Showing posts with label உணர்ச்சிகள். Show all posts
Showing posts with label உணர்ச்சிகள். Show all posts

Monday, July 7, 2014

உயிரற்ற உறவுகள்



விலைமாதர் உறவைப் பற்றி வள்ளுவர் குறிப்பிடும்போது``இருட்டறையில் பிணத்தை அணைப்பது போல`` என்கிறார்.பெண்ணை உடலாக மட்டுமே கருதும் அத்தனை பேருக்கும் இது பொருந்தும்.சக மனிதர்களுக்கிடையேயான அன்பு,அக்கறை,பரிவு போன்றவை இங்கே இல்லை.ஆதாயத்துக்காக மட்டுமேயான உறவுகள் இன்று அதிகரித்து வருகின்றன.

கிராமங்களில் வேற்று சாதியாக இருந்தாலும் உறவுமுறை சொல்லி அழைப்பதைப் பார்க்கலாம்.ஊரில் பலரை எனக்கு மாமா,அண்ணா,பெரியப்பா,அத்தை என்று சொல்லித்தான் பழக்கம்.உணர்வுப்பூர்வமாக உதவிசெய்வது,ஆபத்தில் உடன் நிற்பது என்று நெருக்கமான உறவுகள் அவை.நுகர்வுக் கலாச்சாரம் இன்று அவற்றையெல்லாம் அழித்துவிட்டது.

பணியிடம் வாழ்க்கைக்கு ஆதாரமாக இருக்கிறது.செய்யும் வேலை மூலமாக வரும் வருமானம்தான் அத்தனையும் தீர்மானிக்கிறது.விழித்திருக்கும் அதிக நேரங்கள் பணியிடத்தில் இருக்கிறார்கள். அலுவலக சந்தோஷமும்,சங்கடங்களும் வீட்டில் எதிரொலிக்கிறது.பணியாளரின் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்ற இடம் அது.

திங்கட்கிழமை காய்ச்சல் என்று சொல்கிறார்கள்.பலருக்கு ஞாயிற்றுக்கிழமை விடுப்பு முடிந்து அடுத்தநாள் வேலைக்குச்செல்ல சங்கடமாக இருக்கிறது.பத்து மணி வேலைக்குச் சரியான நேரத்துக்கு வருவதைப் பலர் விரும்புவதில்லை.தாமதமாக வருவதில் பெருமை கொள்பவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அடிப்படையில் மனிதமனம் கட்டுப்பாடுகளை விரும்புவதில்லை.

பணியிடத்தின் அரசியல்களை இவற்றுக்குக் காரணமாகச் சொல்லலாம்.வேலை தெரியாதவர்களும்,வேலை தெரிந்த சோம்பேறிகளும்,மனக்கோளாறு உள்ளவர்களும் இந்த அரசியலில் முக்கியப்பங்கு வகிக்கிறார்கள்.இவர்கள் அதிகாரிகளைத் திருப்திப்படுத்துவதில் நேரத்தை செலவிடுகிறார்கள்.வீட்டுவேலை செய்கிறார்கள்.போட்டுக்கொடுக்கிறார்கள்.பல நேரங்களில் பொய் பேசுகிறார்கள்.

மிகச் சிரமப்பட்டுப் படித்து பணியில் சேர்ந்த நண்பர் ஒருவரை நீண்டகாலத்துக்குப்பின்சந்தித்தேன்.உருக்குலைந்துப்போயிருந்தார்.வேலையில் திருப்தியில்லை என்று சொன்னார்.தகுதியில்லாதவர்கள் முதன்மை பெறுவது மதிப்பீடுகளைச் சிதைத்து விடுகிறது.எளிய மனிதர்கள் சமாளிக்க முடியாத மன அழுத்தத்தை சுமக்கவேண்டியிருக்கிறது.

அலுவலக அரசியல் குடும்ப உறவுகளில் எதிரொலிக்கிறது.ரத்த அழுத்தம்,நீரிழிவு,இதயநோய் உள்ளிட்ட நோய்களைக் கொண்டுவருகிறது.அலுவலகத்தில் உருவான உணர்ச்சிக்கொந்தளிப்பு மனைவி,குழந்தைகள்,பெற்றோர்களிடம் வீசப்படலாம்.பசி முதல் பாலியல் விருப்பங்கள் வரை மோசமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.

