Showing posts with label confidentiality. Show all posts
Showing posts with label confidentiality. Show all posts

Tuesday, November 15, 2011

பெண்களும் ரகசியமும்


திருமணமான சில நாட்களில் நண்பன் புலம்பினான்.எதுவுமே சொல்வதற்கில்லை.எப்படித்தான் நம்பி ஒரு விஷயத்தை சொல்வது? உடனே வெளியே போய்விடுகிறது.எனக்கு இப்படி இருந்தால்தான் பிடிக்கும் என்று சொல்ல,அந்த முழு வார்த்தையும் அதே ஏற்ற இறக்கங்களுடன் அக்காவிடம் போய் விட்ட்து.சில நேரங்களில் அம்மாவிடம் போய்விடுகிறது.புது மாப்பிள்ளை பற்றி தெரிந்துகொள்ள சுற்றத்தினர் ஆர்வமாக இருப்பார்கள்.
                                       ரகசியம் என்பதே நம்மிடம் மட்டும் இருப்பதுதான்.இரண்டாவது நபரிடம் அது தங்குமானால் அவர் மிகவும் நல்லவராக இருக்க வேண்டும்.இன்று நாளிதழில் போட்டிருப்பதாக நண்பர் கூறியதுஅரை மணி நேரத்துக்கு மேல் பெண்களிடம் ரகசியம் தங்காதாம்ஆய்வில் சொல்லியிருக்கிறார்கள்.இது நம்மிடம் ஏற்கனவே இருக்கும் நம்பிக்கைதான்.
                                 வழக்கமாகவே பெண்கள் உணர்வு சார்ந்து இயங்குபவர்கள் ஏன்ற கருத்து உண்டு.இப்போது மாற்றங்கள் வந்து கொண்டிருக்கின்றன என்பது வேறு விஷயம்.நீங்கள் ஒரு கருத்தை கூறும்போது அதைப்பற்றி சிந்திக்க முடியாதவர்கள் வெளியே சொல்வார்கள்.மற்றவர்கள் கருத்தை அறிவதும்,அது சரியானதா என்று பார்ப்பதே நோக்கம்.ஆண்களும் இப்படி உண்டு.
                                     புதிய ஒன்றை கேள்விப்படும்போதும் இப்படி நடக்கும்.உதாரணமாக ’’எனக்கு புரோட்டா பிடிக்காது,அது சர்க்கரை நோயைத்தரும் என்று சொல்கிறார்கள் என்று மனைவியிடம் சொல்கிறீர்கள்,உடனே அக்காவுக்கு போன் செய்து இப்படி சொல்கிறார் என்று விஷயம் போய்விடும். இதுவரை அவரது மனைவி இந்த விஷயத்தை கேள்விப்பட்ட்தில்லை.அதனால் அவர் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்.
                                   ஒருவரிடம் பகிர்ந்து கொள்ள புதியதான, மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும் ஒன்று தேவை.நாம் பேசுவது நம் மீது மரியாதையை தூண்டி நம்மை முக்கியமானவராக கருதவேண்டும் என்று நினைக்கிறோம்.இதனாலேயே பல தகவல்கள் வெளியேறுகின்றன.தன்னை நேசிக்கவில்லை என்று கருதும் மனைவி கணவனின் எல்லா நடவடிக்கைகளையும் வெளியே சொல்ல வாய்ப்புண்டு.
                                   இன்னொரு வேடிக்கை உண்டு.யாரிடமும் வெளியே சொல்லாதே! என்றால் உடனே மற்றவர்களிடம் சொல்லிவிடுங்கள் என்று அர்த்தம் என்பார்கள்.உண்மையைச் சொன்னால் நம்மிடம் மட்டும் ஏன் சொல்லவேண்டும்? அவரே ரகசியமாக வைத்திருக்கலாமே? உன்னிடம் மட்டும் எதையும் மறைக்கமாட்டேன்,நீ எனக்கு அவ்வளவு முக்கியமான ஆள் என்ற விஷயம் இதில் ஒளிந்திருக்கிறது.
                                  ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ரகசியத்தை வெளியில் சொல்வது கொடூரமானது.அன்பு கொண்ட மனிதர்கள் அதைச் செய்வதில்லை.நம் மீதான நம்பிக்கையும் சிதறிவிடுகிறது.நம்பிக்கை போய்விட்டால் அப்புறம் உறவுகளில் என்ன வேண்டிக்கிடக்கிறது?
-

Wednesday, September 7, 2011

குடும்ப பிரச்சினைகள் சந்தி சிரிப்பது எப்படி?

