Monday, May 26, 2014

மழையைப்பற்றிய குறிப்புகள்பெருமழைக்குப்பிறகு மனித முகங்கள் உயிர் பெற்றுவிடுகின்றன.மனிதன் என்றில்லை,புவியின் அத்தனை உயிர்களும்தான்.மழை செழிப்பைக் கொண்டு வருகிறது.மனித மனத்தின் ஆழத்தில் மழைக்கான ஏக்கம் இருந்து கொண்டிருக்கிறது.பூமி மட்டுமல்லாமல் மனித மனமும் குளிர்ந்து உவகை அடைகிறது.மனிதர்கள் சந்தோஷமான வார்த்தைகள் பேசுவதை நீங்கள் கவனிக்கமுடியும்.

மழை மனங்களில் அமைதியைக்கொண்டு வருகிறது.அமைதியான மனம் நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.நல்ல கோடை மழைக்கு அடுத்தநாள் காலை.`` இரவு நன்றாக தூங்கியிருப்பீர்களே``என்று நண்பர் கேட்டார்.அவரது முகமெல்லாம் சந்தோஷம்.அது உண்மைதான்.புழுக்கமும் வியர்வையும் காணாமல் போய் இதமான சூழல் நிலவியது.

நிறைய முறை மழையில் நனைந்திருக்கிறேன்.நிலத்திலிருந்து வீட்டுக்கு வந்து சேர இரண்டு கிலோமீட்டர் நடக்கவேண்டும்.விட்டுவிட்டு தொடர் மழை பெய்து கொண்டிருந்தது.குடைபிடித்து நடந்து கொண்டிருக்கிறேன்.தூறல் பெருமழையாக மாறிவிட்டது.வழியில் அரைகிலோமீட்டருக்கு ஒரு வீடுதான் இருக்கும்.ஒதுங்குவதற்கு இடமில்லை.குடையைத்தாண்டி நனைந்துவிட்டேன்.

வழியில் ஏரியைக் கடந்து செல்லவேண்டும்.ஏரி முழுக்க நீர் நிரம்பிவிட்டது.கிட்டத்தட்ட இடுப்பளவு நீரில் ஏரியைக்கடந்து சென்றேன்.ஏரியிலிருந்து நீர் வெளியேறிக்கொண்டிருக்கிறது.ஊரை நெருங்கும்போது ``ஏரி கோடி போய்விட்டதா?`` என்று கேட்டார்கள்.ஆமாம்,அந்த மகிழ்ச்சியான செய்தியை நான் தான் சொன்னேன்.

அந்த மழையில் பல ஏரிகள் நிரம்பிவிட்டதாகச் சொன்னார்கள்.ஒரு ஏரி நிரம்பினால் அடுத்த ஏரியை நிரப்ப தண்ணீர் பாய்ந்தோடும்.இன்று பல இடங்களில் அந்த வாய்க்கால்கள் ஏன் ஏரியே காணாமல் போய்விட்டது.அதற்குப்பிறகும் ஒரு முறை ஏரி நிரம்பி வழிந்தது.ஒருநாள்இரவிலேயே அந்த அதிசயம் நடந்தது.ஓர் இரவு முழுக்கப்பெய்த கன மழையில் அந்த அற்புதம் வாய்த்தது.அதற்குப்பிறகு இன்றுவரை அந்தக்காட்சியைப் பார்க்கும் சந்தர்ப்பம் வரவில்லை.

ஏரி நிரம்பிவிட்டால் பக்கத்தில் உள்ள கிணறுகளும் வேகமாக நிறையத்துவங்கும்.நீர் இறைக்கும் மோட்டார்கள் பெரும்பாலும் கிணற்றின் நடுவே இருக்கும்.மோட்டார்களை மேலே தூக்கிப்போட ஆள் தேடுவார்கள். இப்போது இதெல்லாம் பார்க்க முடியவில்லை.கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் மோட்டார்களுக்கு வேலை இல்லை.

