Showing posts with label குடும்பம். Show all posts
Showing posts with label குடும்பம். Show all posts

Monday, July 14, 2014

குடும்பங்களில் பழிவாங்கும் உணர்வு



பாம்பு பழிவாங்கும் கட்டுக்கதையைக் கிராமத்தில் சொல்வார்கள்.பாம்பை உயிர்போகும்வரை அடிக்காமல் விட்டுவிட்டால் தேடிவந்து பழிதீர்க்கும் என்பார்கள்.அதுவும் கொம்பேறிமூக்கன் என்ற பாம்பு தன்னை அடித்த மனிதனை கடித்து உயிரைப்போக்கிய பிறகு சுடுகாட்டு மரத்தின் மீது ஏறி இறுதிச்சடங்கை பார்த்தபின்னர்தான் ஆத்திரம் தீரும் என்றும் சொல்லிக்கொண்டிருப்பார்கள்.பழிதீர்க்கும் மனிதர்களைப் பாம்பு என்று குறிப்பிட்டிருப்பார்கள் என்று தோன்றுகிறது.

அரிஸ்டாடில் மனிதன் சமூக விலங்கு என்று சொன்னார்.அரசியல் மிருகம் என்று குறிப்பிட்டார்.சமூக வாழ்விலும் அரசியலிலும் பழி வாங்கும் உணர்வே முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.எப்போதும் மனிதன் பழிதீர்க்கத் துடித்துக்கொண்டிருக்கிறான்.திரைப்படங்களில் பழிவாங்கும் கதைகள் வெற்றி பெற்றுவிடுகின்றன.வஞ்சம் தீர்ப்பது அடிப்படையாக இருந்து கொண்டிருக்கிறது.மனிதன் பழிதீர்க்கும் மிருகம் என்று சொல்லலாம்.

சிறுவயதில் நடந்த அந்த சம்பவம் எனக்கு இன்னமும் நினைவில் இருக்கிறது.போதையேறிய ஆசாமி ஒருவர் பக்கத்து வீட்டுக்காரரை தரக்குறைவாகப் பேசிவிட்டார்.அப்படிப்பேசிய இடம் அவர் வீட்டிலிருந்து ஒருகிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.அவருக்குப் பதிலடி கொடுக்கவேண்டும் என்றால் வீட்டு வாசலில் இருந்தே பேசியிருக்கலாம்.ஆனால் ஒருகிலோமீட்டர் தூரம் சென்று அவர் பேசிய இடத்திலேயே பேசி விட்டுவந்தார்.



நம்முடைய இதிகாசங்களிலும் இதற்கான உதாரணங்கள் இருக்கின்றன.ராமன் காட்டுக்குப்போக நேர்ந்தது கூனியின் பழிதீர்த்தல்தான்.பாஞ்சாலியும் பழிதீர்த்துக்கொண்டார். நண்பர் ஒருவர் சொல்லிக்கொண்டிருந்தார்.``இந்த மாவட்டத்துக்கு உயரதிகாரியாக வரவேண்டுமென்று`` ஒருவர் விருப்பப்பட்டதாகச்சொன்னார்.அவர் குறிப்பிட்ட மாவட்டத்தில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு மானம் போய்விட்டது.அதே இடத்தில் உயர் அதிகாரியாக வருவதன் மூலம் பதிலடி கொடுக்கவேண்டும்
.
தம்பதிகளுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.திருமண வாழ்வில் ஆறாண்டுகள் கடந்துவிட்டார்கள்.ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார்கள்.திருமணத்தின்போது தனது தந்தையை விமர்சனம் செய்தது முதல் மனைவி சொல்ல ஆரம்பித்தார்.அவமானம்,தரக்குறைவான விமர்சனங்கள் போன்றவற்றை விவரிக்க ஆரம்பித்தார்.

குடும்பங்களில் பல்வேறு பிரச்சினைகளிலும் பழிவாங்கும் உணர்வு வலிமையாக இருக்கிறது.அண்டை அயலார்கள்,இரத்த சம்பந்தமான உறவுகளுக்கும் இது பொருந்தும்.கணவன்,மனைவி என்றில்லாமல் அனைவரும் பழி உணர்வை கையாளக்கற்றுக்கொள்வது அமைதிக்கு வழிவகுக்கும்.அவனை ஏதாவதுசெய்தே தீருவேன் என்று சிந்திக்கும் நேரத்தில் வளர்ச்சி குறித்த எண்ணங்களை உருவாக்கலாம்.

