Sunday, September 26, 2010

காது கொடுத்து கேளுங்கள் ;கடவுள் ஆகலாம்!

ஒருவருடைய பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதனாலேயே பெரும்பாலான தற்கொலைகளை தடுக்கமுடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.உங்களிடம் யாரேனும் தங்கள் துயரங்களை,துக்கங்களை கொட்டும்போது,புலம்பும்போது கவனமாக கேட்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் பெரும்பாலனவர்கள் சொல்வது பொய்!உண்மையாக இருக்குமானால் மதுக்கடையில் கூட்டம் குறைந்திருக்கும்,நிறைய தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கும்,மனக்கோளாறுகள்,மனநோய்கள் அதிகரித்திருக்காது,தங்களது சிக்கல்களுக்காக கோவில்களுக்கு செல்பவர்கள் இருக்கமாட்டார்கள்.குழந்தைகள் சொல்வதை கவனமாக கேட்டால் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் கூட வெளியே வரலாம்.
பிரச்சினைகளை நாம் ஏன் கவனமாக காது கொடுத்து கேட்பதில்லை?
ஏனென்றால், நாம் யாரையாவது சந்திக்கும்போது நம்மை முன்னிலைப்படுதுவதிலேயே நோக்கமாக இருக்கிறோம்.நமது அருமை,பெருமைகளையும்,சாதனைகளையும் கூறி நம்மை முக்கியமானவராக உருவாக்குவதில் தான் கவனம் செலுத்துகிறோம்.எதிரில் இருப்பவர் கேட்கிறாராஎன்பது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்,மேலும், நாம் துயரங்களை விரும்புவதில்லை.நண்பர்களோ,உறவினர்களோ சந்திக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அவ்வளவே. அடிப்படையிலேயே நாம் எதிர் உணர்வுகளை விரும்புவதில்லை.முக்கியமாக நாம் இன்னும் அருகில் உள்ளவர்களையே சகமனிதர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கசக்கும் உண்மை.
பிரச்சினைகளை வெளியே சொல்ல ஏன் முன்வருவதில்லை ?
பலர் தங்களது நெருடல்களை,சிக்கல்களை யாரிடமும் பேச முன்வருவதில்லை.தங்களது பிரச்சினைகளை கடவுளிடம் எடுத்துச்செல்கிறார்கள்.இறைவன் கேலி,கிண்டல் செய்வதில்லை.பேசிக்கொண்டிருக்கும்போது,புலம்பும்போது பேச்சை மாறுவதில்லை, அவசரமான வேலை இருப்பதாக கிளம்பிச்செல்வதில்லை,தங்களது கதைகளை சொல்ல தொடங்குவதில்லை.வேண்டாவெறுப்பாக பதிலுக்கு ஏதேனும் உளறுவதில்லை.
நண்பர்களை கண்டறியுங்கள்
உங்கள் கஷ்டங்களை நண்பர்களிடம் பேச ஆரம்பிக்கலாம்,அவர்கள் உங்களை எதிர்கொள்வதை வைத்து நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டால்,அதற்கு மதிப்பளித்தால்,கவனமாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.
கவனமாக காது கொடுத்து கேளுங்கள்!
ஆம்.தங்களது பிரச்சினைகளை கேட்க யாரும் இல்லாத நிலையிலேயே கடவுளிடம் போகிறார்கள்.அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் கடவுள் நீயே.
கேட்கும்போது
  • கண்ணோடு கண் நோக்கி கவனமாக கேளுங்கள் .
  • அவரது உணர்வுகளை கவனியுங்கள்.
  • அவரை பேசத்தூண்டுங்கள்.
  • அவரது உணர்வுகளை கூறி நீங்கள் புரிந்துகொண்டதை தெரியப்படுத்துங்கள்.
  • புரியாததற்கு விளக்கம் கேளுங்கள்.
  • உங்கள் கதையை ஆரம்பிக்கவேண்டாம்.
  • பேச்சை திசை திருப்பவேண்டாம் .
  • தீர்வு இருந்தால் அவருக்கு சொல்லுங்கள் .
-

