Showing posts with label soft skills. Show all posts
Showing posts with label soft skills. Show all posts

Thursday, April 14, 2011

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா?-நான்கு

                              ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரகசியங்கள் உள்ளே கிடக்கிறது.யாரிடமாவது பேச நினைக்கிறான்.கேட்பதற்கு ஆளில்லை.கேட்பதற்கு ஆள் இருந்தாலும் அதை ரகசியமாக வைத்துக் கொள்வார்களா? அல்லது கேலி செய்வார்களா?

                                எதையாவது என்னிடம் சொன்னால் நான் ஊரெல்லாம் சொல்லிவிடுகிறேனாம்,அதனால் என்னிடம் எதுவும் சொல்லக்கூடாதாம்ரொம்ப குறை பட்டுக்கொண்டார் அந்த மாடி வீட்டம்மா. எனக்கும் கஷ்டமாக இருந்த்து.பாவம்தான்.அவரே தொடர்ந்தார். நான் யாரிடம் சொல்லிவிட்டேன்,பக்கத்து வீட்டு மாமியிடம் சொன்னேன்,சரசுவிடம் சொன்னேன்,காவேரியிடம் சொன்னேன்,மாது நம்ம ஆள்தானே அவரிடம் சொன்னேன்,மளிகை கடை கோபாலிடம் சொன்னேன்.......................................தொடர்கிறது.நான் ஊரெல்லாம் சொன்னேனாம்! நீங்களே பாருங்கள் தம்பி!

                               எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்த்து.என்னிடமும் சொல்லியாகிவிட்ட்து.அது ரகசியம் உங்களுக்கு தெரியவேண்டாம்.மாடி வீட்டம்மா மீது அநியாயத்திற்கு வீண்பழி சுமத்துகிறார்கள் பாருங்கள்.அதை மட்டும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

                               வேடிக்கை இருக்கட்டும்.உண்மையில் பலரும் அந்த மாடி வீட்டம்மா மாதிரிதான் இருக்கிறார்கள்.ஒருவர் நம்மிடம் தனது சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.குடும்ப விஷயங்களை விவாதிக்கிறார்.நாம் வேறு யாரிடமாவது பேசி விடுகிறோம்.அடுத்தவனை பற்றிய வம்பை கேட்பதற்கு காதுகள் தயாராக இருக்கின்றன.

                              நம்மிடம் தெரிவிக்கப்பட்ட ஒன்றை மற்றவர்களுக்கு உடைப்பது மூலம் நாம் நம்பிக்கையற்றவர்கள் ஆகிறோம்.சொன்னவரை அவமானப்படுத்துவதாகவும் ஆகும். உங்களுக்கு கேலியாக,அர்த்தமற்றதாக தோன்றும் ஒன்று இன்னொருவருக்கு முக்கியமான பொருளாக இருக்கும்.

                              பலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது உங்களுக்கு அது அப்படி ஒன்றும் பெரிய விஷயமில்லையே என்று தோன்றும்.ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஆளுமை இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி வார்க்கப்பட்டவர்களோ,வளர்க்கப்பட்டவர்களோ அல்ல!

                            ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே ஏராளம் இருக்கிறது.பேச நம்பிக்கையான ஆள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறான்.ஒரே கவலைமட்டுமே! தன்னுடைய ரகசியம் காப்பாற்றப்படுமா? அல்லது கேலி செய்யப்பட்டு வெளியில் வந்து விடுமா? என்பதுதான்.

                       மிக சாதாரணமான ஒன்றுதான்.நம்மிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட எதுவும் ரகசியமாக வைக்க வேண்டியவை.நம்மை நம்பி கூறப்பட்ட வார்த்தைகளை வெளியிடுவது துரோகமும் கூட!தங்கள் ரகசியம் காக்கப்படும் என்ற ந்ம்பிக்கை மிகுந்தவர்களாக நீங்கள் இருந்தால் மற்றவர்கள் விரும்பும் நபராக இருப்பீர்கள்.
-

Sunday, September 26, 2010

காது கொடுத்து கேளுங்கள் ;கடவுள் ஆகலாம்!