யாரைத்தான் நம்புவது? என்ற வார்த்தைகளைப் பணிச்சூழலில் அடிக்கடி கேட்கிறேன்.தனிப்பட்ட,குடும்ப விஷயங்களை அலுவலக சூழலில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது.பகிர்ந்துகொள்ள உறவுகள் இல்லாத மோசமான சூழல் இன்று உருவாகியிருக்கிறது.முன்னெப்போதையும் விட உளவியல் ஆலோசகர்களின் தேவை வரும் காலங்களில் அதிகரிக்கும்.

பணிச்சூழல் ஏற்படுத்தும் உணர்ச்சிகள் குறித்த விழிப்புணர்வு பெறுவதுதான் முதல்படி.காரணமான எண்ணங்களை அடையாளம் காண்பது அடுத்த நிலை.எண்ணங்களை மாற்றுவதன் மூலம் பிரச்சினைகளில் இருந்து வெளியேவர முடியும்.
-

Friday, May 9, 2014

அறிவும் உணர்ச்சிகளும்



இந்தியாவுல அறிவுஜீவியா பிறந்தா அவங்க படுற பாடு இருக்கே, அதைச் சொல்லி முடியாது. ஒருவனோ இல்ல ஒருத்தியோ ஜீனியஸ்னு தெரிஞ்சா அவங்க குடும்பம், சமூகம் முதற்கொண்டு பஞ்சர் பண்ணத்தான் பாக்குறாங்க. நீ ஒரு ஜீனியஸ் கிடையாதுடா, பைத்தியக்காரன்டா, மத்தவங்கள மாதிரி ஏன் இருக்க மாட்டேங்குறன்னு சொல்றாங்க. ஒரு சராசரி மனிதனைத்தான் எல்லாருக்குமே பிடிக்குது. இல்லைன்னா ஜீனியஸா இருக்குறவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வெச்சுட்டா சரியா ஆயிடுவாங்கன்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க. இப்போ இந்த 2014-ல கூட ராமானுஜன் மாதிரியான ஜீனியஸ் நம்ம மத்தியில வாழ்ந்தாக்கூட இந்த நிலைமைதான்.
-தி இந்து நேர்காணலில் ஞான ராஜசேகரன்.
பாரதி,பெரியார் படங்களை இயக்கிய ஞான ராஜசேகரன் தற்போது கணித மேதை ராமானுஜம் பற்றி திரைப்படம் இயக்கி வருகிறார்.முன்பும் ஒரு பேட்டியில் அவர் இத்தகைய கருத்தைத் தெரிவித்திருந்தார்.


ஒருவர்அறிவுஜீவியாக,மேதையாகஇருக்கவேண்டியதில்லை.மற்றவர்களைவிட கொஞ்சம் கூடுதல் திறமை,தகுதி பெற்றிருந்தால்கூட சிரமங்களை சந்திக்க நேரும்.உன்னிடம் பணமில்லை என்று சொல்லிப்பாருங்கள்.உண்மையைஒப்புக்கொண்டுவிடுவார்கள்.அறிவில்லை என்று சொன்னால் ஜென்ம எதிரி ஆகிவிடுவார்.தனக்கு அறிவில்லை என்று ஒருவர் கருதுவது அவருக்கு பெரும் குழப்பத்தைத் தரும்.தாழ்வு மனப்பான்மையில் துடிக்க ஆரம்பித்துவிடுவார்.விளைவாக மனம் பெரிதளவு பாதிக்கப்படக்கூடும்.யாரையும் விட முதன்மையாக இருக்கவே மனிதன் துடித்துக்கொண்டிருக்கிறான்.சுயமதிப்பு இழந்து தவிப்பதை அவன் விரும்பமாட்டான்.


அறிவு பெற்றவனை சராசரியாக்க முயற்சி செய்துதான் ஆகவேண்டும்.அலுவலக அரசியலில் தனிமைப்படுத்தப் படுவார்.அதிகாரி மட்டம் தட்டி ரசிப்பார்.அவனைப்பற்றி தரமற்றத் தகவல்களைப் பரப்புவார்கள்.அவனது அறிவை மறைக்க எப்போதும் முயற்சி செய்தவாறு இருப்பார்கள்.முன்னேற்றத்திற்குத் தடை போட எப்போதும் விரும்புவார்கள்.இதையெல்லாம் தவிர்ப்பது கஷ்டம்.