Sunday, September 19, 2010

அன்னையை போற்றுவோம் -இரண்டு

கற்பழிப்பிற்கு சட்டத்தில் ஏழாண்டு கடுங்காவல் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.தனது மகள் கற்பழிக்கப்பட்டதற்கு தாயால் தண்டனை தரப்பட்டால்? நாளிதழ்களிலோ ஊடகங்களிலோ இவையெல்லாம் வருவதில்லை. பெண்ணுக்கு பதினைந்து வயது. வயதுக்கு வந்து இரண்டு மாதங்களாகிறது. வழக்கமாக சொல்லக்கேட்பதுண்டு,மச்சினிச்சி சூப்பர்டா ,நீ குடுத்து வச்சவன்டா.....யாரும் வீட்டில் இல்லாதபோது தூங்கிக்கொண்டிருந்த பெண்ணை அவளுடைய அக்காவின் கணவன் கற்பழித்தான்.ரொம்பவும் மிரண்டு போய்அம்மாவிடம் அழுதுகொண்டே கூறியபோது அம்மாவுக்கும் ஆத்திரமாக வந்தது. பின்னர் அம்மா மகளின் கண்ணைத்துடைத்தவாறு கூறியது "யாரிடமும் சொல்லாதே".கொஞ்ச நேரம் கழித்து தனது மருமகன் வீட்டிற்கு வந்தபோது சமையல் செய்து கொண்டிருந்த தாய் கையிலிருந்த கரண்டியை சுவற்றில் சத்தம் வருமளவுக்கு வீசினாள்.கோபத்தில்,"வருகிறவர்கள் ஒழுங்காக இருந்து விட்டு போகவேண்டும் ".கற்பழிப்பு குற்றவாளிக்கும் சேர்த்துதான் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது.ஒரு தாய் அவ்வளவுதான் தண்டனை தரமுடியும்.அவளுக்கு இரண்டு பெண்கள் . -

Friday, September 10, 2010

பிச்சைக்காரர்கள் உழைக்கத்தயார்

கோவை மாநகராட்சியில் மன நல ஆலோசனையின் விளைவாக பிச்சைக்காரர்கள் சுமார் ஐம்பது பேர் சுய தொழில் தொடங்க முன்வந்தார்கள்-தினமலர் செய்தி. .உரிய ஆலோசனையின் விளைவாக இந்த முடிவுஎட்டப்பட்டுள்ளது. இதன் சாதகபாதகங்களை பார்க்கும் முன்பாக மன நல ஆலோசனை பற்றி சில தகல்வல்கள் . மனிதர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவுவது தான் மன நல ஆலோசனையின் நோக்கம் .பயிற்சி பெற்ற ஒருவர் தனி மனிதனுக்கோ குழுக்களுக்கோ ஆலோசனை வழங்கலாம் .நல்ல தமிழில் ஆற்றுப்படுத்துதல் என்றும் அழைக்கப்படுகிறது. இதே செய்தியில் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் கூறும்போது ,''யார் என்ன சொன்னாலும் ஏற்றுக்கொள்ளகூடிய பக்குவத்தில் ஒருவர் கூட இல்லை என்கிறார் ''.மிகச்சரி .ஒருவருக்கு அறிவுரை கூறும்போது நீங்கள் மேலானவர்களாகவும் பெறுபவர்கள் கீழேயும் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
மனிதன் எது இல்லையென்றாலும் ஒப்புக்கொள்வான்,உனக்கு அறிவில்லைஎன்றால் வரக்கூடிய கோபத்தை கற்பனை செய்து பாருங்கள் .உண்மையாகவே அறிவில்லாமல் போவதை நீங்கள் காண முடியும் . உணர்ச்சிகள் ஆக்கிரமிக்கும்போது இயற்கையாக உள்ள சிந்திக்கும் திறனை இழந்து அறிவிலியாவது தவிர்க்க முடியாது போய்
விடுகிறது. அப்போது மனநலம் பயிற்சி பெற்ற ஒருவர் உதவ முடியும் .தனி மனிதன் ஒருவரை மோசமான வகையில் பாதிக்கச்செய்யும் அச்சம் ,கலக்கம் போன்ற உணர்ச்சிகள் பெருமளவு சிதைக்கும்போது மனநல ஆலோசனை உதவும் . வளர்ந்த நாடுகளில் இத்தகைய ஆலோசனை பிரபலம். சக மனிதனை மனிதனாக பார்ப்பதென்பதுமுக்கியமானது.பிச்சைக்காரர்கள் உழைப்பாளி,முதலாளி என பரிணாமம் பெறுவது தொடர் ஆலோசனை மூலம் சாத்தியமாகலாம்.
-

