Monday, January 30, 2012

சப்பாத்தியா? சாதமா?


                           நீரிழிவு அதிகரித்து வரும் நிலையில் கோதுமைக்கு வரவேற்பு கூடி வருகிறது.எண்ணெய் இல்லாத சப்பாத்தி இரண்டு மட்டும் என்பதை பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள்.சப்பாத்திக்கு சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் சக்தி எதுவும் இல்லை.ஆனாலும் சாதம் வேண்டாம்,சப்பாத்தி போதும் என்கிறார்கள்.பிரதான உணவு வகைகளை பொருத்தவரை கோதுமையும் அரிசியும்தான்.தென் தமிழ்நாட்டில் அரிசிதான் பிரதான உணவு.வட நாட்டுக்காரன் கோதுமை தின்கிறான்,பலசாலியாக இருக்கிறான்.நாம் அரிசி சாப்பிட்டு புத்திசாலியாக இருக்கிறோம் என்பதை யாரோ சொன்னார்கள்.

                            உடல் பலத்திற்கும் மூளைக்கும் கூட இவற்றில் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை.அரிசி உணவே கிராமங்களுக்கு பசுமைப்புரட்சிக்குப்பின் அறிமுகம் ஆனதென்று சொல்பவர்கள் உண்டு.சில பகுதிகள் தவிர நெல் விளைச்சல் அபூர்வம்.ராகி,வரகு,கம்பு போன்றவைகளே முக்கிய உணவாக இருந்து வந்திருக்கிறது.ராகி பற்றி  ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன்.இட்லி,தோசை எல்லாம் பண்டிகை காலங்களுக்கு செய்வார்கள் என்று ஒரு முதியவர் சொன்னார்.
                                   முதியவர் சொன்னது உண்மைதான்.நெல் விளைச்சலுக்கு நிறைய தண்ணீர் வேண்டும்.தமிழ்நாட்டில் அதிகமும் புன்செய் நிலங்கள்.ராகி போன்றவை அப்படி பயிரிடுவார்கள்.நெல்லுக்கு தராத முக்கியத்துவத்தை ராகிக்கு தருவதை நான் பார்த்திருக்கிறேன்.அறுவடைக்குப்பின் களத்தில் இருந்து எடுக்கும்போது பூஜை செய்த பிறகே வீட்டுக்கு எடுப்பார்கள்.இப்போது அரிசி உணவுகளே முக்கிய உணவுகளாகிவிட்டன.பள்ளிகளின் மதிய உணவில் கோதுமை இடம் பெற்றிருந்த காலம் உண்டு.பிறகு காணாமல் போய்விட்ட்து.

                                 சாதம் தவிர்த்து சப்பாத்தி சாப்பிட்டால் நீரிழிவை கட்டுப்படுத்த முடியுமா என்ன? எனக்கு ரவிச்சந்திரன் என்றொரு நண்பர்.ஏதாவது ஒரு பத்திரிகையை நட்த்திக்கொண்டிருப்பார்.சிறிய அளவில் சில ஆயிரம் பிரதிகள் போடுவார்.வலைப்பதிவையும் ஆரம்பித்து வைத்திருக்கிறார். பதிவெழுதலாம் என்றிருக்கிறேன் என்று சொன்னதும் நான் வேண்டாம் சொன்னேன்.ஆளுங்கட்சியை சார்ந்தவர் என்பதால் நடுநிலையோடு செயல்படுவது சாத்தியமாக இருக்காது.நீரிழிவு அதிகமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.அப்போது போய் பார்க்கமுடியவில்லை.
                                  சில வாரங்கள் கழித்து அவருடைய வீட்டுக்குப்போனேன்.எனக்கு சம்மாக சோற்றை உள்ளே தள்ளுவதை பார்த்து எனக்கு ஆச்சர்யம்.மட்டன்,கூடவே ஆம்லெட்.இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வதாக சொன்னார்.நிறைய பேர் சப்பாத்தி தான் பெஸ்ட் என்கிறார்களே? உனக்கு அதில் உடன்பாடு இல்லையா? என்று கேட்டேன்.” ”அதெல்லாம் சும்மா! அடிப்படையில் கோதுமைக்கும் அரிசிக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது.சாதம் என்றால் அதிகம் சாப்பிடுவார்கள்,சப்பாத்தி என்றால் குறைவாக சாப்பிடுவார்கள் அவ்வளவுதான்”.அவர் சொன்னது நிஜம்தான்.

                                 கோதுமை,அரிசி இரண்டில் உள்ள சத்துக்களிலும் பெரிய வித்தியாசம் இல்லை.ஓரிரு சதவீத கார்போஹைட்ரேட் மட்டுமே வித்தியாசம்.பெரும்பான்மையாக சோற்றை சரியாக மெல்லாமல் உள்ளே தள்ளுகிறோம்.அளவும் அதிகமாக இருக்கும்.அதிக கலோரிகளை எரிக்க வேண்டி இருக்கும்.சப்பாத்தி இரண்டு சாப்பிட்டாலே அதிக நேரம் சாப்பிட்டுக்கொண்டிருப்பது போலத்தோன்றும்.நீரிழிவு நோயாளிகளை சப்பாத்தி சாப்பிட சொல்வதன் காரணம் இவ்வளவுதான்.
-

Thursday, January 19, 2012

நண்பனின் பொங்கல் வேட்டை.