தம்பதிகள்  வேலை கிடைத்து புதியதாக அந்த ஊரில் குடியேறினார்கள்.குடும்பம் என்றால் சில நேரங்களில் பிரச்சினைகள் வரத்தான் செய்கின்றன.ஒரு நாள் இருவருக்கும் வாக்குவாதம் முற்றி விட்ட்து.கணவர் கோபத்தில் வெளியே போனவர் வெகு நேரமாகியும் வரவில்லை.செல்போனையும் விட்டுவிட்டு போய்விட்டார்.

                               கணவர் வேலை செய்யுமிட்த்தில் ஒருவர் நல்ல பழக்கம்.கணவர் செல்லிலிருந்து அவருக்கு போன் செய்து விசாரித்திருக்கிறார்.வீட்டில் சண்டை நடந்த விஷயத்தை ஒரு வார்த்தை விடாமல் முழுமையாக கொட்டி தீர்த்துவிட்டார்.அவரும் தேடிப்பார்ப்பதாக சொல்ல,சிறிது நேரத்தில் கணவர் வீட்டிற்கு வந்துவிட்டார்.

                               அடுத்த நாள் கடைக்கு போய்விட்டு வீட்டுக்கு திரும்பும்போது,நான்கு வாலிபர்கள் கமெண்ட் அடித்து சிரிப்பது காதில் விழுந்த்து.மானம் போன அதிர்ச்சியில் கூனிக்குறுகிப் போனார்.அந்த வார்த்தைகள் அவர்களது சண்டையில் கணவன் அப்பெண்ணுக்கு எதிராக பயன்படுத்திய வார்த்தைகள்.பையன்கள் வீட்டு வெளியில் இருந்து கேட்டிருப்பார்கள் என்று நினைத்தார்.ஆனால் அது உண்மையல்ல!

                                கணவருடன் பணி புரிபவரிடம் பேசிய விவரத்தை அவர் அதே வீதியில் உள்ள அவரது உறவினருக்கு சொல்லிவிட்டார்.அந்த குடும்பத்தில் இருக்கும் ஒரு பையன் தான் கமெண்ட் அடித்து சிரித்த்து.வழியில் காதில் கேட்ட்தால் அவரைப் பற்றி தெரிந்து போனது.இல்லாவிட்டால் அவரிடம் தொடர்ந்து எல்லாமும் பகிரப்ப்ட்டு இருக்கும்.

                                நல்ல குடும்பங்களில் வீட்டு விவகாரங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்வதில்லை.அது அவசியமானதும் அல்ல.நெருங்கிய உறவினர்களுடன் மட்டுமே பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவிடும்.உரிய ஆலோசனை கிடைக்காத சுற்றம் இருக்கும்போது சிலர் நல்ல யோசனை கிடைக்கும் என்று மற்றவர்களிடம் சொல்கிறார்கள்.

                                ஒருவரது ரகசியத்தை காப்பாற்றுவது என்பது சீரிய ஒழுக்கம்.பலருக்கு வெளியில் சொன்னால் ஏதேதோ தெரிந்து வைத்திருக்கிறான் என்று கேட்பவர்கள் மதிப்பார்கள் என்று உளறி விடுகிறார்கள்.நல்லவர்களை கெட்டவர்களாக்குவதும்,நண்பர்களை எதிரிகளாக்குவதும் காலம் செய்யும் மாயம்.

                                எந்த ஒரு தனி மனிதனும் தனது பிரச்சினைகளையும்,ரகசியங்களையும் யாரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்ற தெளிவு வேண்டும்.அதிலும் முன்னுரிமை கொடுத்து பட்டியல் இருக்க வேண்டும்.குடும்ப்ப் பிரச்சினைகளை ஒரு வட்ட்த்திலும்,அலுவலக பிரச்சினைகளை ஒரு வட்ட்த்திலும் உரையாடலாம்.