உறவினர் நிகழ்ச்சி ஒன்றுக்குப்போகவேண்டாம் என்று வீட்டில் சொன்னார்கள்.ஆனால் அவர்கள் அழைத்திருந்தார்கள்.``நம்முடைய நிகழ்வுகளுக்கு வராமல் அவர்கள் புறக்கணித்தார்கள்.அதனால் நாம் அவர்களைப் புறக்கணிக்கவேண்டும்`` என்பது வீட்டில் உள்ளவர்களது வாதம்.நான் சொன்னேன்,``நான் அவர்களைப் பின்பற்ற முடியாது.`` ஆமாம்,நாமும் அவர்களைப்போலத் தரமின்றி நடந்து கொள்ளவேண்டாம்.
-

Tuesday, October 8, 2013

பெண்களால் மட்டும் எப்படி முடிகிறது?



பள்ளி ஆண்டுவிழா ஒன்றில் ஆசிரியர் பேசிக்கொண்டிருந்தார்.கொஞ்சம் சம்பந்தமில்லாமல் இருந்தது என்றுதான் சொல்லவேண்டும்.பெண்கள் சீக்கிரமாக எல்லாவற்றையும் புரிந்துகொள்கிறார்கள்.ஆண்களால் அப்படியெல்லாம் முடியாது.வேறு சில இடங்களிலும் இந்த வார்த்தைகளை கேட்டிருக்கிறேன்.பெண்களுக்கு மட்டும் தனிச்சிறப்பான ஆற்றல் இருக்கிறதா?

கிராமப்புறங்களில் நாட்டுக்கோழி வளர்க்கும் குடும்பங்களில் இதைக்கண்டிருப்பார்கள்.கோழி குஞ்சு பொறித்த நாளிலிருந்து கழுகு,காக்கைகளிடமிருந்து காப்பாற்றியாக வேண்டும்.கழுகை விரட்ட எப்போதும் பறக்காத உயரத்திற்கு கோழி பறந்து செல்லும்.ஒருவேளை பறிகொடுத்துவிட்டால் அச்சத்திலும்,ஆற்றாமையிலும் முனகிக்கொண்டிருக்கும்.


இயற்கை அன்னைக்கு சில சிறப்புத்தகுதிகளை ஏற்படுத்தியிருக்கிறது.அன்பு,பாசம் எல்லாம் எல்லா உயிர்க்கும் அடிப்படையாக இருக்கின்றன.பெண்களுக்கும் அப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது.குழந்தையின் உணர்வை அன்னை அறிந்துகொள்ளாவிட்டால் என்ன நிகழும்? குழந்தையின் முகத்தில் ஏற்படும் உணர்ச்சி மாற்றங்களை கவனித்து குழந்தையின் தேவையை புரிந்துகொள்கிறாள்.

உணர்ச்சிகள் வழியேதான் ஒருவரைப் புரிந்துகொள்ளமுடியும்.ஒருவரது சிந்தனையை உணர்ச்சிகளைப் பின் தொடர்ந்துசென்று அறிந்துகொள்ளலாம்.பெண்கள் இயல்பாகவே உணர்ச்சிகளோடு தொடர்பு கொண்டிருக்கிறார்கள்.அந்தக்கொடையை இயற்கை வழங்கியிருக்கிறது.அப்போதுதான் அவளால் குழந்தைகளைக் காக்கமுடியும்.


பெண்களால் எளிதாகப் புரிந்துகொள்ள முடியுமென்றால் ஏன் குடும்பத்தில் பிரச்சினைகள் வருகின்றன? கணவனைப்பற்றி சரியாகத் தெரிந்துகொண்டால் அதற்கேற்றவாறு நடந்துகொள்ளமுடியுமே? அவனது சிந்தனையை அறிந்து அவனுக்கு ஆலோசனை வழங்குவது சாத்தியமாக வேண்டும்.ஆனால் குடும்பங்களில் நிறைய குழப்பங்கள்.குறிப்பிட்ட வயதுக்குப்பிறகு தன்னுடைய மகனைக்கூட தாயால் புரிந்துகொள்ள முடிவதில்லை.