பல ஆண்டுகளுக்கு முன்பு படித்து ரசித்தது இது.சுஜாதா எழுதியதாகத்தான் நினைவு.வேகமாக இருசக்கர வாகனத்தில் கடக்கும் இளைஞனை நிறுத்திக் காவலர் கேட்டார், ``அறிவிருக்கா?.`` இளைஞரின் பதில் ``ஏன் உங்களுக்கு வேணுமா?.``அறிவாளி என்பதற்கு அதிகம் தகவல்களைத் தெரிந்து வைத்திருப்பது என்பதே பலரது கருத்து.மெய்ப்பொருள் காண்பதறிவு என்று வள்ளுவர் சொல்லிவிட்டார்.

மெய்ப்பொருளை காண்பதில்தான் நமக்குப்பிரச்சினை இருக்கிறது.யார் சொல்வதை நம்புவது? என்ற வார்த்தைகளை நாம் அதிகம் கேட்கிறோம்.நல்லவர்கள் என்று நம்பி ஏமாந்துபோகிறோம்.குடும்பத்தில் உள்ளவர்களது நடத்தைகூட சில நேரங்களில் அதிர்ச்சியளித்துவிடுகிறது.அறிவுக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கா? அறிவில்லையா? என்ற வார்த்தைகள் வெளிவரும் சூழ்நிலையைக் கவனியுங்கள்.தனக்குப் பயன்படாத நடத்தை,சில நேரங்களில் சமூகத்துக்கு எதிரான நடத்தையை அறிவில்லை என்று சொல்லக்கூடும்.


உணர்ச்சி வசப்பட்டு சிந்திக்காத நிலையை அறிவு என்று சொல்லலாம்.உணர்ச்சிமிகுந்திருப்பவரை நாம் பைத்தியம் என்று குறிப்பிடுகிறோம்.அதிக கோபம் என்றில்லை,அதிகம் சிரித்தால்கூட மன நலன் பற்றி சந்தேகப்படுகிறோம்.பொறாமை கொண்ட ஒருவன் முதிர்ச்சியுடன் நடந்துகொள்வது சாத்தியமில்லை.அறிவுக்கும் உணர்ச்சிக்கும்தான் எப்போதும் போராட்டம்.துன்பத்தைத் தருவது உணர்ச்சிகள்தான்.

உணர்ச்சிகளை மேலாண்மை செய்வதில் வல்லவரை அறிவாளி என்று அழைக்கலாம்.மெய்ப்பொருளைக் காண்பது அவரால் முடியும்.சராசரி மனிதர்களின் தாக்குதலில் பெருமளவு அவர் பாதிக்கப்படமாட்டார்.அறிவைக் கேடயமாகப் பயன்படுத்தித் தன்னைக் காத்துக்கொள்வார்.அதிக மகிழ்ச்சி கொண்டுள்ளவராக அவர் இருக்கிறார்.உண்மையில் கல்வி என்பது உணர்ச்சிகளை மேலாண்மை செய்யக் கற்றுக்கொடுத்தல்தான்.
-

Monday, October 14, 2013

உணர்ச்சிகள்தான் தீர்மானிக்கின்றன!


காட்டுமிராண்டி என்ற சொல்லை பண்படாதவனைக் குறிக்க பயன்படுத்துகிறோம்.மனிதனுக்குத் தோன்றும் உணர்ச்சிகளை அவன் எதிர்கொள்ளும் விதத்தைப் பொருத்து அவனது தகுதி நிலை அமைகிறது.பல்வேறு அனுபவங்கள்,படிப்பு,குடும்பம் இவையெல்லாம் உணர்ச்சிகளை மேலாண்மை செய்வதில் பங்கு வகிக்க்க்கூடும்.

நண்பர் ஒருவர் அந்த வாடகை வீட்டிலிருந்து அவசரமாக காலி செய்தார்.ஒரு மாதம் வாடகைக்கு இன்னும் பத்துநாட்கள் அங்கே இருந்திருக்காலாம்.வீட்டின் பக்கத்தில் உள்ளவர்கள் எப்போதும் சண்டைபிடித்துக்கொண்டு இருந்தார்கள்.மோசமான வசவுச் சொற்களை பயன்படுத்தினார்கள்.காட்டுத்தனமாக கத்துகிறார்கள் என்று சொன்னார்.