Sunday, September 5, 2010

அன்னையை போற்றுவோம் -ஒன்று

1. பட்டம் பெற்ற ஒரு பெண்ணை விலை உயர்ந்த டி.வி,வாசிங் மெஷின்,சகல வசதிகளோடும் உள்ள ஒரு வீட்டிற்கு திருமணம் செய்து கொடுத்தார்கள். திருமணமாகி ஆறுமாதம் கழித்து மருத்துவரிடம் அழைத்து வந்தார்கள் .அந்த பெண்ணுக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்சினை இருந்தது .சிறு நீர் வெளியேறுவது தெரியவில்லை.நனைந்தபின்னர் வெகு நேரம் கழித்து தெரியவரும். பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு சிறுநீர் மண்டலத்தில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதை கண்டறிந்தார். விசாரித்தபோது தாய்வீட்டில் உள்ளபோது அத்தகைய தொந்தரவுகள் எதுவும் இல்லை என்றார். கணவன் வீட்டில் தாங்க முடியாத மன அழுத்தத்திற்கு ஆளாவதுதான் காரணம் என்று முடிவு செய்து மன நல மருத்துவரிடம் பரிந்துரை செய்தார்.மனதில் ஏற்படும் அழுத்தங்கள் அளவு மீறும்போது உடல் மீது வீசிவிடுகிறது என்கிறது உளவியல் .உடலில் ஏற்படும் பல நோய்கள் மனம் தொடர்புடையதாக இருக்கலாம். கணவன் , மாமியார் ,நாத்தனார் ஆகியோர் செய்யும் கொடுமைகளை கொட்டிய பின்னர் அவரது தாய்கூறினார், ''எங்கள் வீட்டுக்கே வந்து விடுமாறு கூறுகிறேன் ,ஆனால் வரமாட்டேன் என்கிறாள் ''."என் தங்கை வேறு இருக்கிறாள்,அவளுக்கு எப்படி கல்யாணம் ஆகும் ?வாழாவெட்டி வீட்டில் இருக்கும்போது யார் வருவார்கள்? . இரண்டாவது தென் மாநிலம் ஒன்றிலிருந்து இளங்கலை அறிவியலில் பட்டம் பெற்ற பெண் பணிக்காக மும்பை சென்றார். உயர்சாதியை சார்ந்தவர்.தமிழ் நாட்டை ச்சார்ந்த ராணுவ வீரர் ஒருவருடன் காதல் ஏற்பட்டது.வேலையையும் ,பெற்றோரையும் விட்டு விட்டு காதலனுடன் வந்துவிட்டார்.கணவன் வீட்டுக்கு வந்த பிறகுதான் தெரிந்தது அவனுக்கு ஏற்கனவே திருமணமாகி குசந்தைகளும் இருக்கிறார்கள் என்பது.கர்ப்பமானது தெரிந்தவுடன் கர்ப்பத்தை கலைக்க வற்புறுத்தி கலைக்கப்பட்டு விட்டது.-ஏற்கனவே குழந்தைகள் இருக்கிறார்கள் ,மேலும் தேவையில்லை. ரேஷன் கார்டில் அவரது பெயர் இல்லை.வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை. தற்போது தீராத நோயுடன் போராடிக்கொண்டிருக்கிறார். -