Monday, May 13, 2013

புற்றுநோய் மற்றும் இதயநோய் தடுக்கும் உணவுகள்?                            புற்றுநோயைத்தடுக்க என்னென்ன சாப்பிடவேண்டும் என்று ஒருவர் கேட்டார்.புற்றுநோய்க்கு புகை,பரம்பரை,வேதிப்பொருட்கள் உள்ளிட்ட பல காரணிகள் இருக்கின்றன.உணவின் மூலமாக முற்றிலுமாக புற்றுநோயின் ஆபத்திலிருந்து தப்புவது சாத்தியமல்ல! ஆனால் சில உணவுகள் மூலமாக ஆபத்தை குறைத்துக்கொள்ள முடியும் என்று சொல்லப்படுகிறது.க்ரீன் டீ பற்றிபேசும்போதெல்லாம் புற்று நோய்,இதய நோய் வராமல் தடுக்கும் என்று சொல்வதை கேள்விப்பட்டிருப்பீர்கள்.க்ரீன் டீ பிரதேசமான ஜப்பானில் புற்றுநோய் மிகவும் குறைவாக இருக்கிறது.க்ரீன் டீயில் உள்ள ஆண்டி ஆக்சிடெண்டுகள்தான் காரணம்.

                               நமது உடலின் வளர்சிதை மாற்றத்துக்கு ஆக்ஸிஜனின் முக்கியத்துவம் பற்றி தெரியும்.ஆக்ஸிஜனின் வேதி மாற்றத்தின்போது உருவாகும் மூலக்கூறுகள்(free radicals-இலவச தீவிரவாதிகள் என்று கூகுள் மொழிபெயர்க்கிறது!) உடலில் உள்ள செல்களை சிதைக்கின்றன.புற்று நோய்,இதயநோய்,மறதி போன்ற ஏராளமான நோய்களுக்கு இந்த தீவிரவாதிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.புகை,மாசு,கதிர்வீச்சு போன்றவையும் மேற்கண்ட மூலக்கூறுகள் உருவாக காரணமாக இருக்கின்றன.இவற்றுக்குஎதிராக செயல்பட்டு செல்களை காக்கும் பணியை செய்பவற்றையே ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் என்கிறோம்.

                                ஆண்டி ஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ள உணவுகளை உண்பது இத்தகைய நோய்களின் ஆபத்தைக் குறைத்துக்கொள்ள உதவும்.உயிர்ச்சத்துக்கள் சி,இ,ஏ போன்றவை முக்கியமான ஆண்டி ஆக்ஸிடெண்டுகள்.இந்த உயிர்ச்சத்துக்களை அதிகம் உணவில் சேர்ப்பது நோய்களின் ஆபத்திலிருந்து குறைத்துக்கொள்ளும் வழியாக இருக்கும்.இவை தவிர உடலில் உள்ள என்சைம்களும் இப்பணியை செய்கின்றன.இவற்றுக்கு இரும்பு,செலினியம்,தாமிரம்,துத்தநாகம் போன்ற தாதுக்கள் தேவை.இத்தாதுக்கள் செரிந்த உணவுகளையும் சேர்க்கவேண்டும்.
                                 பொதுவாக மேலே சொல்லப்பட்ட உயிர்ச்சத்துக்களுக்கு பச்சை காய்கறிகள்,பழங்கள்தான் ஆதாரம்.நெல்லிக்காய்,கொய்யா,எலுமிச்சை,ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்கள் விட்டமின் சி மிகுந்தவை.முளை கட்டிய தானியங்கள்,தாவர எண்ணெய்,பச்சை காய்கறிகள் போன்றவற்றில் விட்டமின் இ அதிகம் இருக்கிறது.பீட்டா கரோட்டின் வகையில் கேரட் முக்கியமானது.ப்ப்பாளி,பூசணி,கோஸ்,பூண்டுவெங்காயம் ஆகியவற்றை அதிகம் சேர்க்கலாம்.