ஆதியில் மனிதன் கட்டுப்பாடில்லாமல் உணர்ச்சிகளை வெளிப்படுத்தினான்.வலி ஏற்பட்டால் பெருங்குரலெடுத்து கத்தியிருகக்க்கூடும்.கிட்டத்தட்ட மிருகங்களைப்போல இருந்திருக்கும்.அங்கே உணர்ச்சிகள்மீது மேலாண்மை எதுவும் இல்லை.பண்படாத நிலை என்று அவற்றைச் சொல்கிறோம்.குழந்தைநிலை போன்றதொரு காலம் அது.


பொதுவாக நாம் அடையாளம் காணும் பைத்தியம் என்ற நிலை மிகை உணர்ச்சி நிலைதான்.திரைப்படங்கள்,நாடகங்கள் என்றால் மனநிலை பாதிக்கப்பட்டவர்களை அப்படித்தான்  காட்டுவார்கள்.அதிகமாக சிரித்தால்,அழுதால்,கவலைப்பட்டால் பைத்தியம் போல என்று சொல்கிறோம்.தானாக சிரித்தால் அவர் கவனிக்கப்படவேண்டிய ஆளாக இருப்பார்.



உணர்ச்சிகளை மேலாண்மை செய்யும் மனிதனை பண்பட்டவன் என்று சொல்லலாம்.ஆத்திரத்தில்,கோபத்தில் கத்துபவர்களை விட்டு விலகவே விரும்புகிறோம்.உண்மையான அறிவு என்பது உணர்வுகளை முறையாக வெளிப்படுத்துவதைக் குறிக்கிறது.அவை யாருக்கும் பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும்.ஒருவரது மிகச்சிறந்த தகுதியாக இதைக்கருதலாம்.


மேலாண்மை செய்ய அவற்றின்மீது நமக்கு கவனம் வேண்டும்.பல்வேறு வகைப்பட்ட மனிதர்கள்,சூழல்கள்,வெளிப்பாடு போன்றவற்றை இலக்கியம் கற்றுத்தர முடியும்.நமக்கு ஏற்படும் உணர்ச்சிகளையும் அவை ஏற்படுத்தும் பாதிப்பையும் உணரும்போது மற்றவர்களின் உணர்வுகளையும் நம்மால் புரிந்துகொள்ளமுடியும்.



உங்களுடைய உணர்ச்சிகளை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.அந்த உணர்ச்சி ஏற்படக்காரணமான நிகழ்வுகளை கண்டறியுங்கள்.உங்களிடம் உருவான எண்ணங்கள் உங்களுக்குத்தெரியவரும்.பல வேண்டாத உணர்ச்சிகளுக்கு எதிர்மறையான(Negative) எண்ணமோ,நடைமுறைக்கு ஒவ்வாத(irrational) எண்ணமோ காரணமாக இருக்கும்.விரும்பத்தகாத நடத்தைகளுக்குக் காரணம் இவைதான்.


நம்மை அலைக்கழிக்கும் எதிர் உணர்ச்சிகளுக்குக் காரணம் எண்ணங்களின் சீரற்றநிலைதான்.மறைமுகமாக அறிவில்லாத மடத்தனம் என்றும் சொல்லலாம்.ஒப்புக்கொள்ள நமக்கு கஷ்டமாக இருக்கும்.எதிர்மறையான,அறிவுக்குள் அடங்காத எண்ணங்களை நாம் அடையாளம் காணவேண்டும்.சில நேரங்களில் நிபுணர்களின் உதவி தேவைப்படலாம்.


நாம் நினைத்தது எல்லாம் உண்மையாக இருந்ததேயில்லை.அதனால் ஏற்பட்ட உணர்ச்சிகளின் பாதிப்பு ஏற்படுத்திய கஷ்டங்கள்தான் அதிகம்.சந்தேக எண்ணங்கள் தீவிர உணர்ச்சியைக் கிளறிவிடுகின்றன.தானும் பாதிக்கப்பட்டு மற்றவர்களையும் சிதைத்துவிடுகிறது.உணர்ச்சிகளைக்கவனிக்கப் பழகுவது அவற்றை மேலாண்மை செய்வதற்கு முதல்படி.
-

Friday, June 14, 2013

உணர்ச்சிகளை வெளியே கொட்டுங்கள் .

