவான மகிழ்ச்சியை காணமுடியும்.பூமியில் பிறந்த பலனை அடைபவர்களும் அவர்கள்தான்.எங்கெங்கும் மகிழ்ச்சி வெள்ளம் என்பது சுத்தமான இதயமே சாத்தியமாக்கும்.புத்தாண்டில் நிஜமான மகிழ்ச்சியே குறிக்கோளாக வைத்துக் கொள்ளலாம்.

 வாசகர்களுக்கும் சக நண்பர்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
                                  
-

Thursday, December 29, 2011

உடற்பயிற்சி செய்தாலும் தொப்பை குறையாதாமே?!


                              உடற்பயிற்சி செய்தால் தசைகள் வலுப்பெறும்.ஆனால் தொப்பை குறையுமா? இதைப்பற்றி ஒருவர் புத்தகம் எழுதியதாக படித்தேன்.ஆனால் அப்போது எனக்கு சரியாக புரியவில்லை.ஆளாளுக்கு ஒவ்வொரு கருத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள்.நாணயத்தின் இருபக்கம் போலத்தான்! இரண்டு வித கருத்துக்களும் இருக்கும்.பலரும் உடற்பயிற்சி தொப்பையை குறைக்கும் என்றே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.
                              மூட்டை தூக்கும் தொழிலாளிக்கு பெரும் வயிற்றை பார்த்தேன்.வியாதியெல்லாம் இல்லை.சந்தேகமில்லாமல் பெரும் தொப்பைதான்.உடல்  உழைப்பு உள்ள பலருக்கும் தொப்பை இருக்கத்தான் செய்கிறது.ஆனால் அந்த தொப்பை கொஞ்சம் உறுதியானது.அலுத்துக் கொள்ளும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.நானும் காலையில் நடக்கிறேன்,என்னென்னவோ பயிற்சி செய்கிறேன்,ஆனால் தொப்பை அப்படி ஒன்றும் குறையவில்லை என்பார்கள்.
                               உடற்பயிற்சி செய்தால் நன்றாக பசியெடுக்கும்,அதனால் அதிகம் சாப்பிடுவார்கள்.எனவே எடை குறைப்பது சாத்தியமான ஒன்றல்ல என்று படித்தேன்.உண்மையென்றுதான் தோன்றுகிறது.உடற்பயிற்சி ஜீரண மண்டலத்தை தூண்டி விடுகிறது.இதனால் நன்கு பசித்தால் ஆரோக்கியம் கூடுவதாகவே பொருள்.சந்தேகமில்லாமல் உடற்பயிற்சி நல்ல விளைவுகளை தருகிறது.அரைமணி நேர உடற்பயிற்சி உடல் நலத்திற்கு மட்டுமல்ல மனநலத்திற்கும் நல்லதுதான்.
                                தொப்பை இதற்கெல்லாம் மசிந்து விடுமா என்ன? உடற்பயிற்சி செய்து ஆயிரம் கலோரி எரித்துவிட்டு இரண்டாயிரம் கலோரி உள்ளே தள்ளினால் வெளியே தள்ளிய வயிறு உள்ளே போகுமா? வாக்கிங்,உடற்பயிற்சி இதையெல்லாம் பலர் கடனுக்கு செய்கிறார்கள் என்றார் ஜிம் வைத்திருக்கும் ஒரு நண்பர்.இன்று மருத்துவர் சொன்னார் என்பதற்காக மட்டுமே செய்கிறார்கள்.
                                 வாயைக்கட்டினால் வயிற்றைக் கட்டலாம் என்று சொல்வார்கள்.பெரும்பாலானவர்களுக்கு இது முடியாமல் போய்விடுகிறது.உணவை உள்ளே தள்ளுவதில் விழிப்புணர்வு இல்லை என்பதே சரி.நாக்கை அடக்கினால் மட்டுமே தொப்பையையும்,பருமனையும் கட்டுப்படுத்த முடியும்.ஆனால் நாக்குக்கு அடிமையானவர்களே அதிகம்.
                                                                             சில உணவுகள் மீண்டும் மீண்டும் சாப்பிட்த் தூண்டுவதை கவனித்திருக்கிறீர்களா? எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளுக்கு இந்த பண்பு உண்டு.இப்படிப்பட்ட நொறுக்குத்தீனிகள் தொப்பையை வளர்க்கின்றன்.முந்தைய பதிவொன்றில் குறிப்பிட்ட்து போல அரிசி உணவுகளை அதிகம் உண்கிறோம்.நமது மதிய உணவுக்கும் தொப்பைக்கும் அதிக தொடர்பு உள்ளது.
                                  காய்கறிகள்,பழங்கள் போன்றவை திரும்ப திரும்ப சாப்பிடும் ஆர்வத்தை தூண்டுவதில்லை.மிதமான அளவு உண்போம்.வயிறும் நிறைந்திருக்கும்.உடலுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்களும் போதுமான அளவு சேர்ந்து ஆரோக்கியத்தை உறுதிப்படுத்தும்.இன்றைய குழந்தைகளும் அதிக பருமனாகி வருகிறார்கள்.அவர்களுக்கான உணவைத் தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமில்லாமல் இருப்பதே காரணம்.
                                  உடற்பயிற்சி உடல்நலத்திற்கும் மனநலத்திற்கும் பொதுவாக பரிந்துரைக்கப்படுகிறது.மிக அவசியமானதும் கூட! ஆனால் தொப்பையை கரைத்துவிடும் என்பதற்கான உத்தரவாதம் தருவது சாத்தியமல்ல! உணவு முறையில் மாற்றம் கொண்டுவருவதே ஒரே வழி.

