Friday, July 26, 2013

எய்ட்ஸ் இப்படியும் பரவுமா?இந்தியாவில் 1986  ஆம் ஆண்டு சென்னையில்தான் எச்.ஐ.வி கண்டறியப்பட்ட்து.சில ஆண்டுகள் கழித்து எங்கள் பக்கத்து கிராமத்தில் நடந்த விஷயம் இது.தொலைதூர வாகன ஓட்டுநர் அவர்.எய்ட்ஸ் நோய் முற்றிய நிலையில் இருந்தார்.அப்போது எச்.ஐ.வி கட்டுப்படுத்தும் மருந்துகள் இல்லை.(எச்.ஐ.வி என்பது வைரஸ்,எய்ட்ஸ் என்பது பல்வேறு நோய்களின் கூட்டு.எச்.ஐ.வி யால் நோய் எதிர்ப்பு சக்தி பெருமளவு குறைந்த பின்னர் இந்நிலை ஏற்படும்).மேலும் தகவல்களுக்கு பிரபல இடுகைகள் பகுதியில் உள்ள எய்ட்ஸ் பற்றிய இடுகையை படிக்கவும்.


எய்ட்ஸ் நிலையில் இருந்த வாகன ஓட்டுநர் விஷயத்திற்கு வருவோம்.மருத்துவமனையில் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லிவிட்டார்கள்.அவரை வீட்டுக்கு கொண்டுவராமல் நேரடியாக சுடுகாட்டில் கொண்டுபோய் போட்டுவிட்டார்கள்.சில நாட்களில் அவர் இறந்துவிட்டார்.சுமார் இருபது ஆண்டுகளுக்குப்பிறகு இப்போது உத்திரப்பிரதேச கிராமத்தின் செய்தியை படித்தேன்.எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட பெற்றோருக்குப்பிறந்த குழந்தைகள் சுடுகாட்டில் வாழ்க்கை நட்த்துகிறார்கள்.அவர்களுக்கும் எச்.ஐ.வி இருக்கலாம் என்ற கலக்கத்தில் உறவினர்களால் ஒதுக்கப்பட்டார்கள்.

எச்.ஐ.வி. எப்படி பரவும்,பரவாது என்பது தெரியாத நிலைதான் ஒதுக்குதலுக்கான முக்கியமான காரணம்.இருபது ஆண்டுகளுக்குப்பிறகும் அறியாமை அகலாமல் இருப்பது ஆச்சரியமான விஷயம்தான்.பல பட்டம் பெற்றவர்களிடம் கூட இந்த அறியாமை இருக்கிறது.நாட்டின் சமூக,பொருளாதார காரணிகளைப் பாதிக்கும் ஒரு நோயைப்பற்றித் தெரிந்து கொள்ளும் ஆர்வம் இயல்பாகவே இருக்கவேண்டும்.நாம் சினிமா செய்திகளில் காட்டும் ஆர்வம் இது போன்ற விஷயங்களில் இருப்பதில்லை.


மீன் தண்ணீரில் வாழ்வது போல மனித உடலுக்கு வெளியே எச்.ஐ.வி உயிர் வாழாது.பாதிக்கப்பட்டவரின் இரத்தம், உடல் திரவங்களில் இந்த வைரஸ் உயிருடன் இருக்கும்.தொடுவதனாலோ,நமது வீட்டில் இருப்பதனால்,கழிப்பறையை பயன்படுத்துவதால்,ஒன்றாக சாப்பிடுவதால் வைரஸ் பரவாது.பெரும்பான்மையாக உடலுறவு மூலம் பரவுகிறது.பரிசோதிக்காமல் பாதிக்கப்பட்டவரின் இரத்தம் ஏற்றுவதன் மூலமும்,தாயிடமிருந்து குழந்தைக்கும்,ஊசி மூலமாகவும்(போதை ஊசி பகிர்ந்து கொள்பவ்ர்களிடையே) பரவ வாய்ப்பிருக்கிறது.தாயிடமிருந்து குழந்தக்குப்பரவுவதை இப்போது பெருமளவு தடுக்க முடிந்திருக்கிறது.

எச்.ஐ.வி. உள்ளவர்களை ஒதுக்குவது அறியாமையின் உச்சம்.இது எச்.ஐ.வி பரவலைக்கட்டுப்படுத்துவதில் பெரும் தேக்கத்தை ஏற்படுத்தும்.எய்ட்ஸ் தனிமனித பிரச்சினை மட்டுமல்ல, சமூக பொருளாதார பிரச்சினையும் கூட! ஒவ்வொரு குடிமகனுக்கும் இதனால் பாதிப்பு உண்டு.இத்தனை வருடங்களில் ஊடகங்களில் இது பற்றிய தகவல்கள் வராமல் இல்லை.