                                  உயிர்ச்சத்துக்களை பழங்கள்,காய்கறிகளாக உண்பதை தவிர்த்து மாத்திரைகளாக உண்ணும் பழக்கம் அதிகரித்து வருகிறது.மாத்திரைகளில் அளவு அதிகமானால் பக்க விளைவுகள் உண்டு.ஆனால் சமையல்,குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாப்பது போன்ற நிலைகளில் உயிர்ச்சத்துக்களை இழந்துவிடுகிறோம்.மாத்திரைகளாக உண்ணலாம் என்று சொல்பவர்களும் உண்டு.ஆண்டி ஆக்சிடெண்டுகள் உள்ளவற்றை அதிக அளவு உணவில் சேர்ப்பதே சரியானது.இவை தவிர நல்ல உறக்கமும்,போதுமான நீரும்,இறுக்கமில்லாத மனமும் சத்துக்கள் சரியாக உடலில் சேர அவசியமானவை.

-

Friday, May 3, 2013

டீ, லெமன் டீ,கிரீன் டீ,பால் டீ இன்ன பிற


தமிழில் தேநீர் என்று யார் சொல்லுகிறார்கள்? எளிய மக்கள் என்றில்லை,பெரும்பாலான மனிதர்களுக்கும் விருப்ப்பானம் தேநீர். சுடுநீர் ஊற்றி கழுவுவது அதிகம் இப்போது நடைமுறையில் இருப்பதாக தெரியவில்லை.சிலர் கௌரவமாக பேப்பர் கப்பில் போடச்சொல்லி விடுகிறார்கள்.எளிய மக்கள் தண்ணீர் குடிக்க இக்கடைகளையே நாடுகிறார்கள்.லேசாக தலை வலித்தால்,சோர்ந்து போனால்,நண்பர்கள்,உறவினர்களை வெளியில் பார்த்தால் டீ சாப்பிடுவது வழக்கமாக இருக்கிறது.உறவை பலப்படுத்துவதில் இன்று தேநீருக்கு பெரும்பங்கு உண்டு.

கிராமத்து தேநீர்க்கடைகள் நட்பை வளர்ப்பதுடன் கூடவே வம்புகளையும் வளர்க்கிறது.சில நேரங்களில் அரசியல் சூடு பறக்கும்.நாளிதழை எழுத்துக்கூட்டி படித்துக்கொண்டிருப்பார்கள்.அனைத்து தாள்களையும் யாராவது படிக்க முடிந்தால் அது அவருடைய அதிர்ஷ்டம்.கலப்படமில்லாத டீத்தூள் கொண்ட டீ கிடைத்து விட்டால் இன்னமும் அதிர்ஷ்டம்.ஒவ்வொரு ஊராக மலிவு விலைக்கு விற்பனை செய்வதை கலப்பட பேர்வழிகள் வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.கலப்படம் செய்தவற்றை விலைக்கு வாங்கும் பலருக்கு அது தரமற்றது தீங்கானது என்பதே தெரியாது.
தேநீரைப்பொருத்தவரை ஒவ்வொரு கடைக்கும் ஒவ்வொரு சுவை இருக்கிறது.ஒவ்வொரு பகுதிக்கும் தயாரிக்கும் முறை மாறுபடுகிறது.இஞ்சி டீ,ஏலக்காய் டீ,லெமன் டீ என்று பகுதிவாரியாக தயாரிப்பும் சுவையும் மாறும்.இங்கே பாய்லரை பயன்படுத்தும் கடைகளே அநேகமாக இல்லை.தனியாக டிகாக்‌ஷன் கிடையாது.பாலுடன் சேர்த்து காய்ச்சுகிறார்கள்.கொஞ்சம் அடர்த்தியாக இருக்கும்.கிராமங்களில் காலை நேரம் தவிர யாராவது வந்து கேட்டால் மட்டுமே அடுப்பை பற்ற வைப்பார்கள்.