-

Wednesday, December 28, 2011

ஹார்மோன்களின் விளையாட்டு


                                                                          உணர்ச்சிகளுடன் நெருங்கிய தொடர்புடையவை ஹார்மோன்கள்.பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர் இருபத்தாறு வயது நண்பருடன் சேர்ந்து மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவனை கொலை செய்து விட்டார்.மாணவர் 14 வயது காதலியுடன் பேசிக் கொண்டிருந்த்தை பையன் பார்த்துவிட்டான்.வெளியே சொல்லிவிடுவான் என்ற கலக்கத்தில் கொன்று விட்டார்கள்.
                                இம்மாதிரி பிரச்சினைகள் இன்று அதிகரித்து வருகிறது.சம்பவம் பற்றி பேசிக்கொண்டிருந்த இரண்டு ஆசிரியர்கள் சொன்னார்கள்,’’ இதெல்லாம் ஹார்மோன்களின் விளையாட்டு,அவர்கள் என்ன செய்வார்கள் பாவம்!”.ஹார்மோன்கள் என்றாலே பாலியல் தொடர்பான விஷயம் மட்டும்தானா? உடலில் பல்வேறு ஹார்மோன்கள் பலவித பணிகளை செய்கின்றன.

                                ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் ஈர்க்க ஹார்மோன் தான் காரணம்.பாலியல் ஹார்மோன்களின் வேலை இது.பாலியல் உணர்ச்சி மட்டுமல்லாது பயம்,கலக்கம் போன்ற உணர்ச்சிகளின் போது,சிக்கலான சூழ்நிலைகளில் அட்ரினலின் என்ற ஹார்மோன் சுரந்து உதவுகின்றது.குருதியில் கலந்து செய்தியை எடுத்துச் செல்பவை இவை.
                                உடல் இயக்கத்தில் ஹார்மோன்கள் முக்கிய செயல்பாட்டை கொண்டிருக்கின்றன.பிட்யூட்டரி சுரப்பியை தலைமை சுரப்பி என்பார்கள்.தலைமை என்று சொல்வதற்கு ஏற்றவாறு மூளையில் அமைந்திருக்கிறது.மற்ற சுரப்பிகளை கட்டுப்படுத்துகிறது.பலருக்கும் தெரிந்த இன்னொரு சுரப்பி தைராய்டு.இதன் மிகுதியும் குறைவும் பிரச்சினையை உண்டாக்கி தொடர் மருத்துவத்துக்கு இட்டுச்செல்கிறது.

                                பெண்ணின் கருப்பையில் உற்பத்தி செய்யப்படும் ஹார்மோன் ஈஸ்ட்ரஜன்.பெண் தன்மையை இந்த ஹார்மோன் தான் முடிவு செய்கிறது.கர்ப்ப பை வளர்ச்சி,அழகு போன்றவை இதைச் சார்ந்து இருக்கின்றன.இளமை இதன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்கிறது.இதெல்லாம் ஹார்மோன் செய்யும் வேலை என்று சொல்வார்கள்.
                                 ஆணுக்கும் பெண்ணுக்கு உற்பத்தி திறன் பாலியல் ஹார்மோன்களை சார்ந்து உள்ளது.இளமை தடுமாற்றத்தை சந்திப்பதற்கு இந்த ஹார்மோன்கள் அதிகரிப்பதே காரணம்.ஆணுக்கு டெஸ்ட்ரோஸ்ட்ரோன் உடல் மாற்றத்தை ஏற்படுத்துகிறது.நிறைய குழப்பங்களையும்,பிரச்சினைகளையும் கூட கொண்டு வருகிறது.ஆணுக்கு ஏற்படும் குறைபாடுகளுக்கு இந்த ஹார்மோனும் காரணமாக இருக்க முடியும்.

                                   ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் பெண்ணுக்கு சுரக்கும் ஹார்மோன் என்று பார்த்தோம்.பசுக்களில் இந்த ஹார்மோன்களை ஊசி மூலம் செலுத்துவதாக சொல்லப்படுகிறது.அதிக பால் உற்பத்திக்காக விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் செய்யும் தரக்குறைவான செயல். இவ்வாறு பால் மூலம் உடலுக்கு செல்லும் ஈஸ்ட்ரஜன் ஆண்களிடம் ஆண்மைக்குறைவை உண்டாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
-

Monday, December 26, 2011

நம்மை உணரும் தருணங்கள்.