சினிமாவுக்கு போகலாம் என்று அழைத்தான் நண்பன். 5 காட்சியா? டேய் நீ எந்த காலத்துலடா இருக்கே? அதெல்லாம் போய் ரொம்ப நாளாச்சு! அவனவன் 4 காட்சி ஓட்டறதுக்கே கண்ணுமுழி பிதுங்கி கிடக்கிறான்.பழைய காலத்து ஆளாக இருக்கிறானே என்று  நினைத்திருக்க வேண்டும். அதெல்லாம் போகில எரிச்சாச்சு என்றான்.நான் சொன்னேன்,இதற்கும் போகிக்கும் என்ன சம்பந்தம்? மழைக்காலம் முடிந்து ஈரத்தில் பழைய துணிகள் போன்றவற்றில் பூஞ்சை தொற்றியிருக்கும்.அவற்றை எரிப்பதற்கு சரியான நேரம் இது.ஒரு மாதம் கழித்து வெயில் ஆரம்பித்துவிடும்.போதும் நிறுத்து!சினிமாவுக்கு போகலாமா? வேண்டாமா?
                               கிராமத்தில் போரடிப்பது போல ஆகிவிடுகிறது.ஒலிப்பெருக்கி சத்தம் பல நேரங்களில் இனிமையாக இல்லை.கோயிலின் முன்னால் மாடுகளை கொண்டுவந்து நிறுத்தினால் இவ்வளவுதானா? என்று கேட்கவேண்டும் போலத் தோன்றுகிறது.எனக்கும் சினிமாவுக்கு போகலாம் என்று தோன்றியது. சரி,எந்த படம் நல்லா இருக்காம்? என்றேன்.விமர்சன்ங்களை கூட படிக்க முடியவில்லை.கணினியை பார்த்து சில நாட்கள் ஆகிறது.ஏதோ ஒண்ணு வாடா! பொழுது போனா சரி! பழைய விஷயங்களை பேசிக் கொண்டே பயணம் .ஒரு மணி நேரத்திற்கு முன்பே அரங்கம் முன்னால் அலைந்து முட்டிமோதி டிக்கெட் வாங்கி சினிமா பார்த்த சிறுவயது அனுபவம் இப்போது இருக்காது.
                                நண்பன் படம் ஓடிக்கொண்டிருக்கும் தியேட்டர் முன்பு போய் நின்றோம்.50 ரூபாய் டிக்கெட்.ஹவுஸ்புல் என்று ஒரு தகவல் பலகை இருக்கும்.அதை என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை.அதையும் போகியில் போட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே எரித்து விட்டிருப்பார்களோ? இருக்கைகள் காலியாக இருந்து கொண்டிருந்த்து.படம் ஆரம்பிக்கவில்லை.சலிப்பாக இருக்கிறது.பேசாமல் ஏதேனும் இணைய மையத்துக்கு போயிருக்கலாம்.பதிவுகளை படித்து கருத்துரை சொல்லியிருக்கலாம்.ஆனால் திறந்திருப்பது சாத்தியமில்லை.
                                                                           சத்யன் மெஷினுக்கு வரையறை சொல்லும்போது நண்பன் சொன்னான்.நல்ல விஷயம் இல்ல!படம் அவன் சொன்னதைப் போன்று முக்கியமான ஒன்றை பேசுவதாகவே படுகிறது.மனப்பாட கல்வி,இன்றைய சாரமற்ற பயனில்லாத கல்விமுறை,இறுக்கமான கிளிப்பிள்ளை ஆசிரியர்கள்,பெற்றோர்களின் ஆசைக்கு கனவுகளை,திறமைகளை பலியாக்கும் பிள்ளைகள்.இவையெல்லாம் அதிகம் சிந்திக்க வேண்டிய விஷயங்கள்.சமூக மாற்றத்தை கோருபவை.ஆனால் நண்பன் சொல்ல வந்த செய்தியை மனதில் பதிய வைத்த சினிமாவா? படம் பார்த்துவிட்டு வெளியே வந்தவர்கள் யாரும் இதைப்பற்றி பேசியதாக தெரியவில்லை.எத்தனை சினிமா விமர்சனம் இந்த பார்வையை கொண்டிருக்கிறது என்று வாசகர்கள்தான் சொல்லவேண்டும்.
                                 சினிமா என்றில்லாமல் எந்த படைப்பும் சொல்லும் விதம்தான் மனதில் பதிய வைக்கிறது.நண்பன் இந்த முயற்சியில் வெற்றிபெறவில்லை.தமிழ் சினிமாவுக்கு ஒரு பிரச்சினை உண்டு.நல்ல கதையை தேர்வு செய்த பின்னரும் குழம்பித்தவிக்கும்.சி செண்டரில் ஓடாது இரண்டு ஃபைட் வேண்டும் என்பார்கள்.கவர்ச்சி இல்லையே என்று ஆலோசனை சொல்வார்கள்.நல்ல முயற்சிகள் சில வெற்றி பெற்ற பின்னரும்கூட இதுதான் நிலை.ரீமேக் படம் என்பதால் ரொம்ப யோசித்து நட்சத்திரங்களை தேர்வு செய்திருக்கிறார் சங்கர்.வேறு நடிகர்கள் பொருந்துவார்களா என்பது சந்தேகம்.பலரையும் போலவே அந்த வறுமையை கேலி செய்த விதம் வருத்தமான விஷயம்.அதிகமும் அப்படியான ஏழைகளைக் கொண்ட இந்தியாவில் சமூக அச்சத்தையும்,தாழ்வு மனப்பான்மையையும் ஏற்படுத்தும்.
                                அடுத்து வேட்டை என்றொரு படம் வந்திருக்கிறது.அடுத்த நாட்களில் பார்க்க வேண்டிய கட்டாயத்தை நண்பர்கள் உருவாக்கினார்கள்.வழக்கமான லிங்குசாமியின் பரபரவிறுவிறு படம்.இம்மாதிரி படங்கள் வசூலாகித்தான் விடுகின்றன.சிறுவர்கள் பட்டம் அறுத்த பிரச்சினையில் சண்டை ஆரம்பிக்கும்போது விசில் சத்தம் காதைக் கிழித்துப்போனது.விஷயம் இருக்கிறதோ இல்லையோ யாராவது விசில் அடித்தால் பலரும் கிளம்பிவிடுவது தியேட்டரின் இயல்பு.மனதில் அடுத்தவனை வீழ்த்த வேண்டும் என்ற வெறி இருந்து கொண்டே இருக்கிறது.அடிப்பது சந்தோஷமான விஷயம் ஆகிவிடுகிறது.ரௌடி,சவால் விடுவது,அடிதடி,மிரட்டல் இதெல்லாம் பார்த்த விஷயம்தானே என்றேன்.பொழுது போச்சு இல்லையாடா?என்றான் நண்பன்.சரிதான்.
-

Thursday, January 12, 2012

சோர்வாக இருக்கிறதா?