மனிதர்களில் தேநீர் பருகும் முறைகளிலும் தனித்தனி குணம் இருக்கிறது. என் நண்பர் ஒருவருக்கு ஆடை இருந்தால் பிடிக்காது. சிலர் ஆடை மட்டும் கேட்பார்கள்.சமீபத்தில் ஒருவர் நுரை இல்லாமல் டீ கேட்டார்.சிலருக்கு லைட் டீ. அதிலும் பால் மீது சில துளிகள் டிகாக்‌ஷன் விட்டால் போதும்.சுத்தமாக பால் கலக்காமல் டீ குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள்.வேலூர் அருகே ஒருவர் பால் டீ என்றவுடன் உற்று கவனித்தேன்.அது டீ அல்ல! பால் மட்டும்தான். அதை ஏன் பால் டீ என்று சொல்கிறார்கள் என்று தெரியவில்லை.
                                                                                    டீயில் கலக்கப்படும் சில பொருட்களைப்பார்ப்போம்.இலவம்பஞ்சு காய்,துணிகளுக்குப்போடும் சாயம்,செயற்கை நிறமிகள்,செம்மண் போன்றவை.இவை வட்டாரத்திற்குத் தகுந்தவாறு மாறுபடும்.முழுமையாக தெரியவேண்டுமானால் நாட்டில் உள்ள அத்தனை டீக்கடைகளிலும் பரிசோதனை செய்யவேண்டும்.கிராமத்தில் உள்ள பல கடைகளில் குறைந்த விலையில் டீத்தூள் கிடைக்கிறதென்று வாங்கிவிடுவார்கள்.முன்பே சொன்னதுபோல குடிப்பவர்களின் உடல்நலனுக்கு கெடுதல் என்பதுகூட அவர்களுக்குத் தெரியாது.

                                   கலப்பட்த்தால் மிக அதிக மக்களை அதுவும் எளிய மக்களை பாதிக்கும் ஒன்று டீத்தூள்.வயிற்றுப்பிரச்னை,குடல் புண் முதல் புற்றுநோய் வரை கொண்டு செல்லும் தன்மை இதில் உள்ள கலப்பட பொருள்களுக்கு உண்டு.இது பற்றிய விழிப்புணர்வுக்காக கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களை பயன்படுத்தலாம் என்று தோன்றுகிறது.கிராமங்கள்தோறும் பரிசோதனை செய்து விளக்கம் அளிக்க பயிற்சி தரலாம்.
                                    தேநீர் அருந்துவதால் நன்மை இருக்கிறதா? இல்லையா? பலர் நான் டீ,காபியே குடிப்பதில்லை என்று பெருமையாக சொல்வதும் உண்டு.சுவாச கோளாறு உள்ளவர்கள் அதிகம் தேநீர் விரும்பிகளாக இருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.சாதாரண தலைவலிக்கு பலருக்கு டீ போதுமானதாக இருக்கிறது.ஃப்ளூரைடு இருப்பதால் பல்,ஈறு தொடர்பான சில நோய்களை தடுப்பதாக சொல்லப்படுகிறது.க்ரீன் டீ,பிளாக் டீ போன்றவற்றை ஆண்டி ஆக்சிடெண்டுகளுக்காக போற்றிக்கொண்டிருக்கிறார்கள்.
                                     மாலைக்குப்பின் தேநீர்,காபி குடிப்பது தூக்கத்திற்கு நல்லதல்ல.உணவு உண்டபின் ஒரு மணிநேரம் வரை இவற்றைத் தவிர்ப்பது இரும்புச்சத்து உடலில் சேர்வதை உறுதிசெய்யும்.குடல்புண் உள்ளவர்கள் டீகாபி அருந்தக்கூடாது.தரமான தேயிலை பயன்படுத்தும் கடைகள்,வீட்டில் தயாரிக்கும் தேநீர் ஒரு நாளைக்கு மூன்று நான்கு கப் வரை குடிப்பதில் பாதிப்பு எதுவும் இருக்காது.
-