                               புத்தகம் படித்துக் கொண்டிருக்கும்போது சிலர் உணர்ச்சிவசப் படுகிறார்கள்.சினிமா பார்த்துக் கொண்டிருக்கும்போது ஏதோ ஒரு காட்சியில் அழுகிறார்கள்.ஆனால் படம் பார்க்கும் அத்தனை பேரும் அழுவதில்லை.நாவல் படித்து திருந்தியவர்கள் இருக்கிறார்கள்.கலை,இலக்கியமெல்லாம் எல்லோரிடமும் ஒரே பாதிப்பை ஏற்படுத்துமா?
                                தோப்பில் முஹம்மது மீரானின் கடலோர கிராமத்தின் கதை நாவலை பலர் படித்திருப்பார்கள்.வெளியாகி அதிக விற்பனையான நாவல் என்று பேசிக்கொண்டார்கள்.ஒரு இரண்டாயிரம் இருக்குமா? தமிழ் எழுத்தாளன் நிலை அப்படித்தான்.கையில் புத்தகத்துடன் தெருவில் நடந்து கொண்டிருந்தேன்.50 வயதைக்கடந்த ஒருவர் பேச்சுக் கொடுத்தார்.
                                 எனக்கு தெரிந்தவர்தான்.கொஞ்சம் தனிமையில் சுற்றிக்கொண்டிருந்தார். என்ன புத்தகம்?என்று கையை நீட்டினார்.நான் படித்துவிட்டு தருகிறேன்என்று கேட்டார்.நான் படித்த பின்பு தருவதாக சொல்லிவிட்டு நகர்ந்துவிட்டேன்.சில தின்ங்களில் அவரைப் பார்த்து கொடுத்து விட்டேன்.
                                 அடுத்த நாளே தேடி வந்தவர் “புத்தகம் நேற்றே படித்துவிட்டேன்,கடைசியில் நான் அழுதுவிட்டேன்.’’ என்றார்.எனக்கு சங்கடமாக இருந்த்து.நாவலின் வெற்றி அது.ஆனால் எனக்கு அழுகை வரவில்லை.ஆனால் சந்தோஷமெல்லாம் இல்லை.என்னவொரு ஆர்ப்பாட்டம்,கொடுங்கோன்மை.அனுபவிக்கட்டும் என்றுதானே தோன்றவேண்டும்? ஏன் அழுகை வருகிறது?
                                  அவரைப்பற்றியே யோசித்துக்கொண்டிருந்தேன்.அரசுப் பணியில் இருந்து தற்காலிகமாக பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.கஷ்ட்த்தில் இருந்தார்.வெளியே தலைகாட்டவே ஒரு மாதிரியாக இருக்க வேண்டும்.ஆமாம் வாழ்ந்து கெட்டவர்.நாவலை படித்து அவருக்கு ஏற்பட்ட உணர்ச்சி அவருடைய சமகால வாழ்வை பிரதிபலிக்கிறது.
                                இன்னொரு நிகழ்வு.பேருந்து நிலையத்தில் நண்பர் ஒருவரைப் பார்த்தேன்.உடனிருந்த நண்பரை அறிமுகப்படுத்தினார்.தன்னுடன் பணிபுரிவதாகவும் வேறு ஊருக்கு மாற்றலாகி செல்வதாகவும் சொன்னார்.இருவரும் இறுக்கமான மனநிலையில் இருந்தார்கள்.நானும் அமைதியாக நின்று கொண்டிருந்தேன்.நண்பர் ஒரு பாடலை முணுமுணுத்தார்,கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்
                                 கனத்த மனத்துடன் கிளம்பிப் போவதாக பட்ட்து.என்னுடைய நண்பர் சொன்னார்,அவருக்கு இங்கேயே இருக்க விருப்பம்தான்.வேலை செய்யுமிட்த்தில் தேவையில்லாத பிரச்சினைகள்.அவராக மாற்றல் வாங்கிப் போகிறார்.மனசே சரியில்லை.எப்போதும் ஒன்றாகத்தான் இருப்போம்”. எனக்கு கருப்பு நிலா பாடலை முணுமுணுத்த அர்த்தம் புரிந்துவிட்ட்து.விடைபெற்றுச் சென்றவர் கருப்பு நிறத்தில் இருந்தார்.
                                  உன்னால் முடியும் தம்பி படம் பார்த்துக்கொண்டிருந்தோம்.கமல் வீட்டை விட்டு கிளம்புகிறார்.உடன் வந்த நண்பன் கண்ணை துடைத்துக் கொண்டான்.எனக்கு ஆச்சர்யமாக இருந்த்து.பிறகு தெரிந்து கொண்ட விஷயம்,அவர் வீட்டில் காலையில் சண்டை.வீட்டில் இருக்கவேண்டாம் எங்காவது போய்த்தொலை என்று அவனுடைய அப்பா திட்டியிருந்தார்.
                                  சில சூழல்களில் நாம் முணுமுணுக்கும் ஒரு பாடல் நம்முடைய மனநிலையை பிரதிபலிப்பதாக இருக்கலாம்.புத்தகத்தில் திரைப்பட்த்தில் ஒரு காட்சி ஏற்படுத்தும் உணர்ச்சி நமது வாழ்க்கை சம்பவங்களுடன் தொடர்பு கொண்டிருக்க வாய்ப்புண்டு.கொஞ்சம் கவனித்துப் பார்த்தால் நம்மை உணர்ந்து கொள்ள இவற்றிலும் சாத்தியம்தான்.
-

Saturday, December 24, 2011

காளான் சாப்பிட்டால் என்ன நன்மை?