கிராமம் முதல் நகரம் வரை அனைத்து இடங்களிலும் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க முடியும்."படபடவென்று பேசுபவனை நம்பலாம்,உம்மென்று இருப்பவனை நம்பமுடியாது."ஆமாம்.படபடவென்று பேசுபவர் வெளியே கொட்டிவிடுகிறார்.அங்கே எதுவுமில்லை.அவர் தனது கருத்தை ஒளித்துவைக்கவில்லை.அவர் யார் என்று நமக்கு புரிந்துவிடுகிறது.நமக்கு அவர்மீது சந்தேகமோ கலக்கமோ இல்லை.அவரை நம்புவதில் சிரமம் இல்லை.அங்கே உள்ளே எதுவும் இல்லை!?என்பது நமக்குத்  தெரிந்துவிடுகிறது.பேசாமல் இருப்பவர் என்ன நினைக்கிறார் என்று நமக்குத் தெரிவதில்லை.நம்மைப் பற்றி என்ன கருத்துக்கொண்டிருக்கிறார் என்பது நிச்சயமில்லை.அவர் ஒரு புதிராக தெரிகிறார்.ஒருவேளை காத்திருந்து தாக்கவும் செய்யலாம்.நாம் சஞ்சலப்படுகிறோம்.புறக்கணிக்கத் தயாராகிறோம்.

குட்டீஸ் சுட்டீஸ் என்று ஒரு நிகழ்ச்சி சன் டி.வி.யில் வந்து கொண்டிருக்கிறது.இமான் அண்ணாச்சி தொகுத்து வசங்குகிறார்.பையன் கொஞ்சம் அதிகமாக பேசுகிறான்.மட்டுமரியாதை இல்லாமல் பேசுவது என்று சொல்வோமில்லையா? அப்படி பேசுகிறான்.பக்கத்தில் இருக்கும் பாப்பா பெரியவர்களை அப்படி பேசக்கூடாது என்று சொல்கிறாள்.அதிகப்பிரசங்கித்தனத்தை கண்டித்து தனது உணர்ச்சியை வெளிப்படுத்தி விட்டாள்.மற்ற இரண்டு சிறுமிகள் எதையும் பேசவில்லை.அடுத்து இமான் அண்ணாச்சி கேட்கிறார்.அந்தப் பையனுக்கு கிப்ட் தரலாமா? வேண்டாமா? பேசாமல் இருந்த சிறுமிகள் தரவேண்டாம் என்கிறார்கள்.கண்டித்துப் பேசிய சிறுமி கிப்ட் தரலாம் என்கிறார்.ஏனெனில் அந்தச் சிறுமியின் கோபம் வெளியேறிவிட்டது.உணர்ச்சி உள்ளே தங்கவில்லை.

கோபம்,கவலை உள்ளிட்ட உணர்ச்சிகளை உள்ளேயே தங்க விடுவது நோய்க்கு வழிவகுக்கும்.இம்மாதிரி சூழ்நிலைகளில் யாரிடமாவது பகிர்ந்து கொள்வதே சரியானது.நம்மீது அக்கறை உள்ள நண்பர்கள் இருந்தால் நல்லது.அவர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும்.ஆனால் இன்றைய அவசர யுகத்தில் யாருக்கும் நேரமில்லை.அவரவர் குடும்பத்தை கவனிக்கவும்,குழந்தை களிடம்  பேசுவதற்கும் கூட முடியவில்லை.சலித்துக் கொள்ளும் மனிதர்களையே அதிகம் பார்க்கிறேன்.மேலும் இது மன அழுத்த யுகம்.அதனால் நாம் காமெடியை மட்டுமே வரவேற்றுக் கொண்டிருக்கிறோம்.வலிகளை,புலம்பலை காது கொடுத்துக் கேட்க பலரும் விரும்ப மாட்டார்கள்.

நாம் 'ரிசர்வ் டைப்' என்று சிலரை சொல்லிக் கொண்டிருப்போம்.அதிகம் பேச மாட்டார்கள்.அவசியம் இல்லை என்பதாலோ அல்லது கூச்சத்தின் காரணமாகவோ பேசாமல் இருக்கலாம்.மேலே சொன்ன உம்மென்று இருப்பவர்கள் வகையைச் சார்ந்தவர்கள்.தவிர எல்லா சூழ்நிலைகளிலும் நம்மால் நமது உணர்ச்சியை வெளிப்படுத்திவிட முடியாது.உதாரணமாக அலுவலகத்தில் மேல் அதிகாரியிடம் வெளிப்படுத்திவிட முடியாது.சில நேரங்களில்?! வீட்டிலும் கூட பேசிவிடமுடியாது.உணர்ச்சிகளை காகிதத்தில் கொட்டுவது நல்ல வழி.எழுதிவிட்டு கிழித்துப் போட்டுவிட்டால் கூட மனம் லேசாவதை உணர முடியும்.நாட்குறிப்பு எழுதலாம்.இப்போது வலைப்பதிவு ஆரம்பித்து எழுதிவிட முடியும்.