                               சில நேரங்களில் சோர்வாக இருக்கிறது.இரவு நல்ல தூக்கம் இல்லாவிட்டால் கூட சோர்வு ஏற்படும்.கடுமையான உடல் உழைப்பு,அலைச்சலுக்கு பின்பு சோர்வு வர வாய்ப்பிருக்கிறது.உடல் நலக்குறைபாடுகளில் இப்படி இருக்கலாம்.ஆனால் தொடர்ந்து உடல் சோர்வு,மூச்சு வாங்குதல்,தோல் வெளுத்து காணப்படுதல் போன்றவை இருந்தால் ரத்த சோகையாக இருக்கலாம்.இந்தியாவில் பெரும்பாலான பெண்கள் இப்பிரச்சினைக்கு ஆளாகி சிரமப் படுகிறார்கள்.பிரசவம் தொடர்பான சிக்கல்களுக்கு ரத்த சோகை முக்கிய காரணமாக இருக்கிறது.
                                சுவாசித்தல் பணியில் பங்கேற்பது ஹீமோகுளோபின்.ஆக்ஸிஜனை உடல் உறுப்புகளுக்கு கொண்டு சேர்ப்பதும்,கழிவை கொண்டுவருவதும் இதன் முக்கிய பணி.ஹீமோகுளோபின் குறைவையே ரத்தசோகை என்கிறோம்.உடல் இயக்கம் சீராக நடைபெறாமல் பல்வேறு பிரச்சினைகளை உண்டாக்கி விடுகிறது.ஆண்களுக்கு 13.5 கிராமிற்கு மேலும்,பெண்களுக்கு 11.5 கிராமிற்கு மேலும் இருப்பது ஆரோக்கியமானது.ஆனால் பலருக்கு குறைவாகவே இருக்கிறது.குறிப்பாக பெண்களில் கர்ப்பிணித்தாய்மார்களுக்கும் கூட 10க்கு கீழ்தான் இருக்கிறது.
                                பரம்பரை உள்ளிட்ட காரணங்கள் இருந்தாலும் சத்துக்குறைவு ஒரு முக்கிய காரணம்.இரும்புச்சத்து குறைபாடு,பி வைட்டமின் குறைபாடு போன்றவையே ரத்த சோகைக்கு முக்கிய பங்கு வகிக்கிறது.ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் சாதாரணமாக காணப்படும் பிரச்சினை.கர்ப்பிணித் தாய்மார்களுக்கு மட்டும் இரும்புச்சத்து,வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படுகிறது.மற்றவர்கள் இதைப்பற்றி தெரியாமலேயே இருந்துவிடுகிறார்கள்.அடிக்கடி சோர்ந்து போவதும்,உணவு காரணமாக கொஞ்சம் ஹீமோகுளோபின் கூடியதும் ஆறுதலாக உணர்வார்கள்.
                                  விழிப்புணர்வு இல்லாத நிலையே பெரும்பிரச்சினையாக இருக்கிறது.சரிவிகித உணவு இல்லாமல் இருப்பது நம்மிடையே சாதாரணம்.உணவை தேர்ந்தெடுக்க தெரியாமல் அடிக்கடி நோய்வாய்ப்படுகிறார்கள்.இக்குறைபாட்டுக்கு ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும்.பலருக்கு இப்படி குறைபாடு இருப்பதே தெரியாது.இரும்புச்சத்தின் ,,வைட்டமின்களின் அவசியம் தெரிந்தவர்கள்,எந்தெந்த உணவு வகைகளில் இருக்கிறது என்று தெரிந்தவர்கள் மிகவும் குறைவு.தெரிந்தவர்கள் உணவு தயார் செய்யும் நபராக இருப்பதில்லை.
                                                                                  கிடைக்கும் உணவை சாப்பிடும் பழக்கம்தான் நமக்கு உண்டு.அதிக சதவீத வறுமையும்,சத்துக்குறைவும் இன்னும் இந்தியாவில் பிரச்சினையாக இருக்கிறது.பெண்களின் கல்வியறிவு,ஊட்டச்சத்து பற்றிய அறிவும் குறைவாக இருக்கிறது.தனக்கு இப்படி ஒரு குறைபாடு இருக்கிறது என்பதே பலர் அறிவதில்லை.நல்ல உடல்நலத்திற்கு ஹீமோகுளோபின் அளவு போதுமான அளவு இருக்க வேண்டும்.நாள்தோறும் உணவு,சமையல் பட்டியலில் இரும்புச்சத்து,ஃபோலிக் அமிலம்,வைட்டமின்  போன்றவை நிறைந்திருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

                                                                     பேரீச்சம்பழம்,வெல்லம்,இறைச்சி,பச்சை காய்கறிகள்,கீரைகளில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.சரியாக உடலில் சேர அஸ்கார்பிக் அமிலம் கொண்ட (விட்டமின்  சி) உணவுப்பொருள்களையும் சாப்பிடவேண்டும்.எலுமிச்சை,நெல்லி,ஆரஞ்சு ,கொய்யா போன்றவை.சைவ உணவுப் பழக்கம் உடையவர்ளுக்கு விட்டமின் பி12 பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உண்டு. இவர்கள் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.ஆறு மாதம் ஒருமுறையாவது குடல்புழுக்களை அகற்ற சிகிச்சை செய்து கொள்ளவேண்டும்.உணவு உண்டபின் ஒரு மணிநேரம் வரை காபி,தேநீர் அருந்துவது தவிர்க்க வேண்டும்.இவை இரும்புச்சத்து உள்ளிட்டவற்றை உடலில் சேர்வதை தடுக்கின்றன.

-

Wednesday, January 11, 2012

ஹோட்டலில் அசைவம் சாப்பிடுவீங்களா? உஷார்!


கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போவது அதிகரித்து வருகிறது.இரண்டு பேரும் சம்பாதித்தால்தான் சமாளிக்க முடியும் என்ற நிலை.சில நாட்களில் சமைப்பதை விடவும் ஹோட்டலில் வாங்கிக் கொள்ளலாம் என்றே நினைக்கிறார்கள்.சும்மா ஒரு சேஞ்சுக்காக சாப்பிடலாம் என்று வருபவர்களும் உண்டு.இப்படி முடிவு செய்யும்போது பெரும்பாலானவர்கள் அசைவத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள்.
                             ஹோட்டலில் கிடைக்கும் அசைவம் சுத்தமானதாக ,ஆரோக்கியமானதாக இருக்குமா? நான் பெரும்பாலும் அசைவத்தை தவிர்த்துவிடுவேன்.மற்ற உணவுகளை விட வெகு சீக்கிரம் கெட்டுப்போகும் தன்மை அசைவ உணவுகளுக்கு உண்டு.விலை அதிகம் என்பதால் ஹோட்டல் வைத்திருப்போரும் விற்பனை ஆகாவிட்டாலும் வீணாக்க விரும்ப மாட்டார்கள்.மிளகு நஞ்சை எடுத்துவிடும் என்பார்கள்.கொஞ்சம் அதிகம் சேர்த்து சூடாக்கி பணமாக்கி விடுகிறார்கள்.

                              போட்டி என்பது நம்மவர்களுக்கு மிக பிடித்தமான விஷயம்.என் நண்பர் ஒருவர் போட்டி வாங்கி வந்து அவரே சமைத்து சாப்பிடுவார்.அசைவம் என்றால் மட்டும் தானே சமைத்து உண்ணும் பலரை எனக்கு தெரியும்.ஆட்டுக்குடல்தான் போட்டி.களி,பரோட்டாவுடன் போட்டி விற்பனை பறக்கும்.இந்த ஆட்டுக்குடலை ஒரு லாரியில் மடக்கி பிடித்தார்கள்.வெளி மாநிலத்திலிருந்து விற்பனைக்காக கொண்டு வந்திருந்தார்கள்.அங்கே இதற்கு அவ்வளவு வரவேற்பு இல்லை.
                               மொத்த ஆட்டுக்குடலும் சுகாதாரமற்றது.பிடிபட்ட குடல்கள் அழிக்கப்பட்டு விட்ட்து.இல்லாவிட்டால் பலருடைய சுகாதாரத்தை அழித்திருக்கும்.மதுவுடன் எளிதில் விற்பனையாகி விடுகிறது.காலையில் வாந்தி வந்தால் மது ஒத்துக்கொள்ள வில்லை என்று நினைப்பார்களே தவிர உடன் சாப்பிட்ட அசைவம் பற்றிய எண்ணம் வராது.சுயநலமும் பேராசையும் வளர்ந்துவிட்ட நாளில் யார் எக்கேடு கெட்டால் என்ன? அவர்களுக்கு கல்லா நிரம்பினால் போதும்.

                                 விருந்து சாப்பிடும் முன்பாக காக்கைகளுக்கு உணவு வைப்பது நமது கலாச்சாரம். இறுதி நாள் காரியத்தில் வெளியாட்களுக்கு விருந்து தருவார்கள்.சமீபத்தில் அப்படி ஒரு காரியத்திற்கு போயிருந்தேன்.காக்கைக்கு உணவு கொண்டு போய் வைத்துவிட்டு காத்திருந்தார்கள்.வெகு நேரம் மொத்த கூட்டமும் காத்துக்கொண்டிருந்தார்கள்.காக்கை சாப்பிடாவிட்டால் கை நனைக்க மாட்டார்கள்.சிட்டுக்குருவி மட்டும் அல்ல காக்கையும் காணாமல் போய்க் கொண்டிருக்கிறதா?
                                கிணற்றில் போட்டு விடலாம் என்று சிலர் சொன்னார்கள்.மீன் சாப்பிட்டால் போதும்.சீக்கிரம் கிளம்ப வேண்டுமே? காக்கையை பிதுர் என்பார்கள்.முன்னோர் சாப்பிட்ட பின்புதான் மற்றவர்கள் சாப்பிடவேண்டும்.ஆனால் உண்மையான நோக்கம் விருந்தில் விஷம் இருந்தால் உடனே தெரிந்துவிடும் என்பதே! ஒரு வழியாக காக்கை இரக்கப்பட்டு எங்கிருந்தோ வந்து எங்களை காப்பாற்றியது.நவகிரகங்களில் சனியை மந்தன் என்பார்கள்.சனியின் வாகனம் மெதுவாகத்தான் வரும் என்றார் ஒருவர்.

                                தானியங்களை காய வைத்து காக்கை குருவிக்காக காவல் காக்கும் காலங்கள் இனி இருக்காதா? காக்கை தலைமீது எச்சமிட்டால் தோஷம் என்ற நம்பிக்கை உண்டு.காகம் கரைவதற்கு பலன் சொல்வார்கள்.இன்று ஆபத்தில் சிக்கியிருப்பது போல தோன்றுகிறது.காக்கை பிரியாணி சாப்பிட்ட விவேக் நினைவுக்கு வருகிறார்.அப்போது அது நகைச்சுவை.கற்பனையை விட உண்மை பயங்கரமானது என்று யாரோ சொன்னார்கள்.பொதுமக்கள் புகார் கொடுத்த பிறகு சிலரை பிடித்து விசாரித்தார்கள்.
                                 கோணிப்பை நிறைய காக்கைகளை வைத்திருந்தார்கள்.நூறுக்கும் மேற்பட்டவை.அத்தனையும் இறந்த காகங்கள்.உணவுக்காக விஷம் வைத்து வேட்டையாடியதாக சொன்னார்கள்.ஒரு குடும்பம் நூறுக்கும் அதிகமான காக்கைகளை எத்தனை நாள் உண்பது? அவர்கள் சொல்வது உண்மையல்ல! அவை ஹோட்டல்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.பலரும் காடைஃபிரை,கவுதாரி ஃபிரை என்று மணக்க மணக்க சாப்பிடிகிறார்கள்.
-

Monday, January 9, 2012

நாலு பேர் முன்னால் பேச ஏனிந்த பயம்?-இரண்டு


தெனாலிராமனின் சூடுபட்ட பூனையை நினைவிருக்கிறதா? சூடான பாலை சுவைத்து நாக்கை சுட்டுக்கொண்ட பூனை மீண்டும் பாலை வைத்தால் குடிக்கவில்லை.சமூக பயம் என்பது இப்படித்தான்.கடந்தகால அனுபவங்களே பயத்தை ஏற்படுத்துகின்றன.செல்லுமிடமெல்லாம் வெற்றியை கண்டால் அச்சத்திற்கும் கலக்கத்திற்கும் மனம் ஆட்படாது.ஒதுங்கிப்போகாமல்,ஒளிந்து கொள்ளாமல் சமூகத்தை எதிர்கொள்வோம்.நிலத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருக்கிறேன்.மாலை நேரம்.லேசான இருட்டு படியத்துவங்கி இருக்கிறது.கவனிக்கவில்லை.பாம்பை மிதித்திருப்பேன்.இருதயத்துடிப்பு அதிகமாக உடல் வியர்த்து கொடூர அனுபவம்.அவ்வளவு நெருக்கமாக பாம்பை அதுவரை நான் பார்த்த அனுபவம் இல்லை.