ஒருவருடைய பிரச்சினைகளை காது கொடுத்து கேட்பதனாலேயே பெரும்பாலான தற்கொலைகளை தடுக்கமுடியும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.உங்களிடம் யாரேனும் தங்கள் துயரங்களை,துக்கங்களை கொட்டும்போது,புலம்பும்போது கவனமாக கேட்டிருக்கிறீர்களா? ஆம் என்றால் பெரும்பாலனவர்கள் சொல்வது பொய்!உண்மையாக இருக்குமானால் மதுக்கடையில் கூட்டம் குறைந்திருக்கும்,நிறைய தற்கொலைகள் தடுக்கப்பட்டிருக்கும்,மனக்கோளாறுகள்,மனநோய்கள் அதிகரித்திருக்காது,தங்களது சிக்கல்களுக்காக கோவில்களுக்கு செல்பவர்கள் இருக்கமாட்டார்கள்.குழந்தைகள் சொல்வதை கவனமாக கேட்டால் அவர்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் கூட வெளியே வரலாம்.
பிரச்சினைகளை நாம் ஏன் கவனமாக காது கொடுத்து கேட்பதில்லை?
ஏனென்றால், நாம் யாரையாவது சந்திக்கும்போது நம்மை முன்னிலைப்படுதுவதிலேயே நோக்கமாக இருக்கிறோம்.நமது அருமை,பெருமைகளையும்,சாதனைகளையும் கூறி நம்மை முக்கியமானவராக உருவாக்குவதில் தான் கவனம் செலுத்துகிறோம்.எதிரில் இருப்பவர் கேட்கிறாராஎன்பது கூட தெரியாமல் பேசிக்கொண்டிருக்கிறோம்,மேலும், நாம் துயரங்களை விரும்புவதில்லை.நண்பர்களோ,உறவினர்களோ சந்திக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் அவ்வளவே. அடிப்படையிலேயே நாம் எதிர் உணர்வுகளை விரும்புவதில்லை.முக்கியமாக நாம் இன்னும் அருகில் உள்ளவர்களையே சகமனிதர்களாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் கசக்கும் உண்மை.
பிரச்சினைகளை வெளியே சொல்ல ஏன் முன்வருவதில்லை ?
பலர் தங்களது நெருடல்களை,சிக்கல்களை யாரிடமும் பேச முன்வருவதில்லை.தங்களது பிரச்சினைகளை கடவுளிடம் எடுத்துச்செல்கிறார்கள்.இறைவன் கேலி,கிண்டல் செய்வதில்லை.பேசிக்கொண்டிருக்கும்போது,புலம்பும்போது பேச்சை மாறுவதில்லை, அவசரமான வேலை இருப்பதாக கிளம்பிச்செல்வதில்லை,தங்களது கதைகளை சொல்ல தொடங்குவதில்லை.வேண்டாவெறுப்பாக பதிலுக்கு ஏதேனும் உளறுவதில்லை.
நண்பர்களை கண்டறியுங்கள்
உங்கள் கஷ்டங்களை நண்பர்களிடம் பேச ஆரம்பிக்கலாம்,அவர்கள் உங்களை எதிர்கொள்வதை வைத்து நல்ல நண்பர்களை தேர்வு செய்யுங்கள்.உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டால்,அதற்கு மதிப்பளித்தால்,கவனமாக இருந்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி.
கவனமாக காது கொடுத்து கேளுங்கள்!
ஆம்.தங்களது பிரச்சினைகளை கேட்க யாரும் இல்லாத நிலையிலேயே கடவுளிடம் போகிறார்கள்.அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் கடவுள் நீயே.
கேட்கும்போது
  • கண்ணோடு கண் நோக்கி கவனமாக கேளுங்கள் .
  • அவரது உணர்வுகளை கவனியுங்கள்.
  • அவரை பேசத்தூண்டுங்கள்.
  • அவரது உணர்வுகளை கூறி நீங்கள் புரிந்துகொண்டதை தெரியப்படுத்துங்கள்.
  • புரியாததற்கு விளக்கம் கேளுங்கள்.
  • உங்கள் கதையை ஆரம்பிக்கவேண்டாம்.
  • பேச்சை திசை திருப்பவேண்டாம் .
  • தீர்வு இருந்தால் அவருக்கு சொல்லுங்கள் .
-