                              நல்ல பசியாக உணர்ந்தேன்.நண்பர் ஒருவருடன் அருகில் உள்ள மெஸ் நோக்கி போய்விட்டோம்..நண்பர் காளான் தோசை சாப்பிடலாம் என்றார்.கோழிக்கறி,ஆட்டுக்கறி,மீன்,காளான் நான்கையும் தட்டில் வைத்து ஒன்று தேர்வு செய்யச்சொன்னால்,நான் காளானை தேர்ந்தெடுப்பேன்.காளான் தோசை வந்த பிறகு “இதில் காளானே இல்லை’’ என்று நண்பன் சண்டை பிடிக்க ஆரம்பித்தான்.தோசையில் காளான் மசால் வைத்துக்கொடுத்தால் அது காளான் தோசை.’’சிறுசிறு துண்டுகளாக இருக்கும் சார்என்று சமாளித்தவாறே சில துண்டுகளை வைத்தார்கள்.சண்டை பிடித்து கேட்டு வாங்காதவர்கள் துர்பாக்கியசாலிகள்.அவர்களுக்கு அதிக காளான் துண்டுகள் கிடைக்காது.

                             இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம்.நண்பன் ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருக்க நான் பால்யகால நினைவுகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.நான் மட்டுமில்லாமல் இன்று பலர் அப்ப்டித்தான்.உணவை பொறுமையாக ருசித்து சாப்பிடுபவர்கள் குறைவு.மனசு எங்கோ இருக்க கடனுக்கு விழுங்கிக் கொண்டிருப்போம்.சில நேரங்களில் அதிகமாகவோ,மிக குறைவாகவோ சாப்பிட்டு விடுவார்கள்.சாப்பிடுவது தியானம் போல இருக்கவேண்டும்.உள்ளம் உணவில் முழுமையாக குவிந்திருக்க வேண்டும்.நான் எப்போதும் அப்படி இல்லை.ஆனால் காளான் தோசை சாப்பிடும்போது மனசு கிராமத்துக்குப் போய்விட்ட்து.
                              பூமியிலிருந்து காளானை வெளிக்கொண்டு வருவது வான்மழை.நல்ல மழை பொழிந்து நிலம் குளிர்ந்திருக்கும்.சில நேரத்து மழை மனசையும் குளிர்வித்து நல்ல மனநிலையைத் தரும்.மழை இரவின் அடுத்த நாள் காலையில் காளானைத் தேடி வயல்வெளிகளில் சுற்றுவோம்.

எங்காவது மறைந்திருக்கும்.மண்ணில் வெள்ளையாக தெரிந்தால் மனம் பரபரக்க ஓடுவோம்.காளான் அப்போதுதான் மலர்ந்திருக்கும்.சில இடங்களில் கொத்தாகவும்,வேறு இட்த்தில் தனியாகவும் இருக்கும்.காளான் இதழ்களின் அடியில் குனிந்து பார்ப்போம்.மிக வெண்மையாக இருந்தால் அது நல்ல காளான் உண்பதற்கு ஏற்றது.
                                 காளானை சுற்றி மண்ணை பறிக்க ஆரம்பிப்போம். தண்டு வரை முழுமையாக எடுப்பது சவால்.வீட்டுக்கு கொண்டு வந்தவுடன் அன்றைய மெனு மாறிப்போகும்.மிக அதிகமாக கிடைத்தால் பக்கத்துவீட்டுக்கும் உண்டு.கிட்ட்த்தட்ட கறிக்குழம்பு சமையல்தான்.மசாலா தயாராகும்.தயாராகும் வரை மனசு காளானையே சுற்றிக்கொண்டிருக்கும்.எப்போதும் கிடைக்காத அபூர்வமான விஷயம்.குறிப்பிட்ட காலத்தில் இயற்கை தரும் அற்புதம்.அப்படி ஒரு சுவை.இப்போது செயற்கையாக தயாரித்து பாலிதீன் பாக்கெட்டில் வருகிறது.அரசு வேளாண்மை நிறுவன்ங்களில் பயிற்சி தருகிறார்கள்.உறவினர் ஒருவருடன் நானும் ஒரு நாள் பயிற்சிக்கு போனேன்.