மழை பெய்தால் எனக்கு இன்னொரு சந்தோஷம்.வீட்டில் நிலக்கடலை வறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.மழைநேரத்தில் வறுத்த நிலக்கடலையை உரித்துத் தின்பதில் அத்தனை சுகம்.சில நேரங்களில் போண்டா சுட ஆரம்பித்து விடுவார்கள்.குழந்தைகளுக்கு காகிதத்தில் கப்பல் செய்து ஓடும் மழை நீரில் விட வேண்டும்.அதிலும் கத்திக்கப்பலாக இருந்தால் இரட்டை சந்தோஷம்.

கருமேகத்தைப்பார்த்தாலே பள்ளியை முடித்துவிடுவார்கள்.குழந்தைகள் வெகுதூரம் நடந்து செல்லவேண்டியிருக்கும்.பள்ளி விட்டு வீட்டுக்கு வருவதற்குள் பல நாட்கள் நனைந்திருக்கிறேன்.வழியில் எங்காவது மரம்தான் ஒதுங்கக்கிடைக்கும்.மழையில் மரத்தின் கீழ் நிற்கவேண்டாம் என்று சொல்வார்கள்.இன்று மழையில் நனைய யாருக்கும் விருப்பமில்லை.சிறு தூறலென்றாலும் உடனே ஒதுங்க மனம் அலைகிறது.செல்போன் நனைந்துவிடுமென்ற பயம்தான் காரணம்.

மழை செழிப்பைக்கொண்டு வருகிறது.மழை மட்டும்தான் செழிப்பைக் கொண்டுவருகிறது.மழைநீர் சேகரிப்பு பற்றி பொதுமக்களிடம் போதுமான அளவு விழிப்புணர்வு இல்லை.சேவை செய்ய பலருக்கு ஆர்வம் இருக்கிறது.அவர்கள் இந்தப்பணியில் ஈடுபட்டால் பெரிய புண்ணியம்.
-

Friday, May 9, 2014

அறிவும் உணர்ச்சிகளும்இந்தியாவுல அறிவுஜீவியா பிறந்தா அவங்க படுற பாடு இருக்கே, அதைச் சொல்லி முடியாது. ஒருவனோ இல்ல ஒருத்தியோ ஜீனியஸ்னு தெரிஞ்சா அவங்க குடும்பம், சமூகம் முதற்கொண்டு பஞ்சர் பண்ணத்தான் பாக்குறாங்க. நீ ஒரு ஜீனியஸ் கிடையாதுடா, பைத்தியக்காரன்டா, மத்தவங்கள மாதிரி ஏன் இருக்க மாட்டேங்குறன்னு சொல்றாங்க. ஒரு சராசரி மனிதனைத்தான் எல்லாருக்குமே பிடிக்குது. இல்லைன்னா ஜீனியஸா இருக்குறவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டா சரியா ஆயிடுவாங்கன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க. இப்போ இந்த 2014-ல கூட ராமானுஜன் மாதிரியான ஜீனியஸ் நம்ம மத்தியில வாழ்ந்தாக்கூட இந்த நிலைமைதான்.
-தி இந்து நேர்காணலில் ஞான ராஜசேகரன்.
பாரதி,பெரியார் படங்களை இயக்கிய ஞான ராஜசேகரன் தற்போது கணித மேதை ராமானுஜம் பற்றி திரைப்படம் இயக்கி வருகிறார்.முன்பும் ஒரு பேட்டியில் அவர் இத்தகைய கருத்தைத் தெரிவித்திருந்தார்.


ஒருவர்அறிவுஜீவியாக,மேதையாகஇருக்கவேண்டியதில்லை.மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதல் திறமை,தகுதி பெற்றிருந்தால்கூட சிரமங்களை சந்திக்க நேரும்.உன்னிடம் பணமில்லை என்று சொல்லிப்பாருங்கள்.உண்மையைஒப்புக்கொண்டுவிடுவார்கள்.அறிவில்லை என்று சொன்னால் ஜென்ம எதிரி ஆகிவிடுவார்.தனக்கு அறிவில்லை என்று ஒருவர் கருதுவது அவருக்கு பெரும் குழப்பத்தைத் தரும்.தாழ்வு மனப்பான்மையில் துடிக்க ஆரம்பித்துவிடுவார்.விளைவாக மனம் பெரிதளவு பாதிக்கப்படக்கூடும்.யாரையும் விட முதன்மையாக இருக்கவே மனிதன் துடித்துக்கொண்டிருக்கிறான்.சுயமதிப்பு இழந்து தவிப்பதை அவன் விரும்பமாட்டான்.