                               நன்றாக பேசுகிறார்கள்,பார்க்க நல்லவர்களாக தெரிகிறார்கள் என்று சொல்லி யாரை வேண்டுமானாலும் நம்புவது ஆபத்தில் முடியும்.பொதுவாக குடும்ப உறுப்பினர்கள்,நெருங்கிய உறவினர்களே பாதுகாப்பானவர்களாக இருக்க முடியும்.
-

Thursday, April 14, 2011

உங்களை அனைவரும் விரும்ப வேண்டுமா?-நான்கு

                              ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன.வெளியே சொல்ல முடியாத ரகசியங்கள் உள்ளே கிடக்கிறது.யாரிடமாவது பேச நினைக்கிறான்.கேட்பதற்கு ஆளில்லை.கேட்பதற்கு ஆள் இருந்தாலும் அதை ரகசியமாக வைத்துக் கொள்வார்களா? அல்லது கேலி செய்வார்களா?

                                எதையாவது என்னிடம் சொன்னால் நான் ஊரெல்லாம் சொல்லிவிடுகிறேனாம்,அதனால் என்னிடம் எதுவும் சொல்லக்கூடாதாம்ரொம்ப குறை பட்டுக்கொண்டார் அந்த மாடி வீட்டம்மா. எனக்கும் கஷ்டமாக இருந்த்து.பாவம்தான்.அவரே தொடர்ந்தார். நான் யாரிடம் சொல்லிவிட்டேன்,பக்கத்து வீட்டு மாமியிடம் சொன்னேன்,சரசுவிடம் சொன்னேன்,காவேரியிடம் சொன்னேன்,மாது நம்ம ஆள்தானே அவரிடம் சொன்னேன்,மளிகை கடை கோபாலிடம் சொன்னேன்.......................................தொடர்கிறது.நான் ஊரெல்லாம் சொன்னேனாம்! நீங்களே பாருங்கள் தம்பி!

                               எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்த்து.என்னிடமும் சொல்லியாகிவிட்ட்து.அது ரகசியம் உங்களுக்கு தெரியவேண்டாம்.மாடி வீட்டம்மா மீது அநியாயத்திற்கு வீண்பழி சுமத்துகிறார்கள் பாருங்கள்.அதை மட்டும் என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

                               வேடிக்கை இருக்கட்டும்.உண்மையில் பலரும் அந்த மாடி வீட்டம்மா மாதிரிதான் இருக்கிறார்கள்.ஒருவர் நம்மிடம் தனது சொந்த விஷயங்களை பகிர்ந்து கொள்கிறார்.குடும்ப விஷயங்களை விவாதிக்கிறார்.நாம் வேறு யாரிடமாவது பேசி விடுகிறோம்.அடுத்தவனை பற்றிய வம்பை கேட்பதற்கு காதுகள் தயாராக இருக்கின்றன.

                              நம்மிடம் தெரிவிக்கப்பட்ட ஒன்றை மற்றவர்களுக்கு உடைப்பது மூலம் நாம் நம்பிக்கையற்றவர்கள் ஆகிறோம்.சொன்னவரை அவமானப்படுத்துவதாகவும் ஆகும். உங்களுக்கு கேலியாக,அர்த்தமற்றதாக தோன்றும் ஒன்று இன்னொருவருக்கு முக்கியமான பொருளாக இருக்கும்.

                              பலர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசும்போது உங்களுக்கு அது அப்படி ஒன்றும் பெரிய விஷயமில்லையே என்று தோன்றும்.ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஆளுமை இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.மனிதர்கள் அனைவரும் ஒரே மாதிரி வார்க்கப்பட்டவர்களோ,வளர்க்கப்பட்டவர்களோ அல்ல!

                            ஒவ்வொரு மனிதனுக்கும் உள்ளே ஏராளம் இருக்கிறது.பேச நம்பிக்கையான ஆள் இல்லாமல் தடுமாறிக்கொண்டிருக்கிறான்.ஒரே கவலைமட்டுமே! தன்னுடைய ரகசியம் காப்பாற்றப்படுமா? அல்லது கேலி செய்யப்பட்டு வெளியில் வந்து விடுமா? என்பதுதான்.

                       மிக சாதாரணமான ஒன்றுதான்.நம்மிடம் பகிர்ந்து கொள்ளப்பட்ட எதுவும் ரகசியமாக வைக்க வேண்டியவை.நம்மை நம்பி கூறப்பட்ட வார்த்தைகளை வெளியிடுவது துரோகமும் கூட!தங்கள் ரகசியம் காக்கப்படும் என்ற ந்ம்பிக்கை மிகுந்தவர்களாக நீங்கள் இருந்தால் மற்றவர்கள் விரும்பும் நபராக இருப்பீர்கள்.
-