                                அதே வழியில் நான் நடமாடித்தான் ஆக வேண்டும்.அந்த இட்த்தை கடக்கும் போதெல்லாம் என்னிடம் அதே விளைவு.சில காலம் வரை அப்படி இருந்து கொண்டிருந்த்து.கவனிக்கவும் சில காலம்தான்.பிறகு சரியாக போய் விட்ட்து.இதே போன்ற அனுபவங்கள் தொடர்ந்திருந்தால் வழியில் நடப்பதே பிரச்சினையாக இருக்கும்.கடந்த காலத்தில் சந்தித்த சூழ்நிலைகளே பயத்தை உருவாக்குகின்றன.அடிக்கடி தோல்விகளை எதிர்கொண்ட ஒருவர் சமூக பயத்திற்கு ஆளாக வேண்டி இருக்கலாம்.நிறம் காரணமாக,சமூக தகுதி நிலை காரணமாக,இயலாமை,உறவுகள் தொடர்பாக கேலிக்கும்,கிண்டலுக்கும் ஆளாக நேர்வது பிரச்சினையை கொண்டு வருகிறது.
                                பொத்திப் பொத்தி வளர்க்கும் சில குடும்பங்கள் இருக்கின்றன.அம்மா விளையாடுகிறேன்’’ என்றால் ’’ஏதாவது காயம் பட்டு விடும் வேண்டாம்’’ என்பார்கள்.மிக சாதாரணமாக அதெல்லாம் உன்னால் முடியாது வேண்டாம் என்பார்கள்.நெகட்டிவ் வார்த்தைகளையே சொல்லி வளர்க்கும் குடும்பங்களில் இருந்தும் சமூகத்தை எதிர்கொள்ள முடியாத மனிதர்கள் தோன்றலாம்.வாழ்க்கை முழுக்க எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் முன்னோர் சம்பாதித்த சொத்தை வைத்தே பிழைப்பு நடந்துவிடும்.மிக நெருங்கிய உற்றார் உறவினர்கள் மட்டுமே இவர்களுடைய சமூகம்.
                                   டீனேஜ் இளைஞனுக்கு மிகப் பெரிய அடி,பெண்கள் முன்னால் கேலி,கிண்டல் செய்யும்போது ஏற்படுகிறது.மனம் எதிர்பாலினர் அங்கீகாரத்திற்காக ஏங்கிக் கொண்டிருக்கும்போது,உலகமே நம்மை மதிக்கவேண்டும் என்று பேராவல் உள்ள வயதில் நண்பர்களின் கிண்டல் அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.என்னடா? வேற சட்டையே இல்லையா உங்கிட்ட? இவங்கப்பன் நேத்து குடிச்சுட்டு வந்து அடிச்சாண்டா! இவங்காளுங்க இப்படித்தாண்டா! சில நம்பிக்கைகள்,குடும்ப சூழ்நிலை போன்றவையும் சுற்றி உள்ளவர்களால் சுட்டிக்காட்டி கேலி செய்யப்படும்.அவனால் மாற்ற முடியாத விஷயமாக இருக்கும்.
                                    தாழ்வு மனப்பான்மை அதிகரித்து மற்றவர்களை தவிர்க்கவே விரும்புகிறார்கள்.தனிமை,சமூகத்தில் ஒட்டாத நிலையால் பொது அறிவும் விழுந்துவிடும்.நான்கு பேரோடு கலந்து பழகும்போது தெரிந்து கொள்ளும் விஷயங்கள் தெரியாமல் போய்விடுகிறது.இப்படி இருக்கும் பலர் போதை மருந்துகளுக்கு,குடிக்கு ஆளாவதும் சாத்தியம்.சூழல் தொடர்ந்து மாறாமல் இருந்தால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலையில் முடிவதும் உண்டு.
                               சுற்றியுள்ள சமூகமே சோஷியல் போபியாவுக்கான காரணமாக இருக்கிறது.குறிப்பிட்ட இட்த்தில் பாம்பை பார்த்த அனுபவம் பாம்பின் மீது பயத்தை உருவாக்குவது போலவே சமூகம் தந்த அனுபவம் சமூகத்தின் மீது பயத்தை ஏற்படுத்துகிறது.தொடர் தோல்விகள் முயற்சியில்லாமல் ஒதுங்க வைக்கிறது.இப்படிப்பட்டவர்களை நண்பர்கள் அடையாளம் கண்டால் மற்றவர்களிடம் பெருமையாக அறிமுகப்படுத்தலாம்.அவரது கருத்துக்கு முக்கியத்துவம் தரலாம்.அவர் முக்கியமானவர் என்ற எண்ணத்தை ஏற்படுத்தலாம்.
அடுத்த பதிவில் முடியும்.
-

Friday, January 6, 2012

நாலு பேர் முன்னால் பேச ஏனிந்த பயம்?