பல நேரங்களில் ஆண் தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவதில்லை.ஆத்திரத்தையும் கோபத்தையும் காட்டுகிறான்,சோகம்,கவலை,பயம்,கலக்கம் போன்ற உணர்ச்சிகளை மறைத்துக்கொள்கிறான்.ஆண் அழக்கூடாது என்று சொல்லிவிட்டார்கள்.துக்கம் மனசிலிருந்து பொங்கும்போது அழாமல் அடக்கிக்கொள்கிறான்.போதை வஸ்துக்களை நாடுகிறான்.


யார் மீதோ உள்ள கோபத்தை மனைவிமீது காட்டுகிறான்.அச்சத்தை மறைக்க வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறான்.பயத்தைக்காட்டுவது பலவீனம்,ஆண் தைரியசாலியாக இருக்கவேண்டுமென்று சமூகம் அவனுக்கு சொல்லித்தந்திருக்கிறது.பொய் முகத்தைக்காட்டுவது ஆணுக்கு இயல்பான ஒன்றாக மாறிவிடுகிறது.பெற்றதாயும் கூட குழம்பிவிடுகிறாள்.

உள்ளத்தில் இருப்பது முகத்தில் பிரதிபலிக்கவேண்டும்.அப்போது பெண்களால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.கண்களைப்பார்த்தால் கண்டுபிடித்து விடுவார்கள் என்று கண்ணைப்பார்த்துப் பேசுவதை தவிர்த்துவிடுகிறான்.பெண் என்னதான் செய்யமுடியும்? பிரச்சினைகள் தவிர்க்கமுடியாமல் போகின்றன.ஆண் உண்மையான முகத்தைக் காட்டும்போது அங்கே இயல்பான மகிழ்ச்சி சாத்தியம்.
-

Wednesday, October 24, 2012

தம்பதிகள் நேசிக்கப்படவேண்டுமா? மதிக்கப்படவேண்டுமா?


குறிப்பிட்ட வார்த்தைகளை திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன்.நம்மை மதிக்கவேண்டுமே?’’ என்ற சொற்களை யாராவது சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.தம்பதிகளில் யாராவது ஒருவர்தான் கவலையுடன் சொன்னார்கள்.தெரிந்த நண்பர் ஒருவரை வழியில் சந்தித்தேன்.தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார்.என்னுடைய மனைவிக்கு அரசு வேலை கிடைத்துவிடும்,எனக்குத்தான் பிரச்சினை! என்னை மதிக்கவேண்டுமே?என்றார்.இன்னொருவர் பெண்.திட்டப்பணி ஒன்றில் அவருக்கு பணி.வேலை நீடித்திருக்குமா என்ற கவலையில் இருந்தார்.என் கணவர் என்னை மதிக்கவேண்டுமே?என்றார்.