நமக்கு இவற்றில் ஆர்வம் இல்லை என்பதே நிஜம்.உத்திரப்பிரதேச கிராமத்தில்படித்தவர்கள், பட்டம் பெற்றவர்கள் யாரேனும் இருக்கலாம்.அருகில் உள்ள ஒரு மருத்துவர் அல்லது மருத்துவமனையை அணுகி எச்.ஐ.வி பற்றி கேட்டிருக்கமுடியும்.இதன் மூலம் கிராமத்தில் மற்றவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க முடியும்.
-

Wednesday, July 17, 2013

குழந்தை வளர்ப்பில் முக்கியமானவை!லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று சொல்கிறார்கள்.எதிரில் நிற்பவன் ஏழை என்று தெரியும்.அவன் கடன் வாங்கித்தான் கொடுக்கவேண்டும்.அடுத்தவன் கஷ்டம் நமக்கு முக்கியமல்ல்! பாலியல் தொல்லைகள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.வன்கொடுமைகளுக்கு முடிவில்லை.தங்களது கீழ்த்தரமான ஆசைகளுக்காக உயிர்களைப் பலியாக்குவது பற்றி கவலைப்படுவதேயில்லை.இன்னும் இன்னும் இருக்கிறது.இத்தகைய பிரச்சினைகளுக்குப் பின்னால் உள்ள விஷயம் இதுதான் –நாம் சக மனிதனை எந்திரமாகவே பார்க்கிறோம்.நமது விருப்பத்தை நிறைவேற்றுபவர்களாக இருக்கவேண்டுமென்று கருதுகிறோம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எந்திரமாக நினைத்துக்கொள்வதில் பிரச்சினை துவங்குகிறது.நான் விரும்பும் படிப்பை படிக்கவேண்டும் என்று சொல்கிறார்கள்.தாங்கள் சொல்லும் பையனை,பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்கிறார்கள்.அவர்களுக்கு நல்லது எது என்று எனக்குத்தெரியும் என்பார்கள்.குடும்பங்களைக் கவனிக்கும் பலருக்குத்தெரியும்.பெரும்பாலும் இவையெல்லாம் தந்தையால் எடுக்கப்பட்ட முடிவாக இருக்கும். தனது மனைவிக்கு,குழந்தைகளுக்கு மனம் என்று ஒன்று இருக்கிறது என்பது அவர்களுக்கு பொருட்டே அல்ல!

மனத்தினை மறுத்து எந்திரமாக மட்டுமே கருதி வளர்க்கப்பட்ட ஒருவர் சக மனிதனையும் அப்படியே கருதுகிறார்.இன்னொரு மனிதனை புரிந்து கொள்வதில் பிரச்சினை இருக்கிறது.இதன் முதல்படியாக கவனமாக கேட்பது பற்றி சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.நம்மைச்சுற்றி உள்ளவர்களை புரிந்து கொள்ள அவர்களது உணர்வுகளை நாமும் உணரவேண்டும்.இன்றைய மனிதனின் ஆகப்பெரிய துக்கமெல்லாம் என் உணர்வுகளை யாரும் புரிந்து கொள்ளவில்லை என்பதாக இருக்கிறது.

ஆங்கிலத்தில் empathy என்ற சொல்வார்கள்.தமிழ் அகராதிகளில் சில இடங்களில் பச்சாதாபம் என்று போட்டிருக்கிறார்கள்.கற்பனையாக இன்னொருவரின் உள்ளக்கிளர்ச்சியை உணர்தல் என்று சில இடங்களில் இருக்கிறது.இன்று வளர்த்தெடுக்க வேண்டிய திறமை என்பது இதுதான்.குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைவருக்கும் தேவைப்படும் ஒரு திறமை.I feel how you feel என்று புரிந்து கொள்ளலாம்.கணவன்,மனைவி ஆகட்டும்,பெற்றோர் குழந்தைகள் ஆகட்டும்,நண்பர்கள்,உடன் பிறந்தவர்கள்என எல்லா உறவுகளிலும் இதுவே முக்கியமானது.ஆமாம்,நீங்கள் உணர்வதை நானும் உணர்ந்தால்? பிரச்சினைகளின் தீர்வு இங்கேதான் இருக்கிறது.நம்மால் அப்படி உணரமுடியாமல்தான் அவர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