போபியா(phobia) என்று சொல்கிறோம்.சரியான காரணமின்றி அச்சப்படுவதை குறிப்பிடலாம்.இதில் பல வகை உண்டு.நாம் ஒவ்வொருவரும் கவனித்திருப்போம்.சிலர் மட்டும் ஒதுங்கியே இருப்பார்கள்.நான்கு பேர் கூடி நின்று பேசிக்கொண்டிருக்கும் போது எதுவும் பேச மாட்டார்கள்.திருமணங்களை,விழாக்களை தவிர்ப்பார்கள்.எதிரில் இருப்பவர் கண்களை நேருக்கு நேராக பார்த்து பேசுவது இவர்களுக்கு ஆகாத காரியம்.மற்றவர் முன்னால் செல்போனில் கூட பேச மாட்டார்கள்.
                               வளரிளம் பருவத்தில்தான் இந்த பிரச்சினைகள் ஆரம்பிக்கிறது.குழந்தையிலிருந்து வெளியில் வந்து எல்லாவற்றையும் ஒப்பிட்டுக்கொண்டிருப்பார்கள்.ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான தருணம்.மற்றவர்கள் போல நாம் இல்லை என்று மனம் விழ,நண்பர்களின் கேலியும்,கிண்டலும் நிலையை இன்னும் மோசமாக்கும்.கல்லூரியில் இருந்தாலும் விவாதங்களில் பங்கு கொள்ள மாட்டார்கள்.
                               சிலருக்கு இந்த பிரச்சினை விலகுவதேயில்லை.இம்மாதிரி உள்ள பெரும்பாலானோருக்கு வேறு சில மனநல பாதிப்புகளும் இருக்கும் என்கிறார்கள்.பள்ளி,கல்லூரிகளில் விஷயம் தெரிந்த ஆசிரியர் அமைந்தால் இத்தகைய மாணவர்களுக்கு ஓரளவு உதவ முடியும்.கலந்து பழகும் வாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம்,உணர்வு ரீதியாக உதவி செய்து இக்குறையை போக்க முயற்சி செய்வார்.
                               சுற்றி உள்ளவ்ர்கள் புரிந்து கொண்டால் உதவ முடியும்.இது அவருக்கு நல்ல அறிகுறி அல்ல! மேலும் மனம் சார்ந்த பாதிப்புகளுக்கு இட்டுச்செல்லும் வாய்ப்பும் இருக்கிறது.தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது,டென்ஷன்,கவலை,பாதுகாப்பில்லாமல் உணர்வது,நடுக்கம்,முடிவெடுப்பதில் தாமதம் போன்ற அறிகுறிகளை இவர்களிடம் பார்க்க முடியும்.
                                 மனம் சீரற்று இருப்பதால் உடலிலும் மாற்றங்கள் ஏற்படும்.எளிதில் சோர்வடைதல்,நாடித்துடிப்பு அதிகரிப்பது,உடலில் சில இடங்களில் வலி,முழுமையானகவனமின்றி இருப்பது,ரத்த அழுத்தம் கூடுவது,நினைவாற்றல் குறைவு ஆகிய உடல் நல பாதிப்புகளும்ம் இருக்கும்.மேலே சொல்லப்பட்டவை பொதுவான விஷயங்கள்.வயதிற்கேற்ப,ஒவ்வொருவருடைய சூழல் பொறுத்து அறிகுறிகளில் மாற்றம் இருக்கலாம்.
                                  இப்படி நாலு பேர் முன்னால் முகத்தை காட்ட அஞ்சுவதை சோஷியல் போபியா(social phobia) என்பார்கள்.கேலி ,கிண்டல் போன்றவை இவர்களுக்கு பெரும் சங்கட்த்தை உருவாக்கும்.அதிக கஷ்டமாக உணர்வார்கள்.நண்பர்கள் மேலும் இதை சிக்கலாக்குவதால் இன்னும் ஒதுங்கியே போவார்கள்.சிலருக்கு இது தொடர்ந்து பிரச்சினையாகவே இருந்து கொண்டிருக்கும்.
                                  இப்பிரச்சினைக்கான காரணங்கள் என்ன? இவற்றை எதிர்கொள்வது எப்படி? குடும்ப உறுப்பினர்களாக,நண்பர்களாக நாம் எப்படி உதவ முடியும்? இன்னுமொரு பதிவில் அலசுவோம்.
-

Thursday, January 5, 2012

எமன் அலையும் சாலைகள்.

 சாலை விபத்துக்களுக்கு தனிக் குணம் உண்டு.அநியாய மரணம் என்பார்கள்.கேள்விப்படும் அனைவரிடமும் அதிர்ச்சியை உருவாக்கும்.பலர் கேள்விப்பட்டிருப்பார்கள்.சில விபத்துக்களை நேரில் பார்த்திருப்பார்கள்.நான் பார்த்த விபத்துக்கள் எத்தனை இருக்கும் என்று நினைவில் இல்லை.இந்தியாவின் நீண்ட தேசிய நெடுஞ்சாலையின் அருகே அமர்ந்திருக்கிறது எங்கள் கிராமம்.நாளிதழ் படிக்க தினமும் நெடுஞ்சாலை அருகில் உள்ள டீக்கடைக்கு வரவேண்டும்.
ஒரு நாளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடக்கும் சாலை.பல மாநிலத்து வாகனங்களும் இருக்கும்.விபத்துகளும் பலவகைப் பட்டதாக இருக்கும்.சின்னஞ்சிறு குழந்தை முதல் ஒரே நேரத்தில் குடும்பமாக இருபது பேர் பலியான விபத்து வரை நேரில் பார்த்திருக்கிறேன்.என்னுடைய நெருங்கிய நண்பர்களை விபத்தில் பறி கொடுத்த கொடூர சம்பவங்களை  சந்தித்ததுண்டு.கால் மட்டும் தனியாக,முகம் சிதைந்து தலை நசுங்கி,சதைத்துண்டுகளாக என்று இப்போது நினைத்தாலும் கஷ்டமாக இருக்கிறது.
ஏராளமான விபத்துகளை நேரில் கண்ட அனுபவத்திலிருந்து அதற்கான காரணங்களையும் விவாதிப்பார்கள்.வேகமாக செல்லும் ஒரு லாரியிலிருந்து தம்ளர் ஒன்று கீழே விழுந்து விட்டது.கிளீனர் ஏதாவது சாப்பிட்டுவிட்டு கையை கழுவியிருக்க வேண்டும்.தம்ளர் விழுந்துவிட்டது என்று பிரேக் போட,அடுத்து வந்து கொண்டிருந்த லாரி வேகமாக மோதியது.நசுங்கிப்போயிருந்த உடல்களை சிரமப்பட்டு வெளியே எடுத்தார்கள்.
நண்பர் ஒருவர் நகரப் பேருந்தில் இருந்து இறங்கி எதிர்புறம் போனார்.வேகமாக வந்த லாரியை கவனிக்கவில்லை.அவரது முகத்தை பார்க்க முடியவில்லை.எதுவும் மிஞ்சவில்லை.சாலையிலேயே போஸ்ட்மார்ட்டம் செய்தார்கள்.கவனக்குறைவால் நேர்ந்த விபத்து.புத்தாண்டு நள்ளிரவு கேக் வெட்ட தயாராக இருந்தோம்.திடீர் சத்தம் ஒன்று உலுக்கியது.அருகே போய் பார்த்தால் உடலில் காயங்களுடன் விழுந்து கிடந்தார்.குடித்திருந்தார்.பேச்சு குளறிக் கொண்டிருந்தது.