                                                                                 காளான் நல்ல உண்வென்று சொன்னார்கள்.உடலுக்குத் தேவையான நல்ல பல சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.நாம் சாப்பிடும் குளுக்கோஸில் சேர்க்கப்படும் வைட்டமின் டி இதில் உள்ளது.பி வைட்டமின்களும் இருக்கிறது.உடல் வளர்ச்சிக்கு தேவையான தாது உப்புக்களும் நிறைந்திருக்கிறது.அதிகமாக புகழ்ந்து பேசினார்கள்.ஆனால் உண்மையான விஷயம்தான்.சிலருக்கு ஒத்துக்கொள்ளாது.அப்படிப்பட்டவர்கள் சாப்பிடாமல் இருப்பதே நல்லது.எனக்கு கொடுத்த பயிற்சி வீணாக போய்விட்ட்து.நான் குடிசைத்தொழிலாக செய்யவேயில்லை.நன்மை பயக்கும் உணவுப்பொருளை உணவில் சேர்ப்போம்.குடிசைத்தொழில் வளர்ச்சிக்கு உதவியது போலவும் இருக்கும்.
-

Friday, December 23, 2011

2011-அதிக வாசகர்கள் படித்த எனது பத்து பதிவுகள்


வலைப்பதிவுகளில் விதம்விதமாக எழுதிக் குவிக்கிறோம்.எம்மாதிரியான பதிவுகள் அதிக வாசகர்களை ஈர்த்தன என்பது நமக்கு உதவும்.இவை வாசகர்களின் மனப்போக்கை நமக்கு அறிவிக்கின்றன.அதிகம் படிக்கப் படும் பரபரப்பான அரசியல் பதிவுகளை நான் எழுதியதில்லை.சினிமா குறித்த இடுகைகளும் மிக குறைவு.தனி மனிதனுக்கு பயன் தரும் விஷயங்கள் முதன்மை பெற்றதை உணர முடிகிறது.தலைப்புக்கு அடுத்துள்ள எண்ணிக்கை எத்தனை பேர் படித்தார்கள் என்பதைக் குறிக்கிறது.

                                 பலருக்கு தொப்பை ஒரு பிரச்சினை.அதிக வாசகர்களை கவர்ந்த்தில் ஆச்சர்யம் இல்லை.பல ஆலோசனைகள் இருக்கின்றன.இப்பதிவும் தகவல்களை கூறியது.

                                    உண்மையாக நடந்த விஷயம்.சில நிகழ்வுகளில் நிஜமான காரணம் வெளியே வருவதில்லை.இறுதிவரை தெரியாமலேயே போய்விடுவதும் உண்டு.

                                    இதுவும் உண்மைசம்பவம்தான்.எதிர்பாராமல் நான் நேரில் சந்தித்த ஒரு நிகழ்வு.இதே போன்ற வேறொரு இளைஞர் காவல்துறையில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்க வைத்தார்.
                                   நாளிதழ் செய்தியை அடிப்படையாக கொண்டு ஒரு அலசல்.பெண்களின் சமூக நிலையை இது போன்ற செய்திகள் சிந்திக்கத் தூண்டுகின்றன.வறுமை,வரதட்சணை போன்றவை ஏற்படுத்தும் விளைவுகள்.

                                 நம்மில் பலருக்கு இதில் ஆர்வம் உண்டு.அந்த ஆர்வம் அதிகமானவர்களை படிக்கத் தூண்டியிருக்கிறது.இரண்டாம் பகுதியும் ஒரு பதிவாக தந்தேன்.

                                   அரசியல் பதிவுகளில் ஆர்வம் இல்லாவிட்டாலும் தேர்தல் நேரத்தில் ஓரிரு பதிவுகளை தந்தேன்.என்னுடைய நேரடி கள  அனுபவமும்,தமிழ்நாட்டின் முக்கியமான அரசியல் நிகழ்வும் அடங்கியிருக்கிறது.
                                    கள்ளக்காதல் எப்போதும் என் கவனத்தைக் கவர்ந்து வந்திருக்கிறது.இப்பிரச்சினை குறித்து வேறு சில இடுகைகள் தந்திருந்தாலும் அதிகம் படிக்கப்பட்ட பதிவு இது. குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தந்திரமாக தங்களது தவறுகளை மறைக்க முயல்வதை சொல்கிறது.
                                     தமிழ் நாட்டில் சாப்பிடாதவர்கள் இருப்பார்களா என்ன? நீர் வழி பரவும் நோயைத்தடுக்க கொதிக்கவைத்த நீர் பருகுவோர் கோட்டை விடும் இட்த்தை சுட்டிக்காட்டிய பதிவு.நிஜமாக நடந்த சம்பவம்.

                                     பரவலாக நம்மிடம் இருக்கும் நம்பிக்கையை உளவியல் ரீதியாக அலசப்பட்ட ஒரு பதிவு.கன்னத்தில் மை வைப்பது முதல் திருஷ்டி பூசணிக்காய் வரை சொல்லப்பட்டிருந்த்து.
                                     அனைவரும் அறிந்திருக்கவேண்டிய முக்கியமான பதிவு.இன்றைய பெரும் பிரச்சினை மனநலம்.நமது மனநலனை அறிந்து கொள்ள இப்பதிவு உதவும்.

-

Wednesday, December 21, 2011

சத்திய சோதனைகள்.