-

Thursday, February 28, 2013

உணர்ச்சி வழி

 கணவனால் அடிக்கப்பட்டு அல்லது உதைக்கப்பட்டு மனைவி வந்து நிற்பார்.பலரும் சொல்வார்கள்."அடிக்கிற கைதான் அணைக்கும்".வேறு போக்கிடம் ஏது? கொஞ்ச நேரத்தில் வீட்டுக்குப்போய் கணவனுக்கு உணவு சமைக்க ஆரம்பித்துவிடுவார்.அப்புறம் தம்பதிகள் சந்தோஷமாக இருப்பார்கள்.இன்னொரு நண்பர் வேறு விளக்கம் கொடுத்தார்.குழ்ந்தை ஓயாமல் தொல்லை செய்தால் தாய் அடித்து விடுவார்.சற்று நேரம் கழித்து வாரி அணைத்து கொஞ்சுவார்.இதெல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருப்பவைதான்.
அடிப்பதற்கும் சரி அணைப்பதற்கும் சரி மனம் உணர்ச்சியால் நிரம்பியிருக்க வேண்டும்.சிந்தனை தவிர்த்து உணர்ச்சி வழி நடக்கும் மனிதர்களை  நாம் நிறைய பார்த்துக் கொண்டிருக்கிறோம்.பக்கத்து வீட்டுக்காரர்களுடன் ஒருவருக்கு பெரிய சண்டை ஆகிவிட்டது.கெட்ட வார்த்தைகள்,கை கலப்பு என்று ஊர்  வேடிக்கை பார்த்தது.ஒரு மாதம் கூட ஆகவில்லை.இரண்டுபேரும் நண்பர்களாக சிரித்து பேச ஆரம்பித்து விட்டார்கள்.இருவரில் யாராவது ஒருவர் உணர்ச்சி சார்ந்து இருந்தால் போதும்.
இன்னொரு நிகழ்வு! பால்ய காலத்து நண்பர்கள் அவர்கள்.ஒருவர் இன்னொருவரைப் பற்றி தவறாக பேசியதாக நம்பகமான தகவல் கிடைத்தது.பேசுவதை குறைக்க ஆரம்பித்து பின்னர் முழுமையாக வெட்டிக்கொண்டு விட்டார்.அறுந்து விழுந்த உறவு விழுந்ததுதான்.பிறகு சேரவேயில்லை.
ஆளுமை உணர்ச்சி சார்ந்து இருப்பதற்கும்,அறிவு சார்ந்து இருப்பதற்குமான வித்தியாசம் இவை.இரண்டாவது நிகழ்வில் சிந்தித்து முடிவு செய்ததால் -நட்பு நன்மையைத் தராது என்று முடிவு செய்திருக்க வேண்டும்-பேசுவதைக் குறைத்து வெட்டிக் கொண்டுவிட்டார்.பெரிதாக சத்தம் போட்டு சண்டை ஆகவில்லை.ஆனால் சத்தம் போட்டு சண்டை போட்டவர்கள் உடனே சேர்ந்துவிடவும் செய்கிறார்கள்.
B.J.P என்று செல்லமாக அழைக்கப்படும் ஜொள்ளு பார்ட்டிகள் கிட்டத்தட்ட  இந்தவகைதான்.உணர்ச்சி வழி நடப்பவர்கள் உறுதியற்ற படகு போலத்தான்.கரை சேர முடியும் என்று உறுதியாக சொல்ல முடியாது.ஆனால் இவர்களை நம்புபவர்களே அதிகம்.அன்பு எனும் உணர்ச்சி தூக்கலாக இருக்கும்போது இவர்களைத் தவிர யாராலும் அத்தனை அன்பை பொழிய முடியாது.சோகமாக வந்து நின்று கெஞ்சுவார்கள்.முற்றிலும் சுயநலம் சார்ந்தது என்பது வேறு விஷயம்.அடிப்பதற்கும் அணைப்பதற்கும் தேவையானது மிகுதியான உணர்ச்சிதான்.நம்முடைய உறவினர்களையும் நண்பர்களையும் இவ்வாறே புரிந்து கொள்ளவும் முடியும்.எந்த வகை என்று தெரிந்துவிட்டால் உறவுகளை பேணுவது எளிது.
-