கற்பனையாக மற்றவர் உணர்வதை உணரும் திறமையை குழந்தைகளிடம் வளர்க்கவேண்டும். அப்படியானால் நாம் கற்பனைவளத்தை குழந்தைகளிடம் உருவாக்கவேண்டும்.ஏழை,எளியவர்களுக்காக பரிந்து பேசுபவர்களைப் பார்த்திருக்கிறோம்.அவர்களின் உணர்வுகளைப்புரிந்து கொண்டு பேசுகிறார்கள்.சமூகத்தின் பல விஷயங்களை விவாதிக்கிறார்கள்.அவர்கள் எங்கிருந்து அந்த்த் திறமையை பெற்றார்கள்? அவர்கள் பாடப்புத்தகங்களைத்தாண்டி பல்வேறு விஷயங்களை படிக்கிறார்கள்.


Empathy  என்பதை கூடுவிட்டுக்கூடு பாய்வது என்றும் நாம் சொல்லலாம்.நம்முடைய எழுத்தாளர்களை நாம் இப்படி சொல்கிறோம்.அவர்கள் இத்திறமையை எங்கிருந்து பெற்றார்கள்? கவனித்துக்கேட்பதன் மூலமாகவும்,பள்ளிப்படிப்பைத்தாண்டி ஏராளமான நூல்களைப் படித்தும் பெற்றார்கள்.கலை இலக்கியம் தவிர்த்து இத்திறமையை வளர்த்துக்கொள்வது சாத்தியமானதல்ல! பலருக்கு இந்த அனுபவம் இருக்க முடியும்.சினிமா பார்த்து உணர்ச்சிவசப்படுகிறோம்.நடிப்பவரின் துயரத்தில் நாமும் பங்குபெறுகிறோம்.நாவலில் கதை மாந்தர்களின் உணர்ச்சியை நாமும் அனுபவிக்கிறோம்.நிஜத்தில் அப்படி ஒரு சூழ்நிலையை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

குழந்தைகளுக்கு கதை சொல்வதுதான் முதல்படி.அத்தைகளும் பாட்டிகளும் இதை சிறப்பாக செய்து வந்தார்கள்.இன்றைய சூழல் அப்படி இல்லை.சிறுவர்களுக்கான இலக்கியம்,கலை வளராத சமூகம் ஆரோக்கியமற்றதாகவே இருக்கும்.உரிய நேரத்தில் புத்தகங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.பாதி கதை சொல்லிவிட்டு மீதி கதையை அவர்களாக உருவாக்கத் தூண்ட வேண்டும்.குழந்தைகள் கற்கும் திறனில் கற்பனை வளம் நல்ல மாற்றத்தைக்கொண்டு வரும்.சென்ற பதிவில் கூறியவாறு கவனித்துக்கேட்கவும்,சக மனிதர்களின் உணர்வுகளைப்புரிந்து கொள்ளும் திறனும் பெற்றுவிட்டால் போதுமானது.எத்தகைய சூழ்நிலையிலும் ஒருவரால் சிறப்பாக இயங்க முடியும்.

ஆனந்த விகடனில் ஒரு வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார்கள்.சிறுவர்களுக்கு கதை தேடி அலையவேண்டாம். http://www.tamilsirukathaigal.com/
-

Sunday, July 7, 2013

குழந்தைகளிடம் வளர்க்கவேண்டிய திறமைகள்.பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்ல வேண்டியம் கட்டாயத்தில் இருக்கிறார்கள். கிடைக்கும் நேரத்தையும் தொலைக்காட்சிப்பெட்டி விழுங்கித் தொலைக்கிறது.தாத்தா பாட்டியும் அருகில் இல்லை.பக்கத்தில் இருந்தாலும் அவர்களுக்கு குழந்தைகளை வசீகரிக்கும் கதைகள் தெரியாது. அவர்களும் தொலைக்காட்சிப்பெட்டியே கதியாக கிடக்கிறார்கள்.இன்று குழந்தைகளையின் நிலை பரிதாபகரமானது.வாய்ப்பு கிடைத்தால் யாரிடமாவது ஒப்படைத்துவிட்டு விலகிவிடவே முயற்சி செய்கிறார்கள்.இன்று பலரிடமும் காணப்படும் நோய்க்கூறுகளுக்குக் காரணம் சமூகத்தை எதிர்கொள்வதில் உள்ள பிரச்சினைகள்தான்.