                               சத்தியத்தை கடைபிடித்தால் சோதனைக்கு உள்ளாகித்தான் தீர வேண்டுமா?நேர்மையாக இருப்பது பெரிய தவறா? எங்கெங்கும் லஞ்சமும் ஊழலும் பெருக்கெடுத்து ஓடும்போது நான் லஞ்சம் வாங்கமாட்டேன் என்றால்? அப்படியும் யாரோ ஒருவர் இருக்கவே செய்கிறார்கள்.பிறருடைய ஏளனத்தையும்,நமட்டுச்சிரிப்புக்கும் ஆளாகி நடமாடிக்கொண்டிருக்கிறார்கள்.
                               நேர்மை என்பது இன்று சமூகத்திற்கு எதிரான குணமாக பார்க்கப்படுகிறது.லஞ்சம் வாங்கமாட்டேன் என்பவர் ஓநாய்களுக்கிடையில் மாட்டிக் கொண்டு விழிப்பவர் போல இருக்கிறார்.கிட்ட்த்தட்ட தனிமைப்படுத்தப் படுகிறார்.ஒதுக்கப் படுகிறார்.அலுவலகத்தில் மனசாட்சி போல நடமாடிக் கொண்டிருக்கிறார்.மற்றவர்களை அந்த மனசாட்சி உறுத்துகிறது.
                                 தாங்கள் செய்வது குற்றம் என்ற எண்ணத்தை வலிமையாக உருவாக்குகிறார்.அவர்களிடம் குற்ற உணர்ச்சியை ஏற்படுத்துவதால் வெறுக்கப்படுகிறார்.சிக்கலான சூழ்நிலைகளில் உதவி தேவைப்பட்டால் சக பணியாளர்கள் கண்டு கொள்வதில்லை.காட்டிக்கொடுப்பாரோ என்ற பயம் அவர்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது.யாருடனும் அவர் நெருக்கமானவர் இல்லை.
                                  சத்தியத்தை கடைபிடிப்பேன் என்று சொல்லி ஏன் இத்தனை சோதனைகளை அனுபவிக்க வேண்டும்.இப்படி ஒதுக்கப்படுவதால் மனம் பாதிக்கப்படாதா? பாதிக்கப்படாமல் இருப்பதும் சாத்தியம்தான்.மற்றவர்கள் பார்வையில் இவர் பைத்தியக்காரனாக இருக்கும்போது இவருக்கு மற்றவர்கள் அப்படி தெரிவார்கள்.தான் நேர்மையானவன் என்ற எண்ணம் சுய மதிப்பை அதிகப்படுத்துகிறது.
                                  தன்னை அவர் பெருமையாக நினைத்துக் கொள்கிறார்.குற்ற உணர்ச்சி இல்லாமல் இருப்பதால் நிம்மதியாக இருக்கிறார்.மோசமான பழக்கவழக்கங்கள் இல்லாமல் இருப்பவர்களே அதிகம்.லஞ்சம் வாங்குபவர்களை இவர் கேலியாகப் பார்ப்பார்.இவர்களில் சிலர் மனதளவில் பாதிக்கப்படுவதும் உண்டு.சரி ஏன் யாரோ ஓரிருவர் மட்டும் இப்படி இருக்கிறார்கள்?
                                                                           ஒருவர் என்னிடம் கை சுத்தமான ஆள் ஒருவரைப்பற்றி பேசியது நினைவுக்கு வருகிறது.அவனுக்கு பயம் சார்,தைரியம் இல்ல! மாட்டிக்கிட்டா மானம் போயிடுமேன்னு நடுக்கம்,நாட்டக் காப்பாத்தப்போறானா என்ன? கொஞ்சம் எரிச்சலாக சொன்னாலும் இப்படி இருக்கவும் வாய்ப்புண்டு.சட்டம்,விதிகள் ஆகியவற்றின் நோக்கம் இதுதான்.தண்டனை கிடைக்கும் என்ற பயத்தில் குற்றம் செய்யாமல் இருப்பார்கள்.
                                 சிலர் நல்ல புத்தகங்களை படித்து தொலைத்து விடுகிறார்கள்.தனக்கென்று கொள்கைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.அநியாயத்திற்கு எதிராக எப்போதும் சிந்திக்கிறார்கள்.ஒழுக்கம் நிறைந்த ஆளுமையை பெற்றிருக்கிறார்கள்.மிகச் சிலருக்கு சின்ன வயதில் இருந்தே பொய் சொல்லி,தவறு செய்தே பழக்கம் இருக்காது.நல்ல சூழலில் இருந்து வந்திருப்பார்கள்.
-

Tuesday, December 20, 2011

எலுமிச்சைக்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்?