                                கணவனும் மனைவியும் இத்தகைய எண்ணம் கொண்டிருப்பதுதான் நம்முடைய குடும்பங்களின் பிரச்சினையா? “பிறந்த வீட்டின் பெருமையை கூடப்பிறந்தவனிடம் சொன்ன கதையாகஎனக்குத்தோன்றுகிறது.வீட்டிலிருந்து வெளியில் செல்லும்போது திருத்தமாக உடை அணிகிறோம்.அழகு படுத்திக்கொள்கிறோம்.வீட்டுக்கு வந்து விட்டால் நமக்கு லுங்கி பனியன் போதும்.வெளியில் நாலுபேர் நம்மை மதிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.வீட்டிலும் அதே எண்ணம் இருப்பது சிக்கலை கொண்டுவருகிறது.வீட்டிலுள்ளவர்களுக்கு நம்முடைய பலம்,பலவீனம் தெரியுமே? ஆனாலும் மதிக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியிருக்கிறது.
                                 மரியாதை வேண்டும் என்றவுடன் மனம் அதற்கான எல்லா முயற்சிகளையும் எடுக்கும்.பொய் சொல்வதில் துவங்கி தன்னை உயர்த்திக்கொள்ள ஆயிரம் வழிகளைத் தேடுகிறது.யார் பெரியவர் என்பதற்கான சண்டைகள் ஆரம்பித்து விடுகிறது.யாராவது ஒருவர் சறுக்கும்போது,வேலை இழப்பு அல்லது வேலை கிடைத்தல் போன்ற நிகழ்வுகள் இன்னொருவர் மனதில் பாதிப்பை உருவாக்குகிறது.நமக்கு மரியாதை போய்விடுமே என்ற கலக்கம் தோன்றி இயல்பு நிலை கெடுகிறது.முடிவு என்னவாக இருக்கும் என்பது நமக்கு தெரிந்த கதை.
                                  மனதளவில் கணவனும் மனைவியும் நெருக்கமாக இல்லை என்பது தெளிவு.சங்கடமான நேரங்களில் ஒருவருக்கொருவர் ஆதரவு என்பது முக்கியமான விஷயம்.ஆனால் பல குடும்பங்களில் சாத்தியமில்லாமல் இருக்கிறது. நம்மை மதிக்க வேண்டும் என்ற எண்ணம் குடும்பத்தை சிதறடிக்கிறது.கணவனோ,மனைவியோ கொண்டுவரும் பணம் மட்டும் முக்கியமாகி கிடைக்காது என்றால் மரியாதை போய்விடுகிறது.மனைவி உளரீதியான ஆதரவுக்காக பிறந்த வீட்டை நம்பி இருக்கவேண்டிய நிலை.ஆணுக்கு இருக்கவே இருக்கிறது டாஸ்மாக்.
                                                                                       எப்போதும் இருவரும் கலக்கமாகவே இருக்கிறார்கள்.தன்னுடைய மதிப்பு சரிந்துவிடகூடாது என்பதில் அதிக கவனம் இருக்கிறது.மனைவி அதிகம் சம்பாதிக்கும் நிலை ஏற்பட்டுவிட்டால் மனசு கெட்டுப்போகிறது.சிலர் வெளியே காட்டிக்கொள்ளாமல் உரிய மரியாதை கொடுத்து கடந்து விடுகிறார்கள்.ஆனால் உள்ளே புழுங்கிக் கொண்டிருக்கும்.கிராமத்தில் ஒரு பெரியவர் சொன்னது இது, திருமணம் செய்யும்போது கணவன் மனைவி இருவரில் ஒருவர் தகுதி நிலையில் தாழ்ந்து இருக்க வேண்டும்.
                                                                                           கூட்டுக்குடும்பங்கள் சிதைந்துவிட்ட இன்றைய சூழலில் அன்புக்கும் ஆதரவுக்கும் இடமே இல்லை.குடும்பம் பட்ட மரத்தின் கீழ் இருக்கிறது.மரியாதையை எதிர்பார்க்கும் இடம் பாதுகாப்பான இடமல்ல! கிடைக்காமல் போனால் வலி அதிகமாக இருக்கும்.மரியாதை கிடைப்பதற்காக தந்திரங்களை கைக்கொள்ள வேண்டி வரும்.புறச்சூழலில் ஏற்படும் மன காயங்களுக்கு மருந்திடும் இடமாக வீடு இருக்க வேண்டும்.ஆனால் பலர் மரியாதையை எதிர்பார்த்து தன்னை தயார்படுத்திக் கொள்வதிலேயே காலத்தை கட்த்தி விடுகிறார்கள்.இங்கே நேசிப்பதைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

-

Sunday, December 11, 2011

தம்பதிகள் தொலைத்த உணர்ச்சி

  கணவனும் மனைவியும் ஒன்றாக வருவார்கள்..ஏராளமான தம்பதிகளை சில ஆண்டுகளாக சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது.அவர்கள் பேசுவதை முழுமையாக கேட்டுக்கொண்டிருப்பேன்.உற்று கவனித்தவாறு இருப்பேன்.இரண்டு பேரையும் யாரோ கயிறு கொண்டு கட்டிப் போட்டது போல எனக்கு தோன்றும்.