சென்ற மாதம் நகரில் திடீரென்று மாடு குறுக்கே வந்து விட்டது.மாட்டின் மீது மோதாமல் இருக்க முயன்று கீழே விழுந்தார்.திருப்பத்தில் நல்ல வாகன ஓட்டிகள் சிலர் ஹாரன் கொடுப்பார்கள்.மாடுகளுக்கு அப்படி சத்தம் எழுப்ப ஏதாவது வழியிருக்கிறதா தெரியவில்லை.செல்போனில் பேசிக் கொண்டே வாகனம் ஒட்டுவதால் விபத்து ஏற்படும் என்பதையும் நேரில் பார்த்தேன்.இரண்டு நண்பர்கள் ஒரே இடத்தில் பலியானார்கள்.இன்னமும் சாலைகளில் செல்போனை காதில் வைத்துக் கொண்டு வாகனம் ஓட்டுபவர்களை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
த்ரில்லிங் என்று வேகம் கூட்டி விளையாடுபவர்களை பார்க்கிறேன்.விதிகளை காற்றில் பறக்கவிட்டு அலைபவர்களை பார்க்கிறேன்.நேருக்கு நேராக வாகனங்கள் மோதிக் கொள்வதை பார்த்துவிட்டு சிலர் சொன்னார்கள்.''நான்கு வழி சாலை வந்தால் விபத்துக்கள் குறைந்துவிடும்.'' அப்படியொன்றும் குறையவில்லை.அகன்ற சாலைகள் எமனுக்கும்  பிடித்திருக்கிறது.
-

Wednesday, January 4, 2012

குடும்ப வன்முறை.


                              குடும்ப வன்முறைக்கு சட்டம் வந்தபோது எதிர்க்குரல்களும் வந்தன.எத்தனை பேர் பயன் அடைந்திருப்பார்கள்? பெண்கள் தவறாக பயன்படுத்தக் கூடும் என்று சொன்னார்கள்.ஆனால் சட்டம் உருவாக்க வேண்டிய அவசியம் பல்வேறு ஆய்வுகளை பின்னணியாக கொண்டிருக்கிறது.இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க ஒரு விஷயம் பொதுவாக இருக்கிறது.
                                எழுத்தறிவு வளரவளர பண்பும் வளர வேண்டும்.ஆனால் படிப்போ,மற்ற தகுதிகளோ இந்த விஷயத்தில் மட்டும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்திவிடவில்லை.குடும்ப வன்முறை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் பொதுவானதாக இருக்கிறது.ஏழை,பணக்காரன்,சாதி,மதம் எந்த வேறுபாடுகளும் இல்லை
.
                                குடும்ப வன்முறை எங்கெங்கும் நிறைந்திருந்தாலும் அதிகம் புகாராக வருவதில்லை.அதுவும் இந்தியாவில் மிகமிக குறைந்த அளவில் பதிவாகிறது.நம் நாட்டில் பெண்களுக்கு உடல் காயம் என்று ஏதாவது ஏற்பட்டால் கணவன்,அவனைச் சார்ந்தவர்களின் சித்தரவதை காரணமாக இருக்கிறது.இங்கே மனைவியை அடிப்பதே வீரம்.
                                 கணவன் என்ன செய்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்று உலகம் சொல்கிறது.எதிர்த்து பேசினால் வாயாடி என்பார்கள்.வெளியில் சொன்னால் குடும்ப மானத்தை கெடுக்கும் பாவி.குழந்தைகள் ஆன பின்னால் அவர்களுக்காகவாவது பொறுத்துக் கொள்ள வேண்டும். தாய் வீட்டிலும் கூட இதை ஒப்புக் கொள்கிறார்கள்.
                                                                             மகள் அடியும் உதையும் வாங்கிக் கொண்டிருப்பது கஷ்டமான விஷயம்.ஆனாலும் மண உறவை முறித்துக் கொண்டு வீடு திரும்புவதை பெற்றோர் விரும்புவதில்லை.நம்முடைய காலத்துக்குப் பின் தனியாளாகி என்ன செய்வாள் என்ற எண்ணம் ஒரு காரணம்.இல்லாவிட்டால் அடுத்தபெண்ணின் திருமணம் பாதிக்கப்படும் என்ற பயமும் இருக்கும்.
                                  மகளின் நிலையை எண்ணி பெற்ற தாய் அழுவாள்.அவளுக்கு மிக கஷ்டமான விஷயம்.கோயிலுக்கு நேர்ந்து கொள்வாள்.ஜோதிடம் பார்க்க போவாள்.கூடப் பிறந்த அண்ணன் தம்பியிடம் சொல்லி அழலாம்.மகளை அழைத்து வேதனையுடன் அம்மா சொல்கிறார்,ஆண்கள் அப்படித்தான்,போகப் போக சரியாகப் போய்விடும்.இப்போது உனக்கு நேரம் கொஞ்சம் சரியில்லை.
                                  வாழாவெட்டி என்றொரு வார்த்தை இருக்கிறது.பெண்கள் நினைத்தாலே நடுங்கும் வார்த்தை அது.ஏளனம்,பாதுகாப்பின்மை,ஒதுக்குதல் இன்னும் கொடூர எண்ணங்களை உற்பத்தி செய்யும் வார்த்தை அது.முதல் பெண்ணே வாழாவெட்டி,அதனால் அந்த குடும்பத்தில் பெண் வேண்டாம் என்பார்கள்.
                                   சரிதான்.பெண்களால் ஆண்கள் பாதிக்கப்படுவதில்லையா? இல்லையென்று நான் சொல்லவில்லை.அதற்கும் நிவாரணம் தேவைதான்.ஆனால் பெண்களுக்கு நேரும் வன்முறைகளுடன் ஒப்பிட முடியாது.சிகரெட் நெருப்பால்  உடலை சுடும் பெண்கள் இருக்கிறார்களா? கர்ப்பிணி என்றும் பாராமல் போதையில் எட்டி உதைப்பது போன்று பெண்களின் செயலை ஒப்பிட முடியுமா?
-