நல்லவன் கெட்டவனை பிரித்தரிய முடியவில்லை.யாரை நம்பி என்ன பேசுவதென்று தெரியவில்லை.உடனிருப்பவர்களை புரிந்து கொள்வது எளிதாக இல்லை.நாலுபேர் மதிப்பதில் பெரும்பிரச்னை நிலவுகிறது.விவாகரத்துக்கள்அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.மதிப்பீடுகள் சரிந்துகொண்டிருக்கின்றன.புரிந்துகொள்ளும் திறனையும்,பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வலிமையையும் உருவாக்குவதே முக்கியமானதாகத் தோன்றுகிறது.

ஒருவர் பேசுவதை பொறுமையாகவும் கவனமாகவும் கேட்டாலன்றி அவரை நம்மால் புரிந்துகொள்ள முடியாது.கவனமாக கேட்பது என்பது அவசியம் வளர்க்கவேண்டிய திறமை.இதற்கு பெற்றோரே நல்ல முன் மாதிரியாக இருக்க முடியும்.பள்ளியில் இருந்து வந்தவுடன் அன்று நடந்த பாடங்களையும்,நிகழ்வுகளையும் கேளுங்கள்.அதிக ஆர்வத்துடன் கேளுங்கள்.இன்னும் இன்னும் கூறுமாறு உற்சாகப்படுத்துங்கள்.வேறு எவற்றிலும் கவனத்தை சிதறவிடவேண்டாம்.உண்ணும்போது கேட்கவேண்டாம்.அவர்களது உணர்வுகளை கவனியுங்கள்.நீங்கள் கவனித்த விஷயத்தை அவர்களிம் தெரியப்படுத்துங்கள்.

குழந்தைகள் பெற்றோர்களையே பின்பற்றுகின்றன என்பது நமக்குத்தெரியும்.தாய்தந்தையைப் பின்பற்றி கவனமாக்க் கேட்பது அவர்களுக்குப் பழக்கமாகிவிடும்.குழந்தைகளிடமும் இத்திறமை இயல்பாக உருவாகிவிடும்.அன்றைய நிகழ்வுகளை பெற்றோரிடம் சொல்ல வேண்டிய நிலையில் பள்ளியில் முழுமையாக கவனிக்கும் திறமை உருவாகும்.இதனால் அவர்களது நினைவாற்றல் நாமே வியக்கும் அளவு அதிகரிப்பதை உணரமுடியும்.சென்ற பதிவில் குறிப்பிட்டுள்ளவாறு வெளியே கொட்டிவிடுவதால் மனச்சுமை அகன்றுவிடும்.

உற்றுக்கேட்கும் பெற்றோர்களிடம் மட்டுமே குழந்தைகள் அதிக நெருக்கமாக இருப்பார்கள்.உணர்வுப்பூர்வமான பிணைப்பை ஏற்படுத்திக்கொள்வார்கள்.வளரிளம்பருவத்தில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் ஏற்படும் இடைவெளி பெருமளவு குறையும்.குடும்பத்தில் ஒவ்வொருவருக்குள்ளும் புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்கும்.இப்படி எல்லாம் செய்வானென்று நான் நினைக்கவில்லை என்று புலம்ப வாய்ப்பில்லாமல் போகும்.உறவினர்களை நண்பர்களை எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் என்பதால் வாழ்க்கை எளிதாக இருக்கும்.

கேட்டல் திறன் பற்றி பலர் எனது பதிவில் ஏற்கனவே படித்திருக்கமுடியும்.நம் எல்லோருக்கும் இத்திறமை அவசியமானதுதான்.ஆனால் நம்மில் பலருக்கு சாத்தியமில்லாமல் இருக்கிறது.நகைச்சுவை என்றால் பிடிக்கிறது.பிரச்சினைகளை பேசும்போது நமக்குப்பிடிப்பதில்லை.குழந்தை நிலையிலேயே வளர்த்துவிட முடியும். குழந்தைகள் மீதான வன்முறை,நெருக்கடியான சூழலில் நேரம் ஒதுக்க முடியாத நிலையில் இதன் முக்கியத்துவத்தை புரிந்து கொள்ள முடியும்.தவிர ஐந்தில் வளைப்பது மிக எளிதான ஒன்று.குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்கித்தான் ஆகவேண்டும்.இல்லையெனில் நாம் எவ்வளவு சம்பாதித்தாலும் கண்ணைவிற்று சித்திரம் வாங்கிய கதைதான்.இன்னும் சில முக்கியமான விஷயங்கள் அடுத்த பதிவில்...
-