புத்தாண்டு இன்னும் சில பதிவுகளுக்குள் வந்துவிடும்.முக்கியமானவர்களை சந்திக்க போக வேண்டுமானால் வெறும் கையோடு போக முடியாது.நமக்கு எப்போதும் எலுமிச்சைதான் வசதி.கல்யாணம்,கோயில் என்று பயணம் கிளம்புகிறார்கள். சக்கரத்தின் அடியில் எலுமிச்சை வைக்கிறார்கள்.அருள்வாக்கு இல்லாத பகுதிகள் குறைவு.பெரும்பாலும் எலுமிச்சம்பழத்தை மந்தரித்து தருகிறார்கள்.
                                எலுமிச்சைக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம்? அப்படி என்ன இருக்கிறது அந்த சிறிய பழத்தில்? இத்தனைக்கும் புளிப்பு.சுவைக்கு காரணம் அதில் உள்ள அமிலம்.அஸ்கார்பிக் அமிலம் என்று சொல்வார்கள்.உயிர்ச்சத்து(vitamin) சி குறிப்பிட்த்தக்க அளவு இருக்கிறது.வாசனைப்பொருளாக உணவில் சேர்க்கும் பொருளாக மதிப்பு பெற்று விளங்குகிறது.
                                 இந்தியாவின் பெருவாரியான மக்களுக்கும் நுண் ஊட்டச்சத்துக் குறைபாடு ஒரு பிரச்சினை.அதிலும் சி வைட்டமின் உடலில் சேர்வது மிக குறைவு.இச்சத்து அதிகம் உள்ள சிட்ரஸ் வகை பழங்களில் ஏழைகள் அதிகம் நுகர வாய்ப்புள்ளது எலுமிச்சை மட்டுமே! மற்றவை எல்லா கிராமங்களிலும் கிடைக்கும் பழங்கள் அல்ல!
                                  குளிர்பானம் என்றால் கூட ஏழைகளுக்கு எலுமிச்சைதான் தேர்வு.மற்றவை விலை அதிகம்.வெயிலுக்கு வீட்டில் உடனடியாக தயாரிக்க முடியும் குளிர்பானமும் இதுதான்.எலுமிச்சை சாதம் எளிய தயாரிப்பு.ஊறுகாய் பலருக்கு பிடித்தமான பொருள்.இப்படி குறைந்த விலையில் முழு ஆரோக்கியம் எலுமிச்சை ஒன்றால்தான் சாத்தியம். 
                                  நாம் வெயில் காலத்தில்தான் எலுமிச்சையை நாடுவோம்.குளிர்ச்சி என்பதால் நல்லது என்பது நம் எண்ணம்.ஆனால் குளிர்காலத்தில் பயன்படுத்துவது அதைவிடவும் நல்லது.இப்பருவத்தில் தோல்நோய்கள் அதிகம்.தோலில் ஏற்படும் பிரச்சினைகளுக்கு அதிக அளவு சி வைட்டமின் பரிந்துரைக்கப்படுகிறது.தவிர இப்போது ஒரு லெமன் ஜூஸ் குடித்தால் பழத்தின் முழுப்பயன் கிடைக்க வாய்ப்புண்டு.
                                  வெயில் காலத்தில் கடைகளில் குடிக்கும் எலுமிச்சை பானத்திலும்,சாதம் போன்றவற்றிலும் வெறும் வாசனை மட்டுமே இருக்கும்.விலை காரணமாகவும் அதிக நுகர்வு காரணமாகவும் கடை வைத்திருப்பவர்கள் அப்ப்டித்தான்! குளிர் காலத்தில் நிஜமாகவே லெமன் இருக்க வாய்ப்புண்டு.பலனும் அதிகமாக இருக்கும்.எனக்கு ஜலதோஷம் வந்து விடும் என்பவர்கள் தவிர்த்துவிடலாம்.
                                 உண்மையில் எலுமிச்சை ஜலதோஷத்தை தடுக்கவே செய்யும்.போதுமான அளவு சி வைட்டமின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மூலமாக இந்நோய்களை விரட்டும்.எனவே குளிர் காலத்திற்கும் ஏற்ற முக்கியமான கனி எலுமிச்சை.ஏதோ ஒரு வித்த்தில் உணவில் சேர்க்கலாம்.
                                  எலுமிச்சம்பழத்தை தலைக்கு தேய்த்து குளிஎன்று கிண்டலாக சொல்வார்கள்.பித்துப் பிடித்தவன் என்று கலாய்ப்பதற்காக நண்பர்கள் சொல்வது.தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகு போய் சுத்தமாக ஆகி விடும்.ஆனால் உண்மையில் பித்துப் பிடித்தவன் போல இருப்பவனை உற்சாகமாக்கு சக்தி எலுமிச்சைக்கு உண்டு.
                                    இப்பழத்தில் உள்ள வைட்டமின் இரும்புச் சத்து கிரகிக்க உதவுகிறது.போதுமான அளவு இரும்புச்சத்து சோர்வின்றி செயல்பட அவசியமான தேவை.மலச்சிக்கல்,சில வயிற்றுக்கோளாறுகளுக்கும் அருமருந்து.ஏழைகளுக்கு மட்டுமின்றி அனைவருக்கும் ஏற்ற கனி இது.உள்ளே  விஷயம் இல்லாமலா இந்தளவு முக்கியத்துவம் பெற்றிருக்கும்?
-

Monday, December 19, 2011

மம்பட்டியான் நினைவுகள்.