Tuesday, January 3, 2012

ஆரோக்கியத்திற்கு தயிர் நல்லது.


                              இரவு நேரங்களில் தயிர் சாப்பிடவேண்டாம் என்று சொல்வார்கள்.உறங்கும் நேரத்தில் கொழுப்பு உணவு செரிமானமாவது எளிதாக இருக்காது.ஆனால் சர்க்கரை சேர்த்து(லெஸ்ஸி) மாலை வேளையில் சாப்பிடும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.அசைவ உணவுகளுடன் தயிர் சேர்க்க வேண்டாம் என்று சொல்வதும் உண்டு.இதுவும் ஜீரணம் தொடர்பாக இருக்க வேண்டும்.
                              பசுவின் தயிரை கொண்டாடுவது உண்டு.ஆரோக்கியமானது என்றும் சுறுசுறுப்பைத்தரும் என்றும் படித்த நினைவு.ஆனால் எருமைப் பாலில் இருந்து தயாரிக்கப்படும் தயிர் மந்தம்.அதிக கொழுப்பை  உடையது.சில வீடுகளில் குழந்தைகளுக்கு தர மாட்டார்கள்.இன்று விற்பனையில் கிடைக்கும் பால் ஒரே வகைப்பட்ட்தாக சொல்ல முடியாது.இது மாட்டுப்பால்,எருமைப்பால் என்றெல்லாம் கேட்டு வாங்குவது கஷ்டம்.எருமையை எமன் வாகனம் என்பார்கள்.ஆனால் கிராமங்களில் பல குடும்பங்களில் வறுமைக்கு எமன்.
                               அதிக பால் தரும் பசுக்களை சீமைப்பசு என்று சொல்வார்கள்.ஆனால் விவசாயிகளுக்கு பசுமாடு என்பது உழவு,பால் இரண்டுக்கும் பயன்படுத்தும் வகை.அதிகபட்சம் ஒரு லிட்ட்ர் பால் கிடைத்தால் பெரிய விஷயம்.பால் பயன்படுத்தியது போக தயிராக்குவார்கள். மோரை சேர்ப்பார்கள்.சில நேரங்களில் மோரை பூனை குடித்து விடும்.ஆறு மணிக்குள் பார்த்தால் பிரச்சினை இல்லை.
                                 விளக்கு வைத்துவிட்டால் பக்கத்துவீட்டில் தரமாட்டார்கள்.வேறு வழியில்லாமல் எலுமிச்சம்பழத்தை சேர்ப்பார்கள்.அதுவும் இல்லாவிட்டால் சமையலுக்கு பயன்படுத்தும் புளியை உருண்டையாக பாலில் போட்டு விடுவார்கள்.காலையில் தயிராகி இருக்கும்.எருமைத் தயிர் என்றால் கெட்டியாக இருக்கும்.பசுவின் தயிர் பாத்திரத்தை ஆட்டினாலே உடையும்.
                                 தயிர் சேர்க்கும் குடும்பங்களில் மலச்சிக்கல் என்றால் என்னவென்றே தெரியாது.இந்த சிக்கல் இல்லாவிட்டாலே ஆரோக்கியத்திற்கு எந்தக்குறையும் இல்லை.சிறுவயதில் மாடு கன்று ஈன்றுவிட்டால் போதும்.தினமும் தயிர் இல்லாமல் சாப்பிட மாட்டேன்.கொஞ்சம் சாம்பாரை தயிருடன் சேர்ப்பது எனக்கு பிடித்தமானது.அது ஒரு தனி சுவை.எனக்கு உயிர் என்பார்களே அப்படி!
                                 மதிய உணவுக்கு தயிர் சாதம் சாப்பிடலாம்.அதிக எடையை உள்ளவர்களுக்கு ஏற்றதாக இருக்கும்.ஃபுல் மீல்ஸ் சாப்பிட்டு வயிறை பெரிதாக்குவதை தவிர்க்கலாம்.இப்போதைய பால் மிதமான கொழுப்புடன் தான் கிடைக்கிறது.அதிக கொழுப்பு சேர்ந்துவிடும் என்ற எண்ணம் தேவையில்லை.
                                 உயிர்ச்சத்துக்கள் ஏ,ரிபோபிளேவின் (பி தொகுதி) ஆகியவை தயிரில் அதிகம்.கால்சியம் உள்ளிட்ட தாதுக்களும் இருக்கிறது.தலைக்கு தேய்த்து குளித்தால் பொடுகை அகற்றும் பணியை தயிர் செய்யும்.பொடுகு போய்விட்டாலே முடி உதிர்வதும் குறையும்.முக அழகுக்கு தயிர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
                                 ஆண்டிபயாடிக் மருந்துகள் பாக்டீரியாவில் ஏற்படும் நோய்களுக்கு பரிந்துரைப்பார்கள்.நன்மை செய்யும் பாக்டீரியாக்களையும் இம்மருந்துகள் கொன்று விடுகின்றன.ஆண்டிபயாடிக் சிகிச்சைக்குப் பிறகு தயிர் சாப்பிட சொல்வதுண்டு.செரிமானத்திற்கு உதவும் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை மீண்டும் சேர்க்கிறது.குடல் தொற்றுக்களை போக்கும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன்.தயிர் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு பெருமளவு உதவி செய்யும்.
-