பெரும்பாலான தம்பதிகள் இந்த எண்ணத்தை என்னிடம் தோற்றுவித்தார்கள்.திருமணம் என்ற நிறுவனம் இன்று ஆட்டம் கண்டு வருகிறது.கூட்டுக் குடும்பம் சிதறி தனிக்குடித்தனமாகி அதுவும் காணாமல் போய்விடுமோ என்ற எண்ணம் முளை விடுகிறது.

இன்றைய தம்பதிகள் பிணைக்கும் எதையோ தொலைத்து விட்டார்களா? அவர்கள் ஒருவர் மீது ஒருவர் குறை கூறினார்கள்.இவர் செய்வது சரியில்லை என்றார்கள்.பதிலுக்கு கணவன் இவளுக்கு என்ன தெரியும் ?உலகம் தெரியாது என்றார்.வீட்டில் குழந்தைகளை கவனித்துக்கொண்டு சமையல் செய்து கொண்டு டி.வி பார்த்துக் கொன்டிருந்தால் எல்லாம் தெரிந்து விடுமா? மனைவி பதிலுக்கு சொன்னார்,"நீங்க கிழிச்சது ஒண்ணுமில்ல! எங்க தங்கச்சி வீட்டுக்காரரு இவர விட சின்னவரு வீடு கட்டிட்டாரு!" 

அவர்கள் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது அடுத்தவர் பேசுவதை தடுக்க முயற்சித்தார்கள்.அப்போது குரல் உயரும்.அவர் பேசட்டும் கேட்போம் இருங்கள்! பிறகு நீங்கள் பேசலாம்.என்று குறுக்கிட வேண்டியிருக்கும்.தன் வீட்டு உறவுகளை மதிப்பதில்லை என்பது பெரும்பாலானவர்களின் ஆதங்கம்."என் மாமா உடல் நிலை சரியில்லாதபோது போய் பார்க்கலாம் என்றால் வேலை இருக்கிறது'' என்று சொல்லிவிட்டார்.நான் மட்டும் அவருடைய உறவினர்கள் என்றால் கவனிக்கவேண்டுமா? 

அவர்கள் சண்டையிட்டுக் கொண்டார்கள் ஒரே பையனை ஒழுங்கா வளர்க்க முடியல,அவன் ஒழுங்காக படிப்பதில்லை.எனக்கு எங்கே நேரம் இருக்கிறது என்றார் கணவர்." ''நான் என்னமோ அவன படிக்காதன்னு சொன்ன மாதிரி " என்கிறார் பதிலுக்கு மனைவி.தன்னை குறை சொல்லும்போது,குடும்பத்தினர் பற்றி பேசும்போது மனைவிக்கு ஆத்திரம் பொங்கியது.வேதனையாக உணர்வதாக பட்டது.மற்றவர்களுடன் ஒப்பிடும்போது கணவனுக்கு கண்ணில் ரத்தம் பாய்ந்தது.

அவர்கள் ஒவ்வொருவரும் தான் சொல்வது மட்டுமே சரியானது என்று திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார்கள்.குழந்தைகளுக்காக பார்க்கிறேன் என்று சிலர் சொன்னார்கள்.சில பெண்கள்" நான் அப்போதே என் பெற்றோரிடம் மேலும் படித்து வேலைக்குப் போகவேண்டும் என்று சொன்னேன்.ஆனால் என் பேச்சை கேட்காமல் கட்டி வைத்து விட்டார்கள்" என்றார்கள்.

கணவர்களின் பெரும்பாலான கூற்று இது " வீட்டில் எல்லாமும் வாங்கி போட்டிருக்கிறேன் இல்லாத பொருள் எதுவுமில்லை.வாசிங் மெஷின்,கிரைண்டர்,டி.வி.,வருஷமானால் பட்டுப்புடவை.எதுவும் செய்யாமல் இல்லை. ஆனால் வீட்டில் இல்லாத ஒன்று இருந்தது.எனக்கு அவர்கள் ஒரு உணர்ச்சியை தொலைத்து வருவதாக தோன்றுகிறது.அந்த உணர்ச்சி அன்பு.
-