அறிவு பெற்றவனை சராசரியாக்க முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.அலுவலக அரசியலில் தனிமைப்படுத்தப் படுவார்.அதிகாரி மட்டம் தட்டி ரசிப்பார்.அவனைப்பற்றி தரமற்றத் தகவல்களைப் பரப்புவார்கள்.அவனது அறிவை மறைக்க எப்போதும் முயற்சி செய்தவாறு இருப்பார்கள்.முன்னேற்றத்திற்குத் தடை போட எப்போதும் விரும்புவார்கள்.இதையெல்லாம் தவிர்ப்பது கஷ்டம்.


பல ஆண்டுகளுக்கு முன்பு படித்து ரசித்தது இது.சுஜாதா எழுதியதாகத்தான் நினைவு.வேகமாக இருசக்கர வாகனத்தில் கடக்கும் இளைஞனை நிறுத்திக் காவலர் கேட்டார், ``அறிவிருக்கா?.`` இளைஞரின் பதில் ``ஏன் உங்களுக்கு வேணுமா?.``அறிவாளி என்பதற்கு அதிகம் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது என்பதே பலரது கருத்து.மெய்ப்பொருள் காண்பதறிவு என்று வள்ளுவர் சொல்லிவிட்டார்.

மெய்ப்பொருளை காண்பதில்தான் நமக்குப்பிரச்சினை இருக்கிறது.யார் சொல்வதை நம்புவது? என்ற வார்த்தைகளை நாம் அதிகம் கேட்கிறோம்.நல்லவர்கள் என்று நம்பி ஏமாந்துபோகிறோம்.குடும்பத்தில் உள்ளவர்களது நடத்தைகூட சில நேரங்களில் அதிர்ச்சியளித்துவிடுகிறது.அறிவுக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கா? அறிவில்லையா? என்ற வார்த்தைகள் வெளிவரும் சூழ்நிலையைக் கவனியுங்கள்.தனக்குப் பயன்படாத நடத்தை,சில நேரங்களில் சமூகத்துக்கு எதிரான நடத்தையை அறிவில்லை என்று சொல்லக்கூடும்.


உணர்ச்சி வசப்பட்டு சிந்திக்காத நிலையை அறிவு என்று சொல்லலாம்.உணர்ச்சிமிகுந்திருப்பவரை நாம் பைத்தியம் என்று குறிப்பிடுகிறோம்.அதிக கோபம் என்றில்லை,அதிகம் சிரித்தால்கூட மன நலன் பற்றி சந்தேகப்படுகிறோம்.பொறாமை கொண்ட ஒருவன் முதிர்ச்சியுடன் நடந்துகொள்வது சாத்தியமில்லை.அறிவுக்கும் உணர்ச்சிக்கும்தான் எப்போதும் போராட்டம்.துன்பத்தைத் தருவது உணர்ச்சிகள்தான்.

உணர்ச்சிகளை மேலாண்மை செய்வதில் வல்லவரை அறிவாளி என்று அழைக்கலாம்.மெய்ப்பொருளைக் காண்பது அவரால் முடியும்.சராசரி மனிதர்களின் தாக்குதலில் பெருமளவு அவர் பாதிக்கப்படமாட்டார்.அறிவைக் கேடயமாகப் பயன்படுத்தித் தன்னைக் காத்துக்கொள்வார்.அதிக மகிழ்ச்சி கொண்டுள்ளவராக அவர் இருக்கிறார்.உண்மையில் கல்வி என்பது உணர்ச்சிகளை மேலாண்மை செய்யக் கற்றுக்கொடுத்தல்தான்.
-