சிறுவயதில் ம்ம்பட்டியான் கதை கேட்ட நினைவு இன்னும் இருக்கிறது.பெரியப்பா வீட்டில் இருந்தேன்.மலையோர கிராமத்திலிருந்து ஒரு பாட்டி வந்திருந்தார்.அண்ணன்களுக்கு(பெரியப்பா மகன்கள்) அம்மாவைப்பெற்ற பாட்டி.ஒரு கிளியை கூண்டில் அடைத்து எடுத்து வந்திருந்தார்.குச்சி செருகியிருந்த்து.அவ்வளவு உறுதியான கூண்டு இல்லை.
                            மனம் முழுக்க கிளியிடமே இருக்கிறது.அதன் அழகை பார்க்க பார்க்க சலிக்கவில்லை.கிளி பேசுமா? என்று கேட்டேன்.சொல்லிக்கொடுத்தால் பேசும்.இன்னும் பழகவில்லை.நேராக காட்டில் இருந்து கொண்டு வருகிறேன்.எனக்கு இப்படி ஒரு பாட்டி இல்லாயே என்று கவலையாக போய்விட்ட்து.அன்று இரவு அங்கேயே தங்கிவிட்டேன்.

                              பாட்டி ம்ம்பட்டியான் கதை சொல்ல ஆரம்பித்தார்.உணர்ச்சிப்பெருக்கோடு சொல்லிக் கொண்டு வந்தார்.மலையூருக்கும் அவருடைய கிராமத்திற்கும் சில கிலோமீட்டர் தூரம் இருக்கும் என்று நினைக்கிறேன்.அவர் மிகவும் மரியாதையுடன் குறிப்பிட்ட்தாக நினைவு.கிட்ட்த்தட்ட கதாநாயகனாக வர்ணித்தார்.கேடக சந்தோஷமாக இருந்த்து.
                              சந்தைக்கு போயிருந்தபோது ம்ம்பட்டியான் பற்றிய புத்தகம் பார்த்தேன்.கிராமத்தில் இருப்பவர்களுக்கு வாராவாரம் கூடும் சந்தைதான் சூப்பர் மார்க்கெட்.இப்போது சந்தைகள் களையிழந்து விட்டன.சினிமா பாடல்கள்,மாரியம்மன் தாலாட்டு,ம்ம்பட்டியான் கதை போன்ற புத்தகங்களை வைத்து விற்றுக்கொண்டிருப்பார்கள்.

                              மேற்கண்ட பின்னணியாகத்தான் இருக்கவேண்டும்.தியாகராஜனின் மலையூர் ம்ம்பட்டியான் பட்த்தை நான் பார்க்கவில்லை.1983 ல் நான் சின்னப்பையன்.யார் கூட்டிப்போவார்கள்?பிரசாந்த் நடித்து வெளியாகியுள்ள பட்த்தை பார்க்கலாம் என்று தோன்றிவிட்ட்து.நாற்பது ரூபாய்தானே போனால் போகிறது.இருக்கைகள் கொஞ்ச நேரத்திலேயே நிரம்பி விட்ட்து.தியேட்டர் முழுக்க நிரம்பியதைப் பார்த்து பலகாலம் ஆகிவிட்ட்து.
                                                                            திருவிழா ஒன்றில் பெற்றோரைக் கொன்றவர்களை பழிவாங்கி விட்டு காட்டுக்குள் மறைகிறார் ம்ம்பட்டியான்.அதே வீரப்பன் காடுதான்.போலீஸ் தேடுகிறது.இருப்பவர்களிடம் பறித்து இல்லாதவர்களுக்கு உதவி செய்கிறார்.கிராமத்து மக்கள் மிகவும் மரியாதை வைத்திருக்கிறார்கள்.காவல்துறைக்கு அடிக்கடி டிமிக்கி கொடுத்துவிட்டு தப்பிக்கிறார்.போலீஸ் ம்ம்பட்டியான் தலைக்கு வைத்த விலை நல்லவனை கெட்டவனாக்க படம் முடிகிறது.

                                  மலையோர கிராமங்கள்,கல்வீடு,அருவி,காடு என்று பார்க்க சந்தோஷமான லொகேஷன்.வடிவேல் வெகு நாட்களுக்குப் பிறகு வெள்ளித்திரையில்! தனது வழக்கமான உடல் மொழியுடன் அதேவடிவேல்.திரைப்பட்த்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்.பிரகாஷ்ராஜ் போலீஸ் அதிகாரி பாத்திரத்தில் விரைப்பாக இருக்கிறார்.அவருக்கு யாராவது நடிப்பு சொல்லித்தரவேண்டுமா என்ன?
                                 ஒரு காலத்தில் தமிழ்சினிமாவுக்கு ஒரு ஃபார்முலா இருந்த்து. பட்த்தில் அவசியம் ஒரு கவர்ச்சி நடிகை இடம்பெற வேண்டும்.முமைத்கான் படம் முழுக்க தாராள கவர்ச்சியாம்.!?நடனமாடுபவர் என்றால் மட்டும் படம் முழுக்க அரைகுறை உடையுடனே இருக்கவேண்டுமா என்ன?  இதனால்தான் படம் ஓடுகிறது என்று எண்ணி தொடராமல் இருந்தால் நல்லது.

                                 கதாநாயகி கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை சிறப்பாகவே செய்துவிட்டார்.பழைய பாடல்கள் இப்போதும் கேட்க அவ்வளவு சுகம்.பட்த்திற்கு நல்ல வசூல் நிச்சயம் என்றுதான் தோன்றுகிறது.மற்றபடி தொழில்நுட்பம் எனக்கு அவ்வளவாக தெரியாது.நான் சினிமா விமர்சகனும் அல்ல!

-